எல்லாம் தகரும் தருணங்களில்….!
விதி வலியது. அது சில சமயங்களில் நம் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விடும். அந்த சமயங்களில், இருந்தது எல்லாம் தகர்ந்து போய் ஒரு பூஜ்ஜியமாய், எதிர்கால வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாய் போய் விடுவதுண்டு. இனி ஒன்றுமில்லை, வாழ ஒரு வழியுமில்லை என்கிற நிலைக்கு வந்து நமக்கு நேர்ந்ததை ஜீரணிக்கவும் முடியாமல் நம்மை திகைக்க வைத்து விடுவதும் உண்டு. அது போன்ற ஒரு நிலை பிரபல ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் நல்ல கதை ஒன்றில் முக்கியப் பாத்திரத்திற்கு வந்து விடுகிறது.
அவன் ஒரு பெரிய தேவாலயத்தைப் பராமரிக்கிற வேலையில் இருந்தான். சிறு வயதிலிருந்தே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் வயோதிகப் பருவத்தையும் அடைந்து விட்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு ஒரு பாதிரியார் புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் தேவாலயத்தைப் பராமரிக்கிறவன் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். ஆனால் இவனுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது.
அவர் அவனை அழைத்து ஆறு மாத காலத்திற்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லா விட்டால் அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்றும் கறாராகச் சொல்லி விட்டார். இந்த வயதில் இனி எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது கஷ்டம் என்று அவன் அவரிடம் மன்றாடிப் பார்த்தான். கல்வியறிவு மிக முக்கியம் என்று நினைத்த அவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொள் இல்லையேல் வேலை இல்லை என்று முடிவாகவே சொல்லி விட்டார். ஆனால் அவனால் கற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.
அவனுக்கு அந்த தேவாலய வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. வேலையை இழந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த அவன் மனதில் இருந்த துக்கத்திற்கு அளவில்லை. பெரிய சேமிப்பும் கிடையாது. அவனை ஆதரிக்கிறவர்களும் இல்லை. கவலையுடன் அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்கையில் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு சுருட்டுப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய பையில் துழாவினான். சுருட்டு இல்லை.
சரி கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி தேடி நடந்தான். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்தும் அந்தப் பகுதியில் அவனால் சுருட்டு விற்கும் கடை ஒன்றைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னைப் போல் எத்தனை பேர் இந்தப் பகுதியில் சுருட்டுக் கடை இல்லாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிய அவன் உடனடியாகத் தன்னிடம் இருந்த சிறிய சேமிப்பில் அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு சுருட்டுக் கடை வைத்தான்.
அந்தப் பகுதியில் சுருட்டுக் கடை வேறு எதுவும் இல்லாததால் அவனுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. கடையை விரிவுபடுத்தினான். வேறு பொருள்களையும் சேர்த்து விற்றான். அவன் விரைவிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட்டான். வங்கியிலும் அவன் கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தான்.
தன் வங்கிக் கணக்கை சரி பார்க்கிற விஷயமாக ஒரு நாள் அவன் வங்கிக்குச் சென்றிருந்த போது வங்கி அறிக்கை ஒன்றில் அவன் கையெழுத்து இட வேண்டி இருந்தது. அவன் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லி அதைப் படித்துக் காட்டும் படி வங்கி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.
திகைப்படைந்த அதிகாரி “எழுதப்படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்ன ஆகியிருப்பீர்களோ” என்று சொன்னார்.
“எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளனாகவே இருந்திருப்பேன்” என்றான் அவன்.
இது என் மனதில் நின்ற ஒரு கதை. நான் ஆரம்பத்தில் சொன்னது போல தேவாலயப் பணி போன போது அவன் வாழ்க்கையில் எல்லாமே தகர்ந்து போய் எதிர்காலமே கேள்விக் குறியாக நின்றது. படிக்கத் துவங்கும் வயதோ, அதற்குரிய திறமைகளோ இல்லாத அந்த முதியவன் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்திருந்தால் அது ஆச்சரியமல்ல. தேவாலயப் பணி தவிர வேறு வேலை தெரியாத அவனுடைய அந்த நேரத்து நிலைமை பரிதாபகரமானது தான். ஆனால் சுருட்டு பிடிக்க நினைத்து அதை வாங்க கடை ஒன்றும் அப்பகுதியில் இல்லாத போது ’இந்த சின்ன விஷயத்தில் கூட என் விதி எனக்கு சதி செய்கிறதே. எல்லாம் என் நேரம்” என்று வருந்தி நிற்பதற்குப் பதிலாக அந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொண்டது அவனுடைய புத்திசாலித்தனம்.
