Thursday, June 20, 2013

வெறிகொள், வெற்றி கொள்....

நம்மை உணர்ந்து, நம் உள்ளார்ந்த சக்தியை முழுதாக அறிந்து உயர்வதே நாம் இவ்வுலகில் பிறந்ததன் பயனாகும். இதை உளவியலில் Self Actualization என்று குறிப்பிடுகிறார்கள்.

இப்படி தன்னைத் தானே உயர்த்தும் படிநிலைகளில் முதன்மையானது கனவு காணுதல். இளைஞர்களைக் கனவு காணச் சொல்லும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுதலுக்குத் தரும் விளக்கத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சொல்கிறார்:
“உறங்கும் போது நீ காணும் கனவு கனவல்ல; உன்னை உறங்க விடாமல் செய்யும் வெற்றி அடையும் வெறி, உயர் அவா, அது தான் கனவு”.

உனக்கென ஒரு கனவு உள்ளதா?

அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்த மாமனிதர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தன் கனவு இன்னது என பிரகடனம் செய்தார்.
“எனக்கு என ஒரு கனவு உள்ளது. இன்றைய கறுப்பின அடிமையின் மகன், இன்றைய அடிமைகளின் உரிமையாளர் வெள்ளையரின் மகன் – இவ்விருவம் ஒரே மேசையில் அளவளாவி உணவருந்தும் காலம் வரவேண்டும்”.

தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட நம் மகாத்மா காந்திதான் இந்த மார்டின் லூதர் கிங்கின் முன்மாதிரி மனிதர். இவர் எளிய கறுப்பின குடும்பத்தில் 1929-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் பிறந்தார். போஸ்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றஅவர், தனது 26-ம் வயதிலேயே கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராட்டக் களத்தில் இறங்கினார்.

1959-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த மார்டின் லூதர் கிங் சொன்னார், “நான் மற்ற நாடுகளைக் காணச் சென்றேன். ஆனால் காந்தி பிறந்த இந்தியாவை தரிசிக்க வந்துள்ளேன்”. 
காந்தியடிகள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானதைப் போல், லூதர் அவர்களும் தன் 45-ம் வயதில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அவர் கண்ட கனவு 2009-ம் ஆண்டு ஜனவரி 20-ம் நாள் நனவாகியது. ஆம் அன்று தான் ஒரு கறுப்பின இளைஞரான பராக் ஒபாமா அமெரிக்க நாட்டின் 44 வது குடியரசுத் தலைவரானார். மார்டின் லூதர் கிங்கின் கனவு நனவானதுபோல், உன்னுடைய கனவும் ஒரு நாள் நனவாகும். ஆனால் இளைஞனே உன்னிடத்தில் ஒரு கனவு உள்ளதா?

கனவு எதற்காக?

கற்பனை செய்து பார். அது ஒரு பன்னாட்டு விமான நிலையம். எந்த ஊருக்குச் செல்கிறோம் என்ற இலக்கு இல்லாமல் ஒரு விமானி அவரது விமானத்தை இயக்கினால் என்னாகும்? வழியில் குறிக்கிட்ட மலை மீது மோதுவார் அல்லது மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திற்குத் திரும்புவார். அந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் கதி என்னாவது?

மரம் வெட்டி ஒருவர் தானியங்கி இரம்பத்துடன் காட்டுக்குச் செல்கிறார். பல மரங்களைப் பார்க்கிறார். எந்த மரத்தை வெட்ட வேண்டும் என்ற இலக்கு இல்லை அவருக்கு. ஒரு மரத்தையும் வெட்டாமல் திரும்புகிறார். அவரிடம் தானியங்கி இரம்பம் இருந்தது. ஆனால் இலக்கு இல்லை. எனவே எதையும் செய்ய முடியவில்லை. 

காலை நேரம். உண்டு முடித்து உடையணிந்து புறப்படும் போது இசை வகுப்புக்குச் செல்வதா? விளையாடச் செல்வதா? நண்பனைப் பார்க்கச் செல்வதா? என்று யோசிக்கிறாய். இப்படி குழப்பவாதியாக இருந்தால் எங்கும் செல்ல மாட்டாய்.

