காட்டுக்குப் பக்கத்தில் சென்று கொண்டிருந்த ஒருவன் ஒரு புலி ஒருமானை வேட்டையாடுவதைப் பார்த்தான். அப்போது தூரத்தில் ஒரு நரியும் இருந்தது. அது வெறுமனே படுத்திருந்தது. புலி வேட்டையாடி, தனக்கு வேண்டிய உணவைத் தின்றுவிட்டுச் சென்றவுடன் மீதமிருந்த அந்த மானை அந்த நரி மகிழ்ச்சியோடு தின்றுவிட்டுத் திரும்பியது. அதைப் பார்த்த அவன் எதுவுமே செய்யாமல் -அந்த நரிக்கு இறைவன் அருள்வதைப்போல் நமக்கும் அருள்வார் என்று எதுவுமே செய்யாமல் - யாராவது உதவி செய்வார்கள் என்று அமர்ந்திருந்தான்.
அப்போது வானத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.' மடையனே ! 'நீ நரியைப் பின்பற்றாமல் புலியைப் பின்பற்று' என்றது அந்தக்குரல் நாம் யாரை உதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் தவறு செய்பவர்களை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறோமே தவிர,மன்னிப்பவர்களை எடுத்துக்கொள்வதில்லை. தானம் செய்பவர்களை எடுத்துக்கொள்வதில்லை. மாறாக தானம் பெறுபவர்களை எடுத்துக்கொள்கிறோம். காப்பாற்றுகிறவர்களை உதாரணங்களாக எடுத்துக்கொள்வதில்லை. மாறாக காப்பாற்றப்படுகிறவர்களை எடுத்துக்கொள்கிறோம். கொடுப்பதற்காக கையை உயர்த்துபவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. மாறாக பெறுவதற்காக கையை ஏந்துபவர்களை எடுத்துக்கொள்கிறோம்.
கடுமையான இலக்கை விட்டு,எளிமையான இலக்கைத் தேர்ந்தெடுக்கின்றோம்.
நாம் தவறு செய்கிறபோதெல்லாம் மற்றவர்கள் எல்லாம் யோக்கியமா? என்று கேட்டு, நம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்கிறோம். இங்கே இயற்கை புலியையும் முன்வைத்திருக்கிறது; நரியையும் முன்வைத்திருக்கிறது. புலியைப் பின்பற்றுபவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். நரியைப் பின்பற்றுகிறவர்கள் எச்சிலுக்காகவும், எச்சத்திற்காகவும் காத்துக் கிடக்கிறார்கள். புலிகளை மகிழ்விப்பதற்காகச் சில நேரங்களில் அவர்கள் புகழவும் செய்வார்கள். அடிகளை வருடவும் செய்வார்கள். நாம் தவறு செய்கிறபோதெல்லாம் மற்றவர்கள் எல்லாம் யோக்கியமா? என்று கேட்டு, நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்கிறபோது, நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறபோது, நாம் நல்லவை செய்கிறவர்களைப் பற்றியும், நேர்மையாக இருக்கிறவர்களைப் பற்றியும், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ஏளனப் படுத்த நினைக்கிறோம் . 'சென்' கதை ஓன்று உண்டு. வில்லாளி ஒருவன் உயர்ந்த வகுப்பில் பயிற்சி பெறவேண்டுமென்று விரும்பினான். அவனுடைய இலக்கு தவறிக்கொண்டே வந்ததனால் குரு அவனை உயர்ந்த வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை. அதனால் அவன் தொடர்ந்து கீழ்மட்டத்திலேயே பயிற்சி பெறவேண்டியதாக இருந்தது. ஒருநாள் அதிகாலையில், பயிற்சி அரங்கத்திற்கு வந்து அவன் அம்புகளை எல்லாம் செலுத்தினான். அம்புகள் சென்று சேர்ந்த இடத்தைச் சுற்றி,ஒரு வளையத்தைக் கரிக்கோட்டினால் தீட்டினான். அன்று குரு வந்த போது, ஏற்கனவே வரைந்து வைத்திருந்த வளையத்தை நோக்கி அம்புகளைச் செலுத்தினான். ஒவ்வொரு அம்பும் அந்தந்த வளையத்திற்குள் சென்று குத்திட்டு நின்றது. குரு அவனை அடுத்த வகுப்புக்கு அனுமதித்தார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த சக மாணவன்,இன்று எப்படி உன்னால் சரியாக அம்புகளை செலுத்த முடிந்தது என்று கேட்டான். ஏற்கனவே அந்த வட்டத்துக்குள் அம்புகள் பயணப்பட்ட பழக்கம் இருக்கிறதே அந்த அனுபவம்தான் காரணம் என்று சொன்னான்.
உண்மையிலே காரணம் அம்புகளுக்குப் பழக்கம் ஏற்பட்டதனால் அல்ல. அந்தச் சீடனுக்கு நம்பிக்கை ஏற்ப்பட்டது. ஏற்கெனவே நாம் செலுத்தியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருந்ததனால் அந்த இலக்கைச் சரியாக அடைய முடிந்தது.
நம்பிக்கை கொள்பவர்கள் புலிகளின் வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நம்பிக்கை அற்றவர்கள் நரிகளாகவே மாறிப் போகிறார்கள்.
No comments:
Post a Comment