Monday, December 2, 2013

வெற்றி நிச்சயம் - சுகி சிவம்

வெற்றி நிச்சயம் - சுகி சிவம்

1. கேள்விகளே சாவிகள்! 

வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள். இதன் வெற்றி, தோல்விகள் அதிருஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவுபோல் தீர்க்கமானவை. 

வாழ்க்கையில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும். வெற்றிக்கு வழி என்ன? வெற்றி உலகின் மொழி என்ன? சொல்கிறேன். 

என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சில இளைஞர்கள் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித்தான் கேட்பார்கள். ""என்ன வேலை?'' என்றால், ""ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத்தான் அவருக்குத் தரமுடியும்! 

இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால்தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது. 

ஹோட்டலில்கூட பல பேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை, பட்சணப் பட்டியலை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்யமாட்டார்கள். இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். 

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம். 
அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார். பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி. பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான். விழிகளை உயர்த்திவிட்டு, ""குட்'' என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார்.

மன்னருக்குப் பொறி தட்டியது. இத்தனை தோல்விக்குப் பிறகும் தளராமல் சிலந்தி செயல்படும்போது, காரிய சாதனை செய்யும்போது நாம் இப்படித் தளர்ந்து போகலாமா என்று தன் உணர்வு பெற்றார். சிலந்தியின் முயற்சி அவரைச் சிந்திக்க வைத்தது. போரைச் சந்திக்க வைத்தது! நாட்டை மீட்டு மீண்டும் அரியணை நாற்காலியில் ஏற வைத்தது! 

முடியாது... என்று சிலந்தி கூட ஒதுங்குவது இல்லை. முதுகெலும்புடைய மனிதன் ஒதுங்கலாமா? அவமானப்படுத்தப்பட்ட மேரி... அங்கீகரிக்கப்பட்ட 
மேடம் மேரி க்யூரி ஆகவில்லையா? நீங்கள் அப்படி ஆக முடியாதா? முடியும்... முடியும்... உங்களால் முடியும். அதற்கு என்ன வேண்டும்? முயற்சி வேண்டும். 
தமிழ்க் கிழவன் வள்ளுவன் சொன்னது தெரியுமா? 

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்' என்றார். (குறள் - 611). 

தமிழ்நாட்டுப் புலவர்கள் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை எழுதினார்கள். பிரான்ஸ் நாட்டு மேடம் க்யூரியும் ஸ்காட்லாந்து புரூஸýம் வாழ்வுரை வழங்கினார்கள். உங்கள் அபிப்ராயம் எப்படி? பொழிப்புரை எழுதி இரண்டு மதிப்பெண் பெற்றால் போதாது... வாழ்வுரை எழுதி வளமை சேருங்கள். வாழ்ந்து காட்டுங்கள். முடியாது... 

முடியாது என்று ஒதுங்காமல், முடியும்... முடியும்... என்று முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

இந்த இளைஞனைப் பற்றிச் சொன்னேன். நான் சந்தித்த வேறு ஒரு இளைஞனைப் பற்றிச் சொல்லவா? செழிப்பாக விளைந்திருந்தான் அந்த இளைஞன். ஒரு கூட்டத்தில் என்னிடத்தில் சம்பந்தமில்லாமல் அபத்தமாகக் கேள்விகள் கேட்டான். பொறுமையாக, ""தம்பி... என்ன பண்றீங்க?''என்று நான் கேட்டேன். ""அப்பாவுக்கு உதவி ஒத்தாசையாக இருக்கிறேன்'' என்றான். இந்த நூற்றாண்டில் இப்படி ஓர் இளைஞனா என்ற இன்ப அதிர்ச்சியுடன், ""அப்பா என்ன பண்றார்?'' என்றேன். ""சும்மா வீட்ல இருக்கார்'' என்று வெடிகுண்டு வீசினான் அந்த இளைஞன். தான் காலத்தை வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாத இவன் எப்படி முன்னேற முடியும்? 

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? நம் குடும்பத்தின் நிலை என்ன? நாம் வளர, முன்னேற என்ன செய்யலாம் என்கிற சின்னச் சின்னக் கேள்விகள் உங்களுக்குள் பிறந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். ஒன்றை மறந்துவிடாதீர்கள். எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னதுதான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ... பூட்டை விடச் சின்னது. சின்னச் சாவியால் பூட்டைத் திறக்கலாம். பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளைத் திறக்கலாம். தாழ்ப்பாளைத் திறந்தால் பெரிய பெரிய கதவுகளையே சுலபமாகத் திறக்கலாம். எனவே சின்னச் சின்னக் கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாயில்களைத் திறக்கப் போகும் சாவிகள். இதை நீங்கள் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்.

2. ஏழ்மை வெட்கத்திற்குரியது அல்ல! 

இந்தியா முழுவதும் இப்போது ஜகஜ்ஜோதியாய் நடப்பது கல்வி வியாபாரம். தனியார் சுய நிதிக் கல்லூரிகள் வந்த பின் மருத்துவம், பொறியியல் படிப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்காக ஆகிவிட்டது. இதில் பயிலும் எல்லோருமே கல்வி நோக்கோடு படிப்பில் அதிக அக்கறையுடன் படிப்பவர்களா என்பது சந்தேகம். நாளை கல்யாணச் சந்தையில் தன் மகளை நல்ல விலைக்கு விற்க விரும்பும் பேராசைக்காகப் பெற்றோர்கள், பணத்துக்குப் பஞ்சமில்லாத பணக்காரப் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தித் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்து இந்தத் தொழுவத்தில் கட்டி விடுகிறார்கள். 

முன்பு அரசினர் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகள் நான்கைந்து மட்டுமே இருந்தபோது படிப்பார்வம் மிக்க மாணவர்கள் மட்டுமே மருத்துவம், பொறியியல் சேர முடிந்தது. இப்போது அப்படி இல்லை. 

படாதபாடுபட்டுப் பணம் கட்டும் ஏழை, நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இங்கே ஒரு புதிய சிக்கல் காத்திருக்கிறது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் அதிகமாக இங்கே படிப்பதால் பொருளாதார இடைவெளி பூதாகரமாகத் தெரிகிறது. தினந்தோறும் ஒரு புதிய சுடிதாரில் வரும் பணக்கார மாணவிக்கும் வருடம் முழுமைக்கும் ஆறு சுடிதார் கூட இல்லாத ஏழை மாணவிகளுக்கும் பளிச்சென்று வித்தியாசம் தெரிகிறது. பைக்கிலும் காரிலும் வரும் பணக்கார இளைஞனுக்கும் பஸ்ஸிலும் ரயிலிலும் வரும் ஏழை இளைஞனுக்கும் இடைவெளி கூடிவிட்டது. 

சத்தில்லாத கோக்கும் பெப்ஸியும் குடித்துக் கல்லூரியைக் கலக்கும் பணக்காரப் பிள்ளைகளுடன் நடுத்தர ஏழைக் குடும்பத்து இளைஞர்கள் ஈடு கொடுக்க முடியாத தாழ்வு மனப்பான்மை தலை எடுக்கிறது. 

எவ்வளவு கெட்டாலும் தாங்கிப் பிடிக்கும் பணவசதி உடைய பிள்ளைகளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நடுத்தர ஏழை வீட்டு மாணவ-மாணவியர் தாழ்வு மனப்பான்மை கொள்வது தடுக்கப்பட வேண்டும். விதம்விதமாக அவர்களைப் போல் உடை உடுத்த முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். நாம் படிக்க வந்தோமா? நடிக்க வந்தோமா என்று முடிவு செய்யுங்கள். 

காசைக் கொட்டி காண்டீனைக் கபளீகரம் செய்ய அவர்கள் போல் முடியவில்லையே என்று அழாதீர்கள். செலவு செய்யும் அவர்கள் பெற்றோருக்கு மோசமான பிள்ளைகள். நீங்கள் வருங்கால உங்கள் பிள்ளைகளுக்கு உயர்வான பெற்றோர்கள். புரிந்து கொள்ளுங்கள். 

பணக்காரப் பிள்ளைகளின் பெப்ஸியும் கோக்கும் பலரது ரத்தம். ஏழைப் பிள்ளைகளின் கல்லூரிக் கட்டணமே பெற்றோரின் ரத்தம்.

பணத்தை வீசியெறியும் ஒருவன் பின்னால் பத்துப் பேர் நிற்கிறார்களே என்று கூச்சப்படாதீர்கள். படிப்பில் கெட்டிக்காரராய் உங்களை நிரூபித்தால் அதே பத்து பேர் உங்கள் பின்னால் சந்தேகம் கேட்டு வருவார்கள். பணக்காரப் பிள்ளைகள் மகாலட்சுமியால் பலரை ஆளுகிறார்கள். ஏழைப் பிள்ளைகள் சரசுவதியால் பலரை ஆளட்டுமே! இந்தத் தெளிவு பிறந்தால் வெற்றி நிச்சயம். 

ராமேஸ்வரத்தில் வீடு வீடாகப் பேப்பர் போட்டுக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். இன்று பேப்பர் பேப்பராக அவன் படத்தைப் போட்டுப் பெருமைப்படுத்துகிறது. அந்த உலகப் புகழ் பெற்ற சிறுவன் யார் தெரியுமா? பாரதப் பிரதமரின் அணு விஞ்ஞான ஆலோசகர் டாக்டர் அப்துல் கலாம். 

எனவே ஏழ்மை குறித்து எப்போதும் வெட்கப்படாதீர்கள். அது குறித்து அவமானப் பட வேண்டியது அரசும், சமூகமுமே. 

வயலில் வேலை பார்த்தபடியே மண் வெட்டியில் கரித்துண்டால் எழுதி, எழுதிப் படித்த ஒருவன் பின்னாளில் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றி எழுதினான் தெரியுமா? அவர்தான் ஆபிரஹாம் லிங்கன். ஆபிரஹாம் லிங்கனின் தாடியைப் பற்றித் தெரிந்தால் போதாது. அவர் தன்னம்பிக்கையைப் பற்றித் தெரிய வேண்டாமா? 
ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். 
அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினார்... 

""மிஸ்டர் லிங்கன், உங்களைப் பல பேர் இங்கே பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிந்துவிட வேண்டாம். உங்கள் பழமை, வறுமை குறித்து நான் நினைவூட்டவேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்'' என்று லிங்கன் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினார் ஒருவர். 

ஆப்ரஹாம் லிங்கனோ பதட்டப்படாமல் எழுந்து, ""நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனால் அவர் தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் அவர் எவ்வளவு தேர்ந்த, சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அது மட்டுமல்ல. இப்போது உம் ஷூ கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன். எனக்குச் செருப்புத் தைக்கவும் தெரியும். நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விஷயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்'' என்று ஒரு போடு போட்டார். 

ஏழ்மையோ வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல. தாழ்வு மனப்பான்மையைத் தூரம் தள்ளினால் வெற்றி நிச்சயம்

3. உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ்! 

அவன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவனுள் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் அப்பா சாதாரணமான நெசவாளி. ஒரு சராசரி அப்பாவின் மனநிலையில் ஆடைகளை நெய்யும் தனது தொழிலில், தன் மகனையும் சிக்க வைக்க அவர் தீர்மானித்தார். அவனும் சிக்கிக் கொண்டான். ஆனால் அவன் கைகள் ஆடைகளை நெசவு செய்தபோதும் மனமோ கனவுகளை நெசவு செய்தது! 

என்றாவது, எப்படியாவது, எதையாவது சாதிக்கப் போவதாகக் கற்பனையாக, திசை தெரியாது பேசித் திரியும் வெற்று இளைஞனாக அவன் இல்லை. அவனது எண்ணம் தெளிவாக இருந்தது. தீர்க்கமான திட்டம் தயாராக இருந்தது. கடல் மார்க்கமாக இந்தியாவை அடைய வேண்டும் என்ற கற்பனை, கடலைவிடப் பெரிதாக அவன் வசம் இருந்தது. 

ஆம்... அவனது பூமியில் இருந்து கிழக்குத் திசையில் இருக்கும் இந்தியாவுக்குத் தரை மார்க்கம் தவிர, கடல் மார்க்கம் கண்டுபிடிக்கும் வெறி "கப்பல்' கப்பலாக அவனிடம் குவிந்திருந்தது. அந்த இளைஞன்தான் கிறிஸ்டோபர் கொலம்பஸ். 

உலகம் கடலுக்குள் மீனையும் முத்தையும் தேடியபோது புதிய நாட்டையே தேடும் எண்ணம் அந்த இளைஞனுக்கு இருந்தது. உதவத்தான் ஒருவரும் இல்லை! அவனோ அசரவில்லை! 

பல நாட்டு அரசர்களை நாடி உதவி கேட்டும், கப்பலும், கப்பல் கப்பலாக உணவும், இதர பொருளும், கப்பலைச் செலுத்தும் மனிதர்களையும் கொடுக்க எந்த அரசும் துணியவில்லை. அந்தத் தோல்விக்கு அவனது மனமோ பணியவில்லை. பத்து வருடக் காலம் தொடர்ந்து போராடிய பின் ஸ்பெயின் நாட்டு அரசி இஸபெல்லாவுக்குக் கொலம்பஸ் மீது நம்பிக்கை பிறந்தது. மூன்று கப்பல்களையும், பயணத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் இஸபெல்லா தந்து உதவினாள். 
அடுத்த பிரச்சினை ஆரம்பம் ஆயிற்று. கப்பலைச் செலுத்த, கடல் பயணம் மேற்கொள்ளத் தேர்ந்த மாலுமிகள் வேண்டுமே! கொலம்பஸýக்கு உதவ எந்தத் தேர்ந்த மாலுமியும் தயாராக இல்லை. முன்பின் தெரியாத கடல்வழிப் 

பயணத்திற்கு உயிரைப் பணயம் வைக்க ஒருவரும் தயாராக இல்லை. அனுபவம் உள்ள மாலுமிகள் மட்டுமல்ல, தின்று கொழுத்த தண்டச் சோறுகள் கூட அவருடன் வரத் தயாராக இல்லை. ஆனாலும் கொலம்பஸ் நம்பிக்கையை விடவில்லை. 

சிறைக் கைதிகளை... மரணத்தின் விளிம்பில் நின்ற குற்றவாளிகளை... கொள்ளைக்காரர்களை... அழைத்துப்போக விரும்பினார்... எதிர்பார்த்த மரணம்... அல்லது எதிர்பாராத பயணம்... என்பதில் மரணத்தைவிடப் பயணம் பரவாயில்லை என்று முடிவு செய்த எண்பத்து ஏழு தண்டனையாளர்களை உடன் அழைத்துக் கொண்டு கொலம்பஸின் கப்பல் பயணித்தது. தண்டனை பெற்றவர்களை அழைத்துப்போவது எத்தனை கொடிய தண்டனை? கொலம்பஸ் அசரவில்லை. காற்றையும் கடலையும் கிழித்துக்கொண்டு அவனது கனவுகளின் நனவான கப்பல் கரையில் இருந்து மறைந்தது.

அடுத்த குழப்பம் ஆரம்பமானது. கிழக்கே இருக்கும் இந்தியாவை அடையப் புறப்பட்ட பயணம் தவறாக மேற்கே நோக்கி நிகழ்ந்துவிட்டது. அந்தத் தவறுதான் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்தது. வீரர்களையும் தீரர்களையும் கடவுள் கைவிடுவதில்லை என்பது உண்மையாயிற்று. நம்பிக்கை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது நிரூபணமாயிற்று. மேற்கு நோக்கிய தவறான பயணம்தான் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கக் காரணம் ஆயிற்று. ஏழை நெசவாளியின் கனவு நெசவு - நினைவு நிஜமாய் அமெரிக்கா அவன் வசப்பட்டது. 

அடடா... கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த மாதிரி இனிக் கண்டுபிடிக்க பூமியில் என்ன இருக்கிறது? ஐந்து கண்டங்களையும் அதன் உள் உறங்கும் எண்ணெய், நிலக்கரி, வைரம் உட்பட அனைத்தையும் அமெரிக்காவின் சாட்டிலைட்டுகள் கண்டுபிடித்துவிட்ட பிறகு நாங்கள் கண்டுபிடிக்க இனி என்ன இருக்கிறது? என்று யோசிக்கிறீர்களா? பொறுங்கள்... பொறுங்கள்... 

கொலம்பûஸப் போல நீங்கள் அமெரிக்காவைக் கண்டுபிடியுங்கள் என்று சொல்வது என் நோக்கம் அல்ல! உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ் இருக்கிறாரே! அவரை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா? 

எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி உங்களுக்குள் ஒளிந்திருக்கும்... மறைந்திருக்கும்... அந்தக் கொலம்பûஸ நீங்கள் கண்டுபிடிக்க வேண்டாமா? இனிக் கொலம்பஸ் மாதிரி அமெரிக்காவைக் கண்டுபிடிக்க வேண்டாம்... கொலம்பûஸக் கண்டுபிடியுங்கள்... உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்!

4. தூங்காதே தம்பி தூங்காதே! 

மீன் கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் என்று படித்தேன். 'ஆச்சரியமாக இல்லையா?' என்று ஒரு நண்பர் கேட்டார். ""இல்லை... ஆச்சரியமே இல்லை... மனிதர்களில் பல பேரும் விழித்திருக்கும்போதே தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றேன் நான். இதுதான் உண்மை. 

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? எப்படி எப்படி எல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம்? சுரண்டப்படுகிறோம், கொள்ளையடிக்கப்படுகிறோம்... என்ற விழிப்புணர்வே பல பேருக்கு இருப்பதில்லை. ஒவ்வொரு கணமும் விழிப்பாக இருப்பவர்களே உன்னதமானவர்கள். சரியானவர்கள். 

நீங்கள் அப்படியா? நம் அனுமதியில்லாமல் நம்மைச் சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பார்கள். நம்மைத் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். முட்டாளாக்குவார்கள். நாமும் கண்ணைத் திறந்துகொண்டே இவற்றைக் கண்டு கொள்ளாமல் தூங்கி வழிந்தால் என்ன ஆவது? 

"பசித்திரு... தனித்திரு... விழித்திரு' என்றார் இராமலிங்கர். இப்படி மூன்றுமாக இருந்தால் மூன்றின் முதலெழுத்தும் ஆன பதவி நமக்கு உண்டு என்பார்கள். விழித்திரு என்ற சொல்லை "உத்திஷ்ட' என்கிறது பகவத்கீதை. "எழு... விழி' என்பதே இந்த அறைகூவலின் அர்த்தம். நமது அறியாமைகள் யாவும் இருளே. தூக்கமே. மரணத்தின் ஒத்திகையே. தாற்காலிகச் சாவுகளே! விழிப்பு ஒன்றே விடியல். வெற்றியின் பூபாளம். 

நான் சமயச் சொற்பொழிவும் செய்வதாலேயே பல சாமியார்கள் என்னை வளைத்துப் போட விரும்புவார்கள். அவர்களது பிரசார பீரங்கியாக இருந்து அவர்களுக்கு இல்லாத பெருமைகளை நான் முழங்கத் தயாரானால் தங்கமும் வெள்ளியும் தருவதாக ஆசை காட்டுவார்கள். 

அவர்கள் மாயாஜால மந்திர வித்தைகளைத் தமது சிஷ்ய கோடிகள் மூலம் எப்படியாவது எனக்கு விவரித்து என்னை மயக்கி என் வாயை வாடகைக்கு வாங்கி அவர்கள் புகழ் வளர்க்கத் திட்டம் தீட்டுவார்கள். நான் குழம்பியதும் இல்லை. மயங்கியதும் இல்லை. 

மணிக்கணக்காக அவர்கள் மத்தியில் இருந்தபடி அவர்களை அணுஅணுவாக அளந்து பார்த்திருக்கிறேன். அதே நேரம் பல நீதிபதிகளும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் சாமியார்களின் சாம்ராஜ்யத்தில் ஏமாந்து போவதைக் கண்காணித்திருக்கிறேன். எச்சரித்தும் இருக்கிறேன். 

ஒரு சாமியார் பல பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பஞ்சாமிருதத்தில் இருந்து முருகன், விநாயகர் பொம்மைகளை எடுப்பார்... கொடுப்பார் என்று புகழ்ந்து தள்ளினார்கள். அகன்ற பாத்திரத்தில் பழங்களைப் போட்டார். வெல்லம் சேர்த்தார். தேனும் நெய்யும் ஊற்றினார். 

கொத்தாக இருந்த ஒரு கிலோ பேரீச்சம் பழத்தையும் உள்ளே போட்டுப் பிசைந்தார். "இந்தா... இந்தா' என்று எதிரில் இருக்கிற மாஜிஸ்திரேட் கையில் முருகன் சிலையை எடுத்துக் கொடுத்தார். கண்ணில் நீர் வடியக் கன்னத்தில் போட்டபடி மாஜிஸ்திரேட், "முருகா... முருகா' என்று வாங்கிக் கொண்டார்.

"முருகா... முருகா' என்று என் கண்ணிலும் நீர் வழிந்தது. கொத்துக் கொத்தாகச் சாமியார் உள்ளே போட்ட பேரீச்சம் பழத்தில் பத்து முருகன் பொம்மைகளை வைக்கலாம். இதற்கு அந்தச் சாமியாரையே மாஜிஸ்திரேட் உள்ளே வைக்கலாம். கண்ணைத் திறந்து கொண்டே கனவான்கள் தூங்கும் தூக்க தேசம் இது. 
இதில் நாமும் உறங்கிவிட்டால் என்ன ஆவது? கண்ணைத் திற... தோளை நிமிர்த்து... உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்போதும் விழிப்பாக இரு. மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள். திருட்டுத் தனமாகக் கோழி பிடிக்கிறவன் துண்டை விரித்துக் கொண்டு காத்திருக்கிற மாதிரிக் கட்சிக் கொடியை விரித்தபடி இளைஞர்களை அமுக்கப் பல அரசியல் கோஷ்டிகள் காத்திருக்கின்றன. சிக்கிவிடாதே இளைஞனே... விழிப்பாக இரு. 