உடல்திறனும் அறிவுத்திறனும் வாய்க்கப் பெற்றிருந்தாலும், கனவு அல்லது இலக்கு இல்லாவிட்டால் நீ எதையும் சாதிக்க முடியாது.
உன் வாழ்க்கையில் நீ எதை அடைய விரும்புகிறாய்? பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு, அங்கீகாரம் – இவற்றுள் எதை அடைய விரும்பினாலும் நீ செயல்பட வேண்டும்.

உன்னிடம் ஒரு கேள்வி கேள். நான் எதிர் காலத்தில் எப்படி உருவாக வேண்டும்? ஒரு மருத்துவராக, ஒரு பொறியாளராக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு விமானியாக, ஒரு ஐ.ஏ.எஸ் அலுவலராக, ஓர் ஐ.பி.எஸ் அலுவலராக, ஒரு ஆசிரியராக, ஒரு சமூகப் பணியாளராக, ஒரு நடிகராக, ஒரு இசை அமைப்பாளராக – இவர்களுள் யாராக உருவாக கனவு காண்கிறாய்? எட்டாவது படிக்கும் போது ஒரு மாணவன் அல்லது மாணவி தான் எப்படி உருவாக வேண்டும் என தெளிவாக அறிந்திருப்பது அவசியம். எனவே உன்னிடம் ஒரு கனவு இருந்தால், மீண்டும் மீண்டும் உரக்கச் சொல். உனக்கு நீயே பிரகடனம் செய்து கொள். உன்னிடம் ஒரு கனவு இல்லாவிட்டால் கவலைப்படாதே. உன்னைப் போல் பலர் இருக்கிறார்கள். இந்நூட்களைத் தொடர்ந்து படி. ஓர் இலக்கு, ஒரு கனவு உன்னுள் உருவாகும். இது உறுதி.

இலக்கினில் தெளிவு கொள்

தேவதை நேரில் வந்தால் கூட பலருக்குச் சரியாக வரம் கேட்கத் தெரியாது. ஒரு மனிதர் முன் தேவதை தோன்றி உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டது. அம்மனிதர் சொன்னார் “ஒரு பை நிறைய பணம், ஒரு பெரிய வாகனம், நிறைய பெண்கள் வேண்டும்”. தேவதை சொன்னது, “நீ பஸ் கண்டக்டர் ஆகக் கடவாய்”. மனிதர் மண்டை காய்ந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உனக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாக, உறுதியாகக் கேட்கத் தெரிந்திருக்க வேண்டும்.

கைநிறைய சம்பாதிக்க விரும்புகிறேன் – என்று சொல்லாதே. மாதம் எண்பதாயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று சொல். வழவழ என்று பேசாதே, குறிப்பிட்டுப் பேசு. நீ எதைக் குறிப்பிடுகிறாயோ அது தான் உனக்குக் கிடைக்கும். வருடத்திற்குக் குறைந்தது 50 கோடி சம்பாதிப்பேன் என சூளுரைத்தாள் ஒரு பெண்மணி. இன்றைக்கு அப்பெண்மணியின் ஆண்டு ஊதியம் 77 கோடி. அந்தப் பெண்மணி யார் தெரியுமா? சென்னையில் பிறந்து வளர்ந்த இந்திராநூயி, பெப்சிகோலா கம்பெனியின் முதன்மை நிர்வாக அதிகாரி.

அண்ணன் தம்பி இருவரும் ஒரு சைக்கிள் கடையில் மெக்கானிக் வேலை பார்த்தனர். ஒரு சிறிய இயந்திரத்தை உருவாக்கி அதில் பறக்கக் கனவு கண்டார்கள். கேள்விப் பட்டோர் அவர்களைக் கேலி செய்தனர். இருவரும் கருமமே கண்ணாக இருந்தனர். 1903 டிசம்பர் 17-ம் நாள் தாங்கள் கண்டுபிடித்த பறக்கும் இயந்திரத்தில் 6 அடி உயரத்தில் 12 வினாடி பறந்தனர். ஆனால் ஒரு நாளேடு எழுதியது “அவர்கள் flying சகோதரர்கள் அல்லர் laying சகோதரர்கள்”.

