Tuesday, April 21, 2015

வெற்றியின் ரகசியம் என்ன …..

வெற்றியின் ரகசியம் என்ன …..

வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், இதோ கீழே ….

தன்னம்பிக்கை!

புயலில், மரத்தைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் போல், வாழ்க்கைப் புயல் நம்மைச் சாய்த்து விடாமல் காப்பது தான் தன்னம்பிக்கை. உலகமே ஏசினாலும், தூற்றினாலும், நம்மைத் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை, நம் சுயத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை; நம் பலத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

எது நம் தன்னம் பிக்கையை தீர்மானிக்கிறது?

நாம் இதுவரை சாதித்த சாதனைகள், பெற்ற விருதுகள், கிடைத்த பாராட்டுக்கள், நம் குடும்ப மற்றும் சமூகப் பின்னணி, நாம் படித்த பள்ளி மற்றும் கல்லூரியின் தரம், நம்மைப் பற்றி நாம் வரைந்து வைத்திருக்கும் சுயசித்திரம், எல்லாவற்றிக் கும் மேலாக, “நான் சாதிக்கப் பிறந்தவன், எப்படியும் சாதித்துக் காட்டுவேன்’ என்கிற வைராக்கியம், இவையெல்லாம் நம் தன்னம்பிக்கையைத் தீர்மானிக்கிறது.

தன்னம்பிக்கை எதற்கு வேண்டும்?

தன்னம்பிக்கை ஊன்று கோல் போன்றது. கால் தடுக்கும்போது, கீழே விழுந்து விடாமல் ஊன்று கோல் தாங்கிப் பிடிப்பது போல, நாம் தோல்வியைச் சந்திக்கும் போதும், நம்முடைய முயற்சி, நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராத போதும், நம்மைச் சுற்றியுள்ள உலகம், நம் தகுதிக்கும், திறமைக்கும் உரிய அங்கீகாரம் தராத போதும், நம்மை மனம் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தன்னம்பிக்கைதான்.

தன்னம்பிக்கையை வளர்க்க முடியுமா? முடியும். இதோ சில ஆலோசனைகள்:

* இன்னொரு மனிதனால் சாதிக்க முடிந்த எந்தச் செயலையும், நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை, நம் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மோதுவதற்காக, மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருந்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், “வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், அசுரத்தனமாகப் பந்து வீசுவர்… நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னதற்கு, சுனில் கவாஸ்கர், “என்னால் பந்தைப் பார்க்க முடியும்தானே…’ என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம். என்ன ஒரு தன்னம்பிக்கை பாருங்கள்.

* பொறுத்தார் பூமி ஆள்வார். நம் இலக்கை அடையும் வரை, பொறுமை காக்க வேண்டும். முதல் முயற்சியிலேயே சோர்ந்து விடக்கூடாது. மலை உச்சியை அடைவதற்கு, படிப்படியாகத்தான் ஏற முடியும். ஒரே தாவலில் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல முடியாது.

* நம்முடைய இலக்கை நோக்கி முன்னேறும் வெற்றிப் பாதைகளில், ஒவ்வொரு மைல் கல்லை கடக்கும்போது, முதுகில் தட்டிக் கொடுக்கலாம். வெற்றியை அடக்கமாகவும், எளிமையாகவும் கொண்டாடலாம். அப்போது உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

* நாம் எடுத்த முயற்சியில் பலன் கிட்டும் வரை, உறுதியாக இருக்க வேண்டும். மொபைல் போனை தினமும் ரீசார்ஜ் செய்வது போல, தினமும் பத்து நிமிடம், தனியே அமர்ந்து நம் முயற்சி, வெற்றியில் முடியும் என்று திரும்பத் திரும்ப நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.

* நம்முடைய பலம் மற்றும் பலவீனத்தை சீர்தூக்கிப் பார்த்து, ஒரு செயலில் இறங்கிய பின், “என்னால் முடியுமா?’ என்ற சந்தேகம் எழக்கூடாது.

* நம்முடைய உடை, சூழ்நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஆள்பாதி, ஆடைபாதி. உடை நம் வேலையை, பதவியை, அந்தஸ்தை, எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கையை பிரதிபலிக்கட்டும்.

