வெற்றி பெற உதவும் பண்புகள்
1. செய்யும் செயலில் முழு ஈடுபாடு கொள்ள வேண்டும். ஈடுபாடு,விருப்பம் இல்லாது ஏனோதானோ என்று கடனுக்காகச் செய்யும் செயல்களில் வெற்றியை எதிர்பார்த்தல் சரியன்று.
2. நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் உண்மையானவையாகவும் நேர்மையானவையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.குறுக்கு வழியில் பெறும் வெற்றியானது நிலையானதொன்றல்ல. நியாயமான முயற்சியில் தோல்விகள் ஏற்பட்டாலும்,அவை பின்னாளில் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறி நம்மை வெற்றி நோக்கி இட்டுச் செல்லும்.
3. "முயற்சி திருவினையாக்கும்","முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்று தன்னம்பிக்கை தனை துணையாய்க் கொண்டு போராடுபவர்களைக் கண்டு தோல்வியும் தலைவணங்கி விலகிச் செல்லும்.
4. செல்வம் என்பது 'செல்வோம் செல்வோம்' என்ற பொருள்பட வரும். செல்வம் இன்று வரும்.அது என்று நம்மை விட்டு நீங்கிச் செல்லும் என்பது நமக்குத் தெரியாது. எந்நாளும் நிலைத்து நிற்பது உண்மையான உழைப்பினால் கிட்டிய பெயரும் புகழும் மட்டுமே.
5. வேதனை இல்லாது வரம் கிட்டாது. அதுபோல், சோதனைகளை எதிர்கொள்ளாது சாதனைகளை எட்டுவது இயலாது.
6. செய்யும் செயல் எதுவாயினும் அதில் ஒன்றி முனைப்புடன் ஈடுபட வேண்டும். முனைப்பில்லாத செயல் முடியாது.முனைப்புடன் விடாமுயற்சியும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் கிட்டும்.
7. சோர்வு பாராத தொய்வில்லாத உழைப்பினால் கிட்டுமே வசந்தம் வீசும் நல்வாழ்வு.
8. முறையான திட்டமிடல், செயல் திறம், மனத் திடம். இவை மூன்றும் வாழ்வில் உயர் நிலையும், பட்டம்,பதவி இவற்றை பெற்றுத் தரும்.
9. விருப்பத்துடன் கூடிய உழைப்பே வெற்றியை ஈட்டித் தரும். முழு ஈடுபாடு இல்லாமல், அரைகுறை மனதுடன், எவ்வளவு சிரமப்பட்டு உழைத்தாலும், எண்ணிய முடிதல் என்பது நிறைவேறாத ஒன்றே.
10.எடுத்த காரியம் நிறைவேறும் வரை முயற்சிப்பதிலிருந்து பின்வாங்குவதில்லை என்று முனைப்புடன் இருப்பவர்க்கு தடைக்கல்லும் படிக்கல்லாகும்.
11. இளமையில் திறமை, விரும்பும் செயல்கள், ஈடுபாடு எல்லாம் திசைமாறிப் போனால், வாழ்வும் தடுமாறிப் போகும்.
12. ஓர் தேசத்தில் இல்லாதோர் இருப்பதால் இழுக்கேதும் இல்லை. ஆனால், கல்லாதோர் மிகுந்திருப்பதே இழுக்கு.
13. தனக்கு ஏற்பட்ட தோல்வி, தன்னைச் சுற்றி இருப்போர்க்கு ஏற்பட்ட தோல்வி, இவற்றின் மூலம் தனது குறைகளை உணர்ந்து திருத்திக் கொள்ளும் ஒருவன் வெற்றியாளன் ஆவது எளிது.
14. துணிவும் மனோதிடமும் இல்லாதவன், தான் எடுத்த செயலில் வெற்றியைப் பெறுதல் என்பது முடியாததொன்றாகும்.
15. தம் கையில் இருக்கும் நிகழ்காலம் தனை பயனுற கழிக்கும் ஒருவன் பெருமையும் புகழும் அடைதல் எளிது.
16. செய்யும் செயலிடத்து ஈடுபாடு குறையாது ஆற்றப்படுமாயின், அச்செயல் நம் எண்ணம் போலவே ஈடேறும்.
17. இன்றைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை , இன்றே முடித்தல் நலம். ஒத்திப் போடப்பட்ட கடமைகள் தோல்விக்கே வழி வகுக்கும்.
18. தோல்வியின் போது துவண்டு போகாது, மனதிடத்துடன் இருப்போர், வெற்றியின் போதும் ஆரவாரம் இல்லாது, அமைதியாகவே இருப்பர். வெற்றி தோல்வி இவையிரண்டையுமே அவர்கள் சமமாகக் கொள்வர்.
19. எடுத்துக் கொண்ட செயலுக்காய் தன்னை வருத்திக் கொண்டு, முழுமனதுடன், ஈடுபடுவோருக்கு வாய்ப்பு ஒருநாளும் கைவிட்டுப் போகாது.
20. வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு , ஓய்வு ஒழிச்சலின்றி முனைப்புடன் எடுத்த காரியத்தில் ஈடுபடுதலே, எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் வெல்வதன் இரகசியம் ஆகும்.
21. ஆற்ற வேண்டிய கடமைகளை, ஆற்ற வேண்டிய காலத்தில் சரிவர ஆற்றினால், உலகப் புகழ் அடைவது திண்ணம்.
22. சுறுசுறுப்பு, செய்யும் காரியம் தனை விரைவாக்கும். ஆனால், பரபரப்பும், பதற்றமும் காரியம் தனை சிதறடிக்கும்.
23. தந்திரங்கள் பல செய்து நிகழ்த்தப்படும் சாதனைகள் சரித்திரம் ஆகாது. அதுபோல், நெஞ்சில் வெறித்தனம் கொண்டு வெல்வதும் விவேகம் ஆகாது.
24. எடுத்த காரியம் நலமாய் நடந்தேற, வெற்றியும் மாலைகள் சூட்டிட கல்வி அவசியம்.
25. உண்மையான வாக்கும், தெளிவான நோக்கமும் கொண்டவர் செயல்கள் தோல்வியைச் சந்திப்பதென்பது அரிது.
No comments:
Post a Comment