இலக்கு என்ற ஒன்று மிகத் தெளிவாக இருந்ததால் அந்த வில்பர் ரைட், ஆலிவர் ரைட் எனப்படும் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்த்தார்கள். என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள். நீயும் உன் இலக்கில் உறுதியாய் இரு.

பெரிதினும் பெரிது கேள்

“நிலவில் கால்பதிக்கக் குறியாய் இரு, குறைந்தது ஒரு நட்சத்திரத்திலாவது நீ இறங்குவாய்”. ப்ரவுன் லீ என்பாரின் இந்தக் கூற்று ஓர் உத்வேகத்தைத் தருகிறது அல்லவா? உன்னுடைய உயர்அவா மிக உயர்ந்ததாக இருக்கட்டும். சிறியன சிந்தியாதான் – சிறியனவற்றைச் சிந்திக்காதவன் – என இராமனைக் குறிப்பிடுவார் கம்பர்.

வெறும் மருத்துவர் ஆக வேண்டும் என எண்ணாதே, நான் ஓர் உலகப்புகழ் பெற்ற இதய நோய் நிபுணராக ஆக விரும்புகிறேன் என்று சொல். பொறியாளராக வர நினைக்கிறேன் என்று சொல்லாதே. உலகின் மிகச்சிறந்த இராக்கெட் பொறியாளராக வருவதே விருப்பம் எனச் சொல். விஞ்ஞானியாக வர விரும்புகிறேன் என்று சொல்வதை விட, நோபல் பரிசை வெல்லும் அளவிற்குப் பெரிய விஞ்ஞானி ஆவேன் என்று சொல். படை வீரனாய் ஆக நினைக்காதே, படைத்தலைவனாக ஆவதற்குக் கனவு காண். ஏதோ ஒரு வியாபாரம் செய்து வாழலாம் என எண்ணாதே. உலகின் மிகப்பெரிய பணக்கார வியாபாரியாக உயர கனவு காண்.

சாதாரண மனிதர்கள், சாதாரண இலக்கை உடையவராய் இருப்பார்கள். உன்னை மாமனிதன் என்று நினை. பெரிதாக எண்ணு, பெரிதாகச் செய், அதுதான் உனக்குப் பெருமை.

அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான்.எப்.கென்னடி ஒரு கனவு கண்டார். முதன் முதலில் ஓர் அமெரிக்கர் நிலவில் தடம் பதிக்க வேண்டும் என்பது அவரது கனவு. பத்து ஆண்டுகளுக்குப் பின் 1969. ஜூலை 20 ம் தேதி அவரது கனவு கைகூடியது. கனவு நிறைவேறிய பொழுது கென்னடி உயிரோடில்லை.

நிலவில் கால் தடம் பதித்ததும், அந்த வரலாற்று நாயகர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்போது அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சனிடம் அலைப்பேசி மூலம் கூறிய செய்தி இதுதான்.நான் இந்த நிலவுப்பரப்பில் வைத்தது ஒரு காலடி, ஆனால் இது மனித இனத்தின் பெரும் பாய்ச்சலுக்குச் சமமாகும். ஒரு சாதனை நீ படைத்தால் அது உனக்கு ஒரு காலடி, ஆனால் உனது குடும்பத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்.

ஆக ஒரு காலத்தில் முடியாது என்று நினைத்ததை, பின்னொரு காலத்தில் சில சாதனையாளர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். எனவே நீயும் சாதிக்கலாம். இலக்கு உன்னுடையது. அதை பிறர் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றியமைக்கவோ அல்லது உன்னிடமிருந்து பறிக்கவோ முடியாது. பெரிதாய் எண்ணுவது அல்லது எண்ணுவதில் கூட கஞ்சத்தனம் காட்டுவது உன்னைப் பொறுத்தது. சாதிக்க வேண்டும் என்னும் வெறியுடன் உழைக்கும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வானமும் கைக்கெட்டும் தூரந்தான்.