தாங்கள் உயர உயரப் பறப்பதற்கு இறகுகள் இன்றித் தத்தளிக்கும் சில ஜாதித் தலைவர்கள் உங்கள் தலைகளைக் கத்தரித்து இறக்கைகளாக்க வெறி பிடித்து அலைகிறார்கள். உஷாராக இரு இளைஞனே... கொஞ்சம் தூங்கினால் உன் தலை கத்தரிக்கப்படும்! இளம்பெண்ணே! சினிமாக் கனவுகளில் உன் சேலை நழுவும்போது உன் இளமையை விலை கூறி விற்க ஒரு கூட்டம் அலைகிறது. இளம்பெண்ணே... உறங்கிவிடாதே! விழிப்பாக இரு.

வெளிநாடுகளில் வேலை என்கிற மணி மகுடங்களைக் காட்டி, பரம்பரைச் சேமிப்பையும் கொள்ளையடித்து அநாதைப் பிச்சைக்காரர்களாய் உங்கள் கையில் ஓர் அலுமினியத் தட்டைத் திணிக்கும் அராஜகம் அரங்கேறப் பார்கிறது. 

இளமையே... தூங்கி வழியாதே. விழிப்பாக இரு! காலையில் கண் விழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்பாக இரு. அலர்ட், அவேக், அவேர், அரைஸ், அலார்ம் என்று ஆங்கிலத்தில் அடுக்கடுக்காக விழிப்பை உணர்த்தும் மொழிச் சொற்கள் உள்ளன. 

ஒவ்வொரு சொல்லின் அர்த்தமாகவும் வாழ்ந்து பார். குழப்பம்கூட ஒரு தூக்கம்தான். மறதி, சோம்பல், தயக்கம் இவைகூட உறக்கத்தின் விதவிதமான புனைபெயர்களே. குழப்பத்தில் தத்தளித்த அர்ஜுனனை நோக்கி பகவத் கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தைகள்... "உத்திஷ்ட'. 
அதையேதான் நானும் சொல்லுகிறேன். தூங்காதே... தம்பி... தூங்காதே. வெற்றி நிச்சயம்!

5. நேற்றைய சராசரிகள் இன்றைய சக்ரவர்த்திகள்! 

நீங்கள் சராசரியா? சாதாரணமானவாரா? சாமானியனா? பிறக்கும்போதே பேரறிவோடும் பெருந்திறனோடும் பிறக்கவில்லையே என்று வருந்துகிறவரா? 
அப்படியானால் நான் சொல்லப்போகும் இந்த மனிதர் உங்கள் கட்சி. உங்கள் உறவு. உங்களை மாதிரி! 

யார் அவர்? 
ஐன்ஸ்டீன். 

யார் அந்த உலகம் புகழும் விஞ்ஞான மேதையா? ஆம் அவரேதான்! 
அவர் வாழ்வில் நடந்ததைச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள். 

ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன். நாஜிகளால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். 
அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதன் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்குத் திருப்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர். 
தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார். 

""இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை'' என்று இழுத்தார். 

""என்ன என்று சொல்லுங்கள். உடனே சரி செய்யப்படும்'' என்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். 
அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, ""இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே. கொஞ்சம் பெரிய குப்பைக்கூடை இருந்தால் நல்லது'' என்றார். 
திகைத்துப் போய் ""பெரிய குப்பைக்கூடையா? எதற்கு?'' என்றார்கள். 

ஐன்ஸ்டீன் சொன்னார், ""நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய, தப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்கக் கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்'' என்றார். 

அவரே அப்படி என்றால்... கொஞ்சம் நிமிர்ந்து உட்காருங்கள். 

சாதாரணங்களில் இருந்துதான் அசாதாரணங்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சதா ரணமாகி விடாதீர்கள். நாம் ஜெயிக்கப் பிறவந்தவர்கள். சின்னச் சின்னத் தோல்விகள். சின்னச் சின்னச் சறுக்கல்கள்... வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஒரு பொன்னுலகம் நமக்காகக் காத்திருக்கிறது. 

அது ஒரு நாலு வயதுக் குழந்தை. ஆசை ஆசையாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்துப் பள்ளிக்கூடம் அனுப்பினாள் அதன் அம்மா. அந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் காது மந்தம். "டாமி' என்பது அதன் செல்லப் பெயர். மனம் நிறையக் கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய சோகங்களைப் பரிசளித்தார் ஒரு ஆசிரியை. மூன்று மாதங்கள் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப் பையில் ஒரு காகிதத்தைத் திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை.

""படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் டாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்'' என்று அதில் எழுதியிருந்தது. 
குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள், ""என் மகன் அறிவாளி. அவன் ஒன்றும் முட்டாள் அல்ல. அவனை நானே படிக்க வைப்பேன். அறிவாளி ஆக்குவேன்'' என்று ஆவேசமாக அறிவித்தாள். 

""படிக்க லாயக்கில்லை'' என்று முத்திரை குத்தப்பட்ட அந்தப் பையனைப் பற்றி அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக்கூடப் பிள்ளைகள் படித்துக் 
கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன். 
பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றிப் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடக்கிறது. போதுமா? 

நேற்றைய சராசரிகளே. இன்றைய சக்ரவர்த்திகள்! 

இன்னொரு முக்கியமான விஷயம். அதே எடிசன் பத்தாயிரம் தடவை தோற்றுப் போன பின்னர்தான் வெடிக்காத பல்பைக் கண்டுபிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

தோல்வி ஒரு பெரிய விஷயமே அல்ல நண்பர்களே. 

அந்த எடிசனுடைய அறுபத்தி ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பெறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷூரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார். 
""நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகி விட்டன. நல்லது. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு.'' என்றார். 

இந்தத் தீ விபத்து நடந்த மூன்றாவது வாரத்தில் அவர் "போனோகிராப்' என்பதனைக் கண்டறிந்தார். 

இறையன்பு அவர்கள் புத்தகத்தில் நான் படித்த ஒரு செய்தி. 

ஒரு ஜென் துறவியின் குடிசை பற்றி எரிந்தது. நெருப்பு தன் பல நாக்குகளைச் சுழற்றிச் சுழற்றித் தன் பசி ஆறியது. பலர் அழுதனர். ஆறுதல் சொல்லினர். எரிந்து முடிந்த சாம்பலுக்குள் நின்று கொண்டு கம்பீரமாக வானத்தைப் பார்த்தபடி துறவி சொன்னார், ""ஆஹா நிலவின் ஒளியை தடுத்து மறைத்த கூரை எரிந்துவிட்டது'' என்று கொண்டாடினார். 

எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள்.

6. காலத்தைக் கொண்டாடுங்கள்! 

கரண்ட் கம்பிகளில் காக்காய்கள் உட்கார்ந்திருக்கிறதே... அதைக் கவனித்தது உண்டா? அண்டங் காக்காய்களும் ஆர்டினரி காக்காய்களும் மூக்கை மூக்கைக் கம்பியில் தேய்த்துக்கொண்டு தெருவில் கிடக்கிற குப்பை மேட்டை வெறித்துக் கொண்டு, எச்சில் விஷயங்களை எதிர்பார்த்து ஏங்கியபடிக் "கராபுரா' என்று கத்திக்கொண்டு காலம் கழிக்குமே... கவனித்ததுண்டா? 

இந்தக் காக்காய்களுக்குப் போட்டியாக - காலேஜ் கட்டடத்தின் காம்பவுண்டுகளின் குட்டிச் சுவர்களில் காலை, காலை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிற கல்லூரிக் காளைகளையும் கவனித்தது உண்டா? எனக்கென்னமோ காக்கைகள் கெüரவமானவை என்றே தோன்றுகிறது. எச்சில் இலைகளை எதிர்பார்த்து கரண்ட் கம்பங்களில் காத்திருப்பது அவற்றின் வாழ்க்கைப் பிரச்சினை. ஆனால் குட்டிச் சுவர்களில் "குட்டி'களுக்காகக் குடியிருக்கிற கல்லூரிக் காளைகளோ நாட்டின் பிரச்சினை. 

இப்படி நேரத்தைப் பாழாக்க, வெட்டியாய் வீணடிக்க எதிர்கால இந்தியாவால் எப்படி முடிகிறது! சீரழிவுச் சிற்பிகளான சினிமாக்காரர்கள் வேறு, காலேஜ் மாணவர்களின் இந்த காலக் கொலைகளைக் கலர்கலராய் வளர்க்கிறார்கள். கிளாûஸக் கட் அடிப்பதும், கிளாசிக்கான இளசை சைட் அடிப்பதும் ஏதோ வீரதீரச் செயல்போல் விவரிக்கப்படுவது வேதனை தருகிற விஷயம். 

கலர் பார்ப்பது, கலகலப்பாய் இருப்பது பெரிய பாவம் அல்ல! ஆனால் அது முழுநேர வேலையாய் இருப்பது நியாயம் அல்ல. ஜாலியாய் இருக்கலாம்... அதுவே ஜோலியாய் இருக்கலாமா? காதல் வசப்படலாம்... குற்றமில்லை. எப்போதும் காமவசமாகக் காரியம் செய்வதா? கேட்க முடியாத ஆபாச வசனங்கள், சேட்டைகள், சில்மிஷங்கள்... இவை பெருமைக்குரியவைதானா? நேரத்தை மிதிக்கலாமா? காலத்தைக் கொல்லலாமா? நிகழ்கால நிர்வாகமே எதிர்கால வெற்றி ரகசியம். காலத்தைக் கொண்டாடுகிறவரையே காலம் கொண்டாடுகிறது. மற்றையோரைக் காலம் கொண்டு போகிறது. 

"கழுதை கெட்டால் குட்டிச் சுவர்' என்ற பழமொழியை நிரூபிக்கக் கல்லூரிக் காம்பவுண்டுகளைக் காவல் காக்கும் வேலையை விடலாம். அறிவுள்ள மனிதனாக நூலகத்தில் நேரம் போக்கலாம். படிப்பு உயரும். அப்துல்கலாமாகலாம். அணு விஞ்ஞானி ஆகலாம். ஆயிரம் ஆயிரம் சாதனைகள் புரியலாம். 

விருப்பமில்லையா? விளையாடப் போகலாம். விண் என்று இருக்கலாம். விறுவிறுப்பாக வியர்த்து வடியலாம். டெண்டுல்கர் ஆகலாம். பி.டி. உஷா ஆகலாம். தங்கமும் வெள்ளியும் தட்டிப் பறிக்கலாம். டெண்டுல்கராகி பூஸ்ட் விளம்பரங்களில் பூரிப்பாய்ச் சிரிக்கலாம். ஆடுகளாய்த் திரியாமல் ஆடுகளத்தில் திரிவதன் மூலம் அகில உலகப் புகழ் பெறலாம். பாதி நேரம் கல்லூரி, மீதி நேரம் சின்ன வேலை என்று நமது படிப்புக்கு நாமே சம்பாதிக்கலாம். 

பண்ணை வேலை பார்த்தபடியே படிப்பு வேலையும் பார்த்த ஆபிரஹாம் லிங்கன் ஆகலாம். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர் டாக்டர் குமாரவேலு என்பவர் படிக்கப் பணம் கட்டப் பெற்றோரை எதிர்பார்க்கவில்லை. கராத்தே கற்றுக் கொடுத்துக் காசு சம்பாதித்தார். கல்லூரிப் படிப்பைக் காலத்தில் முடித்தார். 
"தம்' அடிப்பதைத் தவிர்த்துவிட்டு "ஜிம்'முக்குப் போகலாம்... ஜம் என்று ஆகலாம். நிஜமான ஆரோக்கியத்துடன் நிஜமான ஹீரோவாய் நிஜ வாழ்வு வாழலாம். கவிதை எழுதலாம். கட்டுரை எழுதலாம். கற்பனை இருந்தால் விற்பனை செய்து காசு சேர்க்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகலாம். வானொலி மூலம் வலம் வந்து பார்க்கலாம்.

காலத்தைக் கொலை செய்வது கடுமையான பாவம் அல்லவா? ஒரு வருடத்தின் அருமை யாருக்குத் தெரியும்? ஃபெயில் ஆன மாணவனுக்குத் தெரியும். தன்னோடு படித்தவர்கள் அடுத்த வகுப்பில் அணிவகுக்கும்போது அவமானம் அணி வகுக்கும்! என்ன செய்யப் போகிறீர்கள்? 

ஒரு மாசத்தின் அருமை யாருக்குத் தெரியும்? குறைப் பிரசவத்தில் பிள்ளை பெற்ற குணவதிக்குத் தெரியும். ஒரு மாசம் குறைவாய்ப் பெற்ற பிள்ளை பிழைப்பதே துர்லபம். பாதுகாப்பதோ பணச் செலவு. தேறும் வரை பதைபதைப்பு. 

ஒரு வாரத்தின் அருமை யாருக்குத் தெரியும்? வாரப் பத்திரிகை ஆசிரியருக்குத் தெரியும்.

ஒரு நாளின் அருமை யாருக்குத் தெரியும்? ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைப் பார்த்த பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும். 

ஒரு மணியின் அருமை யாருக்குத் தெரியும்? பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும். மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவருக்குத் தெரியும். 

ஒரு நிமிடத்தின் அருமை யாருக்குத் தெரியும்? ரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும். 

ஒரு விநாடியின் அருமை யாருக்குத் தெரியும்? விபத்தில் இறந்துபோனவனுக்கே விவரமாய்த் தெரியும். 

ஒரு மைக்ரோ செகண்டின் அருமை ஒலிம்பிக்கில் ஓடும் ஓட்டக்காரனுக்குத் தெரியும். 

காலத்தின் அருமை உனக்குத் தெரியுமா நண்பனே? தெரிந்தால் வெற்றி நிச்சயம்.

7. தினப் பத்திரிகைகள் படிக்கும் பெண்கள் எத்தனை பேர்? 

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒரு வழக்காடு மன்றம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு நீதிபதி பொறுப்பு. "குடும்ப வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பவர் ஆண்களா? பெண்களா?' என்பது தலைப்பு. பெண்களைத் தாக்கிப் பேசிய பேச்சாளர் ஒரு வெடிகுண்டை வீசினார். எப்படி? 

""பெண்களுக்குப் பொது அறிவு கிடையாது'' என்றார். அதிர்ச்சியுடன், ""என்ன?'' என்றேன். பேச்சாளர் நிதானமாக, ""பொது அறிவு என்ன பொது அறிவு...? பொதுவா அறிவே கிடையாது?'' என்று குற்றம் சாட்டிப் பேசினார். சபை சிரித்தது. என்னால் சிரிக்க முடியவில்லை. 

கோபம் வந்தது. ""கவனமாகப் பேசுங்கள்'' என்று எச்சரித்தேன். ஆனால் அவர் கூறிய காரணங்கள் என்னை அசைக்கத் தொடங்கின. ""வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிகை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்..? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்?'' என்று கேட்டார். மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். 

""அதைவிட தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும்போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவைத் தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவேளை மாதிரி அதைச் சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவேளையா? இப்படி இருந்தால் நாடு உருப்படுமா?'' என்றார். 

யோசிக்க ஆரம்பித்தேன். படித்த பெண்கள், அலுவலகம் போகிறவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு விதிவிலக்கு என்று நம்பினேன். ஆனால் என் நம்பிக்கையை உலுக்கிவிட்டது ஒரு ஃபோன் கால். "பொதிகை'யில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன். நம்ப முடியவில்லையா? "சன்'னிலும் "ஜெயா'விலும் நியூûஸ விட "வியூஸ்' அதிகம். எனவே "பொதிகை'யில் செய்தி பார்ப்பது வழக்கம். ஷோபனா ரவி செய்தி வாசித்தார். அவர் என் குடும்ப நண்பரும்கூட. அப்போது என் தொலைபேசி அலறியது. தில்லியில் இருந்து எஸ்.டி.டி. கால். என்னவோ ஏதோ என்று பரபரப்பாகப் பேச ஆரம்பித்தேன். 

எதிர் முனையில் என் நண்பரின் மனைவி, ""ஷோபனா ரவி உங்கள் நண்பர்தானே..?'' என்றார். ""ஆம்... எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்றேன். ""வழக்கமாகக் கழுத்தைப் போர்த்திக் கொண்டு செய்தி வாசிப்பார். இன்று அப்படிப் போர்த்தவில்லை. அவர் கழுத்தில் போட்டிருக்கும் ஒரு மணி மாலையைப் பார்த்தீர்களா? அது நேச்சுரல் ஸ்டோனா... அல்லது செயற்கையா? எங்கே கிடைக்கும்? என்ன விலை என்று விசாரிச்சுச் சொல்ல முடியுமா?'' என்றார். 

செய்தியைவிட செய்தி வாசிப்பவரை வாசிக்கும் அம்மணி எம்.ஏ., பிஹெச்.டி., போதுமா? நான் அதிர்ந்து போனேன். பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் குறித்த முயற்சிக்கு இத்தகைய குணநலன்கள் நல்லதுதானா என்று இப்போது யோசிக்கிறேன். வாழ்க்கையை வண்ணப்படுத்துவது பெண்மை. அதற்கு அழகுணர்ச்சி இருப்பது அவசியம். அழகுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் மீதான பெண்களின் ஈடுபாட்டை நான் இவ்வளவு நாளாக எதிர்ப்பது இல்லை. ஆனால் இப்போது என் கருத்து மறுபரிசீலனைக்குரியது என்றே கருதுகிறேன்.

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிக மிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கிப் புதுவண்ணம் பூச நெயில் பாலிஷ், ரிமூவர்; உதடுகளை உயிர்ப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளைப் பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளென்சிங் மில்க், மாஸ்க் ப்ளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள், கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை "மாட்சிங்' பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள் (க்ளிப், ரிப்பன், பான்ட், விதவிதமான செருப்புகள்). 

பொருட்செலவும் நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்... தேவை இக்கணம். 

எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணம் சொல்கிறேன். அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை. விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்... 

""விருந்து எப்படி நடந்தது?'' 

""நன்றாக இருந்தது'' என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும் அவர்களுடன் விவாதித்த அறிவுபூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, ""நான் இந்த அறுவையைக் கேட்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள்... கவனித்தீர்களா?' என்று சீறினார். 

ஐன்ஸ்டீன் பொறுமையாக, ""இதோ பார்... விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும்தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜையின் கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரவமாக இருக்காது'' என்றார். 

பெண் பிள்ளைகளுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் சில விஷயங்களுக்கு அடிமைகளாக இருக்கும் வரை ஆண்கள் உங்களை அடிமைகளாக வைத்திருப்பார்கள். அந்த அடிமைத்தனத்திலிருந்து நீங்கள் வெளிவந்துவிட்டால் ஆண்களால் உங்களை அடிமைப்படுத்தவே முடியாது. என் பெண்மக்களே... என் அக்கறையைப் புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

8. அந்த அதிசயக் கிழவர்! 

கட்சிகளிலும் சரி... கம்பெனிகளிலும் சரி... தலைமைக்கு வேண்டியவராகச் சிலர் விளங்குவார்கள். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராகச் செல்வாக்கு உள்ளவராக வலம் வருவார்கள். இத்தனைக்கும் சீனியாரிட்டிபடிப் பார்த்தால் மிகப் பின்தங்கியவராக இருப்பார். ஆனால் அவர் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கும். இது எப்படி நடக்கிறது? 

இதைச் சிலர் கொச்சையாகக் ""காக்காய் பிடித்து முன்னுக்கு வருகிறான்'' என்கிறார்கள். ஆனால் நுட்பமாக, முன்னுக்கு வரும் இரகசியத்தைக் கவனிக்க மறுக்கிறார்கள். நீங்கள் முக்கியமான நபராக விளங்க நிறைய வழிகள் இருக்கின்றன. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். 

திருமண வீடுகளில், அலுவலகங்களில், விழாக்களில் சிலரைச் சுற்றிக் கூட்டம் எப்போதும் இருக்கும். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். குபீர் குபீர் என்று சிரிப்பலைகள் அவரைச் சுற்றி எழும். எந்த இடத்திலும் முக்கியத்துவம் பெற்றுவிடுவார். காரணம், சாமர்த்தியமாக, நகைச்சுவையாக அவர் பேசுவதே. 
எனவே நல்ல நகைச்சுவைகளைச் சந்தர்ப்பத்திற்கேற்பப் பயன்படுத்துகிறவர்களை எல்லோரும் நேசிப்பார்கள். ஒரு முக்கியமான மனிதராகக் கருதுவார்கள். ஆனால் நகைச்சுவை தரம் உடையதாக, புதிது புதிதாக, நினைத்து நினைத்துச் சிரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பலர் மத்தியில் சொல்லத் தகாத ஆபாசத் துணுக்குகளை, இடத்திற்குப் பொருந்தாத நகைச்சுவைகளைச் சொன்னால் இருக்கிற மரியாதையும் போய்விடும். 

