நம்பிக்கை என்னும் ஆணிவேர்
மனிதர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். தற்கால மனிதர்களின் மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும்; மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் செயல்படும் மனமாக நிலைக்க வைக்கவேண்டும். மனித மனத்தை என்றைக்கும் சக்தியுள்ளதாக வைத்திருப்பதன்மூலம் மாபெரும் வெற்றிகளை, சாதனைகளை இந்த சமுதாயம் பெற்றுக் கொண்டே இருக்கமுடியும்.
மனித உள்ளங்களைக் காயப்படாமல் காக்க வேண்டியது சக மனிதர்களின் கடமையாகும். தமிழ் உலகில் வள்ளுவர் தொடங்கி அனைத்துச் சான்றோர்களும் மனிதருக்கு மன ஊக்கத்தை வார்த்தை மருந்துகளால் தந்துள்ளனர். தம் சத்தி மயமான கவிச்சொற்களால் அவர்கள் அளித்த ஊக்கம் இன்னும் வாழையடி வாழை என வளர்ந்து கொண்டே வருகின்றது. மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்பது வள்ளுவ வாக்கு. இவ்வாக்கு மனித உயர்வை மனத்து உயர்வாக கணக்கிடுகிறது. எனவே மனத்தைச் செம்மையாக்கும் நல்ல சொற்களைக் கொண்ட நூல்கள் என்றைக்கும் தேவைப்படுவனவாகின்றன.
தன்னம்பிக்கையை என்பது மனிதரின் மூலதனம் என்று உணரப்பட வேண்டும். அப்படி உணரப்பட்டால் உணர்த்தப் பட்டால் மனிதர் அனைவரும் ஆற்றல் மிக்க சக்திகள் என்பது உண்மையாகும். எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதற்கு மூலதனம் என்ற ஒன்று தேவை. மூலதனத்தை வைத்துத்தான் உழைத்து முன்னுக்கு வர இயலும். மனித வாழ்வை நடத்தவும் அது போன்ற மூலதனம் தேவை. மனிதருக்கான அந்த மூலதனம்தான் தன்னம்பிக்கை என்பது.
வெறும் தன்னம்பிக்கை என்ற ஓர் உணர்வு மட்டுமே உள்ள ஒருவர் அந்த உணர்வையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் காலந்தள்ள முடியுமா? சாதனை செய்யும் தகுதி அவருக்கு உண்டா? அப்படி முடியும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்விகளுக்கு ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியும். அது வரலாறு என்பதுதான். ஆம். வரலாறு என்பது ஒரு ஒட்டு மொத்தப் பதிவேடு” என்று தன்னம்பிக்கையின் மூலதன முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் அகநம்பி. அவரின் வெற்றியின் ஏணிப்படிகளாகக் காணும் சிறு நூல் தன்னம்;பிக்கை என்பது ஒரு மூலதனம் என்பதாகும். நூற்றியரண்டு பக்கங்களைக்கொண்ட இந்நூல் மனித சமுதாயத்தைத் தட்டிக்கொடுத்துத் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல நூலாகும். குறிப்பாக மாணவர்கள் தம் இளவயதில் வெற்றிகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்க இந்நூல் பெரிதும் வழிகாட்டும்.
பாலக்கனியின் மேல்தோலை நீக்கிவிட்டு அதிலுள்ள பசையை அப்புறப்படுத்தி அதன் உள்ளே உள்ள இனிய சுளையை எப்படி ருசிக்கின்றோமோ… அனுபவிக்கின்றோமோ.. அதைப் போன்றதுதான் வாழ்க்கை. மேலோட்டமாகப் பார்க்கும்போது வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாகத் துயரம் நிறைந்து இருப்பது போலத் தோன்றும். அந்த ihயத் தோற்றம் நீங்கிவிட்டால் பின்னர் தோன்றுவது நல்லதொரு காட்சியேதான்” என்று வாழ்க்கையை அதன் துன்பப்படலத்தை, இன்பச் சுவையை காட்சிப்படுத்தி வாழ்க்கையை வளமாக வாழக் கற்றுத் தருகிறார் அகநம்பி.
