மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.
ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.
பல விஷயங்கள் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணமே அவற்றிற்கு நாம் நம் வாழ்வில் பிரதான இடத்தை அளிப்பதில்லை என்பது தான். அல்லது அதற்கு எதிர்மாறான ஒன்றிற்கு நாம் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.
பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஆனால் அது ஒன்றும் என்னிடம் அதிகம் இல்லை என்று சொன்ன இருவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களை ஆராய்ந்ததில் ஒருவர் பணத்தை விட அதிகமாக சும்மா சோம்பி இருப்பதை விரும்புபவர் என்பதையும், இன்னொருவர் பணத்தை விட அதிகமாக அதை சூதாட்டத்தில் வைப்பதில் விருப்பமுள்ளவர் என்பதையும் நான் காண நேர்ந்தது. அந்த இரண்டுமே பணம் சேரத் தடையாக இருக்கும் பழக்கங்கள். எனவே பணம் நிறைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தாலும், பணத்துக்கு அவர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை தருபவர்கள் என்ற போதிலும் அதற்கு எதிர்மறையான ஒன்றிற்கு அதை விட அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள்.
எனவே நீங்கள் மிக முக்கியம் என ஒன்றை நினைப்பதாக நம்பி இருந்தும் அது அதிகம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள். அந்தப் பட்டியலில் அந்த முக்கியமான விஷயத்திற்கும் அதிகமாக அதற்கு இசைவில்லாத, அல்லது எதிராக உள்ள விஷயம் ஒன்றிற்கு உங்களை அறியாமல் பிரதானத்துவம் நீங்கள் தந்து கொண்டு இருக்கலாம்.
ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வேண்டும் என்று நினைப்பதைக் கூட எதிர்மறை வாக்கியங்களில் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கும், நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவதான அந்த எதிர்மறை வாக்கியத்தை ஆழ்மனதில் எண்ணும் போது நோய் என்ற வார்த்தையே பிரதானமாகிறது என்றும் அதையே அதிகம் நாம் நம் வாழ்வில் வரவழைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் தருபவர். அவருக்கு கவனமாக இல்லாவிட்டால் எதிலிருந்தும் சீக்கிரம் "infection" ஆகி விடும் என்ற பயம் அதிகம். எங்கு சென்றாலும் infection ஆகி விடக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் அவர் எனக்குத் தெரிந்து அடிக்கடி நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆக ஆரோக்கியம் என்ற எண்ணத்தை விட "infection" என்ற எண்ணமே ஆழமாகப் பதிந்து முக்கியத்துவம் பெற்றதன் விளைவே அது என்பது தான் சரியாகத் தோன்றுகிறது.
எனவே அப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக் கூடாது, இது வேண்டாம் என்று எதிர்மறை வாக்கியங்களால் ஒன்றிற்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தி விட்டு அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், இது வேண்டும் என்று ஆழமாக நினைப்பது தான் அதை நம் வாழ்வில் வரவழைப்பதற்கு நல்ல வழி.
ஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால் அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும்.
எனவே உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள்.
No comments:
Post a Comment