இன்னும் கொஞ்சம் அதிக முக்கியத்துவம் பெறும் வழி என்ன? நகைச்சுவைகளைக் கடந்து அதிகத் தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கும் ஒருவர் இன்னும் முக்கியத்துவம் பெறுவார். ரயில் நேரம், விமான நேரம், பொருள்களின் விலை, எது எங்கே சுலபமாகக் கிடைக்கும் என்ற தகவல், நுட்பமான பல விவரங்களை அறிந்து வைத்திருந்தால் உங்கள் மேலதிகாரிகளால் நீங்கள் மிகவும் விரும்பப்படுவீர்கள். 

நிறைய விவரங்களைக் கை வசம் வைத்திருக்கும் நபர் தலைமையால் அதிகம் தேடப்படுவார். தலைமை அவரை அதிகம் சார்ந்திருக்க விரும்பும். புதிதாகப் பொறுப்பேற்கும் சூட்டிகையான கலெக்டர்கள் அலுவலகத்திலேயே விவரமான கிளார்க்கைக் கண்டுபிடித்துத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் விசாரணைப் பகுதியில் மிக நீண்ட காலம் ஒரு பெரியவர் பணி புரிந்தார். அவரை மிக நீண்ட காலம் பணி நீட்டிப்புக் கொடுத்து வைத்திருந்தனர். ஒரே காரணம்... அவர் பல்கலைக் கழகம், பரிட்சை, துறைகள் எது பற்றிய கேள்விக்கும் விரல் நுனியில் விடை வைத்திருப்பார்.  துல்லியமாக, கோபம், பதற்றம் இன்றி உடனுக்குடன் விடையளித்த அந்த அதிசயக் கிழவரை என்னால் மறக்கவே முடியாது. அதிக விவரங்கள் அறிந்த மனிதர் தன் முக்கியத்துவத்தை ஒரு போதும் இழக்க முடியாது. 

நிரந்தர முக்கியத்துவம் பெறுவதற்கான உன்னத மாமந்திரத்தை இப்போது சொல்லுகிறேன் - ஐய்ஸ்ர்ப்ஸ்ங்ம்ங்ய்ற் ம்ஹந்ங்ள் ஹ்ர்ன் ண்ம்ல்ர்ழ்ற்ஹய்ற். ஈடுபாடு ஆழமாக ஆழமாக மேம்பாடு நிச்சயம். இதனை உணர்ந்தவர்கள் தோற்பதில்லை. ஒரு திருமண வீட்டிற்கு ஆயிரம் பேர் வந்து போனாலும், அக்கறையுடன் பல விஷயங்களில் ஈடுபடுகிறவர் மறக்கப்பட முடியாதவராக மாறிவிடுகிறார். 

திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு இடத்திலும் அந்த நபர் தேடப்படுகிறார். அவரை மையப்படுத்தி அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கும். கட்சியில் கடைசியில் சேர்ந்த ஒருவர் அளவு கடந்த ஈடுபாடு காட்டும்போது அவர் முக்கியத்துவம் பெற்று முன்னேறுகிறார். 

தலைவருக்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் சிலர், தலைவரின் மறைவுக்குப் பின்னும் இரண்டாம் இடத்தில் இருக்க நேரிடும். ஆனால் கடைசியில் வந்தவர் முதல் இடத்தைப் பெற்றுவிடுவார். இரண்டாம் இடத்தார் புலம்புவார். "நான்தான் சீனியர்' என்பார். என்ன பயன்? அவருக்கு எப்போதும் இரண்டாம் இடமே கிடைக்கும். கட்சியின் மீது அவரது ஈடுபாடு இரண்டாம் பட்சம். எனவே கட்சிக்கும் அவர் இரண்டாம் பட்சம்.

கல்லூரியில் வேலைக்குச் சேரும் ஒருவர், தனது துறையின் வேலைகளை மட்டும் அளந்து செய்தால் மானேஜ்மெண்ட் அவருக்குச் சம்பளம் கொடுக்கும். மரியாதை கொடுக்காது. தனது பணி, தனது துறையில் பிறரது பணி, மாணவர்கள் பிரச்சினை, கல்லூரி விழாக்கள், அட்மிஷன், கட்டட நன்கொடை இப்படி எல்லா வேலையையும் தனது வேலையாக இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறவர் மானேஜ்மெண்டின் நம்பிக்கைக்குரியவர் ஆகிறார். நியமிக்கப்படாத முதல்வராக முக்கியத்துவம் பெறுகிறார். 
எந்த விஷயத்திலும் ஈடுபாடும் மேம்பாடும் கைகோர்த்து நிற்கின்றன. முக்கியதுவமும் முதலிடமும் முழு மூச்சுடன் ஈடுபட்டவருக்கான உரிமைச் சொத்து. புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

9. பின்பற்றாதே; முன்னேறு! 

புத்தகங்கள் படிப்பதால் மட்டும் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியுமா? முடியாது. முடியவே முடியாது. அறிவு என்பது புத்தகத்திலிருந்து ஒருவருக்கு வருவதா? கிடையாது. கிடையவே கிடையாது. புத்தகங்கள் படிப்பது என்பது மணற்கேணியைத் தோண்டுகிற மாதிரி. அறிவு பிறப்பது என்பது மணல் கேணியில் தண்ணீர் ஊறுகிற மாதிரி. மண்ணைத் தோண்டுவதால் மட்டுமே தண்ணீர் வந்துவிடாது. மண்ணின் மார்பகத்தில் நீரூற்று இருந்தால் மட்டுமே நீர் சுரக்க முடியும். 

அதனால்தான் நிறைய புத்தகங்கள் படித்தும், மனப்பாடம் செய்தும் பலர் அறிவாளிகளாக ஆகாமலேயே செத்துப் போகிறார்கள். அவர்கள் சுயமாகச் சிந்திப்பதே இல்லை. தோண்டுவதால் மட்டுமே தண்ணீர் வந்துவிடுமா? பாலைவனங்களிலும் பாறை நிலங்களிலும் பல நூறு அடி தோண்டியும் தண்ணீர் வருவதே இல்லை. ஏன்? ஆனால் ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும் ஐந்தடியிலேயே தண்ணீர் வருகிறது. 

ஏன்? பலநூறு தடவை பல நூறு புத்தகங்கள் படித்தும் சிலர் அறிவாளி ஆவதே இல்லை! 

ஒரு புத்தகத்தை ஒரு தடவை படித்தாலும் சிலர் அதன் அடிஆழத்தை உணருகிறார்கள். எந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலும் இந்த உணர்வோடு எடுங்கள். வெற்றி நிச்சயம். திருக்குறள் படிக்கிறபோது இந்த உண்மையை நான் உணர்ந்து கொண்டேன். "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என்பது தமிழ் மறை. "அறிவு புத்தகத்திலிருந்து வருவதில்லை. அது கற்பவன் மனத்தகத்தில் இருந்து வருகிறது' என்று உணர வேண்டும். 

"தாய் சொல்லைத் தட்டாதே' என்று புத்தகத்தில் உள்ளது. வரதட்சிணை கேட்கச் சொல்கிறாள் தாய். தாய் சொல்லைக் கேட்கிறவன் மூடன். மறுக்கிற மகன்தான் அறிவாளி. "மருமகளை மதிக்காதே... மண்ணெண்ணெயை ஊற்று' என்கிறாள் தாய்! தாய்மையே அன்பு... அன்பே தாய்மை. அன்பே இன்றி ஒரு பெண்ணை அழிக்க நினைக்கும் தாய், தாயே இல்லை என்று அறிவது நுட்பமான அறிவு. 

"கட்டினவள் கண் கலங்காமல் குடும்பம் நடத்த வேண்டும்' என்பது இல்லற தர்மம். "இந்த நிமிடம் உன் அம்மாவை வெளியில் அனுப்பு' என்று மனைவி அழுது ஆர்ப்பரிக்கும்போது, கண்ணீரைக் காலால் எற்றும் கம்பீரமே இல்லற தர்மம். பெற்றவளை வணங்கி வீட்டில் வைத்திருப்பது நுட்பமான இல்லற தர்மம். இவை புத்தகம் படிப்பதால் வருவதில்லை. சுயமாகச் சிந்திப்பதால் மட்டுமே வருகிறது. 

"முன்னோரை மதிக்க வேண்டும். மூத்தோர் சொல் பேண வேண்டும்' என்பது அவசியம். "குரு வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை' என்பது மகாவாக்யம். ஆனால் குரு தவறாகச் சொன்னால் மரியாதையோடு மறுக்கக் கூடாதா? மறுப்பது அகங்காரமா? மறுப்பதே மானுடப் பரிணாமம். இராமானுஜர் தமது குரு தவறாகச் சொன்னபோது உறுதியாக மறுத்தவர் தெரியுமா? சரியான ஒன்றை அவமதிப்பது தவறு. தவறான ஒன்றை அனுமதிப்பதோ மிகமிகத் தவறு. 

இராமனுடைய குலகுரு வசிட்டர். தந்தை ஆணையை ஏற்றுக் காடு போகும் இராமனைத் தடுக்கிறார். "நான் உன் குரு... மீறிப் போக வேண்டாம்' என்கிறார். "குருவே... சத்தியம் எல்லா தருமங்களையும்விட மேலானது என்று போதித்தவர் நீர். இப்போது நீர் என் தந்தைக்குக் கொடுத்த சத்தியத்தை மீறச் சொல்கிறீர். நான் உம்மை மதிக்கிறேன். ஆனால் நீர் உணர்த்திய தருமத்தை உம்மைவிட மேலாக மதிக்கிறேன்' என்று வசிட்டர் வார்த்தையை மீறுகிறான் இராமன். ஆஹா... "இராமன் குருவை அவமதிக்கிறான்' என்று குமுற முடியுமா? குருவைவிட மேலாகத் தருமத்தை மதிக்கிறான் என்று கொண்டாட வேண்டும்.

பெரியோரை அவமதிப்பது அயோக்கியத்தனம். அதற்காகப் பெரியோர் சொல்கிற எல்லாமே சரி... சரி என்பது அசட்டுத்தனம். அயோக்கியனாக இருப்பது தவறு என்றால்... அசடாக இருப்பதுவும் தவறுதான். சுயம்... சுயம்... சுயம். இந்த விழிப்பு நிலையோடு எப்போதும் இருக்கப் பழகுங்கள். வெற்றி நிச்சயம். 
இன்றைக்கு உலகின் பெரும் பிரச்சினை என்ன? மதவெறி. என்ன காரணம்? தங்கள் மத நூல்களில் சொல்லப்பட்ட எல்லாமே சரி... என்கிற அசட்டுத்தனம். அதே சமயம் பிற மத நூல்களில் சொல்லப்பட்ட எல்லாமே பிழை என்கிற அயோக்கியத்தனம். அசட்டுத்தனமும் வேண்டாம்... அயோக்கியத்தனமும் வேண்டாம். சுயமாகச் சிந்திக்கப் பழகு. இந்த உலகத்தில் எல்லாமே விசாரணைக்குட்பட்டவை! விவாதத்துக்குட்பட்டவை. 

எவ்வளவு பெரிய மனிதன் என்றாலும் - ஏன் கடவுளே என்றாலும்கூட விமர்சனத்துக்குரியவர் - ஆராய்ச்சிக்குரியவர். இதுதான் விவேகமான, விழிப்பான நிலை. "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்...' என்கிற குறளில், யார் யார் என்றால் என்ன பொருள்? அதில் திருவள்ளுவர் அடங்கமாட்டாரா? திருவள்ளுவரே சொன்னாலும் அப்படியே ஏற்பது கூடாது. 

தனக்கு ஆமாம் போடும் கூட்டத்தைவிடத் தன்னை விழிப்புடன் விமர்சிப்பவனைத்தான் திருவள்ளுவர் விரும்புவார். காரணம் தன்னைப் பின்பற்றுபவனைவிடத் தன்னையும் தாண்டி முன்னால் போகிறவனையே திருவள்ளுவர் தேடுகிறார். ஆதாரம் சொல்லட்டுமா? "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' என்ற குறளுக்கு என்ன பொருள்? தம்மையும் தாண்டி அடுத்த தலைமுறை வளருவதையே வள்ளுவர் விரும்புகிறார். 

"திருக்குறளில் என்ன இருக்கிறது! எதுவுமே இல்லை' என்பது அயோக்கியத்தனம். "அதில் எல்லாமே இருக்கிறது... அதைத் தாண்டி எதுவுமே இருக்க முடியாது' என்பது படு அசட்டுத்தனம். "பரிமேலழகரும் மணக்குடவரும் என்ன உரை எழுதிக் கிழித்தார்கள்' என்று பேசினால் அயோக்கியத்தனம்! "பரிமேலழகரும் மணக்குடவரும் சொல்வது மட்டும்தான் சரி... மற்ற எவனுக்கும் எதைச் சொல்லவும் உரிமை இல்லை' என்று எண்ணுவது அகில உலக அசட்டுத்தனம். 
நமது மத நூல்களில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் மறுபரிசீலனைக்குரியவை... தவறானவை என்கிற தெளிவு ஒவ்வொரு மதத்தவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் பூமியில் ரத்தம் பாயாது... யுத்தம் நேராது. 

புத்தகங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சுயமாகச் சிந்திக்க மறுக்கும் மூடத்தனமே எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம். 
உண்மையைத் தேடும் நெருப்போடு நான் வள்ளுவரின் தாள்களை வணங்கினேன். வாரி எடுத்து இந்தப் பிள்ளையைத் தோள்களில் அமர்த்தினான் 
என் பாட்டன். பாசத்தின் பரிசு அது. அவனது தயவால் அவனைவிட அதிக தூரத்தை என்னால் பார்க்க முடிகிறது! நான் அசடுமல்ல... அயோக்கியனுமல்ல... வள்ளுவரால் ஆசீர்வதிக்கப்பட்டவன். அதனால் தமிழினத்தை உயர்த்தும் எனது போர் ஓயாது

10. ராம ஜயமா? ராம் டீம் ஜயமா? 

இந்தியாவின் "நேஷனல் ஹீரோ' யார் தெரியுமா? ராமன். காரணம், அவரது வீரக் கதை. இந்திய மொழிகள் அத்தனையிலும் அந்தந்த மொழியின் தலைசிறந்த கவிஞர்களால் ராமாயணம் எழுதப்பட்டது. இந்தப் பெருமை ராமருக்கு முன்னும் பின்னும் எவருக்கும் கிடைத்திருக்க முடியாது. அப்படிப்பட்ட "நேஷனல் ஹீரோ' ராமனுடைய படம் மட்டும் தனியாக எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? வெறும் ராமனுக்கு மட்டும் சந்நிதி எந்தக் கோவிலிலாவது பார்த்ததுண்டா? இருக்காது. 
அவரது புகழ் பெற்ற படம் ஸ்ரீராம பட்டாபிஷேகப் படம். குறைந்த பட்சம் சீதை, லட்சுமணன், ஹனுமனோடு சேர்ந்துதான் ராமன் படம் இருக்கும். 

என்ன காரணம்? 

எப்போதும் "க்ரூப் ஃபோட்டோ'வில் மட்டுமே ராமன் காட்சி தரும் காரணம் என்ன என்று யோசித்தது உண்டா? 

ராமனது வெற்றி ஒரு குழுவினரின் வெற்றி. எந்தச் சீதையை மீட்க ராமன் போராடினாரோ அந்தச் சீதை கற்புடன் காத்திருந்ததால்தான் ராமனது வெற்றிக்கு அர்த்தம் விளைந்தது. ராமன் எங்கே கடல் கடந்து வரப்போகிறார்... நாம் ராவணன் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தால் என்ன என்று சீதை நினைத்திருந்தால் ராமனது வெற்றி அர்த்தமற்ற அவமானமாகி இருக்கும். 

ராமன் காடு போனதும் மக்கள் மனத்தை மாற்றி ராஜ்ஜியத்தைத் தன்பக்கம் கொண்டுபோக பரதன் நினைத்திருந்தால், ராமன் நாட்டை விட்டுக் கொடுத்த தியாகம் கேலிக்குரியதாகி இருக்கும். பாதுகையுடன் பரதன் காத்திருந்த பண்புதான் ராமனது வெற்றியைக் கவுரவப்படுத்தியது... அர்த்தமுள்ளதாக ஆக்கியது. 
காட்டில் பெண்ணுக்கும், நாட்டில் மண்ணுக்கும் இலக்குவன் ஆசைப்பட்டிருந்தால் ராமஜயம் காமஜயமாகக் களையிழந்து போயிருக்கும். இளைய பெருமாளின் இதயஉறுதியே ராமனது வெற்றியை உண்மையான வெற்றியாக்கியது. 

சுயநலமற்ற, எந்த எதிர்பார்ப்புமற்ற தூய தொண்டன் அனுமன் கிடைக்கவில்லையென்றால் ராமன் இத்தனை வெற்றிகளை அடைந்திருக்க முடியுமா? 
தற்கொலை செய்ய இருந்த சீதையைக் காத்தான். பிரம்மாஸ்திரத்தால் சாய்ந்து கிடந்த இளையவனைச் சஞ்சீவி மலையால் எழுப்பினான். ராமன் வரவேண்டிய பதினான்கு வருடம் முடிந்தது என்று நெருப்பில் விழ இருந்த பரதனைத் தடுத்து நெருப்பை அவித்துப் பலரை மரணத்திலிருந்து மீட்டான் அனுமன். சீதை, இலக்குவன், பரதன் இந்த மூவரில் யார் இறந்து போயிருந்தாலும் ஸ்ரீராமன் பட்டாபிஷேகத்தன்று சந்தனத்திற்குப் பதில் சாம்பலை அல்லவா முகத்தில் பூச வேண்டியிருந்திருக்கும். 
எனவே, ஸ்ரீராமஜயம் என்பது ஒரு தனிமனித வெற்றி அன்று. ஒரு குழுவின் வெற்றி. ஒரு கூட்டத்தின் வெற்றி. 

குறிப்பறிந்த, கொள்கைப் பிடிப்புடைய ஒரு குழு நிச்சயம் வெற்றி பெற முடியுமா என்கிற "டீம் வொர்க்' பற்றிய இந்தியப் பிரகடனம் ராமஜயம். அதனால்தான் ராமனுக்குத் தனியாகச் சந்நிதி இல்லை. ராமனுக்குத் தனியாகப் படமும் இல்லை. அறமே அவனது ஆத்மா. சீதை, பரதன், இலக்குவன், அனுமன் யாவரும் அவனது அங்க அவயவங்கள். அவர்கள் யாருமே தங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தக் குழு பிரிக்க முடியாதது. 
""எவ்வளவு பலசாலியும் தனக்கேற்ற குழுவுடன் இணைகிற போதுதான் அதி உயர்வான வெற்றி பெறுகிறான்'' என்கிற அற்புதமான "மெúஸஜ்' ராமபட்டாபிஷேக "க்ரூப் ஃபோட்டோ'வில் எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவில் பலர் தனித்தனியாகப் பலசாலி... திறமைசாலி... அறிவாளி. ஆனால் குழுவாகப் பணியாற்றத் தகுதி அற்றவர்கள். தன்முனைப்புக் காரணமாக ஒருவரை ஒருவர் வெட்கமில்லாமல் கவிழ்க்கும் இயல்பினர். ஒரு முழுக் குழுவும் வேலைகளைப் பங்குபோட்டால் சுலபமான வெற்றி பெறலாம் என்பதை உணராமல், யார் சிக்கினார்களோ அவர்களை அதிகம் வேலை வாங்கும் நீசத்தனம் நமது நிஜ குணம். 

அகப்பட்ட மருமகளை அதிகம் கசக்கியதால் கூட்டுக்குடும்பங்கள் அழிந்தன. உழைக்கும் தொண்டனை மட்டுமே ஓடஓட விரட்டியதால் கட்சிகள் கலை இழந்தன. களை அடைந்தன. 

இந்தியக் கிரிக்கெட் டீமை எடுத்துக் கொள்ளுங்கள். தனித்தனியாக எல்லோரும் நட்சத்திரங்கள்தான். கூட்டமாக ஆடவந்தால் கூட்டு முயற்சி குழம்பிப் போவது ஏன்? 
நான் கேள்விப்பட்ட ஒரு ஜோக். ஒரு டைவர்ஸ் கேஸ்... குழந்தை அப்பாவிடமா... அம்மாவிடமா என்பது பிரச்சினை. ""அப்பாவும் அடிப்பார். அம்மாவும் அடிப்பாள். போகமாட்டேன்'' என்கிறது குழந்தை. ""அடிக்காத ஒருவரிடம் குழந்தையை ஒப்படைப்பது என்றால் இந்தியக் கிரிக்கெட் டீமிடம்தான் ஒப்படைக்க வேண்டும். ஏன் என்றால் அவர்கள்தான் பந்தைக்கூட அடிப்பதில்லை'' என்கிறார் நீதிபதி. இப்போது நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. மகிழ்ச்சி. 

கண்டம் விட்டுக் கண்டம் பறக்கும் பறவைகளிடமிருந்து "டீம் ஒர்க்' பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படிப் பறக்கும் தெரியுமா? முதலில் ஒரு பறவை. அதன் இரண்டு இறக்கைகளையும் ஒட்டி இரண்டு. அவற்றின் இறகுகளை ஒட்டி நான்கு... இப்படி அவை அம்பு மாதிரி அணிவகுக்கும். 
ஏன் முதல் பறவையின் இறக்கைகளைப் பின்பற்றி நிற்கின்றன தெரியுமா? அதன் இறகு அசைப்பில் காற்று விலகுவதைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த பறவை சுலபமாக முன்னேறிவிடலாம். 

