"எனக்கொரு வீக்னெஸ் இருக்கு. இல்லேன்னா நான் வாழ்க்கைல ஜெயிச்சு கொடி நாட்டியிருப்பேன்” எனும் உரையாடலை எல்லா இடங்களிலும் சகஜமாகக் கேட்கலாம். பலவீனங்கள் இல்லாத மனிதன் இல்லை. ஆனல் பலவீனத்தை முதலீடாய்க் கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவர்களைப் பார்க்கும் போது தான் பலவீனங்கள் பலங்களை நோக்கிய படிக்கட்டுகள் எனும் உண்மை புரியும்.
உலகைக் கலக்கிய பீட்டில்ஸ் இசைக்குழுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுடைய ஆரம்ப காலத்தில் ஒரு ரிக்கார்டிங் நிறுவனத்திடம் போய் ஆல்பம் போடுவதற்கான வாய்ப்பைக் கேட்டார்கள்.
பாட்டைக் கேட்ட நிறுவனத்தினர் “ பாட்டு பரவாயில்லை. ஆனா உங்க கிட்டார் சவுண்ட் மண்டையைப் பொளக்குது. அதனால இதை தேர்வு செய்ய முடியாது” என அனுப்பி வைத்தனர்.
இன்றைக்கு பீட்டில்ஸ் குழுவினரின் பலமாகக் கருதப்படுவதே அந்த கிட்டார் இசை தான் ! அந்த அதிரடிக்கும் சத்தத்துக்காகவே அவர்கள் உலகம் முழுவதும் பிரபலமானார்கள் ! அந்த கிடார் இசையை கழித்துப் பார்த்தால் பீட்டில்ஸ் இன்று இல்லை !
“ஐயோ நாலு பேரு சொல்லிட்டாங்களே… இது ஒரு பெரிய குறை போல இருக்கு. இனிமே கிட்டார் இசையை கம்மியா வைச்சு மியூசிக் போடுவோம்” என்று அவர்கள் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவர்களுக்கென ஒரு தனி அடையாளம் இல்லாமலேயே போயிருக்கும்.
எது பலவீனம் என்று மற்றவர்கள் நினைத்தார்களோ அதையே தங்களது பலம் என அவர்கள் நிரூபித்தார்கள் !
நம்முடைய வாழ்க்கையிலும் பல விஷயங்களை நாம் பலவீனம் என நினைத்திருப்போம். ஆனால் அதே விஷயங்கள் தான் நமக்கு பலமான விஷயங்களாக மாறிவிடும்
. “சே என் பல்லு கொஞ்சம் அசிங்கமா இருக்கு” என புலம்பிக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு திடீரென வாய்ப்பு வரும் “உங்க பல்லு ரொம்ப அழகா இருக்கு. மாடலா நடிக்க முடியுமா ?”. அல்லது காதலன் கசிந்துருகி சொல்வான், “உன் பல்லு தான் எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்”.
எனக்கு பலவீனம் இருக்கிறது என புலம்புவதால் உண்மையில் எதையுமே சாதிக்க முடியாது.
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம். இயற்பியலுக்காக ஏகப்பட்ட பங்களிப்பைச் செய்தவர் அவர். அவருடைய “த பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” நூல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் “அதிகம் விற்பனையாகும்” புத்தகமாக இருந்தது.
தமிழில் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என வெளியான இந்த நூல் இன்றும் உலகின் பெஸ்ட் நூல் என பாராட்டப்படுகிறது.
இவர் உடலின் பெரும்பாலான பகுதிகள் செயலிழந்த நிலையில் இருப்பவர். வீல் சேரில் தான் வாழ்க்கை. உடல் பாகங்கள் ஏதும் அசையாது. பேசுவதற்குக் கூட ஒரு கணினி வேண்டும் எனும் நிலை !
ஆனாலும் இவருடைய சாதனைகளின் தாகம் மட்டும் குறையவே இல்லை. இந்த நோய் இருப்பதனால் முழு நேரத்தையும் சிந்தனையிலும், வாசிப்பிலும் செலவிடுகிறேன் என்கிறார் இவர் தன்னம்பிக்கையாக. பலவீனத்தை பலமாய்ப் பார்க்க மனம் பலமாய் இருக்க வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்டம் அந்த மனம் இருக்கிறது. அதனால் தான் அவர் இன்னும் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.
ஒருவருடைய பலம் இன்னொருவருக்கு பலவீனமாகும். ஒருவருடைய பலவீனம் இன்னொருவருக்கு பலமாய் இருக்கும்.
புல்லாங்குழலை எடுத்துக் கொள்ளுங்கள். துளைகள் இல்லையேல் அதில் இசை இல்லை. மிருதங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் துளைகள் இருந்தால் அதில் இசை இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம், அடுத்தவருடன் ஒப்பிட்டு நம்முடைய பலங்களை பலவீனமாய்க் கருதாமல் இருக்க வேண்டியது முக்கியம்.
ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.
பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்
“குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.
“இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !
முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.
கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான்.
பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.
பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்
“குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான்
புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”
குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.
நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது.
பலவேளைகளில் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அந்த வடிவமாகவே நாம் மாறிவிடுகிறோம். பிறருடைய விருப்பங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நமது இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் வேகத் தடையாக அமைந்து விடுகிறது.
பல வேளைகளில் அந்த விமர்சனங்கள் பெரும் புதை குழிகளாய் மாறி நம்மை விழுங்கி விடுவதும் உண்டு. பல வேளைகளில் நம்மால் எதைச் செய்ய முடியாது என்பதைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் அது சமூகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களுடனான ஒப்பீடாகவே இருக்கும்.
பிறர் பலவீனமாய் நினைக்கும் விஷயம் தான் நம்மை உலகுக்கே கொண்டு போய் சேர்க்கும் பலமான விஷயமாய் இருக்கும்.
இது என்னோட பலவீனம் என நாம் நம்பும் வரை அது நம்முடைய பலவீனமாய் தான் இருக்கும். இது பலவீனமல்ல பலம் என நாம் நம்பும் வினாடியில் நமது பலவீனமே நமது மிகப்பெரிய பலமாய் மாறிவிடும்.
பலவீனம் இல்லாமல் வாழ்வில்லை
பலமாய் மாறிடில் தாழ்வில்லை
No comments:
Post a Comment