எனவே பெரிதாக எண்ணு, பெரிதாகச் செய், அப்படிச் செய்தால் பெரிதாகச் சாதிப்பாய், இது உறுதி. செயல்வெறி இங்கு வெறி என்பதை burning desire என்ற பொருளில் குறிப்பிடுகிறேன். உலகப்புகழ் பெற்ற மருத்துவராக வேண்டும் என்பது உன் கனவு என்றால், அந்த கனவு நனவாக உன் ஆழ்மனதில் எப்போதும் கொழுந்துவிட்டு எரிய வேண்டிய உள்ளார்ந்த விழிப்புணர்வு நிலைதான் செயல்வெறி என்பது. வெறியும் ஆசையும் ஒன்றல்ல, யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். வெறி இல்லாவிடின் ஆசை நிராசையாகி விடும். எதுவும் தானாக நிகழ்வதில்லை, நாம் முயன்று நிகழ்த்த வேண்டும். வெறும் ஆசையும் நல்ல நோக்கமும் ஒருவனை பெரிய மனிதனாய் ஆக்கிவிட முடியாது. செயலாக்கமும், செயல்வெறியும் இருப்போரே வெற்றியடைகிறார்கள். செயல்படுவோருக்கு மட்டுமே கருதிய காரியம் கைகூடும். எந்த ஒன்றுக்கும் ஒரு விலை உண்டு. வெற்றியாளர்கள் அவ்விலையைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். 

வெற்றியாளர்களிடம் இலக்கு இருக்கிறது. வெற்று மனிதர்களிடம் வெறும் ஆசை இருக்கிறது. என்பது நாமறிந்த பொன்மொழி. வெறி கொள், வெற்றி கொள்.

அமெரிக்க நாட்டின் ஒரு புறநகர்ப்பள்ளி. அங்கு பணியாற்றிய ஆசிரியர் தன் வகுப்பு மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீ என்னவாக வர விரும்புகிறாய்?” “நான் பெரிய குதிரைப் பண்ணை உரிமையாளராக வர விரும்புகிறேன்”. ஆசிரியருக்கு ஒரே வியப்பு. ஓர் எளிய மெக்கானிக்கின் மகனுக்கு எவ்வளவு பெரிய ஆசை. அவர் சொன்னார்: தம்பி ஒரு குதிரையை வளர்க்க எவ்வளவு செலவாகும் தெரியுமா? இதை விடுத்து வேறு ஏதேனும் ஆசை உள்ளதா? இல்லை, ஐயா. நான் குதிரைகள் வளர்க்கவே விரும்புகிறேன். நீ நம்ப மாட்டாய். அந்த மான்ட்டி ராபர்ட் தான் இன்று உலகின் மிகப்பெரிய குதிரைப் பண்ணைக்குச் சொந்தக்காரர்.

செய் அல்லது செத்து மடி – இந்த எழுச்சி வாசகம் ஜப்பானியரிடத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஜப்பானிய படைவீரர் எதிரியிடம் எப்போதும் சரணடையமாட்டார். அந்த நிலை வந்தால், தன் வயிற்றைப் போர்வாளால் கிழித்து, தன் இதயத்தில் வாளைச் சொருகி, உயிரை மாய்த்து கொள்வார். இதற்கு ‘செப்பாகு’ என்று பெயர். அந்த நாட்டின் படித்த இளைஞர்கள் கூட பெரிய பல்கலைக் கழகங்களில் தாம் விரும்பிய படிப்புக்கு இடம் கிடைக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோர்களும் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். காரணம் மேற்குறிப்பிட்ட போர் வீரனின் குணம் அந்த நாட்டு இளைஞர்களின் இரத்தத்தில் ஊறியுள்ளது. அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, தற்கொலையை ஒரு தீர்வாகக் கொள்ள வேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களுடைய மன உறுதியை மட்டும் எடுத்துக் கொள். இந்த மலையை ஒத்த மன உறுதியால் தான் 1894-ல் சீனப் படையையும், 1905-ல் இரஷ்யப் படையையும் தோல்வியடையச் செய்தார்கள். 

எனவே அவர்களைப் போல் வெறிகொள், வெற்றி கொள். 

No comments:

Post a Comment