ஆனால் அலகாலும் இறகாலும் காற்றைக் கிழிப்பதால் முதல் பறவை மிக விரைவில் சோர்ந்து விடும். ஆனால் கடைசிப் பறவை சுகமாகக் களைப்படையாமல் வரும். மனித இனமாக இருந்தால் முதல் பறவையைச் சாகும்வரை வேலை வாங்குவோம். ஆனால் பறவைகள் பண்பானவை. முதல் பறவை களைத்ததும் பின்னால் கடைசி வரிசைக்கு வந்துவிடும். அடுத்து நிற்கும் பறவை தலைமை ஏற்கும். களைப்பேற்பட்டதும், சுலபமாகப் பறக்கும் கடைசி வரிசைக்கு வந்துவிடும். இப்படி மாறிமாறித் துயரங்களைப் பங்கு வைத்து அந்தக் குழுவே சுலபமாக முன்னேறும். 

குடும்பம், அலுவலகம், பொது இயக்கம் எதுவானாலும் "நானே எல்லாம்' என்று இழுத்துப் போட்டுக் கொண்டு துயரப்படாது கஷ்டங்களைப் பிறருக்கும் புரியவைப்பவர்கள், பிறரையும் பங்கேற்கச் செய்பவர்கள், அவர்கள் பங்களிப்பை மறவாது பாராட்டுபவர்கள் குழுவாக வெற்றி பெறுகிறார்கள். அந்தக் குழுவிற்கு வெற்றி நிச்சயம்!

11. அன்று நடராஜா; இன்று ஏழு கார்! 

நீங்கள் அவமதிக்கப்பட்டவரா? பிறரால் அலட்சியப்படுத்தப்பட்டவரா? யாராவது உங்களை அவமானப்படுத்தியிருக்கிறார்களா? "ஆம்' என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. முன்னேறுவதற்கான மூலப்பொருள் உங்களிடம் உள்ளது. நம்ப முடியவில்லையா? இதிகாசங்களைப் பாருங்கள். 

தாய், தந்தை யார் என்று அறிய முடியாத அனாதை என்று கர்ணனைத் துரோணர் இகழ்ந்தார். ""நீ என்ன ராஜகுமாரனா? தேரோட்டி மகன்'' என்று அலட்சியப்படுத்தினார். விளைவு..? வளர்ந்தான்... வளர்ந்தான்... வானளாவ வளர்ந்தான். தேரோட்டி மகன் என்று கேலி பேசப்பட்டவன், சல்லியன் என்ற அரசன் தேரோட்டத் தேரேறி வந்தான். இகழ்ச்சியே அவனது வாழ்வைப் புகழ்ச்சி நோக்கிய பயணம் ஆக்கியது. எப்படி? 

அள்ளிக் கொடுத்து, அள்ளிக் கொடுத்து வள்ளலாக வாழ்ந்தான். அவனிடம் மக்கள் கைஏந்தினர். புலவர்கள் கை ஏந்தினர். அனாதை ஆக்கிய அம்மா குந்தியே கை ஏந்தினாள். அடுத்து தேவேந்திரன் வந்து, அருமை மகன் அர்ஜுனனுக்காகக் கவசகுண்டலங்களைக் கை ஏந்தி வாங்கினான். அதுவும் போதாது என்று அண்டசராசரங்களின் அருமைத் தலைவனாம் ஆண்டவன் கண்ணனே வந்து கை ஏந்தி, ""கொடையால் விளைந்த புண்ணியத்தைக் கொடு'' என்று கேட்டான். அம்மா, அப்பா பெயர் தெரியாத அனாதை என்று அவமானப்படுத்தப்பட்ட கர்ணன், "அம்மா தாயே, நான் அனாதை' என்று கை ஏந்தாது அம்மா முதல் ஆண்டவன் வரை கை ஏந்திக் கேட்ட வள்ளலான வரலாற்றுக்கான வீர்ய வித்து அவமதிப்பு. 

அவமதிப்பு... அலட்சியம்... அவமானம். இவை யாவும் அக்கினிக் குஞ்சுகள். விண்ணில் பாயும் நம் வெற்றிக் கலனுக்கான எரிசக்திகள். பழைய ரயில் என்ஜினில் தகதகவென்று எரியும் நெருப்பைக் கண்டதுண்டா? அந்த நெருப்புதான் ரயிலை நகர்த்தும் ஜீவ சக்தி. அந்த என்ஜினின் நெஞ்சில் நின்று எரியும் நெருப்பு எத்தனை நெடிய பயணத்தை நிறைவேற்றும் தெரியுமா? அப்படியே உங்கள் நெஞ்சில் எரியும் நெருப்பை, அவமதிப்பை, வெற்றிக்கான எரிசக்தியாக்குங்கள்.

ஒரு நிமிடம்..! அவமதித்தவர்களைப் பழிவாங்கத் துடிப்பது அறிவீனம்... அகங்காரம். அவமதித்தவரும் வருந்தும்படியாக - ஏற்கும்படியாக வளர்வதே அங்கீகாரம். உன்னதமான முன்னேற்றம். தன்னை அவமதித்த பிரிட்டிஷ் அதிகாரியும் மதிக்கும்படி விஸ்வரூபம் எடுத்தவர் மகாத்மா காந்தி. மாறாகப் பழிவாங்கத் துடித்தவர்கள் பாழானதுதான் மிச்சம். 

வேடிக்கையான கதை ஒன்று. ஓர் அரசர் அருமையாகப் பாடிய வித்வானிடம், ""பரிசாக என்ன வேண்டுமானாலும் கேளும் தருகிறோம்'' என்று அறிவித்தார். வித்வானோ, நாள்தோறும் அரசர் குளிக்கும் காவல்குளத்திற்கு அரசரை அழைத்துவந்து குளத்தில் இறங்கி வாய் கொப்பளித்துத் துப்பினார். காவலுக்கு நின்ற சேவகனைப் பார்த்து, ""பார்... பார்... நன்றாகப் பார்த்துக் கொள்'' என்று கத்தினார். 

அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்தது இதுதான். வித்வான் அரண்மனைக்கு வரும்போது, அது அரசர் குளிக்கிற குளம் என்று தெரியாமல் அதில் இறங்கிக் கைகால் கழுவிவிட்டார். காவலன் அவரை அடித்து, ""ராஜா பார்த்திருந்தால் உன் தலையே போயிருக்கும்'' என்று தள்ளிவிட்டான். தன்னை அவமதித்த காவலனை அரசர் முன்பு பழி வாங்கத் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திவிட்டார் முட்டாள் பாகவதர். ஆனால் அது சரியல்ல. பின் எப்படி ஜெயிக்க வேண்டும்? 

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகன் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டி நாட்டிலிருந்து சினிமாக் கனவுகளுடன் பதினாலு வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார் கவிஞர். 

நள்ளிரவு. போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினாலு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. ""படு... படுக்கணும்னா நாலணா குடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருந்திருக்கிறார் கண்ணதாசன். 
அவர் வளர்ந்து கவியரசாகி "சுமைதாங்கி' என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். 

நள்ளிரவு ஷூட்டிங். ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வரவேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர், பிள்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். ""இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது... இதே இடத்தில் இன்று என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது'' என்றாராம். 

எங்கு அவமதிக்கப்பட்டாரோ, அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்... இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

12. காதைத் திருகியவர் காது கொடுத்தார்! 

ஓர் ஊதுபத்தியின் நறுமணம் எவ்வளவு தொலைவு பரவ முடியும்? ஒரு வீடு முழுவதும்..? சரி. எரிகின்ற சந்தன மரத்தின் நறுமணம் எவ்வளவு தூரம் பரவ முடியும்? ஒரு காடு முழுவதும்..? ரொம்ப சரி. காய்ச்சுகிற நெய்யின் மணம் எவ்வளவு கிலோ மீட்டர் பரவ முடியும்? என்ன கிண்டலா? நெய்யின் நறுமணம் சாப்பிடுகிறவனுக்கும் பரிமாறுகிறவனுக்கும் இடையே பரவினால் அதுவே பெரிய விஷயம். அது எப்படிக் கிலோ மீட்டர் கிலோ மீட்டராகப் பரவ முடியும்..! முடியும் முடியும்... முயன்றால் முடியும்! 
கோயமுத்தூரில் ஒரு சின்னக் கடையில் ஸ்ரீமான் மகாதேவ ஐயர் என்பவர் காய்ச்சிய நெய்யின் நறுமணம் கோவை, ஈரோடு, சேலம் வழியாகச் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் வரை பரவி தில்லி வரை பாய்ந்துள்ளது. நம்ப முடியவில்லையா? 

ஆம்... நெய் மணம் கமழ ஸ்ரீமான் மகாதேவ ஐயர் கண்ட ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஓர் இனிப்புக் கடை என்ற எல்லையை உடைத்தெறிந்து இந்திய அளவிலான ஒரு தரமான தலைசிறந்த தொழில் நிறுவனம் என்பதற்காக விஸ்வேஸ்வரய்யா விருதினைத் தமிழக ஆளுநர் கைகளால் பெற்றுக் கொண்டது. இது எப்படிச் சாத்தியம் ஆனது? முயற்சியில் தொடர்ச்சி... எனவே முன்னேற்றத்தின் வளர்ச்சி. கொஞ்சம் விவரமாய்ச் சொல்கிறேன். 

குறைந்த விலை... நிறைந்த விற்பனை என்கிற வணிக மொழியை வழித்தெறிந்து தரமான பொருள், திறமான விற்பனை. சுத்தத்தில் சுகாதாரத்தில் அக்கறை, வரவேற்பு முதல் வழியனுப்பு வரை வாயெல்லாம் சர்க்கரை, பொறுப்புடன் கூடிய பொதுஜனத் தொடர்பு இத்தனையும் இருந்தால் விலை என்ன விலை? விற்பனை அழகிய கலை(!) என்று நிரூபித்தவர்கள் அமரர் மகாதேவ ஐயரின் அருமைப் புதல்வர்கள் கிருஷ்ணன், முரளி. எந்தக் காரியத்தையும் தொடர்ந்து அக்கறையுடன் செய்தால் சமூக அங்கீகாரம் சாத்தியம்; வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து, சிறந்த தொழில் திறனுக்கான விஸ்வேஸ்வரய்யா விருது அண்மையில் பெற்றனர். வியப்பாக இல்லையா? 
உடைக்க முடியாத மைசூர்பாகு பற்றிய ஜோக்குகளையெல்லாம் உடைத்தெறிந்தது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ். ஒரு ஜோக் பாருங்கள். உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு. மனுதாரர், மனைவிக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கும்படி மன்றாடுகிறார். எதற்கு? ""இனி எக்காலத்திலும் "பல்நலம்' கருதி என் மனைவி மைசூர் பாகு செய்யக்கூடாது என்று என் மனைவிக்கு இந்த உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று கேட்கிறார். 

இன்னொரு ஜோக். ஒரு பேப்பர் விளம்பரம். ""அன்புள்ள கணவருக்கு, தீபாவளிக்குச் செய்த மைசூர்பாகு முற்றிலும் தீர்ந்துவிட்டது. எனவே இனி அச்சம் இல்லாமல் தாங்கள் வீட்டுக்கு வரலாம். - தங்களைப் பிரிந்துவாடும் மனைவி, மக்கள். 

இப்படிக் கிண்டலடிக்கப்பட்ட மைசூர்பாகு விஷயத்தில் கரைந்து போகும் புதுமையைப் புகுத்தியது முதல் வெற்றி. முழு நெய் என்பது அடுத்து வெற்றி. ஒரு மிட்டாய்க் கடையைத் தொழில் நிறுவனமாக்கியது அதனிலும் பெரிய வெற்றி. எந்தத் தொழிலையும் வித்தியாசமாக, அக்கறையுடன் தொடர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

இப்போது இன்னொரு ஒற்றை மனிதரின் வெற்றியைச் சொல்லுகிறேன். வானொலி மூலம் வரலாறு படைப்பவர். தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர். யார் தெரிகிறதா? தென்கச்சி கோ. சுவாமிநாதன். 

கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம் வரை, மருத்துவம் முதல் மகத்துவம் வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை. பெரிய பெரிய விஷயங்களைக்கூடத் தெருவோரத்துக் கடையில் மசால்வடை போடும் அலட்சியத்தில் வாரிக்கொட்டுகிற வார்த்தை வளம். பல்லாண்டுக் காலத் தொடர் முயற்சி... தொடர்ச்சி... வளர்ச்சி என்கிற மூலமந்திரத்தின் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். 
வயலும் வாழ்வுக்குமான உபகரணங்களை வைத்துக் கொண்டு பொக்ரான் அணுகுண்டு வெடிக்கும் வித்தியாசமான விவசாய விஞ்ஞானி. ஒற்றை மனிதன்; ஆனால் வெற்றி மனிதன்! 

பதினைந்து வயதுப் பையனாக அவர் பள்ளியில் படிக்கும்போது... "கண்ணன்' என்ற சிறுவர் பத்திரிகைக்கு கதை எழுதி அனுப்பியிருந்தார். பள்ளிக்கூட முகவரிக்குத் திரும்பி வந்துவிட்டது. வகுப்பாசிரியர் கையில் கிடைத்துவிட்டது. அவ்வளவுதான். ஆசிரியர் காதைப் பிடித்துக் திருகி அவரைப் படாதபாடு படுத்திவிட்டார். ""படிக்கிற வயசுல உனக்கெல்லாம் எதுக்குடா இந்தக் கதை எழுதற வேலை. படிப்பில அக்கறையில்லை. வாங்கற மார்க்கைப் பாரு'' என்று கேலி செய்து அவர் காதைப் பிடித்துத் திருகியிருக்கிறார். அதன் பிறகு எதற்கெடுத்தாலும் காது திருகும் திருப்பணி ஆசிரியர் கைங்கர்யம். அடிக்கடி தென்கச்சியின் காதுகள் ஆசிரியர் வசம். 

பல்லாண்டுக்குப் பிறகு வானொலியில் சேர்ந்து "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் தென்கச்சி புகழ் பெற்ற பிறகு நிலையத்துக்கு ஒரு கடிதம் வருகிறது. ""ஐயா... சென்னை வானொலி நிலையம் கடந்த சில வருடங்களாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் "இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சியை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தற்போது இங்கேயுள்ள மடம் ஒன்றில் வேலை செய்துவருகிறேன். தினம்தோறும் வானொலியில் தகவல் தரும் அந்த மதிப்புக்குரிய பெரியவருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். எனவே அவருடைய பெயர் என்ன? முகவரி என்ன என்பதைத் தெரியப்படுத்த இயலுமா?'' என்று கேட்டு அடியில் கையெழுத்திட்டிருந்தார். 

அந்தக் கடிதத்தை எழுதியவர் வேறு யாருமல்ல. தென்கச்சி சாரின் காதுகளைத் திருகிய அதே ஆசிரியர். பிறகு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கட்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், தனது மாணவன் என்ற நினைவின்றி ஒரு மகாபெரியவர் என்ற நினைவில், ""தினமும் தவறாமல் தங்கள் அறிவுரைகளைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்'' என்று எழுதியிருந்தார். ஒரு காலத்தில் தென்கச்சியின் காது ஆசிரியர் வசம் இருந்தது. தென்கச்சி ஜெயித்ததும் ஆசிரியர் காது இவர் வசம் இருக்கிறது. 

வெற்றி நிச்சயம் தொடரில் மேற்கோளாகக் காட்டும் தகுதி ஆப்ரஹாம் லிங்கனுக்கும் ஜார்ஜ் வாஷிங்டன்னுக்கும் மட்டும் இல்லை. வானொலியில் வரலாறு படைக்கும் தென்கச்சிக்கும், இனிப்புத் தொழிலில் சாதனை செய்யும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சகோதரர்களுக்கும் நிச்சயம் உண்டு. 
தொழிலில் தொடர்ச்சி + முயற்சி = வளர்ச்சி என்ற சூட்சுமம் புரிந்தால் வெற்றி நிச்சயம்!

13. அச்சம் என்பது மடமையடா! 

வாழ்க்கையில் எப்போதோ ஒரு முறை மரணத்தைச் சந்திக்கிறவன் வீரன். மரணத்திற்கு மத்தியில் எப்போதோ ஒருமுறை வாழ்க்கையைச் சந்திக்கிறவன் கோழை. இந்தியா வீரர்களின் பூமியாக இருந்தது. இன்று கோழைகளின் சிறைக் கூடமாக இருந்து தொலைக்கிறது. இது அவமானப்பட வேண்டிய அசிங்கம். 

மொகலாயப் படைஎடுப்பையும் அதன்பின் நடந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து அடிமைத்தனம் மக்கள் மனத்தில் வேரூன்றிவிட்டது. இந்த மண்ணின் மானப் பசை காய்ந்துவிட்டது. காயடிக்கப்பட்ட மாடுகளைப் போல ஆண்மை அழிந்தொழிந்த அடிமைப் புத்திக்காரர்களாக இந்திய ஜன சமூகம் இருந்தும் இறந்து கிடக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு என்பதைவிட பிணநாயக நாடு என்றே எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது. 

கூச்சம் இல்லாமல் கூட்டணி மாறும் அரசியல் வியாபாரிகள், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தெரிவு செய்த கட்சிக்கும் துரோகம் இழைக்கும் அரசியல் வியாதிகள், ஊழலே உருவமான பல தலைவர்கள், உழைக்காமல் பிழைக்கும் பல அரசு ஊழியர்கள், அரசியல் வெறியர்களின் அராஜகம், அக்கிரமத்திற்கு அரசு எந்திரத்தைக் கூட்டிக் கொடுக்கும் சில மானம் கெட்ட அதிகாரிகள், வாதியும், பிரதிவாதியும் செத்த பிறகு தீர்ப்புச் சொல்லும் அதிமேதாவித்தனமான நீதிநியாயங்கள், எடை குறைவான ரேஷன், கண் எதிரில் கற்பழிப்பு, பேட்டை தாதாக்களின் ரவுடித்தனம், லஞ்சம், வஞ்சம், அநீதி, அக்கிரமம், அநியாயம் எதுவுமே இன்று இந்தியரைப் பாதிக்கவில்லை. மாறாகப் பயந்து சாகிறார்கள்.

அன்றைய பாரத புத்திரர் ""சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்'' என்று பாரதி பாடினார். இன்றும் அவனே போலீûஸக் கண்டு அஞ்சுகிறான். பண்ணையாரைக் கண்டு பயந்து நடுங்கிய காலம் போய் பாரத புத்திரன் பணத்தாசை பிடித்த பல அதிகாரிகளைப் பார்த்துப் பயப்படுகிறான்.

""அச்சம் என்பது மடமையடா'' என்று கையைக் காலை ஆட்டி யாராவது பாடினால் கையைத் தட்டுகிற தமிழ்நாட்டு மக்கள், அராஜகத்தின் முன்னால் 
கையைக் காலைக் கட்டிக்கொண்டு பயந்து சாகிறார்கள்..! பயம்... பயம்... பயம்... இதிலிருந்து வெளியே வா இந்தியனே..! வெற்றி நிச்சயம்.

ஒரு ரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். நான்கைந்து பிளஸ்டூ மாணவர்கள் என்னைக் காட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சன் டி.வி.யில் பார்க்கிற, தினமணி கதிரில் எழுதுகிற சுகி. சிவம் நான்தானா என்று அவர்களுக்குச் சந்தேகம். ஆனால் என்னிடம் வந்து பேசப் பயம். 

நானே அவர்களை அருகில் அழைத்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் பார்த்துப் பேச ஏன் பயப்பட வேண்டும்? இளையபாரதத்தைப் பார்த்து எனக்குக் கவலையாக இருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒரு மாணவன் தயங்கித் தயங்கி ஹன்ற்ர்ஞ்ழ்ஹல்ட் கேட்டான். 
பொதுவாக நான் ஹன்ற்ர்ஞ்ழ்ஹல்ட் வாங்குவதை விரும்புவதில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது என் கோட்பாடு. இருந்தும் அவனைக் காயப்படுத்தாமல், ""தம்பி ஹன்ற்ர்ஞ்ழ்ஹல்ட் வாங்குபவனாக இராதே... அவசியம் என்றால் போடுகிறவனாக இரு'' என்றேன்.

இதைவிட அந்த இளைஞனுக்கு நான் வேறு நல்லது என்ன சொல்ல முடியும்? மாணவன் முகம் வாடிவிட்டது. இன்றைக்கு மாணவர்கள் ஆசிரியரோடு பேசப் பயப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் பேச அதிகமாகவே பயப்படுகிறார்கள். 

பயப்படாதே! ஆங்கிலத்தைச் சரியாகப் பேச முயற்சி செய். தவறாக இருந்தாலும் கவலைப்படாதே... பேசு... அது அந்நிய மொழி. அதைச் சரியாகப் பேசாவிட்டாலும் குற்றம் இல்லை. யாராவது இந்தியருக்கு ஆங்கிலேயர் செய்த குற்றங்களோடு ஒப்பிட்டால் இது மிகச் சிறியது! 
தவறைச் சுட்டிக் காட்டினால் வெட்கப்படாதே... நன்றி சொல். பிழையின்றி ஆங்கிலம் பேச அவர் உனக்கு உதவ முடியுமா என்று கேள். மகாத்மா காந்தியின் ஆங்கிலத்தில் ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி பிழை கண்டபோது காந்தி அப்படித்தான் உதவி கேட்டார். 

