Monday, June 10, 2013

அந்த மூன்று சொற்கள்...

மூன்று சொற்களை சரியான இடங்களில், போலியில்லாமல் உளப்பூர்வமாகப் பயன் படுத்துபவர்கள், எல்லோராலும் நேசிக்கப் படுகிறார்கள். ‘நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘தயவுடன்’ என்பனவே அந்தச் சொற்கள். ஆனால், இவற்றைப் பயன்படுத்தினாலே, நமது சுயமரியாதைக்கு இழுக்கு வருவதாக நாம் எண்ணிக் கொள்கிறோம்.

மனிதர்கள், தனித்தனியே பிரிந்து கிடக்கும் தீவுக்கூட்டம் அல்ல. அடுத்த மனிதர்களைச் சார்ந்தே நாம் வாழ்கிறோம். நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகப் பலர் நமது செயல்களுக்குத் துணை நிற்கிறார்கள்.

உணவகத்தில் நமது அவசரத்தைப் புரிந்து கொண்டு, நாம் கேட்கும் உணவுகளை உடனுக்குடன் கொண்டுவந்து தந்து, சாப்பிட்ட உணவுக்காகக் கொடுத்த பணத்தின் மீதத்தையும் உடனே கொண்டு வந்து தரும் பணியாளிடம், ‘அதை நீயே வைத்துக்கொள்’ என்று வெறுமனே சொல்லிவிட்டுக் கிளம்பாமல், அத்துடன் ‘நன்றி’ என்று சிரித்த முகத்துடன் சொல்லும்போது, அவர் அடையும் மகிழ்ச்சி அதிகம்.

 நமக்காக ஒரு வேலை செய்யும் எவருக்கும் நன்றி சொல்லலாம். ‘அவர் பணம் வாங்கிக் கொண்டுதானே செய்கிறார்… நன்றி எதற்கு சொல்ல வேண்டும்’ என்று தோன்றினால், நமது மனம் இன்னும் மலரவில்லை, கூம்பித்தான் கிடக்கிறது என்று பொருள்.

எந்த மனித உறவையும் அல்லது வேலையையும் பணத்தினால் மட்டுமே அளந்து விட முடியாது. ‘சந்திக்கும் எவரிடமும் அன்பாக இருங்கள்… கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்… ஏனெனில், எவருமே ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு போராடுபவர்களாகவே இருக்கிறார்கள்…’ என்கிறார் கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோ. அவரது காலத்திலேயே அப்படி என்றால், ‘ஓடிக்கொண்டே இருந்தால் தான் நின்ற இடத்திலேயே இருக்க முடிகிறது…’ என்னும் சூழலில் வாழும் நமது மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

 ஆனால் புன்னகைக்கக்கூட நேரம் இல்லாதது போலவே நாம் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். பெற்றோரும் நண்பர்களும்கூட நமக்கு உதவி செய்வதற்கென்றே பிறந்தவர்கள் போலவும், ஆனால் நமக்கு அடுத்த வேலைகள் ஆயிரம் இருப்பது போலவும் நடந்து கொள்கிறோம்.

நன்றாகச் சமைத்து வைத்திருக்கும் மனைவிக்கோ அல்லது அம்மாவிற்கோகூட நன்றி சொல்ல நமக்குத் தெரிவதில்லை. சிரமப் பட்டாவது நம்மைப் படிக்க வைக்கும் அப்பாவுக்கோ அல்லது நமக்குப் பிடித்த வண்ணத்தைத் தேடிப்பிடித்து தீபாவளிக்குப் புடவை வாங்கித்தரும் கணவனுக்கோ நன்றி சொல்லத் தோன்றுவதில்லை. ‘அவர் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்’ என்று பதில் சொல்லத் தெரியுமே தவிர, சொன்னால் எவ்வளவு மகிழ்வார்கள் என்று எண்ணிப் பார்ப்பதில்லை.

வேலை செய்யுமிடத்தில், நம்மைவிடக் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் நாம் சொல்லும் நன்றி, அவர்களை ஈடுபாட்டுடன் வேலை செய்ய வைக்கிறது. அவர்களிடம் இருக்கும் திறமையை மேலும் வெளிக்கொணர்கிறது.

