இலக்குகளை அடையும் பயணத்தில் நீங்கள் தவறுகள் செய்வீர்களா? நிச்சயமாக அதை நீங்கள் நம்பலாம். “தவறு செய்வது மனித இயல்பு. பென்சிலைக் காட்டிலும் விரைவாக உங்கள் அழிப்பான் கரைந்துவிடும்போது தான் நீங்கள் அளவுக்கு அதிகமான தவறுகளைச் செய்கிறீர்கள் என்பதை அறிவீர்கள்” என்று யாரோ கூறியுள்ளனர்.
நீங்கள் செய்ய வேண்டியதை நீங்கள் அறியும்போது, அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். உங்கள் இலக்கை அடையும்வரை நிறுத்தாதீர்கள். நீங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் தவறுகள் எதுவும் செய்யவில்லை என்றாலோ அல்லது எந்தவிதமான பின்னடைவுகளையும் எதிர்கொள்ளவில்லை என்றாலோ நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்று பொருள்.
கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரம் கடலுக்குள் சென்று இருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்களது படகு கசியத் துவங்கியது. படகிற்குள் வந்த தண்ணீரை அவர்கள் வெளியேற்றுவதைக் காட்டிலும் அதிக வேகத்தில் படகிற்குள் தண்ணீர் நிரம்பிக் கொண்டிருந்தது. “நாம் இதை ஒரு கணம் நிறுத்திவிட்டு, பத்திரமாக நீந்திக் கரை சேர நாம் பிரார்த்திக்கலாம்” என்று ஒருவர் கூறினார்.
அவரது நண்பர் தண்ணீருக்குள் குதித்து, “வா, நாம் நீந்திக் கொண்டே பிரார்த்திக்கலாம்” என்று கூறினார். அது கடற்கரையாக இருக்கட்டும் அல்லது மிக உயர்ந்த மலையாக இருக்கட்டும், ஒருமுறை நீங்கள் முடிவு செய்துவிட்டால், உங்கள் இலக்கைவிட்டு உங்கள் பார்வையை அகற்றாதீர்கள்.
நாம் அனைவரும் ஏதோ ஒரு சிறப்புப் பரிசோடுதான் பிறக்கிறோம். அதை நீங்கள் கண்டறியும்போது, அத்திறமையை உருவாக்குவதற்கு ஒரு யதார்த்தமான திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் வசதியான இடத்தை விட்டு வெளியே வந்து, உங்கள் குறிக்கோள் குறித்துச் சீராக, ஆழ்ந்த விருப்பத்துடன் செயல்படுங்கள்.
No comments:
Post a Comment