அப்படிக் கேள். உருப்படுகிற வழியைப் பார்... பயப்படாதே... வீரனாகவே இரு! அடிக்கடிச் சாகாதே! ஒரு முறைதான் சாக வேண்டும். எவ்வளவு 
பெரிய மனிதரைப் பார்க்க நேர்ந்தாலும் துணிவுடன், நேராகப் பார். குழப்பம், தலைகுனிதல், தயக்கம், பயம், உளறல் இவற்றைத் தூக்கிக் குப்பையிலே போடு. 
இளையபாரதமே ஜெயிக்கிற வழியைப் பார். ஒüரங்கசீப் டில்லி பாதுஷாவாக இருந்த போது அம்பர் என்கிற சின்ன நாட்டிற்கு ஜெயசிங் என்கிற பதின்மூன்று வயதுச் சிறுவன் பட்டத்திற்கு வந்தான். அவனைப் பயமுறுத்தி வைக்கும் எண்ணத்தில் டில்லிக்கு வரும்படி பணித்தார் பாதுஷா. 

அவனது தாயும் அமைச்சர்களும் அஞ்சினர். ஆனால் சக்கரவர்த்தி முன்பு நடந்துகொள்ள வேண்டிய மரபுகள், முறைகளைக் கேட்டறிந்து ஜெய்சிங் டில்லி சென்றான். சிங்கக் குட்டியைப் போல் தன்முன் வந்து நின்ற ஜெய்சிங்கை ஒüரங்கசீப் உற்றுப் பார்த்தார். 

நம்மைக் கண்டு இவனுக்குப் பயம் வரவில்லையே என்று கோபம் அடைந்த பாதுஷா, சிம்மாசனத்தில் இருந்து திடுமென்று குதித்து ஜெய்சிங் அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்தார். பற்களை நறநற என்று பயமுறுத்தும் பாணியில் கடித்தார். ஜெய்சிங் அஞ்சவில்லை. அசரவில்லை! ஒüரங்கசீப் ஆச்சர்யம் அடைந்தார். ஜெய்சிங் கைகளை இறுக்கியபடி, ""சிறுவனே உனக்குப் பயமாக இல்லையா? இப்போது நான் உன்னைத் தண்டித்தால் என்ன செய்வாய்? எப்படிக் காப்பாற்றிக் கொள்வாய்?'' என்றார். 

ஜெய்சிங் சிரித்துக் கொண்டு, ""இத்தனை பெரிய டில்லி பாதுஷாவே என் கைகளைப் பிடித்து எனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும்போது நான் எதற்குப் பயப்பட வேண்டும்? யாரிடம் பயப்பட வேண்டும்?'' என்று சாமர்த்தியமாகப் பதில் கூறினான். அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, ""பலே'' என்று பாராட்டி பக்கத்தில் ஆசனம் அளித்தார் ஒüரங்கசீப் என்கிறது வரலாறு! 

அச்சத்தை வென்றால் வெற்றி நிச்சயம்.

14. நம்பினோர் கெடுவதில்லை! 

சில நூறு மைல் பயணம் செய்வதானால் நீங்கள் எவ்வளவு முன் ஏற்பாடுகள் செய்துகொள்வீர்கள்? வாகன வசதி, உணவு ஏற்பாடு, வழியில் தங்க, ஓய்வெடுக்க வாய்ப்பு உண்டா, என்றெல்லாம் எவ்வளவு கவலைப்படுவீர்கள்? 

உடைத்துச் சொன்னால், கார் ரிப்பேர் ஆகலாம்; உணவு கிடைக்காமல் போகலாம்; ஓய்வெடுக்க வசதியான இடம் இல்லாமல் போகலாம் என்று பயப்படுவீர்கள். சுகமாகப் போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையைவிடச் சிரமப்படுவோமோ, போய்ச் சேரமாட்டோமோ என்கிற அவநம்பிக்கைதான் பலருக்கு அதிகமாக இருக்கும். மனிதனுக்கு இயற்கை கொடுத்துள்ள அறிவு, வருமுன் காக்கும் திறன். ஆபத்துகளை எதிர்பார்க்கும் முன் எச்சரிக்கை இன்று அவநம்பிக்கையை உருவாக்குகிறது. 

ஆனால் கனடாவிலிருந்து மெக்ஸிகோவுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் நம்பிக்கையோடு ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக ஒரு பயணம் நிகழ்கிறது. பயம் இல்லை... அவநம்பிக்கை இல்லை... வழியில் உணவு கிடைக்குமா கிடைக்காதா என்கிற கவலை இல்லை... சுகமாக உற்சாகமாக ஆடிப்பாடி அந்தப் பயணம் நடக்கிறது. பயணம் செய்வது யார் தெரியுமா? பட்டாம் பூச்சிகள். வண்ணத்துப் பூச்சிகள். கோடி கோடியாகப் பறக்கின்றன. பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தை அவை நம்புகின்றன. உணவளிக்கும், ஓய்வளிக்கும், நமக்கு மரணம் நிகழாது என்று உலகத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பட்டாம் பூச்சிகள் கனடாவிலிருந்து மெக்ஸிகோவுக்குக் கோடிக் கணக்கில் ஆண்டுதோறும் பறந்து செல்கின்றன. 

நமது தாய்மண் நமக்கு வாழ்வு தரும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. ஆனால் வேடந்தாங்கலையும் அதில் உள்ள ஏரியையும் அதன் சுற்று மரங்களையும் நம்பி, கண்டம் விட்டுக் கண்டம் கடந்து பட்சிகளும் பறவைகளும் வருடம்தோறும் வருகின்றன. இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும்; உணவளிக்கும்; வாழ இடம் கொடுக்கும்; வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன. அந்தப் பாடத்தை நீங்கள் படித்தது உண்டா? நம்புங்கள்... நம்புங்கள்... வெற்றி உண்டாகும். 

இன்று கணவன், மனைவியை நம்புவதில்லை. மனைவி கணவனை நம்புவதில்லை. அது வீடா... இல்லை. இல்லை. நரகம். நண்பர்கள் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. நட்பா அது? இல்லை. இல்லை. அது வியாபாரம். வியாபாரத்திலேயே பங்குதாரர்கள் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. தொழில் கூடமா அது? இல்லை துரோகிகளின் கூடாரம். 

கூட்டு வணிகம் செய்யும் இரண்டு பார்ட்னர்கள் இரவு ஒரு திருமண விருந்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் அலறினார். ""ஆ! வரும் அவசரத்தில் கடையில் பணப்பெட்டியைப் பூட்டாமல் வந்துவிட்டேன். எவனாவது திருடினா என்னாவது?'' என்றார். இன்னொரு பார்ட்னர் ""டேய்! நம்ம இரண்டு பேருமே இங்க இருக்கோம். அப்புறம் யாரு திருடப்போறா... கவலையை விடு'' என்றார். எப்படி இருக்கு கதை? 

பல்லாண்டுகளாகப் பணிபுரிந்தாலும் தன் ஊழியர்களைச் சில முதலாளிகள் நம்புவதே இல்லை. கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் முதலாளிகளின் அன்பை, அக்கறையைச் சில தொழிலாளிகள் நம்புவதே இல்லை. நம்பிக்கை இல்லாத இடம் நரகமே! நரகம் மட்டுமே.

நாலு நண்பர்கள் ஓட்டலுக்குப் போனார்கள். கடைசியாக ஐஸ்கிரீம் வந்ததும் பில்லைப் பார்த்ததும் சுரீர் என்றது. கையில் உள்ள காசைவிட பில் இருபது ரூபாய் அதிகம். ஐஸ்கிரீம் வேண்டாம் என்றால் அசிங்கம். இருப்பதில் சின்னப் பையனைப் பார்த்து ""நீ ஓடிப்போய் வீட்டில் இருந்து இருபது ரூபாய் கொண்டுவா. பில் கொடுக்கலாம்'' என்றார்கள். ""முடியாது... நான் போனதும் நீங்கள் சாப்பிடுவீர்கள்... நான் வருவதற்குள் என் ஐஸ்கிரீம் உருகி இருக்கும். போகமாட்டேன்'' என்றான். ""நீ திரும்பி வரும் வரை சாப்பிடமாட்டோம்'' என்றார்கள். ""நிஜமா?'' என்றான். ""சத்தியமாக'' என்றார்கள். அரை மனதுடன் பொடியன் புறப்பட்டான். கால்மணி ஆனது. அரைமணி ஆனது, பொடியன் வரவே இல்லை. ஐஸ்கிரீம் உருக ஆரம்பித்தது. எல்லோரும் தண்ணி ஐûஸக் குடிப்பதைவிட பொடியன் வந்ததும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவரவர் ஐஸ்கிரீமை வாயில் வைத்ததுதான் தாமதம்... டபக்கென்று ஓடி வந்த பொடியன் லபக்கென்று தன் ஐஸ்கிரீமை எடுத்துக் கொண்டு ""தெரியும்... நீங்க இப்படிப் பண்ணுவீங்கனு தெரியும். அதனாலதான் நான் போகவே இல்லை. கைகழுவுற இடத்திலேயே மறைஞ்சிருந்து உங்களை கவனிச்சுகிட்டே இருந்தேன்'' என்றான். நாலு பேரும் ஹோட்டல்காரனிடம் உதைபட நேர்ந்தது. 

மராட்டிய மன்னன் சிவாஜி வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. சிவாஜியைக் கொல்ல படுக்கையறைக்குள் வந்த சிறுவனைக் கைது செய்து மன்னர் முன் கொண்டு வந்தனர். ""ஏன் என்னைக் கொல்லத் துணிந்தாய்?'' என்றார் சிவாஜி. ""வறுமை... என் தாய் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறாள். கையில் பணம் இல்லை. உங்களைக் கொன்றால் பணம் தருவதாக உங்கள் எதிரி ஒருவர் கூறினார். எனவே கொல்லத் துணிந்தேன்'' என்றான். ""மன்னனைக் கொல்ல முயன்றதால் உனக்கு மரண தண்டனை'' என்றார் அருகிலிருந்த தாணாஜி. ""சாவதற்கு முன் என் தாயைப் பார்க்க அனுமதி வேண்டும். ஒரு கைதியாக அல்ல... அவள் துன்பப்படுவாள். சுதந்திரமாக என்னை அனுப்ப வேண்டும்'' என்றான் இளைஞன். ""தப்பியோட எண்ணமா? அனுமதிக்க மாட்டேன்'' என்றார் தாணாஜி. ""நான் மானமுள்ள மராட்டியன். மராட்டியன் சொன்ன சொல் தவறுவதில்லை'' என்றான் இளைஞன். சிவாஜி நம்பினார். அனுமதித்தார். குறித்த நேரத்தில் மன்னர் முன் வந்து மரண தண்டனை தரும்படிக் கேட்டான் இளைஞன். ""உன்னை மாதிரி நம்பிக்கைக்குரியவர்களை யாராவது கொல்வார்களா?'' என்று தன் படையில் இளைஞனைச் சேர்த்துக் கொண்டார் சிவாஜி. 
பிறரை நம்புவதில் சில சிக்கல்கள் உண்டு. என்றாலும் நம்புங்கள். பிரபஞ்சத்தை நம்புங்கள். அது நமக்குச் சாதகமானது என்று நம்புங்கள். கடவுளுக்கே நம்பர் என்று ஒரு பெயர் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா? நம்மவர், நம்பிக்கைக்குரியவர் என்பதால் கடவுள் நம்பர் எனப்பட்டார். பெற்ற தாய், பிள்ளையை நம்பவில்லை என்றால் பெற்ற வயிறு சாக்கடைக்குச் சமம்! பெற்றோரை நம்பாத பிள்ளைகள் பிள்ளைகளே அல்ல. கொள்ளிகள். 

நம்பினோர் கெடுவதில்லை. நம்புங்கள். நம்புங்கள். வெற்றி நிச்சயம்!

15. தன்னம்பிக்கை என்பது சாராயம் அல்ல! 

தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து இப்போது ஒரு விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் நிறைய சொற்பொழிவுகள், வகுப்புகள், பயிலரங்குகள், பணிமனைகள் நடைபெறுகின்றன. 

பயிற்றுநர்கள் பலர் தலைமைப் பண்பு, நிர்வாக இயல் குறித்துப் பயிற்சி தருகிறார்கள். இது நல்ல மாற்றம்தான். ஆனால்... ஆனால் என்ன ஆனால்? பயிற்றுநர் பலர் வெற்றியாளரா என்றால், பதில் மௌனம். இன்னொரு பக்கத்தில் இன்னொரு ஆபத்து... வெறியேற்றுவது போல, ""முடியும்... முடியும்... எல்லாமே எல்லாராலும் முடியும்'' என்று "மோட்டிவேட்' செய்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள். தன்னம்பிக்கை உரைகள், சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் சாராயக் கடை, கள்ளுக் கடை மாதிரி வெறியேற்றும் என்றால், போதை தரும் என்றால், அவை ஆபத்தில் கொண்டு போய்விடும் என்று எச்சரிக்கிறேன். 

எல்லாராலும் எல்லாமே முடியும். உண்மைதான். ஆனால் அதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்படும் தெரியுமா? கால விரயம் கணக்கில் கொள்ள வேண்டாமா? முதலில் அது அவசியமா? சுகி. சிவம் வெற்றிகரமான பேச்சாளர் என்று யாராவது சொன்னால் நான் மறுக்கமாட்டேன். ஒரு வெற்றிகரமான எழுத்தாளரும்கூட என்றால் அது நிரூபிக்கப்பட்ட விஷயம்... ஆனால் சிறப்பாகப் பரத நாட்டியம் ஆடுவார் என்றால் பொய்... பிரமாண்டமான பொய். அதை நிரூபிக்க நான் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன், ஆட முடியாதா? முயற்சி இருந்தால் முடியாதா என்று கேட்டால் ஒரே பதில்... அது என்னளவில் வேண்டாத வேலை! 

அதே மாதிரிதான்... ஒருவரால் எல்லாம் முடியும் என்று வெறியேற்றினால் ஒவ்வொன்றாக முயன்று காலத்தை வீணாக்கக் கூடாது. பிறகு தோற்றவர் பட்டியலில் உங்கள் பெயர் பதிவாகலாம். அவசியமான ஒரு சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதிலும் 1, 2, 3 என்று முக்கியத்துவத்தை வரிசைப்படுத்திக் கொண்டு கவனமாக முயன்று ஒருவர் வெற்றியாளர் ஆக வேண்டும். 

கிராமப்புறங்களில் திட்டுவார்கள்... ""நாய் வாய் வைத்த மாதிரி''. ஒவ்வொன்றிலும் நுழைவது அநாவசியம். தேர்ந்தெடுத்துச் செயல்படுங்கள் - வெற்றி நிச்சயம். இன்றைய "மோட்டிவேஷனல்' முயற்சிகள் சிலரை வெற்றிப் போதைக்குள் வீழ்த்தும் சாராயக் கடைகள் மாதிரிப் புறப்பட்டுவிட்டன. அவை குறித்த என் எச்சரிக்கைகளும் கண்டனங்களும் உண்மையானவை. சமூக அக்கறை மிக்கவை. அரைகுறை அறிவுடையவர்கள், வெற்றியின் சூட்சுமம் விளங்காதவர்கள், தோல்வித் தேவதையின் தூதுவர்கள் பலர் இன்று பயிற்றுநர்களாகப் பவனி வருகிறார்கள். எச்சரிக்கை! யாரோ சொல்லிவிட்டார்கள் என்பதற்காக எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக்கொண்டு எல்லாமே முடியும் என்று இழுத்துப் போட்டுக்கொண்டு நீங்கள் அவமானப்பட வேண்டாம். நம்மிடத்தில் உள்ள திறமைகளை முதலில் வரிசைப்படுத்திக் கொள்வோம். முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் திறமைகளையும் அடுத்து வரிசைப்படுத்திக் கொள்வோம். பிறகு இரண்டு பட்டியலும் சரி பார்க்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டிய திறமைகளில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றியைக் குவிக்கலாம்; தோல்வியைத் தவிர்க்கலாம்.

அரைகுறையான தன்முனைப்புப் பயிற்றுநர்கள் திருவள்ளுவரிடம் இருந்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்தி ஒன்று இருக்கிறது. 

"உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக்கண் முறிந்தார் பலர்' என்பது அவரது ஆழம் மிக்க குறள். 

ஊக்கத்தின் ஊக்கி என்கிற வேலைதான் மேலே நான் விவரித்தது. அது தோல்வியில் முடியும் என்ற திருவள்ளுவர் கணிப்பு நுட்பமானது, திட்பமானது. அது அனுபவக் கொடை. 

ஆஹா... திருவள்ளுவரை நான் வழிமொழிவதா என்று தமிழ்நாட்டின் வறட்டு அறிவாளிகள், செல்லாக்காசுகள் சிலர் புருவத்தை உயர்த்துவார்கள் என்பதை நான் அறிவேன். ஆம், என்னைத் திருவள்ளுவரின் துரோகியாகச் சித்திரித்து ஒரு தோல்வியாளர்கள் கூட்டம் எழுதியும் பேசியும் சந்தோஷப்படுகிறது. அவர்கள் கிடக்கிறார்கள்... 

வள்ளுவக் கிழவனின் செல்லப் பேரனாகிய நான் என் வழிவழிச் சொத்தை, பரம்பரைச் செல்வத்தை உங்களோடு பங்கிட்டுக் கொள்கிறேன். இந்தக் குறள் விளங்கிய சிந்திக்க வேண்டிய குறள். 

நடிப்பின் இமயமா ரும் நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்து பெரும் துன்பம் அடைந்தார், நினைவிருக்கிறதா? 

உன்னதமான கர்நாடக இசையின் சக்கரவர்த்திகள் திரைப்படம் எடுத்துக் கையைச் சுட்டுக்கொண்டார்கள், நினைவிருக்கிறதா? 

பாரம்பரியப் புகழ் மிக்க தொழில் நிறுவனங்கள் சில தங்களுக்குத் துளியும் சம்பந்தமில்லாத புதிய துறைகளில் காலடி வைத்துக் கல்லடி பட்ட கதை உங்களுக்கு மறந்திருக்காதே! 

வாயும் வயிறும் வேகவேக ஊர் ஊராகப் போய்ப் பேசிச் சம்பாதித்த பணத்தை ஒரு பைனானஸ் கம்பெனியில் பார்ட்னர்μப் வைத்து, புகழ் பெற்ற ஒரு சமயச் சொற்பொழிவாளர் தொலைத்தார்! 

இது பலருக்கும் தெரியாத ரகசியம்! இப்போது வெளிப்படுத்தி இருக்கிறேன். இவை எதனால் நடந்தன? ஊக்கத்தின் ஊக்கி... இடைக்கண் நிகழ்ந்த முறிவுகள்! எப்போதும் வெற்றியைப் பற்றி எழுதுகிற சுகி. சிவம் தோல்வியைப் பற்றி எழுதுகிறாரே என்று அஞ்ச வேண்டாம். கார் வாங்கும்போது என்ஜின் வேகம், குதிரைத் திறம், பறக்கும் பலம் பார்த்தால் மட்டும் போதாது. பிரேக் பற்றிய பிரக்ஞை வேண்டும். கிரேக்கத்திலிருந்து இந்தியா வரை படை எடுத்து வந்து இடையில் செத்துப்போய் நாடு திரும்ப முடியாமல் போன அலெக்ஸôண்டரின் தோல்வி வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டியது. அதே மாதிரி தெரியாத விஷயங்களிலும் புரியாத தொழில்களிலும் கவனத்தையும் காலத்தையும் தொலைத்துவிட்டு இடைக்கண் முறிதல் வாழ்க்கையில் கவனிக்கப்பட வேண்டியது. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. 

எனது எழுத்தில் இம்முறை எதிர்மறைச் சிந்தனைகளின் நெடி வீசுகிறதே என்று கவலை வேண்டாம். குண்டும் குழியுமான தோல்வியின் பாதையே இது என்று கண்டுபிடித்து அதைத் தவிர்த்துவிட்டு நீங்கள் பயணம் செய்தால்

16. கவலைப்படாதே சகோதரா! 

வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் பிறரது கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இதற்கொரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையைத் துல்லியமாக அடையாளம் கண்டு கொண்டவர்கள் மட்டுமே பிறரால் பாதிக்கப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நினைத்த வெற்றிகளைக் குவிக்க முடியும். அளவுக்கு மீறிப் பிறரது விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால் குழப்பம் வரும்; முன்னேற்றம் தடைப்படும். 

நமது தோற்றம், நாம் உடுத்தியிருக்கும் துணிகள், தலை அலங்காரம், பயன்படுத்தும் பொருள்கள், தனித் திறன்கள் இவற்றைப் பிறர் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும். அதிலும் இளைய தலைமுறைக்குச் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என்றால் தளர்ந்து போவதோ, முகமும் அகமும் வாடுவதோ சரிதானா? பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பிறர் கேலி செய்துவிட்டால் தளர்ந்து போவது இளைய தலைமுறைக்குரிய இயல்பான விஷயம். இதிலிருந்து வெளியே வாருங்கள் என்று அழைக்கிறேன். 

