Wednesday, December 11, 2013

வாழ்க்கை ஒரு புதையல்

வாழ்க்கை ஒரு புதையல்

அதை நாம் தேடித்தான் கண்டறிய வேண்டும். அதுவும் நம்மிடம் தான் தேட வேண்டும்.

உங்களுக்கு வைரம் வேண்டுமென்றால் அது உங்களுக்குள்ளே இருக்கிறது. நிறைய தோண்டித்தான் ஆகவேண்டும். முயற்சியின்றி வெறும் அடுப்புக்கரிதான் கிடைக்கும். அப்படியே வைரம் கிடைத்துவிட்டாலும் அதை பட்டை தீட்டியாக வேண்டும். இல்லாவிட்டால் அது விலைபோகாது.

பணம்.

இது வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி.

பணம் பத்தும் செய்யும் என்று சொன்னவர்கள் அதை அனுபவித்தே சொன்னார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் அனைத்தும் பணத்தை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. அது உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்ற அடிப்படை தேவைகளை மட்டுமல்ல, சமூகத்தில் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை, நினைத்ததை வாங்கும் சக்தி, மக்கள் செல்வாக்கு, அழகான வாழ்க்கை, பயணங்கள், இலட்சியங்கள் இன்னும் இதுபோன்ற பல்வேறு முக்கிய  வாழ்வியல் நிலைகளை தீர்மானிப்பது பணம் என்பது நிதர்சனம்.

இந்த தளத்தில் நான் மேற்கொண்டு சொல்லப்போகும் சமாச்சாரங்கள் அனைத்தும் நம் செல்வவளம் குறித்ததே. எப்படி நாம் பணத்தை நம்மிடம் ஈர்ப்பது? அதன்மூலம் எப்படி உறவுகளை மகிழ்விப்பது? நீங்கள் நினைக்கும் எதையும் சாதிப்பது எப்படி? வாழ்வின் சிக்கல்களை தீர்ப்பது எப்படி? போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக சில பதிவுகளை எழுதப்போகிறேன்.

கருத்தாள்கைக்கு பலம் கூட்ட சில ஆராய்ச்சியாளர்களின் மேற்கோள்களையும் மற்ற சில எழுத்தாளர்களின் கருத்துக்களையும் கூடவே துணைக்கு அழைத்துக்கொண்டுள்ளேன். அதுபோன்ற இடங்களில் அவர்களின் பெயர்களும், புத்தகத்தின் பெயர்களும் தவறாமல் குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் அனைவருமே என் மனதில் மிகப்பெரிய மாற்றங்களை விளைவித்தவர்கள். அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.

இயற்கையில் நான் எழுத்தாளன் அல்ல. ஆனால் மிகப்பெரிய எழுத்தாளன் ஆகிவிடுவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இந்த வலைப்பூவை எழுத தொடங்கிவிட்டேன்.

இந்த வலைப்பக்கங்கள் யாருக்கு உதவும்?

தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் எவருக்கும் 
வாழ்வில் வழியறியாமல் துன்பப்படும் பாமர மக்களுக்கு
பணம் ஈட்ட துடிக்கும் இளைஞர்களுக்கு இளைஞிகளுக்கு
உறவுகளை தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் இதயங்களுக்கு 
மக்களுக்கு உதவ நினைக்கும் உள்ளங்களுக்கு 
குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க துடிப்பவர்களுக்கு
மற்றும் வாழ்வை மேன்மையாக்கிக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் 
என்னைப்பற்றி..

ஜீவா டி எம் பாரதி என்னோட பேரு. வயசு முப்பத்தி ரெண்டு.

எனக்கு சுய முன்னேற்றம் தொடர்பான விஷயங்கள், கட்டுரைகள், கதைகள், புத்தகங்கள் மற்றும் வலைத்தளங்கள் மீதான ஆர்வம் கட்டுக்கடங்காதது. பல்வேறு தோல்விகள், சிக்கல்கள், சிரமங்கள் தாண்டி இன்றைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மற்ற இளைஞர்களை போலவே நானும் போராடினேன். அந்த கல், முள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பயணித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நான் விதியே என்று நம்பி இருந்துவிட்டேன்.

ஆனால் அந்த விதியை நமக்கு ஏற்றவாறு மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது, அதற்கான வழிகளும், வழிகாட்டுதலும் தானாகவே நடந்தது. என் வாழ்க்கை மாறியது அன்று சொல்வதை விட வாழ்க்கையை மாற்றினேன் என்றே சொல்வேன்.

இன்று எதையும் சாதிக்கும் பக்குவமும் அபரிமிதமான தன்னம்பிக்கையும் வேரூன்றி வளர்ந்துவிட்டது.

நான் கண்டறிந்த வழிமுறைகள், படித்தறிந்த செயல்முறைகள் யாவும் இந்த ஜீவாவின் புதையல் மூலமாக அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே என் உள்ளக்கிடக்கை.

வாருங்கள். உலகை வெல்லலாம்.

No comments:

Post a Comment