வளமான வாழ்;க்கை, நம்பிக்கை மிக்க வாழ்க்கை வாழ்வதற்கு மிகப் பெரிதும் தடையாக இருப்பது மனதில் எழும் ;அச்சம் என்கிறார் அகநம்பி. இந்த பயம் ஏன் தோன்றுகின்றது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லிவிடமுடியும். தேடிக் கண்டுபிடித்து மிகச் சரியான பதிலைத் தருகிறார் அகநம்பி. ஒருவர் மனதில் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் இருந்தால் மட்டும்தான் பயம் என்ற உணர்வு அவர் மனதில் உருவாகும். அதனால் எவருக்கும் தீங்கு தரும் செயலை ஒரு துளி அளவு கூடச் செய்ய நினைக்காமல் இருந்தாலே போதும் என்ற கருத்து பயம் என்ற தடைக்கல்லைத் தூள் தூளாக்கிவிடுகின்றார் இவர்.
குழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாக ஆக்குவதற்கு இவர் கூறும் இனிய எளிய வழி எல்லோரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய வழியாகும். முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று நான் நல்ல திறமை மிக்கவனாக வருவேன்…. சாதனைகள் பல செய்வேன்.” என்று மனதிற்குள் கூறிவரும்படிக் குழந்தைகளைப் பழக்குங்கள். வளர் பருவத்தில் உங்கள் குழந்தைகள் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். தேவையில்லா வார்த்தைகளைப் பேசாமல் இருக்கப் பழக்குங்கள். குழந்தைகள் வீட்டுப்பாடம் படித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் அருகில் இருந்து அந்தப் பாடங்களைச் சரியாகப் படித்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லை ஏதேனும் தவறுதலாக அவர்களது படிப்பு போய்க் கொண்டிருக்கிறதா? எனக் கவனித்து வாருங்கள்” இந்த அடிப்படையைப் பெற்றோர்கள் உணர்ந்து கொண்டுச் செயல்பட்டால் நல்ல குழந்தைகளை நாட்டிற்கு அவர்கள் தரஇயலும்.
குழந்தைகளுக்கு நினைவுத்திறன் பெருக மூலிகை மருத்துவத்தை எடுத்துரைக்கிறது இந்நூல். குழந்தைகளின் மறதியைப் போக்கத் துளசி இலையைத் தண்ணீரில் ஊற வைத்து குழந்தைகளுக்கு அந்த நீரைக் குடிப்பதற்குக் கொடுங்கள். வில்வ இலைகளை அரைத்துச் சாறு குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். தூதுவளைக் கீரையைக் குழம்பு வைத்துச்சாப்பிட்டால் மிக நல்லது என்று தமிழ் மருத்துவக் குறிப்புகளை அவ்வப்போது வழங்குகின்றது இந்நூல்.
வளர் பருவம் சார்ந்த மாணவர்களுக்கும் இவர் அளிக்கும் நம்பிக்கை உரைகள் பலவாகும். பாடங்களைப் படிக்கும் முறையை நெறிப்பட வழங்குகிறார் இவர். பாடத்தின் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நினைவுக்குக் கொண்டு வருவதற்காகக் திரும்பத் திரும்ப சொல்லிப் பாருங்கள். உங்களுக்கு நீங்களே மாதிரித் தேர்வு எழுதிப் பழகுங்கள். பதற்றம் கொள்ள வேண்டாம்|| என்ற வழிமுறை பாடங்களைப் படிக்க நினைவில் வைத்துக் கொள்ளச் செய்யும் எளிய படிநிலையாகும்.
வகுப்பறையில் உங்கள் படிப்பில் கவனக்குறைவு அல்லது நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக ஆசிரியர் உங்களைத் திட்டினால் வருத்தப்படாதீர்கள். மாறாக ஏன் திட்டினார் எனச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் செய்த தவறு உங்களுக்குத் தெரியவரும். உலகப் புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர் லியோனார் டோடாவின்சி, அணுக்கரு அமைப்பை விளக்கிய டேனிஷ்நாட்டு விஞ்ஞானி நீல்ஸ்போகர் கணித விஞ்ஞான நிபுணர் சர் ஐசக் நியுட்டன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற சாதனையார்கள் எல்லாரும் படிப்பின்போது தங்களது ஆசிரியர்களிடம் கடுமையான திட்டு வாங்கியவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.|| என்ற அறிவுரை மாணவப் பருவத்தில் அடிக்கடி நிகழும் திட்டுக்களில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் என்பதில் ஐயமில்லை.