ஒரு புகழ் பெற்ற டி.வி. விளம்பரம் பார்த்திருப்பீர்கள். கல்லூரிச் சிறுசுகளின் கலர் கலரான அணிவகுப்பு. ஒரு இளசைச் சில இளசுகள் கிண்டலடிக்கும் விளம்பரம். ""இந்த வாட்டி நீ பர்ஸ்ட் ரேங்க் வாங்க மாட்ட போல இருக்கு'' என்று ஒருத்தி கேலி செய்ய, ""ஐ டோண்ட் கேர்'' என்று விட்டு விட்டுப் பதில் சொல்லும் ஒரு பாப்பா. ""இப்படித் தின்னுகிட்டே இருந்தா நீ குண்டாயிருவ'' என்று சொல்லிப் பலரும் சிரிப்பார்கள். அதற்கும், ""ஐ டோண்ட் கேர்'' என்பதே பதில். ""இதென்ன உன் முகத்தில'' என்று ஒரு முகப் பருவை அவள் முகத்தில் சுட்டிக் காட்டியதும், ""அம்மா'' என்று அந்தப் பெண் சிணுங்கியதும் ஒரு முகப்பரு விளம்பரம் திரையில் ஜொலிக்கும்.

இந்த விளம்பரத்தின் முக்கியக் குறிப்பு - பிறர், தங்களது விமர்சனம் நம்மை மிகவும் பாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் விமர்சனம் செய்கிறார்கள். இது உண்மை என்றால், நாம் பாதிக்கப்பட வேண்டும் என்றே பிறர் செய்யும் விமர்சனங்களால் நாம் பாதிக்கப்படக் கூடாது என்கிறேன் நான், சரியா? நம் மீது அக்கறையுடன் விமர்சிப்பவர்கள் விமர்சனத்தை மதிக்கலாம். ஆனால் எல்லோருடைய விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. இந்த அணுகுமுறை நமது வெற்றி மாளிகையின் முக்கியமான படிக்கட்டு என்று நான் கருதுகிறேன்! சரியா? 

முற்றும் துறந்து முனிவராகப் போனால்கூட முட்டாள் உலகம் அவரை விடுவதில்லை. குறை சொல்லும்... கேலி பேசும்... 

ஓர் உதாரணம் சொல்லட்டுமா? 

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி! கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசைகூட இல்லாத சுத்தமான சன்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்ரகிரியாரைச் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது... குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார். 

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலை வைத்துப் படுத்திருந்தார். ஒருத்தி, ""யாரோ மகான்'' என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தாள். மற்றொருத்தியோ, ""ஆமாம்... ஆமாம்... இவரு பெரிய சாமியாருக்கும்... தலையணை வைச்சுத் தூங்கற சுகம் மாதிரி வரப்பு மேல தலை வைச்சுத் தூங்கறான் பாரு... ஆசை பிடிச்சவன்'' என்று கடுஞ்சொல் வீசினாள். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், ""ஆஹா... நமக்கு இந்த அறிவு இது நாள்வரை இல்லையே'' என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார். சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து இறங்கிக் கீழே தலை வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, ""பார்த்தியாடி... நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரு... இப்பவாவது ஒத்துக்கோ... இவரு மகான்தானே..!'' என்றாள். அவளோ, ""அடி போடி... இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேக்குறான்... அதைப் பத்திக் கவலைப்படறான் இவனெல்லாம் ஒரு சாமியாரா?'' என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது. 

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. 

தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள். வெற்றி நிச்சயம்.

17.வெறி முதல் வெற்றி வரை! 

"டேய்... வேலை விஷயமா எம்.பி.யைப் பார்த்துட்டு வான்னு சொல்றேன். போகலயா?' அப்பா அலறுகிறார். ""போப்பா... அந்த ஆள் நூறு தடவை அலைய விடறான். செய்யறதா இருந்தா முதல் தடவையிலயே செய்யமாட்டானா?'' பொருமுகிறான் மகன். ஒரு விஷயத்திற்காக ஒருவரிடம் மூன்று, நான்கு முறை போக நேர்ந்தால் இன்றைய இளைஞர்களுக்குக் கடுப்பாக இருக்கிறது. உண்மைதானே! 

எந்த விஷயமும் எடுத்த எடுப்பிலேயே, முதல் முயற்சியிலேயே வெற்றியாகி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் குழந்தைத்தனமானது. மீண்டும் மீண்டும் முயலும் விக்ரமாதித்த முயற்சியே இளமையின் இலக்கணம். அது இல்லாத இளைஞர்கள் மீசை முளைத்த பாப்பாக்கள். தாடி மழித்த குழந்தைகள். ""நான் முயற்சி செய்தேன். வெற்றி கிடைக்கவில்லை'' என்று சொல்லாதீர்கள். வெற்றி பெறும்வரை முயற்சி செய்தீர்களா? வெற்றி பெறும் வரை ஏன் நீங்கள் முயற்சி செய்யவில்லை? என் கேள்விக்குப் பதில் சொல்லிப் பாருங்கள். 

முயற்சி போதாது. விடாமுயற்சி வேண்டும். மந்திரத்தால் மாங்காய் காய்க்காது. மாறி மாறி முயன்றால்தான் நடக்காததும் நடக்கும்... கிடைக்காததும் கிடைக்கும். எனவே முதல் முயற்சியில் வெற்றியில்லை என்று வெளியேறி விடாதீர்கள். வெற்றி கிடைக்கும்வரை முயன்றுகொண்டே இருங்கள். தமிழக வரலாற்றில் புரட்சிச் சாமியார் ஒருவர் இருந்திருக்கிறார். இராமானுஜர் என்று பெயர். அவருக்குத் திருக்கோட்டியூர் நம்பி என்பவர் ஒரு குரு. அவரிடம் "நமோ நாராயணா' என்கிற மந்திர அர்த்தத்தைப் பெற முதல் முறை போனார். ""பிறகு பார்க்கலாம்'' என்றார். ஒரு முறை... இருமுறையல்ல... பதினெட்டு முறை நடந்தார். உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் பதினெட்டு முறை படையெடுப்பீர்களா? ""ஆமாம்... இவன் பெரிய இதுவாக்கும்'' என்று அவரை அலட்சியப்படுத்துவீர்கள். ""இந்த விஷயம் இல்லைன்னா என்ன? என்னால வாழ முடியாதா? இதென்ன அவ்வளவு பெரிய விஷயமா?'' என்று இலட்சியத்தையே காலில் போட்டு மிதிப்பீர்கள். பதினெட்டு முறை படையெடுக்கும் ஆர்வம், ஆவேசம், வெறி, தீர்மானம் உங்களிடம் உண்டா? உண்டு என்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். 

அந்தத் திருக்கோட்டியூர் நம்பி மனசைக் கரைக்கச் சாகும்வரை உண்ணுவதில்லை என்று சாதனை செய்தார் இராமானுஜர். அவர் இறந்துவிடுவாரோ என்று அஞ்சி குருவிடம் பலர் போய் தகவல் தந்தனர். ""செத்து மேலே போனால் நாராயணனே மந்திரம் சொல்வார். தப்பி உயிர்பிழைத்தால் நான் சொல்லுவேன்'' என்று உறுதி காத்தார் குருநாதர். முடிவில் மனமிரங்கி உபதேசித்தார். இராமானுஜர் வெற்றி பெற்றார். ஒன்றும் வேண்டாம் என்று உதறிவிட்டுப் போன ஒரு சாமியாருக்குள் இவ்வளவு பிடிவாதம், உறுதி, வெறி இருக்கிறதே... எல்லாம் வேண்டும் என்று ஆசைப்படும் உங்களுக்குள் உறுதி, வெறி ஏன் இல்லை? இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் ஜெயிப்பது நிஜம். ஒன்றை அடையும் வரை ஓயாதீர்கள். பின்வாங்காதீர்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள். "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்'... யார்? "திண்ணியர்' என்கிறார் திருவள்ளுவர். நீங்கள் திண்ணியரா?

"என்ன சார்... ஒரே சாமியார் சமாச்சாரமாகச் சொல்றீங்களே... வேறு யாரும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா?' என்னைக் கேட்கச் சிலர் நினைப்பது புரிகிறது. சக்ஸஸ்புல் சாமியார்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய வெற்றி ரகசியங்கள் வேண்டுமளவு புதைந்திருக்கும். புரிகிறதா? இதைப் புரிந்து கொண்டதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்! 

சரி... உங்களுக்காக ஒரு இன்னொருவர் - இல்லத்தார் - வெற்றிக் கதையைச் சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள். 

வியாபாரத்தை 21 வயதில் தொடங்கினான் அந்த இளைஞன். தோற்றுப்போனான். மாகாண சட்டசபைக்குப் போட்டியிட்டான். மண்ணைக் கவ்வினான். தொழிலிலும் தோல்வி. காதலியும் மறைந்தாள்... அவன் அசரவேயில்லை. நரம்புத் தளர்ச்சி அவனுள் நாட்டியம் நடத்தியது. போராடி மீண்டு மறுபடியும் தேர்தலில் குதித்தான். தோல்விதான் அவனைத் தழுவியது. முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி. பின்னர் மக்கள் மன்றத் தேர்தலிலும் தோல்வி. நாற்பத்து ஏழாவது வயதில் துணை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி மேல் தோல்வி. ஆனால் 52-வது வயதில் ஜனாதிபதித் தேர்தலில் குதித்தான். வெற்றி அவனை முத்தமிட்டது. அதன் பிறகு அவன் புகழ் உலகெங்கும் பரவியது. அவன் தொட்டது 

துலங்கியது. அவனது பெயரை உலகில் உள்ள எல்லா நாடுகளின் வரலாற்று ஆசிரியர்களும் உச்சரித்தனர். உலக வரலாற்றிலேயே அவனுக்கென்று ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டது. அவன் பெயர்... மன்னிக்கவும்... அந்த மாமனிதர் பெயர் ஆப்ரஹாம் லிங்கன். அவனுள் கனிந்த அக்கினி - ஆங்கிலத்தில் சொன்னால் அஎஞசவ - உங்களுக்குள் இருக்கிறது. தப்பில்லை. இந்த நியாயமான வெறி கனிந்தால் வெற்றி நிச்சயம்.

18. எது வெற்றி? 

வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது என்பது வேறு. இதற்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பலர் உணர்வதில்லை. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொண்டவர்கள் பலர். இன்றைக்கு நம்முடைய அரசியல்வாதிகள் பலர், பிறரைத் தோற்கடித்த விஷயத்தை - பிறரது தோல்வியை - தங்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

இப்படிச் சொல்லுகிறேன். நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு. இரண்டும் ஒன்றாகிவிட முடியுமா? எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக நீங்கள் முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை, இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை! ஓர் உதாரணம் சொல்லுகிறேன். 

பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண், தன் முப்பத்து ஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். ""அப்பா... ஒரு குட்டிக் குரங்கு... தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு... அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு... காட்டாத்து வெள்ளம்... திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது... அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது... பயங்கர வெள்ளம் கீழே... அது எப்படித் தப்பிக்கும், சொல்லு?'' என்று அப்பாவை அசர வைத்தாள் மகள். 

அரை மணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ""அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும்... தெரியலை, நீயே சொல்லு'' என்றார் மகளிடம். ""ஆங்... இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை... அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?'' என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அந்தச் சின்னப் பெண். 

அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது. 

பிறரை வாய் மூடச் செய்வது... செயலிழக்கச் செய்வது... தோற்றுப் போகச் செய்வது... ஆளவிடாமல் தடுப்பது... முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது... இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறார்கள். 

இந்தத் தவறுதலான எண்ணத்தில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல... நமது வெற்றியே நமது குறிக்கோள்... என்கிற தெளிவு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார். பிறரைத் தோற்கடிப்பது நமது நோக்கம் அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் இப்போது சொல்கிறேன். ஒரு குழந்தையுடன் கடைவீதிக்குப் போகிறாள் அம்மா. அங்கு ஏதோ ஒரு தின்பண்டம் வேண்டும் என்று குழந்தை அழுதது. வாங்கித் தராமல் அம்மா பிடிவாதமாக வந்துவிட்டாள். குழந்தை முகம் வாடிவிட்டது. உடனே அம்மாவுக்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் கடைவீதிக்குப் போய் குழந்தை கேட்ட தின்பண்டத்தை வாங்கி வந்து குழந்தைக்குக் கொடுக்கிறாள். அப்போது சில குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்ளும். 

சில குழந்தைகளோ வம்பு செய்யும். தூக்கி எறியும். அது கேட்டபோது கிடைக்காததால், கிடைக்கிறபோது வேண்டியதில்லை என்று புறக்கணிக்கும். அம்மா கெஞ்சுவாள். தனக்குத் தராமல் துன்புறுத்திய தாயைப் பழிவாங்கும் நோக்கில் தின்னாமல் துன்புறுத்தும் பிள்ளைகளும் உண்டு. நீங்கள் எந்த வகை யோசித்ததுண்டா? 

கேட்டது கிடைப்பது வெற்றி. கொஞ்சம் முன் பின்னாகக் கிடைத்தாலும் வெற்றி வெற்றிதான். ஆனால் அந்த வெற்றியை அனுபவிக்க முடியாதபடி சிறுபிள்ளைத்தனமான அகங்காரத்தால் பிறரைத் தோற்கடிப்பவர் உண்டு. 

வளர்ந்த பிறகும் இந்தக் குணம் பலரை விடுவதில்லை. கணவனிடம் புடவை கேட்பார்கள்... முதலில் மறுத்துவிட்டுப் பிறகு மனம் மாறிக் கணவன் வாங்கிக் கொடுத்தால் கட்டமாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக மறுத்துவிடுவார்கள். அவனை மனம் நோகச் செய்து தோற்கடிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அடைவார்கள். நாம் நோக்கத்தில் தெளிவாக இருந்தால் இந்தத் தவறு நடக்காது. நமது வெற்றிதான் முக்கியம். பிறரைத் தோற்கடிப்பதில் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது? இன்று நமது அரசியல்வாதிகள் பிறரைத் தோற்கடிக்கவே, தேர்தல், பாராளுமன்றம், சட்டமன்றம் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் பகை வளர்கிறது. தாங்கள் வெற்றி பெறுவதற்காகப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சியுறும். பிறரைத் தோற்கடிப்பது வெற்றி அல்ல! நாம் வெற்றி பெறுவதே வெற்றி என்கிற துல்லியமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

19. பிடிவாதம் வெற்றியின் அடிநாதம்! 

குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகளோ பிடிவாதம் பிடிக்கும். எனக்கென்னவோ பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை ரொம்பவும் பிடிக்கும். ஏன்? வெற்றி என்பது ஒரு கீதம். இந்தப் பிடிவாதம், வெற்றியின் அடிநாதம். பிடிவாதம் ஒரு தவறான குணம் அல்ல. எதற்காகப் பிடிவாதம் என்பதுதான் முக்கியமான விஷயம். 

இந்தியாவில் பிரபலமான துருவன் கதை தெரியுமா? அப்பாவின் மடியில் உட்காரப் போனான் குழந்தை. பிடித்துத் தள்ளினாள் சித்தி. அழுது கொண்டே அம்மாவிடம் போனான் துருவன். "கடவுளிடம் போய் முறையிடு' என்று கடவுளிடம் கை கழுவினாள் கையாலாகாத அம்மா. பிடி பிடி என்று கடவுளையே பிடிக்கிற பிடிவாதம் அந்தப் பிள்ளைக்கு இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிற குழந்தையின் கன்னத்தைத் தன் சங்கினால் தட்டி எழுப்பினான் திருமால் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். அப்பாவின் மடியில் இடம் கேட்ட குழந்தை ஆண்டவன் மடியில் உட்கார்ந்து கொண்டான் என்கிறது கதை. இந்தக் கதையில் திருமாலின் கருணையைச் சிலாகிப்பது சமயச் சொற்பொழிவு. துருவனுடைய பிடிவாதத்தைக் கொண்டாடுவது சுய முன்னேற்றச் சிந்தனை. இரண்டையும் இரண்டு கண்களாகப் பார்ப்பது எனது லட்சியம். 

பிரகலாதன் சரித்திரம் தெரியுமோ? ஆசிரியர் கண்டித்தும், அப்பா தண்டித்தும், அம்மாவே விஷம் கொடுத்தும், மலையில் இருந்து வீசியும் உருட்டியும் மிரட்டியும் பிரகலாதன் தன் கருத்தில் இருந்து இம்மியும் மாறவில்லை. இந்தப் பிரகலாதப் பிடிவாதம் உங்களுக்கு உண்டா? பிரகாசமான எதிர்காலம் உண்டு. 
மழைக்காகப் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. எல்லோரும் வெறும் கையை வீசிக்கொண்டு வந்தனர். பிஞ்சுப் பிள்ளை மட்டும் கையில் குடையுடன் வந்தது. பிரார்த்தனை முடிந்ததும் மழை வரும் என்கிற அந்தப் பிஞ்சு மனத்தில் முளைவிட்ட நம்பிக்கை, கடவுளையே யோசிக்க வைத்தது. அவநம்பிக்கையுள்ள ஆயிரம் பேரைத் தண்டிப்பதை விட நம்பிக்கை உடைய குழந்தைக்காக மழை பெய்விப்பது தன் கடமை என்று கடவுள் புரிந்து கொண்டார். 

குழந்தைப் பருவம் என்பது வெறும் அசட்டுத்தனத்தின் அரங்கேற்ற மண்டபம் அல்ல. அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் ஆரம்பப் பருவம்... அது உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு வெற்றி நிச்சயம். "பெர்சீவியரென்ஸ்' என்ற ஆங்கில வார்த்தைக்கு எலும்பும் சதையுமான மொழிபெயர்ப்பாக நீங்கள் இருங்கள். வெற்றி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வரும். ஒரு வேளை கதவு தாளிடப்பட்டிருந்தால் தள்ளிக் கொண்டு வந்து வெற்றி உங்களைத் தழுவிக் கொள்ளும். 

அவள் ஒரு எட்டு வயதுக் குழந்தை. அவளுக்கு ஒரு சின்னத் தம்பி. தம்பிக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்பது மட்டுமே அவளுக்குப் புரிந்து கொள்ளும் வயது. என்ன நோய்? எப்படிச் சரியாகும் என்பதெல்லாம் புரியமுடியாத பருவம். திடீரென்று அவள் குடியிருந்த வீட்டை விட்டு அம்மாவும் அப்பாவும் மிகச் சிறிய வீட்டுக்கு மாறினார்கள். தம்பியின் மருத்துவச் செலவு, மருந்துச் செலவு, உணவுச் செலவு இவற்றைச் சரிக்கட்ட பெற்றோர் வீடு மாற வேண்டி வந்தது. அந்தச் சின்னப் பையனைத் தக்க வைக்க ஆயிரம் ஆயிரமாய்க் கரைந்துகொண்டிருந்தது. இந்தக் கஷ்டம் அந்த எட்டு வயதுக் குழந்தைக்குத் தெரிய வேண்டாம் என்று பெற்றோர் நினைத்தனர். 

ஒரு நாள் பெற்றோர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த போது, ""ஏதாவது அதிசயம் அல்லது அற்புதம்தான் இந்தச் சின்னப் பையனைக் காப்பாற்ற வேண்டும்'' என்று அழுதனர். அடுத்த விநாடி அந்தச் சிறுமி தன் நெடுநாள் சேமிப்பு உண்டியலைக் கவிழ்த்தாள். ஒரு டாலர் ஏழு சென்ட் வரை சில்லறைக் காசு கிடைத்தது. அவசரமாக அதை அள்ளிக் கொண்டு வீட்டுப் பின் வாசல் வழியாக ஓடினாள். அடுத்த தெருவில் இருந்த மருந்துக் கடைக்குப் போய்ச் சில்லறையை மேசையில் கொட்டி, ""அற்புதம் கொடுங்கள்... அல்லது அதிசயம் கொடுங்கள்'' என்றாள். 

மருந்துக் கடைக்காரர் புரியாமல் விழித்தார். கடையில் ஏதோ வாங்க வந்திருந்த கனவான் ஒருவர் ஆச்சரியமாய் அந்தச் சிறுமியைக் கவனித்தார். முகம் வாடிப் போனவளைத் தேற்றி விவரம் கேட்டறிந்தார். உலகப் புகழ் பெற்ற நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சார்ட்லன் ஆர்ம்ஸ்ட்ராங் அவர். தனது காரில் அந்தச் சிறுமியை ஏற்றிக் கொண்டு சிறுமியின் வீட்டுக்கு வந்தார். சிறுமியின் தம்பிக்கு நிகழ்த்த வேண்டிய அறுவைச் சிகிச்சையை உணர்ந்தார். அந்தச் சிறுமியிடம் ஒரு டாலர் ஒரு சென்ட் பெற்றுக் கொண்டு அந்த அறுவைச் சிகிச்சையைத் தமது மருத்துவ மனையில் இலவசமாக நடத்தினார். நம்ப முடிகிறதா? 

பிள்ளைப் பருவத்தின் பிடிவாதத்தால் ஓர் அதிசயம் நடந்தேவிட்டது. அற்புதம் நிகழ்ந்தேவிட்டது. பிடிக்க வேண்டிய விஷயத்தில் பிடிவாதமாக இருங்கள். வெற்றி நிச்சயம்!

20. கறுப்பு நண்பர்களே, காலரை உயர்த்துங்கள்! 

"ஆறே வாரத்தில் சிகப்பழகு' என்று ஒரு விளம்பரம் தொலைக்காட்சியில் மின்னுகிறது. இது காதில் பூ சுற்றுகிற வேலையானால்கூட மன்னிக்கலாம். இளைய மனசுகளில் தார் பூசுகிற அசிங்கம் இது. 

