Thursday, June 20, 2013

வாய்ப்புகளை உணர்கிறோமா?

விதை, ஒரு தாய்…. இரண்டிலும் பிரசவம் நிகழ்கிறது. தாயின் பிரசவம் குழந்தை. விதையின் பிரசவம் செடி. செடிதான் விருட்சமாகிறது. ஆம். மரமாகிறது. மரம் இயற்கையின் சீதனம்.காற்றின் வாகனம், பறவைகளின் சரணாலயம், பாதங்களுக்குப் பாதுகை, பயணிகளுக்கு நிழற்குடை, பூக்களின் பிரசவ விடுதி.

எந்த மரமும் தனக்காக வாழ்வதில்லை. வாழ்ந்தால் பூவும் பழமும் தரும்.வீழ்ந்தால் விறகாக வீடு வந்து சேரும்.மரத்தின் வாழ்க்கையே மற்றவர் நலனுக்குத்தான். உயர உயர வளர்ந்தாலும் “பணிவு தான் என்றும் பெருமை தரும்” என்ற உண்மையை உணர்த்து எப்போதும் அதன் கிளைகள் பூமி பார்த்துத் தாழ்ந்திருக்கும்.

இலைகள் உதிர்கையில் அது சலசலத்துக்கொண்டே சங்கீத இசையுடன் விழுகிறது. இலையாக இருக்கும் பொழுது எழாத சப்தம் சருகாக மாறுகையில் எழுகிறது. வாழ்ந்து முடிந்த அனுபவத்தின் வெளிப்பாடு அது.

இலை இளமை, சருகு முதுமை.ஒவ்வொரு மரமும் ஒரு போதி மரம். மரம் மனிதனுக்கு அன்பு செய்யவும், தானம் செய்யவும் கற்றுத் தருகிறது.பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்புபவர்களுக்குப் பாடம் சொல்லுகிறது ஆலமரம். ஆம்! தன்னைத் தாங்கிய அடிமரத்தை தன் விழுதுக் கைகளைப் பூமியில் பரப்பி தாங்கிப் பிடிக்கின்றது ஆலமரம்.

மானுட சந்ததி மறையாத சந்ததி என்று தலைமுறையின் தத்துவத்தைப் பூமிக்குக் காட்டுகின்றது வாழைமரம்.

நிமிர்ந்து நிற்கக் கற்றுத் தரும் பனைமரம்

நன்றியை மறக்காத தென்னை மரம்

உறுதியைக் கற்றுத் தரும் புளியமரம்

இப்படி ஒவ்வொரு மரமும் ஒரு போதிமரம்.

மூடிய மண்ணைப் பிளந்து விதைக்குள்ளிருந்து வெளிவரும் செடியைப் போல் இளமையின் செழுமையில் வளர்ந்து கொண்டிருப்பவர்களே முளைத்து வரும் செடிக்குத் தண்ணீர் ஊற்றலாம். உரமிடலாம், வேலி அமைக்கலாம். ஆனால் வளர்வது என்பது செடியின் வேலைதான்.பெற்றோர்கள் உங்களை பள்ளியிலோ, கல்லூரியிலோ, சேர்த்து விடலாம். புத்தகங்கள் வாங்கிக்கொடுக்கலாம். உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். ஆனால் படிப்பதும் ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதும் உங்களது வேலைதான்.

உங்களிடத்தில் என்னென்ன திறமைகள் இருக்கின்றன அவற்றை எப்படி வளர்த்துக்கொள்வது அதற்கான பயிற்சிகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை வேரின் தேடலாய்த் தேட வேண்டும்.பொருளாதாரம் தாராளமய மாக்கப்பட்டு உலகமயமாக்கப் பட்டுவிட்ட இந்த வேளையில் தகுதியானவர்களுக்கு உலகெங்கும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தகுதியில்லாதவர்கள் உள்ளூர் சந்தையில் கூட விலைபோக மாட்டார்கள்.

மனிதனுடைய சுயத்திற்கும், முயற்சிக்கும் அவன் வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. ஒவ்வொருவரும் தன்னுடைய சுயம் எது? தனக்குள் புதைந்திருக்கும் ஆற்றல் எது? என்பதைக் கண்டறிய வேண்டும். அந்த சுயத்தை, ஆற்றலை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்படி செய்தால் வெற்றி நிச்சயம்.

சமுதாயத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் நீங்களே முயன்று உங்களுக்குரிய வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ளுங்கள். ‘வாய்ப்புகளை உணர்வதே அறிவுக் கூர்மையாகும்’ என்கிறது ஒரு சீனப் பழமொழி.வேலைக்கான ஒரு நேர்காணல். பல இளைஞர்கள் பங்குபெற்றனர். இறுதியில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுள் ஒருவரை மட்டும் தேர்வு செய்ய வேண்டிய இறுதிக் கட்டம். தேர்வுக்குழு இவர்கள் இருவரிடமும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டது.

ஒரு இளைஞனை அழைத்து “உங்களுக்கு இந்த வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்?”அந்த இளைஞன் சொன்னான். “நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்றான். நீ போகலாம் என்றது தேர்வுக் குழு.இப்போது இரண்டாவது இளைஞனை அழைத்து அதே கேள்வியைக் கேட்டனர்.நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்றான். நீ உடனே வேலையில் சேரலாம் என்றனர்.

இப்படித்தான் இந்த இளைஞனைப் போல் நம்பிக்கையோடு சில நேரங்களில் உங்கள் சுயரூபத்தைக் காட்ட வேண்டும். தேவைப்பட்டால் திருமால் எடுத்த வாமன அவதாரத்தைப் போல் அவதாரம் எடுக்க வேண்டும். அவதாரம் என்பது ஆற்றல்தான். இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றிமாலை உங்களுக்குத்தான்.

No comments:

Post a Comment