Wednesday, April 29, 2015

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம் 

எத்தனையோ மகான்களின் சமாதி மற்றும் ஒடுக்கங்களை வழிபட்டு வரக்கூடிய எனக்கு மிகவும் பிடித்தமான இடம் விஜயாபதி. விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். இந்த இடத்தின் ரகசியத்தை முழுமையாக அறியாத வரையில் என் வாழ்க்கையில் வெற்றி என்பது எட்டிப்பிடிக்க முடியாத தூரம் ஆகும். ஆனால், இன்று என் வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.

அப்படி என்னதான் இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் குலகுரு வெள்ளைச்சாமி அடிகள் அருளாலும், நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். யார் இந்த விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர், கோபப்படுபவர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.

இறைவனுக்குப் போட்டியாக சொர்க்கத்தைப் படைத்த காரணத்தால் தன்னுடைய தவசக்தியை முழுமையாக இழந்த விஸ்வாமித்திர மகரிஷி அந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ள இடிந்தகரை ஊருக்கு அடுத்து உள்ளது. இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார். இந்த இடம் அந்தக் காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும்.

அருகில் கடற்கரை அமையப் பெற்ற இடம் ஆகும். தன்னுடைய தவத்தைத் தொடங்க தன்னுடைய இஷ்ட்ட தெய்வமான பராசக்தியான தில்லை மகா காளியை சிதம்பரத்தில் இருந்து அழைத்து வந்து கடற்கரை ஓரத்தில் பிரதிஷ்டை செய்தார். மேலும் தவத்தின் போது இரவு, பகல் பாராமல் பசி, தூக்கம் தெரியாமல் இருக்க வேண்டி ராமர், லட்சுமணருக்கு பலா அதிபலா என்ற மந்திரத்தை குரு உபதேசம் செய்தார். இங்கு ஒரு ரகசியம் மறைவாக உள்ளது. ஏனெனில் தசரதனின் குரு வசிஷ்ட்ட மகரிஷி ஆவார். இந்த வசிஷ்ட்ட மகரிஷியினால் வளர்க்கப்பட்டவர்கள் இராமர் லட்சுமணர் ஆவார்கள். ஆனால் இராமன் லட்சுமணர்களுக்கு குருவாக இருந்து குருமந்திர உபதேசம் செய்தவர் விஷ்வாமித்திர மகரிஷி ஆவார். ஆகவே இராமர், லட்சுமணரின் குருநாதர் பிரம்மரிஷி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விஷ்வாமித்திர மகரிஷி ஆவார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும் தாடகை என்ற அரக்கியை இராமர், லட்சுமணர்கள் வதம் செய்தனர். விஷ்வாமித்திர மகரிஷி இழந்த சக்தியை மீண்டும் திரும்பப் பெற்றார். இராமர், லட்சுமணருக்கு பெண்ணை வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதனை நீக்குவதற்கு சிவனையும், தாய் அகிலாண்ட ஈஸ்வரியை பிரதிஷ்டை செய்து அந்த இடத்தில் உள்ள கடற்கரையில் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். தனக்கு உதவிய ராமனுக்குப் பரிசளிக்க விரும்பி ராமனை அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் சென்றார். ஏனெனில் மிதிலையில் ஜனக மன்னனின் மகள் சீதா திருமணம் நடைபெற சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ராமனுக்கு சீதையை மணம் முடிக்க வேண்டும் என்பது விஷ்வாமித்திரரின் ஆசை ஆகும். காலத்தின் கட்டாயமும் அதுவாகும். ஆனால், தசரதனின் குருநாதர் வசிஷ்ட்டர் விஷ்வாமித்திர மகரிஷியின் எதிரி போன்றவர். விஸ்வா மித்திரர் பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதை விரும்பாதவர் ஆவார். இந்த வசிஷ்ட்ட மகரிஷி சீதை இருவரால் கவர்ந்து செல்லப்பட வேண்டும் என்று விதி உள்ளது. எனவே ராமனுக்கு சீதையை கல்யாணம் செய்யக்கூடாது என்று கூறி தடை செய்தவர். ஆனால் இந்த தடையை மீறி விஷ்வாமித்திரரின் அருளால் இராமன் வில்லை வளைத்து சீதையை மணம் முடிக்கச் சென்றார்.