"வெள்ளைக்காரன் ஒசத்தி' என்கிற பழைய இந்தியப் பிச்சைக்காரத்தனத்தின் மிச்சசொச்சம் இது. சிவப்பழகு ஒரு முக்கிய உயர்ந்த விஷயம் என்று மூளைச்சலவை செய்கிற எந்த விஷயத்தையும் விரட்டி அடியுங்கள். காரணம், "கறுப்பு தாழ்ந்ததல்ல' என்று இந்தியன் உணர வேண்டும். "கறுப்பாக இருக்கிறோம். இது தாழ்வானது' என்கிற அபிப்ராயத்தை மறைவாக உண்டுபண்ணும் இந்தக் கொடிய விளம்பரம் இளைஞர்களைப் பலவீனப்படுத்தும். கறுப்பு நிறம் வெட்கப்படவேண்டிய விஷயம் அல்ல. 

காட்டிலும் மேட்டிலும் கழனிகளிலும் பாடுபடும் உழைக்கும் வர்க்கத்தின் தோல் கறுத்துப் போவது உழைப்பைப் பாராட்டிச் சூரியன் கொடுத்த பட்டமளிப்பு; அல்லது பாரம்பரியத்தின் பரிசளிப்பு. அது பழிக்கப்படும் என்றால், சூட்டிலும் கோட்டிலும் ஒளிந்து கொள்ளும் வெள்ளை கொண்டாடப்படும் என்றால் அதைச் சகித்துக் கொள்ளாதீர்கள். 

கறுப்பாக இருப்பது ஒரு பாவமல்ல... பழியல்ல... படுபாதகமான இழிவல்ல. பாரத கௌரவம். பாரம்பரியப் பண்பு. 

வெள்ளைப் பணத்தைவிடக் கறுப்புப் பணத்தைக் கொஞ்சி மகிழும் இந்தியப் பொருளாதாரம் கறுப்பு நிறத்தை மட்டும் தாழ்வாக நினைப்பது தவறல்லவா? சலவைக்கல்லில் கிரானைட்டுகளில் ஜெட் பிளாக்தான் விலை அதிகம். சிலைகளில்கூடக் கறுப்புக் கல்லில்தான் கலை அதிகம். 
இந்தியத் தலைமகன் ராமன் கறுப்பு. கிருஷ்ணன் கறுப்பு. துரியோதனன் கனவிலும் நனவிலும் காமத்தை உண்டு பண்ணிய துருபதையோ கவர்ச்சிகரமான கறுப்பு. கிளியோபாட்ரா கறுப்புத்தானாம். அவ்வளவு ஏன்? "கன்னடத்துப் பைங்கிளி' என்று கலையுலகைக் கலக்கிய நடிகையும் கறுப்பு. அப்புறம் என்ன கறுப்பின் மீது வெறுப்பு. 

கறுப்பு இந்தியனின் சராசரி நிறம். நாம் ஒரு சராசரி இந்திய நிறத்தில் இருக்கும்போது வெட்கப்பட என்ன இருக்கிறது. பெருமையல்லவா அடைய வேண்டும். கறுப்பு நண்பர்களே... காலரை உயர்த்துங்கள். கண்களில் ஒளி உமிழுங்கள். பகல் மட்டும் உலகிற்குப் போதாது. இருட்டும்தான் உலகை வாழ்விக்கிறது. வெள்ளை பகல் என்றால் கறுப்பு இருட்டல்லவா? கடவுள் குடியிருக்கும் கருவறையே இருட்டல்லவா? கம்பீரமாக நிமிர்ந்து உட்காருங்கள். நிறபேதம் உலகெங்கும் பரவிய நீச நோய். 

அமெரிக்காவில் ஒரு பள்ளிக்கூட வாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பலூன் வியாபாரி வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிட்டிருந்தான். தன் வியாபாரம் குறையும்போதெல்லாம் கொத்துக் கொத்தாக பலூன்களைக் கட்டி இன்னும் உயரமாகப் பறக்கவிடுவான். வியாபார வித்தை இது. குழந்தைகள் குதூகலித்துக்கொண்டு இன்னும் கூட்டம் கூட்டமாக அவனை நோக்கி ஓடிவந்தன. வியாபாரம் பிரமாதமாக நடந்தது. 

அவனது வண்டியில் பச்சை, நீலம், மஞ்சள், கறுப்பு என்று பலவித நிறங்களில் பலூன்கள் குதித்துக் குதித்து ஆடிக் கொண்டிருந்தன. குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கின. ஆனால் கறுப்பு பலூனை மட்டும் எந்தக் குழந்தையும் விரும்பிக் கேட்கவே இல்லை. அது சோகமாய் வண்டியில் குதித்துக் கொண்டிருந்தது. ஒரு குழந்தை பலூன் வியாபாரியைப் பார்த்து, ""உயரத்தில் பறக்கும் பச்சை, நீலம், மஞ்சள் பலூன் மாதிரி இந்தக் கறுப்பு பலூனும் பறக்குமா? அல்லது கறுப்பு உயரத்தில் பறக்க முடியாதா?'' என்று சோகமாய்க் கேட்டது. 

பலூன் வியாபாரி சிரித்துக் கொண்டே, ""கறுப்பாக இருப்பது உயரப் பறக்க ஒரு தடையே அல்ல. மற்ற வண்ண பலூன்கள் மாதிரியே கறுப்பு பலூனும் உயரத்தில் பறக்கும். உயரே போக நிறம் ஒரு தடையே அல்ல... உள்ளே இருக்கும் சரக்குதான் முக்கியம்'' என்றான்.

உள்ளே இருக்கும் காற்றுதான் உயரே பறக்க மூல காரணம். நிறமா காரணம்? 

அந்தக் குழந்தை, ""அப்படியானால் அந்தக் கறுப்பு பலூனைத் தாருங்கள்'' என்று மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டது. அந்தக் குழந்தைதான் அமெரிக்காவின் நிறவெறியை உலுக்கி அசைத்த மார்ட்டின் லூதர் கிங். 

இந்தியர்களின் கறுப்பு நிறத்தைக் கேலி செய்து ஒரு வெள்ளைக்காரர் பேசியபோது டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் என்ன தெரியுமா? 
""கடவுள் கேக் செய்தார். அவசர அவசரமாக வெந்துவிட்டதா, வெந்துவிட்டதா என்று திறந்து திறந்து எடுத்த கேக்குகள் வெள்ளை வெள்ளையாக வந்தன. ஆனால் அவை அரைவேக்காடுகள். கொஞ்சம் முறுகிய பிறகு எடுத்த கேக்குகள் கொஞ்சம் கறுப்பாக இருந்தன. ஆனால் அவை வெந்து கமகமவென்று பக்குவமாக இருந்தன. நாங்கள் கடவுள் படைப்பில் கறுப்புக் கேக்குகள். ஆனால் பக்குவமாக இருக்கிறோம். வெள்ளைக் கேக்குகள்தான் அரைவேக்காடுகள்'' என்றார். 

தாழ்வு மனப்பான்மையைத் தள்ளி வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.

21. விரல்களா, மோதிரங்களா எது முக்கியம்? 

"உங்களுக்கு இன்னும் கலைமாமணி விருது கிடைக்கவில்லையா?' என்று சிலர் கேட்கிறார்கள். இன்னும் சிலரோ குரூரமாக, "ஒரு கலைமாமணிகூட வாங்கலைன்னா எப்படி? உங்க பாப்புலாரிட்டியை வளர்த்துக்குங்க சார்' என்று யோசனை சொல்வார்கள். நான் லேசாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொள்வேன். 
என் திறமை என்பது விரல்கள் போல. அதற்கான அங்கீகாரம் விரல்களில் மின்னும் மோதிரம் போல. எனக்கு வேலை செய்ய விரல்கள்தான் வேண்டுமே ஒழிய விரல்களில் மின்னும் மோதிரங்கள் அவசியமில்லை. நான் விரல்களை விரும்புகிறேன். ஆனால் மோதிரங்களை வெறுப்பதில்லை. 

இதை எப்படி எல்லோருக்கும் புரியவைப்பது? 

இன்றைக்குப் பட்டங்கள், பரிசுகள் என்கிற மோதிரங்களை வைத்திருக்கும் சிலருக்கு... பாவம், விரல்கள் இல்லை. இன்னும் சிலருக்கோ அவர்களது குழைந்து போன விரல்களில் மோதிரங்கள் அவமானத்துடன் அசிங்கப்படுகின்றன. 

ஒரு முக்கியமான விளக்கம். பட்டங்கள் பெற்ற எல்லோரையும் காயப்படுத்தும் சிறுமையுடன் சொல்லவில்லை. பலர் தகுதியானவர்கள். சிலர் பட்டங்களை விடவும் பல மடங்கு மேலானவர்கள். அவர்களுக்கு வாய்த்த விரல்கள் மோதிரங்களைவிட அழகானவை. வெகு சிலரோ பட்டங்களுக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்கள்... தன் அளவு இல்லாத மோதிரங்களை நூல் சுற்றி மாட்டிக் கொள்ளுகிற மாதிரி பலரது கால் சுற்றிப் பட்டம் மாட்டிக் கொள்கிறவர்கள். இருக்கிற மோதிரத்திற்கேற்ப விரல்களைத் தரித்துக் கொள்ளும் இவர்களைப்போல் இருக்க வேண்டுமா என்ன? 

பிறரது அங்கீகாரத்திற்கு ஏங்கும் ஒவ்வொரு திறமைசாலிக்கும் என் ஆலோசனை இதுதான். விரல்களை நேர்த்தியாக வைத்திருங்கள். மோதிரங்களுக்கு ஏங்காதீர்கள். நம்மைப் புரிந்து கொள்வது, அங்கீகரிப்பது, பாராட்டுவது, பின்பற்றுவது இவையெல்லாம் சமூகத்தின் பொறுப்பு. அதை ஒரு போதும் எதிர்பார்க்காதீர்கள். ஆனால் அங்கீகாரம் கிடைக்கும்போது அதை எதிர்க்காதீர்கள். இந்தப் பட்டத்தைவிட, பாராட்டைவிட நான் பெரியவன் என்று உளறாதீர்கள். தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் வேறுபாடு தெரியாமல் தாறுமாறாகப் புலம்பாதீர்கள். 

இன்றைக்குச் சிலர் ஒரு புது சுடிதார் போட்டால் ஒரு இருபது பேராவது தன்னைப் பார்க்க வேண்டும், பத்துப் பேராவது தன்னைப் பாராட்ட வேண்டும் என்று பரபரக்கிறார்கள். "மச்சி... இந்த டீ சர்ட்ல நீ அஜீத் மாதிரி அசத்தற...' என்கிற நண்பர் படையின் பாராட்டைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு மாதிரி எதிர்பார்க்கிறார்கள். இது சரியா? பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அங்கீகரிக்காத போது உங்கள் நிலை என்ன? தோல்வியா? தோற்காதீர்கள். கலைஞர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள், இப்படிப் பல்துறையில் வளரும் இளைய தலைமுறையினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய உங்கள் அங்கீகாரமே உங்கள் அஸ்திவாரம். பிறரது அங்கீகாரம் வெறும் அலங்காரமே.

ஒருகாலத்தில் என்னைப் பத்துப் பேருக்குத் தெரியும். பிறகு ஆயிரம் பேருக்குத் தெரியும். இப்போது பல்லாயிரம் பேருக்குத் தெரியும். ஆனால் அன்றும், இன்றும், என்றும் நான் - அதே நான்தான். அங்கீகாரத்தின் பரப்பளவு கூடியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட விஷயம் அன்றும் இன்றும் என்றும் ஒன்றே! எனவே உங்களைப் பிறர் அங்கீகரிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கிடைக்காதபோது ஏமாந்து வருந்தாதீர்கள். இந்த எதிர்பார்ப்பு உங்கள் திறமையை வாட வைக்கும். 

மகாகவி பாரதியை அவரது சமகாலத்தில் மகாகவியாக யாரும் அங்கீகரிக்கவில்லை. "பிழைக்கத் தெரியாதவன்' என்பதே சமூகம் அவர் மீது வைத்திருந்த அபிப்ராயம். ஆனால், பாரதி தன் மீது வைத்திருந்த அபிப்ராயம் முற்றிலும் வேறு. 

"புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசை என்னால் கழிந்தது' என்பதே பாரதிக்கு, பாரதி மீதான அபிப்ராயம். பிறரது அங்கீகாரங்களைவிட அவரது அங்கீகாரங்களே, அபிப்ராயங்களே ஜெயித்தன. கடும் தமிழில் கொடும் தொனியில் இலக்கணச் செய்யுள் பாடிய தமிழ்ப் பண்டிதர்கள் பலர் பாரதியின் பாடல்கள் பாமரத்தனமானவை என்று எள்ளியபோது, "சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை' என்று பாரதி தன் பாடல்களைப் பற்றிப் புரிந்துவைத்திருந்தார். பிறர் பாராட்ட வேண்டும் என்று ஒரு போதும் எதிர்பார்க்காதீர்கள். ஆனால் பாராட்டும்போது எதிர்க்காதீர்கள். மாலைகளை எதிர்பார்த்துக் குனிந்து, குழைந்து, வளைந்து, நெளிந்து, தலை தாழ்த்தி நிற்க வேண்டாம். ஆனால் மாலைகள் வரும்போது தலை குனிந்து வாங்கிக்கொள்ள மறுக்க வேண்டாம். நாம் யார் என்பது நமக்குத் தெரியும். பிறருக்கு எப்படித் தெரியும்? நம்முள் கனிந்துள்ள திறனைப் பிறர் உள்ளது உள்ளபடி ஒரு போதும் அறிந்திருக்க முடியாது. எனவே பிறரால் நம்மை ஒரு போதும் சரியாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் அபிப்ராயங்கள் நம்மைப் பற்றிக் குறைவாக இருந்தால் அது குறித்து வருந்த வேண்டாம். நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ் பெற்ற வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கையைச் சொல்லட்டுமா? அவரது குடும்பம் கூட்டுக் குடும்பம். ஐம்பது அல்லது அறுபது பேர் கொண்ட பெரும் கூட்டம் அது. அதில் பிள்ளைகள் பிறந்தநாளைக் கொண்டாடுகிற முறையே புதுமையானது. ஒவ்வொரு பிள்ளை பெயரிலும் ஒரு நோட்டுப் புத்தகம் இருக்கும். அதில் அந்தக் குடும்பத்துப் பெரியவர்கள் பிள்ளைகளைப் பற்றித் தங்கள் பாராட்டை, விமர்சனத்தை, கருத்தை எழுதுவது வழக்கம். 

ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் அன்று அவன் பாட்டி எழுதிய வரிகள் என்ன தெரியுமா? 

"ரவியைப் பற்றிச் சொல்ல உருப்படியாக எதுவும் இல்லை. அவன் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது. ஒரு டாக்டராகவோ, என்ஜினியராகவோ, பெரிய ஆளாக அவன் வருவான் என்று தோன்றவில்லை. மற்ற பிள்ளைகள் மாதிரி அவன் புத்திசாலியாக இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது' என்று பாட்டி எழுதியிருந்தார். மற்ற பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பதே இன்று தெரியவில்லை. உருப்பட மாட்டான் என்று பாட்டி பதிவு செய்தவர்தான் உலகின் புகழ்பெற்ற உருப்படியானார். பிறரது அங்கீகாரங்கள் பெரிய விஷயமல்ல... உங்களைப் பற்றிய உங்களது அபிப்ராயங்களே முக்கியம். புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

22. எதிர்ப்பிலேயே வாழுங்கள்! 

ஒரு கப்பல் கடலுக்குள் போவதில் எவ்வளவு கஷ்டங்கள் காத்திருக்கின்றன. புயல் அடிக்கலாம். பாறையில் மோதிக் கப்பல் டைட்டானிக் மாதிரி உடைந்து போகலாம். திமிங்கிலங்கள், சுறா மீன்கள் கப்பலைக் கவிழ்க்கலாம். குடிநீர், உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம். திசை தடுமாறித் திண்டாடி வாடலாம். இப்படி எண்ணற்ற வாய்ப்புகள் - ஆபத்துகள் கடலில் காத்திருக்கின்றன. எப்போது அதற்கு ஆபத்து இல்லை? கம்பீரமாகக் கரையில் நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டது என்றால் அழிவில்லை; ஆபத்து இல்லை. 

ஆனால் கரையில் பாதுகாப்பாக நிற்பதற்காகவா கப்பல் கட்டப்பட்டது! கடலின் ஆபத்துகளைக் கபளீகரம் செய்து கொண்டு கரை மாறிக் கரை சேர்ந்து கடலில் பயணிக்கத்தான் கப்பலே ஒழிய, கரையில் பாதுகாப்பாக நிற்க கோடி கோடியாகக் கொட்டி யாராவது கப்பல் கட்டுவார்களா? ஆகாய விமானம் ஆபத்து இல்லாமல் இருப்பது எங்கே? தரையில்தான். என்ஜின் கோளாறு வராது. தீப்பிடிக்காது. விண்நோக்கிப் பாயும்போது புவி ஈர்ப்புச் சக்தியால் விழுந்து நொறுங்காது. கடத்தப்படும் வாய்ப்புக் கிடையாது. இன்னொரு விமானத்துடன் மோதாது. தரையிறங்கும்போது அதன் சக்கரங்களை வெளித்தள்ளுமே... அப்படித் தள்ள முடியாமல் போனால் தரையில் மோதித் தீப்பிடிக்குமே! அந்த ஆபத்து துளிக்கூட இல்லை. எனவே விமானத்தை விண்ணிலே செலுத்தாமல் மண்ணிலேயே வைத்திருக்கலாமா?  தரையில் இருக்கும் விமானமும் கரையில் இருக்கும் கப்பலும் பாதுகாப்பானவைதான். ஆனால் அவை அதற்காக உருவாக்கப்படவில்லையே. ஆபத்துகளை எதிர்கொண்டு சவால்களைச் சந்தித்துச் சாதித்துக் காட்டவே கோடி கோடியாகக் கொட்டி அவற்றை உருவாக்கினோம். பய உணர்ச்சியும் பாதுகாப்பு உணர்ச்சியும் தேவைதான். ஆனால் அது மானுட முன்னேற்றத்தை மழுங்கடித்துவிடக் கூடாது. தடைகளை விலக்கி ஜெயிக்கத்தான் மனிதப் பிறவி நமக்குத் தரப்பட்டுள்ளது. அதுவே மானுட மகத்துவம். தடைகள், சவால்கள்தான் உங்களை உங்களுக்கும், உங்களை உலகுக்கும் அடையாளம் காட்டும். எதிர்ப்பற்ற வாழ்க்கைக்கு ஒரு போதும் ஏங்காதீர்கள். விடுதலை இந்தியாவில் பிரதமராய்ச் சிரித்து ஜொலித்த ராஜீவ் காந்தியைக்கூட வரலாறு என்றைக்காவது விழுங்கி விடும். அடிமை இந்தியாவில் அணுஅணுவாய்ப் போராடி, அங்குலம் அங்குலமாக நாட்டை மீட்ட மகாத்மா காந்தியை வரலாறு ஒரு போதும் விழுங்காது. விழுங்க நினைத்தால் வரலாற்றை உலகம் விழுங்கிவிடும். 

ராஜகுமாரர்களின் மணி மகுடங்களைவிட தேவகுமாரனான ஏசுவின் முள்மகுடம் உலகப் புகழ் பெற்றது. அவ்வளவு ஏன்? இன்று ஏசுவின் பெயரால் போப்பாண்டவர் கழுத்தில் சுமக்கும் தங்கச் சிலுவையைவிட ஏசுபிரான் சுமந்த மரச்சிலுவையே மகத்துவம் மிக்கது. காரணம், தங்கச் சிலுவை, ஏற்பாளர்களின் பரிசளிப்பு. மரச்சிலுவை எதிர்ப்பாளர்களின் "அன்பளிப்பு'! 

நண்பர்கள் நம்மைச் செதுக்குவதைவிடப் பகைவர்களே நம்மைச் செதுக்குகிறார்கள். சாதகமான விஷயங்கள் நம்மைச் சரி செய்வதைவிடப் பாதகமான விஷயங்களே நம்மைப் பாதுகாக்கின்றன. எனவே தடைகள், தடங்கல்கள், சவால்கள், இடையூறுகள், எதிர்ப்புகள், ஆபத்துகள் குறித்துக் கலங்க வேண்டாம். அவற்றைக் கொண்டாடுங்கள். குதூகலியுங்கள். குதித்து மகிழுங்கள்!

தேர்தலில் நின்று மக்களிடம் தீர்ப்புக் கேட்பது ஓர் அரசியல்வாதிக்கு ஆபத்தான வேலைதான். சிறந்த அரசியல்வாதி அதற்குத் தயங்கலாமா? ஜெயித்தாலும் சரி... தோற்றாலும் சரி... மக்கள் முன்பு தம்மைத் தயங்காது நிறுத்தி அக்னிப் பரிட்சைக்குத் தயாரான அரசியல்வாதிகளே அதிக உயரம் பறந்தார்கள். பாதுகாப்பான மேல்சபை உறுப்பினராக மட்டுமே இருக்க விரும்பிய தலைவர்களை மக்கள் முதல்வராக்கவில்லை. பிரதமராக்கவில்லை. இருக்க வேண்டிய இடத்தில் மட்டுமே இருக்க வைத்தார்கள். சவால்களை எதிர்கொள்ளும் மனோநிலையே வெற்றிக்கான வீரிய விதை. 

