பொறுமையும் பொறுப்பும்
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்…?
அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம்…
தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார், அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச்சொன்னார். பல்பை கொண்டு வரும்போது, அது கைதவறி விழுந்து உடைந்துவிட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை.
ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார். அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்துவரச் சொன்னார்.
பல்பை கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டுவிட்டனர்.
அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது என்னால் மீண்டும் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் அவரது மனதை காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? மீண்டும் அவனிடமே பணியை கொடுத்தால் அவன் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவான். அதனால்தான் அப்படி செய்தேன்’ என்றார்.
எடிசனுக்கு வெற்றியை பெற்றுத்தந்த பொறுமை உணர்ச்சியின் எல்லையை அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்!
நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாது
ஆனால் எப்போதும் இதமாகப் பேச முடியும்.!!!
No comments:
Post a Comment