* நம்முடைய முயற்சியில் தடங்கல் ஏற்படும்போது, தலையில் கையை வைத்து, “ஐயோ இப்படி ஆகிவிட்டதே!’ என்று புலம்பும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

குழந்தைகளிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்க, இதோ சில யோசனைகள்:

* குழந்தை ஆசைப்படுகிறதே, பிடிவாதம் பிடிக்கிறதே என்ற ஒரே காரணத்திற்காக, எதையும் வாங்கித் தரக் கூடாது. குழந்தையின் வயதிற்கேற்ப, வளரும் சூழ்நிலைக்கேற்ப, அத்தியாவசிய தேவைக்கேற்ப வாங்கித் தர வேண்டும்.

*”நான் பட்ட கஷ்டம், என் பிள்ளை படக்கூடாது’ என்று சில பெற்றோர் பிள்ளையைக் கஷ்டமே தெரியாமல் வளர்க்கின்றனர். வயதிற்கேற்ப பொறுப்பும், சுதந்திரமும் கொடுத்தால் தான், குழந்தைக்குப் பக்குவமும், முதிர்ச்சியும் வளரும். ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும், பின்னர் அவற்றை திருத்திக் கொண்டு, தாமே தனித்து இயங்கக்கூடிய தன்னம்பிக்கை, இளமைப்பருவத்தில் வர வேண்டும்.

* தனக்குத் தகுதியிருந்தால் அல்லது இன்றியமையாத தேவையிருந்தால் மட்டுமே, பெற்றோரிடமிருந்து எதுவும் கிடைக்கும் என்பதை, குழந்தை உணர வேண்டும். தகுதி இல்லாமல், உழைக்காமல் கிடைக்கும் எதையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன், குழந்தைக்கு இருக்க கூடாது.

தன்னம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அதை எப்படிக் களைவது:

* அவநம்பிக்கை, என்னால் எப்படி முடியும்? நான் எடுத்த காரியம் கைக்கூடாமல் போய் விடுமோ என்கிற எண்ணங்களை மனதிலிருந்து அறவே அகற்ற வேண்டும்.

* தாழ்வு மனப்பான்மை, வறுமை மற்றும் வளர்ந்த சூழ்நிலையால் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், முதல் தலைமுறை செல்வந்தர்களின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். பெரும்பாலானோர் சிறுவயதில், கடும் வறுமையில் வாடியிருப்பர். பல அவமானங்களைச் சந்தித்திருப்பர். ஆக, வறுமை நம்முடைய வளர்ச்சிக்கு உத்வேகமாக இருக்க வேண்டுமே தவிர, முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது. அதுபோல, குறைவான கல்வியறிவு, எளிமையான குடும்பச் சூழ்நிலை, வழி நடத்த யாரும் இல்லை போன்ற காரணங்கள், நம்முடைய வைராக்கியத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டுமே தவிர, நம்மை பலவீனப் படுத்தக் கூடாது.

* வறுமை – நம்மையும், நம் அடுத்த தலைமுறையினரையும் வளர விடாமல் வாட்டி வதைக்கும் ஒரு நோய். இந்த நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து, அதிலிருந்து மீள வழிகளை ஆராய வேண்டும்.

* தோல்வி – நாம் எடுக்கும் முயற்சிகளில், சில தோல்வியடையலாம். ஆனால், நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றோமா என்பதில் தான், கவனம் இருக்க வேண்டும்.

* நாம் வளர்ந்த சூழ்நிலை – இது முடியும், இது முடியாது என்று சொல்லி வளர்க்கப்படும் போது, சிலருக்குத் திறமையும், தகுதியும் இருந்தும், முயற்சி செய்யாமல் இருந்து விடுகின்றனர்.

நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பது – தன்னம்பிக்கை:

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்மை ஏளனப்படுத்தலாம், உதாசீனப்படுத்தலாம், நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம், நம்மைப் பலவீனப்படுத்தலாம், நமக்கு உதவிக் கரம் நீட்டத் தயங்கலாம், நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சன்மானம், பாராட்டு, அங்கீகாரத்தைக் கொடுக்க மறுக்கலாம். ஆனால், நம் தன்னம்பிக்கை, ஆசை, கனவு, வைராக்கியம், சுயமரியாதையை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.

மனித மூளை அற்புதமானது. நாம் யாராக வேண்டும் என்று திரும்பத் திரும்ப நினைக்கிறோமோ அவராக மாறுவது உறுதி. “நம்மால் இயலாதது’ என்று தான் நமக்கு நாமே எல்லைக் கோட்டைக் கிழித்துக் கொள்கிறோம்.

தன்னம்பிக்கையுடன் இருப்போம். ஒரு பிரகாசமான எதிர்காலம் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment