கார்த்திகை மாத சிறப்பு
வாழ்வை வளம்பெறச் செய்யும் கார்த்திகை 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறிய பகவான் கிருஷ்ணர், கார்த்திகை மாதம் முழுவதும் எல்லா நீர் நிலைகளிலும் வாசம் செய்கிறார். இந்த மாதத்தில் எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பொரு காலத்தில் வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்த வேத சர்மா என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் தர்ம நெறியை தவறவிடாது, அதன்வழியில் நின்று வாழ்க்கை நடத்தி வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவர், வேத சர்மாவின் வாழ்க்கை நெறிக்கு நேர்மாறாக இருந்தான்.
எப்போதும் தான் தோன்றித் தனமாக திரிந்து கொண்டிருந்தான். எந்த வேலையும் செய்வதில்லை. மகனை திருத்தி விடலாம் என்று நினைத்திருந்தார் வேத சர்மா. ஆனால் அது நடைபெறாது என்பது பின்புதான் தெரிந்தது. ஒரு நாள் தன் மகனை அழைத்தார் வேத சர்மா. அவனிடம், 'மகனே! கார்த்திகை மாதம் மிகவும் உன்னதமான மாதமாகும்.
இந்த மாதத்தில் மகாவிஷ்ணு, அனைத்து நீர்நிலைகளிலும் வாசம் செய்து நன்மை பயக்கிறார். அதே போல் ஈசனும் தீப ஜோதியாக தோன்றிய மாதம் இது என்பதால் கார்த்திகையின் சிறப்பு மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. எனவே கார்த்திகை மாதம் மட்டுமாவது நீ கோவில் சன்னிதியில் விளக்கேற்றி வை.
அதன் வாயிலாக உன் வாழ்வு ஒளி மயமாக விளங்கும். இதை நீ செய்தால் நான் மிகவும் மன மகிழ்ச்சி அடைவேன்' என்று தன் மகனுக்கு கார்த்திகை மாதத்தின் அனைத்து சிறப்புகளையும் எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார். தந்தையின் இந்த அறிவுரையைக் கேட்டதும், மகனுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
'என்னது! விளக்கேற்றுவதா? விளக்கின் விலை என்ன? எண்ணெய் விலை என்ன? ஒரு நாளைக்கு ஒரு விளக்கு என்றாலும் கூட 30 நாட்களுக்கு முப்பது விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கிற்கேற்ப எண்ணெய் விலை என்று எல்லா செலவும் சேர்த்தால் வாழ்வில் ஒளிவீசாது.
பணம்தான் கரைந்து போகும். ஏன் பணத்தை விரயம் செய்யச் சொல்கிறீர்கள்?' என்று கூறி கோவிலில் விளக்கேற்ற மறுத்து விட்டான். மகனின் இந்த வார்த்தையைக் கேட்டதும் வேத சர்மாவுக்கு அளவுகடந்த கோபம் ஏற்பட்டது.
அவர் மகன் என்றும் பாராமல், 'எந்த வேலையும் செய்யாமல் தின்று, தின்று திரிந்து கொண்டிருக்கும் நீ, எலியாகப் பிறந்து அலைந்து திரிவாயாக' என்று சாபமிட்டு விட்டார். அடுத்த கணமே, வேத சர்மாவின் மகன் எலியாக மாறிவிட்டான். துன்பம் வந்த பிறகுதான் அனைவருக்கும் புத்தி வருகிறது. அவனுக்கும் அப்படித்தான்.
தன் நிலையைக் கண்டு இரக்கம் காட்டுமாறு தன் தந்தையிடம் கோரிக்கை வைத்தான். அதற்கு வேத சர்மா, 'கார்த்திகை மாதத்தின் சிறப்பை உணராத நீ, அதே கார்த்திகை மாத மகிமையை புராணத்தை ஒருவர் கதையாக சொல்ல, நீ கேட்கும்போது விமோசனம் பிறக்கும், உன் சாபம் நீங்கும்' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
எலிக்கு எப்படி கார்த்திகை மாதம் தெரியும்?. அந்த எலி வளை தோண்டி வைத்து, பல இடங்களில் கிடைத்த உணவை தின்று தன் வாழ்நாளை கழித்து வந்தது. வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது. கார்த்திகை மாதம் ஒரு நாள் கவுசிக முனிவர் தன் சீடர்களுடன் காவிரி நதிக்கரைக்கு வந்தார்.
சீடர்களுக்கு பலவித விஷயங்களை போதித்து வந்ததுடன் கார்த்திகை மாத மகிமையை பற்றியும் எடுத்து ரைத்தார். அவர்கள் சாப்பிட்டு விட்டு போட்ட எச்சில் சாப்பாட்டை உண்பதற்காக தன் வளையில் இருந்து வெளியே வந்தது எலி.
அது வேத சர்மாவின் மகன்தான். அப்போது கவுசிக முனிவர், கார்த்திகை மாதத்தின் சிறப்பு பற்றி தன் சீடர்களுக்கு கூறிக்கொண்டிருந்த புராணம், எலியின் காதிலும் விழுந்தது. ஆனால் அதற்குத்தான் அந்த மாதத்தின் பெருமையோ, தனக்கு சாப விமோசனத்தை கொடுக்கும் கதை இது என்பதோ தெரியாதே.
உணவு உண்பதற்காக வந்த எலியானது, உபன்யாசம் முடியும் வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது. உபன் யாசம் முடிந்ததும் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம்! எலியாக இருந்த வேத சர்மாவின் மகன் தன் சுய உருபெற்று அங்கு நின்றான்.
அதைக் கண்ட கவுசிக முனிவரின் சீடர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்களிடம் தன் முன்கதையை விளக்கினான் வேத சர்மாவின் மகன். பின்னர் அவன் தனக்கு ஞான உபதேசம் செய்யும்படி, கவுசிக முனிவரிடம் சீடனாக சேர்ந்தான்
No comments:
Post a Comment