திருமணத்தைத் தலைமையேற்று நடத்தித் தர விஷ்வாமித்திரரும் சென்றார். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் விஷ்வாமித்திரரை அவமானப்படுத்தக் காத்திருந்த வசிஷ்ட்டர் தசரதனின் துணையுடன் ராமன் திருமணத்தை நடத்தினார். ராமன் தன்னுடைய குரு விஷ்வாமித்திரர் தான் திருமணத்தை நடத்தித்தர வேண்டும் என்று சபையில் எடுத்துக்கூறாமல் மவுனம் காத்தார். இதனால் குருவின் மன வருத்தத்திற்கு ஆளானார். திருமணத்தை நடத்தக்கூடாது என்ற வசிஷ்ட்டர் தன் சுயநலத்திற்காக திருமண சடங்கை நடத்தினார். இதனால் ராமன், சீதா திருமண வாழ்க்கையில் துன்பமும், போராட்டமும் நிறைந்ததாக அமைந்தது. இதிலிருந்து நாம் புரிய வேண்டியது என்னவென்றால் தாய், தந்தையை விட குருவே மேலானவர் ஆவார் என்பதை உணர வேண்டும். எனவே நாம் அனைவரும

ஓம் விஸ்வாமித்ராய வித்மஹே

பிரம்ம ரிஷியாய தீம மஹி

தன்னோ சத்திய மித்திர ப்ரசோதயாத்

என்று அனுதினமும் ஜெபித்து குருவருளைப் பெறுவோம்.

முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம். தில்லை மரங்கள் அடர்ந்த காடு போன்ற இந்த கடற்கரை பகுதியில் தற்சமயம் இரண்டு தில்லை மரங்கள் மட்டுமே சாட்சியாக இருக்கின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் அன்னை தில்லை மகா காளி குடியிருந்து அருள் ஆட்சி செய்து வருகிறார்.

இங்கு இவர்களுக்கு கொய்யா பழம், சாக்லேட், மிட்டாய், எள்மிட்டாய் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. இதன் மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மேலும் இங்குள்ள கடற்கரை மண்ணில் புரண்டு, உருண்டு எழுந்து மீண்டும் கடல் நீராடி பின்பு தில்லை காளியை வணங்குவதன் மூலம் நம்முடைய பாவகர்மாக்களை அன்னை காளி நீக்கி அருள்புரிகிறார். மேலும் விஷ்வாமித்திரரால் பூஜிக்கப்பட்ட ஓம குண்ட விநாயகர் கோவில், சிவன் சந்நிதி, தாய் அகிலாண்டேஸ்வரி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகன், கால பைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. இவற்றில் சிகரம் வைத்தாற்போல கோவிலின் பின்புறம் இராஜராஜேஸ்வரி பீடம் மற்றும் சித்தர் சன்னதி அமைய பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி இரவும் பக்தகோடிகளால் சிறப்பாக அன்னதானத்துடன் பௌர்ணமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு விஷ்வாமித்திர மகரிஷியின் சூட்சம சமாதி நிலையும் அமையப் பெற்றுள்ளது. இந்த தகவல் வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளால் கண்டு உணர்ந்து சொல்லப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 60வருடங்களுக்கு முன்பு சிதிலம் அடைந்து இருந்த காலத்தில் வல்லநாட்டு சுவாமி சாது சிதம்பரம் அவர்களால் இரண்டு முறை 1008 நவக்கிரக தீப ஜோதி ஏற்றி வழிபட்டு பூஜை செய்யப்பட்ட பின்பு தான் இன்று தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:

இக்கோவிலில் செய்யப்படும் நவ அபிஷேகபரிகார பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்

1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.

2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.

3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.

4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம் போன்ற பிரச்சனைகள் நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன். மேலும் ஒவ்வொரு ஜோதிடரும் கட்டாயம் 3 வருடங்களுக்கு ஒரு முறை இங்குள்ள கடலில் குளித்து விநாயகர், காளி, சிவனை வணங்கி பின்புறம் உள்ள விஷ்வாமித்திரர் சித்தர் பீடத்தில் ராஜராஜேஸ்வரி பீடத்தில் அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதிக்கு உரிய எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர கட்டாயம் ஜோதிடத்தில் வாக்குபலிதம் அதிகரிக்கும் என்பது நான் கண்டு உணர்ந்த அனுபவ உண்மை ஆகும்.

மூன்று பௌர்ணமிக்கு மற்றும் அமாவாசைக்கு தொடர்ந்து சென்று தீபம் ஏற்றினால் எப்படிப்பட்ட பிரச்சனைனகளையும் தவிடுபொடியாக்கி விஸ்வாமித்திர மகரிஷி காத்து அருள்வார். இங்குள்ள கடலில் குளித்துவிட்டு குளித்த ஆடைகளை கடலில் விட்டுவிட வேண்டும். மேலும் இங்குள்ள கோவிலில் இருந்து எந்த ஒரு பிரசாதங்களையும் வீட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. நான் பெற்ற இன்பத்தை வாசகர்களுக்கு படம் பிடித்து காட்டி விட்டேன்.

வேணும் சுபம் வல்லநாட்டு சுவாமி அருள் துணை! ஸ்ரீகண்ணையா யோகி அருள் துணை! ஸ்ரீவெள்ளைச்சாமி அடிகள் அருள் துணை!

No comments:

Post a Comment