உண்மையின் தத்துவங்கள்
01. ஒவ்வோர் இன்பமும் இறுதியில் துன்பமாகப் பரிணமிப்பதை ஒவ்வொருவரும் நாளடைவில் அறிவார்கள்.
02. காதுகள் இருந்தும், புண்ணியக் கதைகளைக் கேட்காதவன், பகுத்தறிவு இல்லாத பசுக்கள் முதலான பிராணிகளுக்கே ஒப்பாவார்கள்.
03. நல்லது செய்வோன் எவனும் நலிவுறுதல் இல்லை. அதே போன்று தீயது செய்பவன் எவனும் அதன் பலனை அனுபவிக்காமல் விட்டதுமில்லை.
04. இப் புவியில் பிறந்த எந்த மனிதனும் பிற மனிதனால் இரட்சிக்கப்படுகிறான் என்றோ, அழிக்கப்படுகிறான் என்றோ கூறுவது மடத்தனமானது.
05. உறுதியான மனமுடையோன் தான் செய்யும் காரியம் அனைத்தும் தான் செய்ததாகக் கருதமாட்டான்.
06. தெய்வத்தை மனிதன் யாண்டும் முழுமனதோடு ஆராதித்தால், அத் தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம் மனிதனை வந்தடைகின்றன.
07. அரசமரத்தின் விதை கண்ணுக்குத் தெரியாது. அது மிகவும் நுட்பமானது. ஆனால் அது ஒரு கட்டிடத்தின் இடுக்கில் விழுந்து வேர்விட்டுச் செடியாகி, மரமாகிக் கட்டிடத்தையே பெயர்த்துத் தள்ளுகிறது அப்படித்தான் நல்லவர் மனதையும் மிக எளிதில் கெட்ட சக்தி மாற்றி அணைய வைக்கும்
08. இனிய வாழ்க்கை கிட்டும் என்ற விருப்பத்தில் பரதர்மத்தில் பிரவேசிப்பது குளத்தில் குளிக்கப் போய் சேற்றை அள்ளிப் பூசுவது போலாகும்.
09. நம்பிக்கை இல்லாதவனுக்கு இவ்வுலகம் இல்லை, அவ்வுலகமும் இல்லை.
10. கடவுளைக் கான் நினைப்பவனுக்கு கல்லும் கடவுளே, கடவுளைக் கல்லாகப் பார்ப்பவனுக்கு கடவுளும் கல்லே.
11. சத்தியவான்களான உத்தம புருஷர்களுக்கு கிருதயுகம் யுத்தமானது என்றும் பொய்மையாளர்களான அதர்மபுருஷர்களுக்கு கலியுகம் உன்னதமானதென்றும் கலியுகத்தில் ஒருவன் சத்தியவானாகவும், தருமாத்மாவாகவும் இருந்தால் பூலோகத்தார் அவனைப் பரிகாசம் செய்வார்களே தவிரப் பெரிதாகப் போற்றமாட்டார்கள்.
12. நீரில் ஏற்படும் நுரைக்குச் சமமான இந்த மனிதப் பிறவியை நிலையானது என்று எண்ணுகின்றனரே மூடர்கள்.
13. இந்த வையகம் முழுவதையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டு ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருக்கின்றனரே அந்தோ பரிதாபம்.
14. நம் முன்னோர்கள் கொண்டு போக முடியாததை நாம் மட்டும் கொண்டு போக முடியுமா? இதையெண்ணிப் பார்ப்பதில்லையே என் செய்வேன் யான்.
15. பராக்கிரமமும் நான் என்ற மமதையும் நானே செய்தேன் இனியும் நானே செய்வேன் என்ற ஆணவமெல்லாம் நெருப்பில் பட்ட இலவம் பஞ்சு போல் காலமென்னும் சக்கரத்தில் அகப்பட்டு அழிந்து விடும்.
No comments:
Post a Comment