Tuesday, April 14, 2015

ஒரு கேள்வி ஏற்படுத்தும் மாற்றம்

ஒரு கேள்வி ஏற்படுத்தும் மாற்றம்

நம் இன்றைய வாழ்க்கை நேற்றைய சிந்தனை மற்றும் செயல்களின் விளைவு. நேற்று என்ன விதைத்தோம் என்பதை விவரிக்கும் அறுவடையே இன்றைய வாழ்க்கை. எப்படி இருந்திருக்கிறோம், எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்பதை நாம் சொல்லாமலேயே நம் வாழ்க்கை உரத்துச் சொல்லும்.

விதைப்பவன் யார் கண்ணிற்கும் தெரிவதில்லை என்று நினைத்து கோணல் மாணலாக இன்று விதைத்துச் செல்லலாம். ஆனால் நாளை வளரும் பயிர் அதைக் கண்டிப்பாகக் காண்பித்துக் கொடுக்கும்.

நம் வாழ்க்கைக்கு நாமே பிரம்மாக்கள். நமக்கு அதை எப்படியும் உருவாக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் உருவாக்கிய பின் அதை நாமே சந்தித்தாக வேண்டும். நாமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நாம் உருவாக்கியவைகளிடமிருந்து ஓடி ஒளியும் வசதி நமக்கு அளிக்கப்படவில்லை. எனவே நாம் நம் வாழ்க்கையை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதில் மிக அதிகக் கவனம் வேண்டும்.

நம் நாட்டில் ‘கர்மா’ என்ற வார்த்தை மிகப் பிரபலம். அந்த வார்த்தையை இப்போதெல்லாம் மேலை நாடுகளிலும் அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கர்மா என்பது செயல் என்பது மட்டுமல்ல. விளைவைத் தரும் செயல் என்று அதற்கு விளக்கம் தருவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எந்த செயலும் விளைவைத் தராமல் இருப்பதில்லை என்பதை நினைவு படுத்தும் சொல்லாக ‘கர்மா’வைச் சொல்லலாம்.

ஒருவன் இன்று தீய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலர் ‘எல்லாம் அவன் கர்மா’ என்று சொல்வதுண்டு. நேற்றைய செயலின் விளைவை இன்று அனுபவிக்கிறான் என்பது பொருள்.

என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் நேற்றைய கர்மாவை இன்று அனுபவிக்காமல் தடுத்து விட முடியாது என்பது மாபெரும் உண்மை. இது சிலருக்கு வருத்தத்தை அளித்தாலும் இதில் மறைந்திருக்கும் இன்னொரு உண்மை எவரையும் ஆசுவாசப்படுத்தும். நாளை நன்மையைப் பெற வேண்டுமென்றால் அதற்கேற்ப நல்ல செயல்களை நல்ல முறையில் இன்று செய்தால் போதும் என்பது தான் அது. நாளை எந்த விதமான பலன்கள் நம் வாழ்க்கையில் வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கேற்ப இன்றைய செயல்கள் அமைய வேண்டும்.

உங்களது இன்றைய வாழ்க்கை முறை, சிந்தனை, செயல்கள் எல்லாவற்றையும் அமைதியாக அலசுங்கள். இதே போல் தொடர்ந்து அவை இருந்தால் இனி ஐந்து வருடம் கழித்து நீங்கள் எப்படியிருப்பீர்கள் என்று என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சாதாரண அறிவுத்திறன் இருக்கும் மனிதர்களுக்கு இப்படியே போகும் வாழ்க்கை ஓட்டம் எங்கு போய் முடியும் என்ற கேள்விக்குப் பதிலைப் பெறுவது கஷ்டமல்ல. கிடைக்கும் பதில் உங்களுக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறதாக இருந்தால் மிக நல்லது. இப்படியே வாழ்க்கையைத் தொடருங்கள். (இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க வேண்டிய அவசியம் இனி உங்களுக்கு இல்லை.)

ஆனால் பெரும்பாலானோருக்குக் கிடைக்கிற பதில் திருப்திகரமாக இருக்காது. இந்தக் கேள்வி பலரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பக் கூடும். பலரும் வாழ்க்கை ஒரு நாள் திருப்திகரமாக மாறும் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார்களே ஒழிய அது எப்படி நடக்கும் என்கிற ஞானமோ, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையோ அவர்களிடம் இருப்பதில்லை. யாராவது மாற்றினால் ஒழியத் தானாக எதுவும் மாறுவதில்லை என்கிற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. மற்றவர்களாகப் பார்த்து மாற்றப்படும் வாழ்க்கை நம் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.

இப்போதைய போக்கிலேயே உங்கள் எதிர்காலமும் இருக்கப் போவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் நீங்கள் இன்றே மாற ஆரம்பிப்பது நல்லது. உங்களுக்குப் பிடித்த நிலைமைக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகும் கர்மாக்களில் ஈடுபடுவது அவசியம்.

உடல்நிலை, மனநிலை, பொருளாதாரநிலை இம்மூன்றிலும் நீங்கள் இனி ஐந்து வருடங்கள் கழித்து எப்படி இருந்தால் நிறைவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மூன்றிலும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுங்கள். இனி அந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தேவையான செயல்களைப் புரிவதில் முழுமனதோடு ஈடுபடுங்கள்.

நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறும் நாள் வரை நீங்கள் தினமும் ஒரு கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். “நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும், நான் செய்து கொண்டிருக்கும் செயல்களும் என்னை என் இலக்குகள் நோக்கி அழைத்துச் செல்பவையாக இருக்கின்றனவா?” மாற வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகவும், உண்மையாகவும் இருக்கும் வரை இந்த ஒரு கேள்வி தேவையான சிறு சிறு மாற்றங்களை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தி பொறுப்புடன் வாழ வைக்கும். சிறப்பாகச் செயல்பட வைக்கும். கடைசியில் நீங்கள் ஆசைப்பட்ட பெரும் மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதுவரை இந்தக் கேள்வியை தினமும் கேட்டுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்.

No comments:

Post a Comment