Monday, June 10, 2013

விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றுதான்

விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றுதான். 

ஒரு விஷயத்தில் வெற்றிதான் இலக்கு. விளையாட்டைப் போலவே வாழ்க்கையிலும் இலக்கு நிர்ணயம், பயிற்சி, புத்திசாலித்தனமான உழைப்பு என எல்லாம் தேவை. எனவே,கிரிக்கெட்  விளையாட்டிலிருந்து நம் வாழ்க்கைக்கு தேவையான வெற்றிப் பாடங்களை இங்கே படிக்கப் போகிறோம்.

வெற்றியை மட்டும் பாருங்கள்

வாழ்க்கையில் எந்த ஒரு முயற்சியை துவங்குகையிலும் முதலில் தோல்வியைப் பற்றியே சிந்திக்கிறோம். கவனித்திருக்கிறீர்களா? இந்த தோல்வி சிந்தனையை மாற்றினால்தான் வெற்றியே.

கிரிக்கெட்டில், ‘பவுலர் எதற்காக பவுலிங் செய்கிறார்?’ ‘விக்கெட் எடுப்பதற்காக’. பேட்ஸ்மேன் அந்த பால் தன்னை அவுட் ஆக்குவதற்காகத் தான் வருகிறது என்று நினைத்தால் அவர் நிச்சயம் ஆட்டம் இழக்க வேண்டி வரும். பேட்ஸ்மேன் பந்தை பார்க்கும்போது அந்த பாலை நான்கு ரன்னாக மாற்றுவதா அல்லது ஆறு ரன்னாக மாற்றுவதா என்றுதான் யோசிப்பார். அதனால்தான் அவரால் விளையாட்டில் ரன்கள் எடுக்க முடிகிறது. இப்படி உங்கள் வாழ்விலும் வெற்றி பற்றி மட்டுமே சிந்தியுங்கள். பிறகு வெற்றியை மட்டுமே வாழ்வில் சந்திப்பீர்கள்.

வாய்ப்பு அல்ல, அதை சரியாக பயன்படுத்துவதுதான் வெற்றி

கிரிக்கெட்டில் பூவா? தலையா? பார்த்து பின்னர் ஆடத்துவங்குகிறார்கள். டாஸில் வெற்றி பெறுவதன் மூலம் தங்கள் ஆட்டத்தை அவர்களே நிர்ணயம் செய்து கொள்ள முடியும் என்கிற ஓர் அற்புத வாய்ப்பு. ஆனால் டாஸில் வெற்றி பெற்றாலே விளையாட்டிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. வாழ்க்கையில் அப்படித்தான். வாய்ப்பு கிடைத்துவிட்டாலே வெற்றி என்று அர்த்தம் இல்லை. அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி இறுதியில் அடைவதே வெற்றி. உதாரணத்திற்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைப்பதே வெற்றி அல்ல, அதை சிறப்பாகப் பயன்படுத்தி சிறந்த மருத்துவராக வெளியில் வருவதே வெற்றி.

உங்கள் இடத்தை நீங்கள்தான் முடிவு செய்கிறீர்கள்

கிரிக்கெட்டில் ஆட்ட நேர இறுதியில் கூட முடிவுகள் மாறும். அணியில் உள்ள கடைசி நபர் வரை நம்பிக்கையோடு நன்கு விளையாட வேண்டும். இவர்தான் சிறந்த விளையாட்டு வீரர் என்ற முன் முடிவுகளை எல்லாம் தள்ளிவிட்டு கடைசியாக களம் இறங்கிய வீரர் மிகச் சிறப்பாக ரன்களை குவித்து விளையாட்டின் போக்கையே மாற்றிய நிகழ்வுகள் நிறைய உண்டு. ஆட்ட வரிசையில் கடைசியில் இருப்பவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகிவிடுவார். வாழ்க்கையிலும் அப்படித்தான் உங்கள் செயல்பாடுகளால் உங்கள் இடத்தை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்.

உற்சாகம் இலக்குகளில் இருக்கிறது

டெஸ்ட் மேட்ச், ஒரு நாள் போட்டி எது அதிக உற்சாகமாக இருக்கிறது? ஒரு நாள் அல்லது இருபது இருபது. காரணம் என்ன? 20 ஓவர் என்ற நேர இலக்குக்குள் வெற்றி பெற வேண்டும் என்பதால்தான் அந்த உற்சாகம். வாழ்க்கையில் இப்படி நேர எல்லையுடன் இலக்குகளை அமையுங்கள். உங்கள் வாழ்க்கையின் உற்சாகம் உங்கள் இலக்குகளை பொறுத்தே இருக்கிறது.

கற்பதில் அல்ல கடைப்பிடிப்பதில் உள்ளது வெற்றியின் ரகசியம்

கிரிக்கெட் விளையாடுவது எப்படி? என்று புத்தகம் படித்து கற்றுக்கொள்வதனாலோ அல்லது எப்போதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருப்பதனாலோ சிறந்த கிரிக்கெட்டராக வர முடியாது. கற்றதை தினமும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கையிலும் அப்படித்தான். எனவே இங்கே கற்ற பாடங்களை கடைப்பிடியுங்கள். வெற்றி பெறுங்கள்.

No comments:

Post a Comment