நான் பள்ளி வாசனையே அறியாதவன். நான் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டவன். நான் பள்ளி இறுதியாண்டில் கோட்டை விட்டவன். நான் கல்லூரி படிப்பை முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேறாதவன். இப்படி புலம்புபவர்கள் நம்மிடையே ஏராளம். அவர்களெல்லாம் உணராத விஷயம் ஒன்று உண்டு. வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது இறுதியல்ல (success is not end, failure is not final).
வாழ்வில் எல்லா வசதிகளும் படிப்பும், அந்தஸ்தும் இருந்தாலும் அது இல்லையென்றால் வறுமையான வாழ்வுதான். படிப்பும் இல்லை வசதியும் இல்லை என்றாலும் அது இருந்தால் வளமையான வாழ்வுதான். எது அது? என்றுமே தளராத, அசையாத தன்னம்பிக்கை தான். வரலாற்றில் இடம் பெற்ற அனைவரின் முதல் முதலீடு தன்னம்பிக்கை தான். அதை ஆயுதமாக பயன்படுத்தி தான் உலகம் ஒரு சேர முடியாது, நடக்காது என்று நினைத்ததை எல்லாம் முடித்துக் காட்டினர். நடத்தி காட்டினர்.
தன்னம்பிக்கையை தன்னுடைய வாழ்க்கை முகவரியின் முதல் வரியாக கொண்டு ஒவ்வொரு நாளையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடு துடிப்பான செயல்பாடுகளோடு அணுகும் போது வெற்றி என்பது தொடர் கதையாகிறது. தன்னம்பிக்கை என்பது ஒரு குணாதிசியமே. தன்னைப்பற்றி, பிறரை பற்றி, மனித வாழ்க்கையை பற்றி மற்றும் இந்த உலகத்தை பற்றிய ஒரு ஆரோக்கியமான கண்ணோட்டம் தான் தன்னம்பிக்கையின் முதல் வித்து.
நல்ல சிந்தனைகள், உயரிய செயல்பாடுகள் தன்னம்பிக்கை மென்மேலும் வளர வழி வகுக்கும். மனோதத்துவ அடிப்படையில் பார்த்தால் தன்னம்பிக்கை என்பது மனிதன் விழிப்புணர்வோடு தன்னுள் உருவாக்கி வளர்த்துக் கொள்வது, நேற்று தன்னம்பிக்கையற்றவன் இன்று தன்னம்பிக்கை உடையவனாக மாறலாம். தேவை விழிப்புணர்வு தான்.
பிரச்னைகள் என்பது மனித வாழ்க்கையின் ஒரு அங்கம் (Essence of human life) என்ற விழிப்புணர்வு அவசியமாகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுள் அபரிமிதமான சக்திகளும், திறமைகளும் இருக்கின்றன என்று நம்ப வேண்டும். அவைகளின் துணையோடு வாழ்வில் சந்திக்க நேரிடும் சவால்களையும், சோதனைகளையும் துணிச்சலோடு எதிர் நோக்கி வெற்றி வாகை சூட வேண்டும்.
மனித வாழ்க்கை ஒரு போராட்டமா? அல்லது பூந்தோட்டமா? என்ற கேள்வி எழுந்தால் அது போராட்டங்கள் நிறைந்த பூந்தோட்டம் என்று பதில் சொல்வது தான் சரியாக இருக்கும். போராட்டம் தான் என்பது இல்லை பூந்தோட்டம் தான் என்பதும் யதார்த்தத்தை நிராகரிக்கும் பதிலாகும்.
வாழ்வில் பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்கும் சமயத்தில் நமக்கு உற்ற தோழனாக உடன் இருப்பது தன்னம்பிக்கையே.
தன்னம்பிக்கையோடு தெளிவான சிந்தனையும், வாழ்வில் அடைய விரும்பும் இலக்கை நோக்கிய செயல்பாடும், வெற்றி அடையும் வரை ஓயாத உழைப்பில் ஈடுபாடும் ஒரு சேரும் போது ஒருவனின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாம் இருக்கும் வண்ணமே நம்மை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது போல் மற்றவர்கள் இருக்கும் வண்ணமே அவர்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசய பிறவி. ஆற்றல்களின் தொகுப்பு என்ற நம்பிக்கை தான் எளிதானது. பிறர் மாறுவது நம் கையில் இல்லை. தன்னைத்தானே முழுமையாக நம்பி மற்றவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையை எதிர்நோக்கினால் கனவுகள் நனவாகும்.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இணையற்ற நண்பர்கள். டாக்டர் அப்துல்கலாம் சொல்லியது போல் கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல. நீ நினைப்பது நடக்காத வரை உன்னை தூங்க விடாமல் செய்வது தான் கனவு. இந்த மகத்துவமான வரிகளை மனதில் நிறுத்தி தன்னம்பிக்கையோடு செயல்பட தொடங்கினால் ஜீரோ கூட ஹீரோ ஆகலாம்.
No comments:
Post a Comment