திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்
“குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“என்ன பிரச்னை?’ என்று கேட்டார்.
“என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றான் இளைஞன்.
வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார்.
“ஒரு கிராமத்துக்கு பெரியவர் ஒருவர் அவரிடம் ஆசி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்ற ஊர் மக்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனும் பெரியவரிடம் சென்றான். அவனையும் அவர் ஆசிர்வதித்தார். ஆனால், அந்த இளைஞன் விடவில்லை. “பெரியவரே, இந்த ஆசிர்வாதத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என் பிழைப்புக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டான். உடனே பெரியவர் தன்னுடைய பையைத் துழாவி ஒரு அழுக்கு மோதிரத்தை எடுத்து, “இதை விற்று உன் பிழைப்புக்க வைத்துக்கொள்’ என்றார்.
நூல் சுற்றி கரை படிந்த அந்த அழுக்கு மோதிரத்தை பார்த்த இளைஞனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும், அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு போய் கிராமத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்க முயன்றான். ஆனால், யாரும் அந்த அழுக்கு மோதிரத்தை வாங்க முன்வரவில்லை. இந்த மோதிரம் விலை போகாது என்ற முடிவுக்கு வந்த இளைஞன் மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான்.
அப்போது அந்தப் பெரியவர், “இந்த மோதிரத்தை நகைக் கடையில் விற்க முயற்சித்தாயா? முதலில் போய் ஒரு நகைக் கடையில் கேள்’ என்று சொன்னார்.
பெரியவர் சொன்னது போல் ஒரு நகைக் கடையில் மோதிரத்தை காட்டியபோது. அவர்கள் உடனே அதன் அழுக்கை நீக்கி அதன் தரத்தை கண்டுபிடித்துவிட்டனர். அவனுக்கு நல்ல பணமும் கொடுத்தனர்.’
இந்தக் கதையைச் சொன்னதும் வேலை தேடி வந்திருந்த இளைஞனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.
அப்போது அவனுக்கு குரு சொன்ன வின் மொழி:
திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.
No comments:
Post a Comment