இது போன்ற சூழ்நிலைகள் பலருக்கு வரலாம். நல்லதாக, சௌகரியமான ஒரு வேலையில் பல வருடங்கள் வேலை செய்து அதிலேயே வாழப் பழகிய பின் எதிர்பாராமல் அந்த வேலையைப் பறி கொடுக்க நேரிடலாம். அப்படி ஒரு நிலை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத போது அது ஏற்படுத்தும் எதிர்காலப் பயம் சாதாரணமானதல்ல. நின்று கொண்டிருக்கும் தரையோடு எல்லாம் தகர்வது போலக் கூட சிலர் உணரக்கூடும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் சில உண்மைகளை நினைவு வைத்திருப்பது நல்லது.
உலகில் நாம் பிறந்திருப்பது ஒரு வேலையை மட்டுமே நம்பி அல்ல. ஒரு வேலையோ, ஒரு உதவியோ நம்மிடமிருந்து பறிக்கப்படும் போது வாழ்க்கையே பறிக்கப்பட்டு விடுவது போல உணர்வது உடனடி மனித சுபாவம் என்றாலும் அதை அப்படியே நம்பி ஸ்தம்பித்து விடுவது விவேகமல்ல. இறைவன் ஒரு கையால் நம்மிடமிருந்து ஒன்றைப் பறிக்கையில் இன்னொரு கையால் இன்னொரு நல்ல சந்தர்ப்பத்தை நீட்டாமல் இருப்பதில்லை. எனவே ஒன்று பறிக்கப்படும் போது கண்களை மூடிக்கொண்டு எல்லாம் அஸ்தமித்து விட்டது என்று முடிவுக்கு வருவதற்கு பதிலாகக் கண்களைத் திறந்து அந்த இன்னொரு சந்தர்ப்பம் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்ற நம்பிக்கையோடு சுற்றும் முற்றும் பார்ப்பது அவசியம்.
ஒரு தம்ளரில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் பாலை நிரப்ப வேண்டுமென்றால் நீங்கள் அந்தத் தண்ணீரைக் கொட்டியே தீர வேண்டும். பின்னர் தான் அந்த தம்ளரில் பாலை நிரப்ப முடியும். அப்படி தண்ணீரைக் கொட்டும் போது அதை ஒரு இழப்பாக நாம் கருதினால் எப்படி அது அறிவீனமாய் இருக்குமோ அது போல தான் சில சில்லறை இழப்புகளை நாம் பேரிழப்பாகக் கருதுவதும். அதை இழக்க வைத்து கடவுள் நம்மிடம் நிரப்ப முன் வருவதென்ன என்ற கவனமாகப் பார்த்தால் கண்டிப்பாக உங்களால் அதற்கு கண்டிப்பாக நன்றி சொல்ல முடியும்.
நாம் முன்பு பார்த்த கதையில் தேவாலயப் பணியாளன் தனக்கு தெரிந்த ஒரே வேலையை இழந்ததும், தம்ளரில் இருந்த தண்ணீர் கொட்டப்பட்டது போல உண்மையில் நல்ல நிகழ்வே. ஏனென்றால் அப்படி இழக்காமல் இருந்திருந்தால் அதை விட பன்மடங்கு மேலான உன்னதமான ஒரு நிலையை அவன் அடைந்திருக்க முடியாது.
எனவே எல்லாம் தகரும் தருணங்களில் நிலைகுலைந்து போய் விடாதீர்கள். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடாதீர்கள். எதையும் நம்பி யாரும் இல்லை என்று தைரியமடையுங்கள். இறைவன் ஒன்றை எடுத்துக் கொண்டால் இன்னொன்றைத் தராமலிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை வைத்திருங்கள். அமைதியாக அந்த இன்னொன்றைத் தேடுங்கள். அந்த நேரங்களில் அமைதியிழக்காமல், நம்பிக்கை இழக்காமல் நீங்கள் அப்படித் தேடுவீர்களானால் பெறுவது இழப்பதற்கு முன்னிருந்த நிலையை விட உயர்வான நிலையாகவே இருக்கும், அல்லது உயர்வான நிலைக்குப் போகும் பாதையின் துவக்கமாக இருக்கும்.!
No comments:
Post a Comment