அதேபோன்று மற்றொரு முக்கியமான சொல், ‘மன்னிக்கவும்’ என்பது. தவறு செய்வது மனித இயல்பு. எந்தச் செயலிலும் தவறு நிகழலாம். ‘மனிதத் தவறு’ என்றே அது குறிக்கப்படுகிறது. எனவே, தவறி தவறு செய்வது மிகப்பெரிய பிழையன்று. ஆனால், நிகழ்ந்துவிட்ட தவற்றுக்கு, வருத்தம் தெரிவிக்கி றோமா என்பதில்தான் சிக்கல் எழுகிறது.

‘நான் செய்வதில் தவறே நிகழாது’ என்கிற எண்ணமோ; அல்லது, இதில் மன்னிப்புக் கேட்க என்ன இருக்கிறது…’ என்கிற எண்ணமோ; ஏதோ ஒன்று நம்மைத் தடுத்துவிடுகிறது. மன்னிப்புக் கேட்பது மனிதப்பண்பு என்பது இருக்கட்டும்; தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களே, தாங்கள் செய்துவிட்ட தவற்றிற்கு மன்னிப்புக் கேட்கிறார்கள் என்னும் உண்மையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று, தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களே, அறியாமல் பிறர் செய்துவிட்ட தவற்றினையும் மன்னிக்கிறார்கள்.

‘பலவீனங்கள் பிறரை மன்னிப்பதேயில்லை. ஏனெனில், அது வீரர்களின் குணம்’ என்கிறார் காந்தியடிகள்.

ஞானி ஒருவரைக் காண மிக வேகமாக வந்தார் ஒருவர். ஓர் அறையில், பலர் சூழ்ந்திருக்க அமர்ந்திருந்தார் ஞானி. உடனே அவரைக் கண்டு அளவளாவும் ஆவலில், தனது இரு காலணி களையும் கால்களிலிருந்து உதறியெறிந்துவிட்டு உள்ளே ஓடினார் வந்தவர். வந்தவரையே பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி.

‘ஐயா… உங்களிடம் ஞானம் பெறவே நான் ஓடி வந்தேன்.. எனக்கு உபதேசம் வழங்குங்கள்…’ என்றார் அவர். சலனமற்ற முகத்துடன் ஞானி சொன்னார்: ‘நீ உதறி கழற்றியெறிந்துவிட்டு வந்தாயே! உன் கால் செருப்புக்கள் இரண்டு… முதலில் அவற்றிடம் போய் மன்னிப்புக் கேட்டு விட்டு வா’ என்றார் ஞானி. தவறு செய்துவிட்டு, அதற்கு மன்னிப்பு கேட்கத் தகுதி பார்க்க வேண்டியதில்லை.

மற்றொரு முக்கியமான சொல், ‘தயவுடன்’. அடுத்தவர் செய்யும் தவற்றினைச் சுட்டிக் காட்டும் போதோ அல்லது நமது சொற்களைத் தலை மேலேற்றிச் செயலாற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்களிடம் ஒரு வேலையைச் செய்யச் சொல்லும்போதோ, ‘தயவுடன்’ என்னும் சொல்லைச் சேர்த்து சொல்வது, ஓர் உயரிய குணம்.

நாம் போக முடியாதவாறு வழியை அடைத்துக் கொண்டிருப்பவரிடமோ அல்லது வண்டியை நிறுத்தி வைத்திருப்பவரிடமோ, இந்தச் சொல்லையும் சேர்த்து கோரிக்கை வைத்துப் பாருங்கள்; உரிய பலன் உடனே கிடைக்கும்.

அப்படி இல்லாமல், சற்றுக் கோபத்தையும் சேர்த்து சொல்லப்பட்ட சொற்கள், கிரிமினல் வழக்கு வரை கொண்டுவந்துவிட்ட நிகழ்வுகள் இங்கு நிறையவே உண்டு.

நாம் ஆணையிட்டால் செயலைச் செய்து முடிக்க வேண்டியவரிடம், ‘தயவுடன் இதைச் செய்ய முடியுமா?’ என்று கேட்டால், அவர்களின் உள்ளம் மட்டுமல்ல, உச்சியும் குளிரும். அந்தக் குளிர்ச்சி அவர்களின் செயல்களில் வெளிப்படும்.

எவ்வளவு கடினமான சூழலையும், இந்த மூன்று சொற்கள், இளக்கமடையச் செய்கின்றன. எவ்விதக் கசப்பான மனநிலையையும் மாற்ற வல்லவையாக இவை இருப்பதன் காரணம், இந்தச் சொற்கள் தேனில் மிதந்து கொண்டிருப்பவை. எடுத்துப் பரிமாறினால், இனிக்காமல் என்ன செய்யும்?

No comments:

Post a Comment