ஒன்று சொல்கிறேன்... ஆபத்துகளைப் பற்றிய கற்பனைகளை விட்டொழியுங்கள். அவை ஆபத்துகளைவிட ஆபத்தானவை. அளவற்ற பாதுகாப்பு, பய உணர்ச்சியிலிருந்து வெளியில் வாருங்கள். அபிமன்யு போல வாழப் பழகுங்கள். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி தனது வீர உரையில், ""எனது ராணுவத்தில் சேர்ந்துள்ள உங்களுக்குச் சம்பளம் கண்டிப்பாக உண்டு. அந்தச் சம்பளம் மரணம்'' என்றார். அதனால்தான் அவர் மரணமே அடையவில்லை.

ஒரு மகத்துவம் மிக்க கவியாக வாழ்வதில் பாரதிக்குப் பல சிக்கல்கள் இருந்தன. பாதுகாப்பு உணர்ச்சியால் அவர் சில சமரசங்கள் செய்து கொண்டிருந்தால் பணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழ்நாட்டின் எத்தனையோ "சுப்புணி'களில் ஒருவனாகச் செத்திருப்பான் அந்தச் சுப்பிரமணியன். ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆவேசம்... அந்த ஆனந்தப் பரவசம்... அதுவே அவனை மகாகவியாக்கியது. 

தந்தை பெரியார் ஒரு தன்னிகரற்ற தலைவர். கடும் எதிர்ப்புகளுக்குக் கடுகளவும் கவலைப்படாது தன் கருத்துகளை மக்கள் முன் வைத்தவர். ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது ஒரு செருப்பு அவர் மீது வீசப்பட்டது. அவர் தயங்கினாரா? ""ஒரு செருப்பை வீசினா எப்படி? இன்னொன்றையும் வீசு... ஜோடியா வைச்சுக்கலாம். உனக்கும் பிரயோஜனம் இல்லாம, எனக்கும் பிரயோஜனம் இல்லாம ஒண்ணை வீசிறியே?'' என்றார். அவரல்லவா துணிவுடையவர். அந்தத் துணிவே அவர் வெற்றியின் ரகசியம். எதிர்ப்பிலேயே வாழுங்கள். வெற்றி நிச்சயம்!

23. தடங்கலுக்கு மகிழ்கிறோம்! 

அகில இந்திய வானொலி செல்வாக்காக இருந்தது ஒரு காலம். அப்போதும் அடிக்கடி மின்தடங்கல் ஏற்பட்டு, "தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்று அறிவித்துக் கொண்டிருப்பார்கள். 

வானொலி அறிவிப்பாளர் ஒருவருக்குத் திருமணம் செய்ய வேண்டி ஒரு நண்பர் வீட்டில் பெண் கேட்டோம். பெண் மறுத்துவிட்டாள். ""தடங்கலுக்கு வருந்துகிறோம்'' என்று அடிக்கடி வருந்துகிற மாப்பிள்ளை வருந்தி வருந்தியே இளைத்துவிடுவார் என்று பெண் கிண்டலடித்தாள். 

தடங்கலுக்கு வருந்தும் வியாதி வானொலியில் இருந்து தொலைக்காட்சிக்கும் தொற்றிக் கொண்டது. நல்ல வேளை... இப்போதெல்லாம் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதோடு சரி... வருந்துவது இல்லை. 

வாழ்க! 

தடங்கலுக்கு வருந்த என்ன இருக்கிறது? 

தடைகள் வெற்றியின் புதையல். தடங்கல் வெற்றியின் தடங்கள். 

அண்மையில் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரிப் பேரவை விழாவில் பேசிக்கொண்டிருந்தேன். வெற்றிகரமான என் உரையை மாணவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தபோது ஒரு தடங்கல். பொறியியல் கல்லூரிகளை எல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் ஆய்வுப் பணிக்காக அதன் துணைவேந்தர் திடீரென்று கல்லூரிக்கு வந்துவிட்டார். என் பேச்சை இடையில் நிறுத்தி, அவர் பேசிவிட்டுப் புறப்பட வேண்டும். 
என் பேச்சை இடையில் நிறுத்தும் எண்ணம் யாருக்குமே ஏற்பட முடியாது. என்றாலும் தவிர்க்க முடியாத நிலையில் ஒரு பேராசிரியர் தயங்கித் தயங்கி என்னிடம் மிக்க மரியாதையுடன் விஷயத்தை விளக்கினார். உணர்ச்சிமயமான பேச்சை இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்குவது உண்மையில் படு சிரமமான விஷயம். என்றாலும் துணைவேந்தரைக் காக்க வைப்பதும் தவிர்ப்பதும் கல்லூரிக்குக் கவலையளிக்கும் பிரச்சினை. 

மாணவர்கள் நன்மை கருதி, துணைவேந்தரை இடையில் பேச அனுமதிப்பது என்று தீர்மானித்தேன். 

மாணவர்களைப் பார்த்து, ""துணைவேந்தர் இப்போது பேச வந்துள்ளார். எமது நிகழ்ச்சியின் இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று சொல்லமாட்டேன்... உங்களுக்கு நன்மை செய்ய அவர் வந்திருப்பதால் தடங்கலுக்கு மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றேன். 
மாணவர்களின் கரவொலி வெற்றி முரசாக ஒலித்தது. 

இன்னும் உயர்ந்த விஷயம் சொல்கிறேன். 

இயேசு பிரான் தமது இறைச்செய்தியை வழங்க நினைத்தபோது அது எளிமையாக முடிந்ததா? தடங்கல் வரவில்லையா? தச்சன் ஜோசப்பின் அதிகப்பிரசங்கி மகனாக அல்லவா உலகம் அவரை அடையாளம் கண்டது! முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டு முள்மகுடம் அல்லவா வைத்தது! 
மறந்துவிடாதீர்கள்... சிலுவையில் அறைந்ததால்தான் இயேசு இன்னமும் ஜீவிக்கிறார்.

மிகச் சுலபமாக அவர் மதம் பரவியிருந்தால் கடவுள் பெயரால் வயிறு வளர்த்த சமயச் சொற்பொழிவாளனாக அந்த மரியாளின் மகன் மரித்திருத்துப்பார். 
கவனத்தில் வையுங்கள். தடைகள் வெற்றியின் புதையல். தடங்கல் வெற்றியின் தடங்கள். 

ஸல் அல்லாஹு ஸல்லம் நபிகள் நாயகம் மூலம் திருமறை தரையிறங்கியது. உலகு உடனே ஒப்புக்கொண்டதா? மெக்காவில் இருந்து மதீனா வரை அவரை ஓடவிட்டதே..! ஆனால் இன்றைக்கு... உலகமே அவர்களது புனித பூமியை நோக்கி ஓடுகிறதே! 

கவனத்தில் வையுங்கள், தடைகள் தடைகளே அல்ல... தடங்கல் வெற்றியின் தடங்கள். 

கந்த புராணத்தைக் கச்சியப்பர் அரங்கேற்றியபோது இலக்கண விளக்கம் கேட்டு அரங்கேற்றத்தையே ஒரு தமிழ்ப் புலவர் தடுத்தார். ஆனால் முருகனே முன்வந்து விளக்கம் கூறியதால் கந்த புராணம் தமிழகம் எங்கும் தழைக்கத் தொடங்கியது. 
கவனத்தில் வையுங்கள்... தடைகள் தடைகளே அல்ல... வெற்றியின் புதையல். 

ஒரு கதை சொல்லட்டுமா..? 

அவர் ஒரு விசித்திரமான அரசர். தம் மக்களைப் பற்றியே எப்போதும் கவலை அவருக்கு! மக்கள் அதிகமாகக் கடந்து போகும் மலைப் பாதையின் குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டு வைத்தார். அந்த வழியில் பயணப்பட்ட பலர் கல்லைக் கண்டு எரிச்சல்பட்டார்கள். சிலர் வெகுதூரம் ஒதுங்கி வேறு வழியாகப் பயணப்பட்டார்கள். சிலர் ராஜாவை வெகுவாகத் திட்டினார்கள். 

""என்ன அரசாங்கம்! பொறுப்பற்ற அரசு அதிகாரிகள்... மக்களுக்கு இடையூறு உள்ளதே... நீக்க வேண்டாமா?'' என்று புலம்பினார்கள். 
சிலர் சிரமப்பட்டுப் பாறாங்கல் மேல் ஏறி இறங்கி அவர்களாகவே ஒரு வழியை உண்டாக்கிக் கொண்டார்கள். 

ஆனால் ஒருவருக்குக்கூடப் பாறாங்கல்லைப் பாதையைவிட்டு நகர்த்த வேண்டும் என்று தோன்றவில்லை. பலரோ, பாறாங்கல்லைப் பார்த்ததும் பயணம் தடைப்பட்டது என்று பயணத்தையே நிறுத்திவிட்டு, பாறாங்கல்லை நகர்த்திய பிறகு பயணப்படலாம் என்று சாலை ஓரத்தில் படுத்துவிட்டார்கள். 
ஆவேசமாக அங்கு வந்த இளைஞன் ஒருவன் மட்டும் அந்தக் கல்லை நகர்த்த முயற்சி செய்தான். பலர் பரிகசித்தார்கள். சிலர் ராஜதண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தார்கள். வெகுசிலர் உதவிக்கு வந்துவிட்டு, நம்மால் முடியாது என்று கைவிட்டனர். அவன் விடாப்பிடியாகப் போரடினான். கல் நகர்ந்தது. கல்லைச் சரிவில் உருட்டினான். கல்லுக்குக் கீழே ஒரு கடிதமும் பையும் இருந்தன. 

"இந்தக் கல்லை யார் நகர்த்துகிறார்களோ அவர்களுக்கு அரசரின் அன்பளிப்பு ஆயிரம் பொன்' என்று இருந்தது! 

கவனத்தில் வையுங்கள்... ஒவ்வொரு தடங்கலிலும் ஒரு புதையல் ஒளிந்திருக்கிறது. தேடி எடுத்தால் வெற்றி நிச்சயம்.

24. மரமா! மனிதனா? 

கோபத்தில் திட்டுகிறபோது, ""ஏன் இப்படி மாடு மாதிரி நிக்கறே!'', ""மரம் மாதிரி வளர்ந்துட்டே!'' என்று ஏசுகிறோம். இது சரிதானா? இயற்கையையும், பிற உயிர்களையும் தகுதியற்ற மனிதனோடு ஒப்பிட்டுப் பேசுவது அநீதி அல்லவா? 

காரணம்... மாடு இன்றைக்கு ஐயாயிரம் ரூபாய் விலை போகிறது. இவன் போவானா? 

மரம் நிழல் தரும்... காய் தரும்... கனி தரும்... செத்தாலும் விறகாக தன்னையே தரும். ஆனால் இந்த மனிதன் செத்தாலும் தானாக எரியமாட்டான். கொஞ்சம் விறகு (மரம்) வைத்துதான் எரிக்க வேண்டியுள்ளது. 

எனவே மரம் போல, மாடு போல என்று மனிதனைத் தாழ்த்துவதாக நினைத்துப் படைப்பைத் தாழ்த்தக் கூடாது. 

எனக்கு இந்தக் கோபம் எப்போது ஏற்பட்டது தெரியுமா? திருக்குறள் படிக்கும்போது திருவள்ளுவர் மீது ஏற்பட்டது. உரம் என்கிற ஊக்கம் இல்லாத ஒருவனை மரம் என்று திட்டுகிறார் திருவள்ளுவர். 

"உரம் ஒருவனுக்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு' என்பது குறள். 

ஒருவருக்கு ஊக்கம் மிகுதியே வலிமையாவது. அவ்வூக்கம் இல்லாதார் மக்களாகார். மரங்கள் ஆவார் (வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களில் இருந்து வேறுபட்ட தன்மையாகும்) என்பது பொழிப்புரை. 

ஊக்கம் இல்லாத மனிதனை மரம் என்கிறார் வள்ளுவர். 
நியாயமா? 
கண்டிப்பாக நியாயம் இல்லை! 
ஏன்? 
மரம்கூட உயிர் வாழ வேண்டும், உயர வேண்டும் என்ற வேட்கையும் முயற்சியும் ஆவேசமும் உடையது! அதுவும் இல்லாத மனிதனை மரம் என்று எப்படிச் சொல்லலாம்? 

எல்லா மரமும் ஒளியை நோக்கியே தன் பயணத்தைத் தொடங்கும். எப்படியாவது வெளிச்சத்தில் பிரவேசிக்க ஏங்கும் தாவர தர்மம்கூட இன்றி இருட்டில் புதைய விரும்பும் மனிதன் மரமா? மரத்தைவிட மட்டமா? 

மாமரத்தின் ஒரு கிளையை எப்போதாவது முறித்தது உண்டா? அப்படி முறித்தால் மாமரம் மெüனமாக உங்கள் அழிப்பை ஆமோதித்தது உண்டா? எங்கு முறித்தீர்களோ அதன் அடிப்பகுதியில் இருந்து பத்துப் பதினைந்து கிளைகளாக ஆவேசமாக எட்டிப் பார்க்கும் தாவர அகங்காரத்தை நீங்கள் தரிசித்தது உண்டா? ""படவா... என் ஒரு கிளையையா முறித்தாய்... பார்... பார்... பத்துக் கிளையாய்ப் படந்து பரப்பி நான் தழைத்து நிற்கிறேன் பார்'' என்று காற்றில் தலையாட்டும் மாமரத்தின் மமகாரம் மகத்துவம் மிக்கது! 

பலமற்ற மரம் முருங்கை. ஆடிக் காற்று ஆட்டிப் பார்ப்பது மட்டுமல்ல, அடியோடு அதை வீழ்த்தி விளையாடும். மொளுக்கென்று முறியும் முருங்கைக்குக்கூட மூர்க்கம் உண்டு. கவனித்தது உண்டா? வெட்டி எறிந்த வெற்றுத் துண்டுகூட வேர்விடத் துடிக்கும். தளிர்களை விரிக்கும். விருட்டென்று எழுந்து விருட்சமாய் விஸ்வரூபம் காட்டும். மாமரம் வெட்டிய இடத்தில் முளைக்கிறது! முருங்கையோ வெட்டி எறிந்த துண்டுகூட தழைக்கிறது!

வாழ வேண்டும் என்கிற வைராக்கியம், வெறி, வேகம் மரத்திற்கு இருக்கிறதே! எத்தனை மனிதருக்கு இருக்கிறது? 

ஆஸ்திரேலியக் காடுகளில் ஒருவகைப் புல் மரம் இருக்கிறது. புல் மரமா? ஆம் புல் மரம்! கொடிய தீ பரவிக் காட்டையே அழித்தாலும், அத்தனை மரங்களும் செத்து விழுந்தாலும் தான் மட்டும் அழிவதில்லை... அந்தப் புல் மரம். மேல் பகுதி கருகினாலும் அதன் குருத்து மட்டும் அழிவதே இல்லை. என்றாவது மழை பெய்ததும் குருத்து கிளம்பும். தாவரம் சிலிர்க்கும்... புல் மரம் புத்துயிர் பெற்றுப் பூரித்து நிற்கும்! 

எத்தனை மனிதர்களால் இப்படிச் சிலிர்க்க முடிகிறது? இந்த மரங்கள் என்ன மனிதனைவிட மட்டமா? வாழ வேண்டும் என்கிற வைராக்கியம், ஆவேசம் மரம் நடத்தும் மகத்தான பாடம். இந்த உயர்ந்த மரங்களை ஊக்கம் இல்லாத மனிதனோடு வள்ளுவர் ஒப்புமை காட்டி விட்டாரே! வள்ளுவரை மறுக்கலாமா? ஏன் மறுக்கக் கூடாது? 

ஒரு மருத்துவமனையில் இருந்து இறந்து போனவர்களின் பிணங்களை போஸ்ட் மார்ட்டம் செய்துவிட்டு வேனில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். பாதி வழியில் ஒரு பிணம் எழுந்து உட்கார்ந்தது! டிரைவர் தோளைத் தட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டது! டிரைவர் அலட்சியமாக, ""செத்தவனுக்கு எதுக்குத் தண்ணீர்? பேசாமப் படு'' என்றார். பிணம் அலறியது... ""ஐயா... நான் சாகவில்லை. உயிரோடு இருக்கிறேன்'' என்றது. டிரைவர் அலட்சியமாக, ""எவ்வளவு பெரிய டாக்டர் அவரு... அவரே சொல்லிட்டார் செத்துட்டே அப்படீன்னு... அவரு சொன்னால் சொன்னதுதான். நீ உயிரோடு இருக்கேன்னு சொன்னால் நம்புவோமா?'' என்றார். இந்தக் கதை மாதிரி வள்ளுவர் சொன்னால் சொன்னதுதான் என்று சாதிக்க எனக்கு விருப்பம் இல்லை. 

அழிப்பை எதிர்க்கும் ஆவேசத்தை மரங்களிடம் இருந்து படியுங்கள்..! ஒரு மரத்துக்கு இருக்கும் ஊக்கம் உங்களுக்கு இருக்குமென்றால் வெற்றி நிச்சயம். 

மாமுனிவன் வள்ளுவன் எதிர்பார்க்கும் ஊக்கம் உங்களுக்கு இருந்தால் வெற்றி சர்வ நிச்சயம்!

25. விஞ்ஞானி ஆன வேலைக்காரி! 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே போகவேண்டுமென்றால் இப்போதெல்லாம் யாரிடம் விடுகிறார்கள்? பாட்டி, தாத்தாவிடமா? இல்லை. பட்டணத்து வீடுகளில் பாட்டி, தாத்தாக்களுக்கு விஸô கிடைப்பது கஷ்டம். வீடு கடத்தப்படுவார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள "கிரெச்' வந்துவிட்டது. சில பெற்றோர்கள் தனி நபர்களைச் சம்பளத்துக்கு நியமிக்கிறார்கள். சென்னையில் அந்தப் பெண்மணிகளின் செல்லப் பெயர் "ஆயா'. கணவனும் மனைவியும் "ஹாயா'க இருக்க வீட்டில் பிள்ளைகளைப் பேணும் பெண்மணியின் பெயர் ஆயா..! 

பிரான்ஸ் நாட்டில் இப்படிப்பட்ட ஆயா ஒருத்தி உலகப் புகழ் பெற்றாள். மறக்க முடியாத மாமனிதர் பட்டியலில் இடம் பெற்றாள். சாதிக்க முடியாத சாதனைகளைச் சாதித்துக் காட்டினாள். யார் அவள்? மேரி... தெரியவில்லையா? இன்னும் கொஞ்சம் சொன்னால், ஆம்... ஆம்... என்று தலையாட்டுவீர்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு பணக்கார வீட்டில் குழந்தைகளைப் பேணும் (பேபி சிட்டர்) ஆக வேலைக்குச் சேர்ந்தாள் மேரி. பதினெட்டு வயது நிரம்பிய அழகிய பெண். அன்பு ததும்ப தன் பணிகளைப் புரிந்த அவள் மீது அந்த வீட்டின் மூத்த மகனுக்குக் காதல் அரும்பியது. அவ்வளவுதான். அந்தப் பையனின் பாணக்கார அப்பா நம்மூர் பண்ணையார்கள் பாணியில் ஆடித் தீர்த்துவிட்டார். 

கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கும் அந்தக் குடும்பத்துக்கு மருமகளாய், அடுத்த வீட்டில் சாப்பாட்டுக்குக் கையேந்தும் மேரி எப்படிக் குடியேற முடியும் என்று அவமானப்படுத்தினார். கேவலப்படுத்தினார். வீட்டை விட்டு வெளியேறினாள் மேரி. பாரீஸýக்கு வந்தாள். தனது நெடுநாள் கனவுகளுடன் விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தீவிரமாகத் தொடங்கினாள். அவமானம் அவளை வீறு கொண்டு எழச் செய்தது. சாதிக்கும் வெறி அவளுள் ஊதி ஊதி உலை வைத்தது. உலகமே வியக்கும் யுரேனியக் கதிர் வீச்சைக் கண்டறிந்தாள். புற்று நோய்க்கான முறிப்புச் சக்தியை யுரேனியக் கதிர் வீச்சில் கண்டறிந்து முன் வைத்தாள். நோபல் பரிசு பெற்றாள். நினைத்தபடி தான் காதலித்த அந்தப் பணக்கார வாலிபனைக் கைப் பிடித்து உலகப் புகழ் பெற்றாள். யார் அவர்? மேடம் மேரி க்யூரி அம்மையார்! "" 

ஜாதகம் சரியாக இருந்தால் சாதிப்பேன்... சாதகமாகப் பலர் இருந்தால் சாதிப்பேன்'' என்று நழுவாது விடாமுயற்சி செய்து வெற்றி பெற்றார், மேடம் க்யூரி. நீங்கள் எப்படி? 

ஸ்காட்லாந்து மன்னர் புரூஸ் தமது அரண்மனையில் உட்கார்ந்திருந்தார். நாட்டை இழந்த சோகம் அவர் முகத்தில் வலை பின்னியிருந்தது. ஏன்..? தோல்வி... தோல்வி... எல்லாப் போரிலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி! மேலும் மேலும் அவமானப்பட அவரால் முடியவில்லை. பல முறை முயன்றும் தோல்வி என்பதால் போர் முயற்சியைக் கைவிடலாமா என்று கவலையுடன் யோசித்தார். கன்னத்தில் கை வைத்தபடியே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னருக்கு அங்கே ஓர் ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.

வீட்டு மேல் கூரையில் ஒரு சிலந்தி. தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னிக் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக் கொண்டே தன் எட்டுக் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்துத் தனது குடியிருப்பை... தனது உணவுகளைப் பிடிக்கும் படைக்கான அணிவகுப்பை... வலைப் பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது சிலந்தி. வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், ஓய்ந்து ஓய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை.


No comments:

Post a Comment