தேர்வு எழுதுவது குறித்தும் பல மதிப்புரைகளை இவர் வழங்கியுள்ளார். தேர்வுக் கூடத்தில் நுழைந்தவுடன் அமைதியாக வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். கேள்வித்தாள் கொடுத்ததும் அனைத்துக் கேள்விகளையும் ஒரு முறை முழுமையாகப் படித்துவிடுங்கள். அதில் நன்றாகத் தெரிந்த பதில்களை மட்டுமே விடைத்தாளில் முதலில் எழுதுங்கள். நீங்கள் எழுதும் எழுத்துக்கள் மிக அழகாக இருக்க வேண்டும். அழகிய எழுத்துக்கள் என்றுமே எவரையும் கவரும் தன்மையுடையது. அதற்குக் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்” என்ற குறிப்புகள் தேர்வுக்குச் செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் உரிய அறிவுரையாகும்.
குழந்தைகள்,மாணவர்கள் இவர்களைத்தவிர ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இவர்களுக்குமான நம்பிக்கைத் தெளிவுரைகள் இந்நூலில் வகுத்து வழங்கப் பெற்றுள்ளன. மனசாட்சி, அன்பு, தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, அடக்கம், நேர்மை, எல்லா உயிர்களையும் நேசித்தல் போன்ற அறநெறிகளைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்பது இவ்வாசிரியரின் அன்பான கட்டளை. ~ஆசிரியர் மாணவர் உறவானது, இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு போல இருக்க வேண்டும். மாணவர்கள் மனச் சோர்வு ஏற்படாமல் பாடங்களைப் படித்து வர ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்பது ஆசிரியர் உலகிற்கு இவர் வைக்கும் வேண்டுகோள் ஆகும்.
இளைஞர்களிடம் இருக்கும் குறைகளையும் இந்நூலில் இவ்வாசிரியர் சுட்டுகின்றார். கோபம் என்பதுதான் இவர் கண்டறிந்த மிகக் கொடுமையா மனித குணம் ஆகும். அதனைக்கட்டுப்படுத்த இவர் அருமையான வழி தருகின்றார். ~~உடலும் உள்ளமும் பலவீனமானவர்களுக்குத்தான் கோபம் வரும். எனவே உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பலப்படுத்துங்கள். உங்கள் கருத்தைச் சாந்தமான முறையில் பிறருக்குத் தெரிவியுங்கள். இந்த வழிமுறை கோபத்தை தணிக்கும் வழிமுறையாகும். இதுபோன்று பொறாமை, சோம்பல் முதலானவற்றைப் போக்கவும் வழிகளைத் தொடர்ந்து இவ்வாசிரியர் வழங்குகின்றார்.
நட்பு வட்டத்தைப் பெருக்கவம் அகநம்பி சொல்லும் வார்த்தைகள் உலகை அன்பால் வளைக்கும் திட்டமுடையது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள சாதனையாளர்களின் சுயசரிதைகளைப் படிக்கச் சொல்லும் அகநம்பி, அதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக பத்துச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளார். இவ்வகையில் மிக முக்கியமான தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல நூலினை வழங்கியுள்ள பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர் அகநம்பி இன்னும் பல தன்னம்பிக்கை நூல்களை வழங்கவேண்டும். படிக்கும் ஒவ்வொரு மனிதரும் மாமனிதராக வேண்டும். இந்நூலினை இயற்கை சக்தி பப்ளிகேஷன்ஸ், புன்னமை கிராமம் , சீவாடி கிராமம் (அஞ்சல்) காஞ்சிபுரம்மாவட்டம் என்ற முகவரியில் எழுபத்தைந்து ரூபாய் செலுத்து பெறாலம். தன்னம்பிக்கை பெறலாம்
No comments:
Post a Comment