பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலங்களும் , அறிவியல் உண்மைகளும்
வேத காலத்தின் ஆரம்ப நிலையை, சற்றேறக்குறையத் துல்லியமாக அறிந்துகொள்ள, பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தைத் தெரிந்துகொள்வது அவசியம் . சர்ச்சைக்குரிய, பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் இந்த விஷயம், நவீன ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் உதவியால் இப்போது மிகவும் தெளிவாகியிருக்கிறது.
மெம்ஃபிஸ் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்துவரும் டாக்டர். நரஹரி ஆச்சார் என்னும் வானவியல் வேதியாளர் தனது தெளிவான ஆராய்ச்சியின் உதவியால், மஹாபாரதப் போர் நிகழ்ந்த காலம் கி.மு. 3067 என உறுதியாகத் தெரிவிக்கிறார். 'மஹாபாரதம்' என்னும் இதிஹாஸத்தின் 3,5, 18 பர்வங்களை ஆராய்ச்சி செய்து, தனது வானவியல் வரைபட மென்பொருளில் செலுத்த, அதன் மூலம் இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துக் கருத்துகளும் காட்டும் காலம் கி.மு.3067 எனத் தெரிவிக்கிறார். 1969-ம் ஆண்டே திரு. எஸ்.இராகவன் என்னும் அறிஞர் இதே கருத்தைச் சொன்னதையும் இங்கே நினைவு கூர்கிறார்.
இதிஹாஸத்தில் சொல்லப்பட்டிருக்கும் 150-க்கும் மேற்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தி, குருக்ஷேத்திரப் போர் நிகழ்ந்த காலத்தை, வானவியல் ஆராய்ச்சியின் மூலமாக நிர்ணயிக்க முடியும். போரைக் குறித்த இந்தக் கருத்துகள் இதிஹாஸமெங்கும் பரவலாக இருப்பினும், குறிப்பாக, 'உத்யோக' மற்றும் 'பீஷ்ம' பர்வங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. அதர்வண வேதமும், அதன் உத்யோக மற்றும் பீஷ்ம பர்வங்களில் உட்பிரிவுகளும் காட்டும் கோள்களின் வானவியல் சகுனங்களுக்கு ஒத்தாற்போல், பீஷ்ம பர்வத்தில் முறையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 'கேட்டை' என்னும் 18-வது நக்ஷத்திரத்தை புதன் கிரகம் அடையும் முன்னர் அது கடந்துவந்த பாதையைப் பின்னோக்கி வானவியல் மூலம் , இந்தக் குறிப்புகளின் உதவியுடன் ஒன்று சேர்த்துக் காணுங்கால், பேராசிரியர். ராகவன் குறிப்பிட்ட கி.மு. 3067-ம் ஆண்டுக்கே இது நம்மை இட்டுச் செல்கிறது.
கி.மு.3012-ல் கலியுகம் தொடங்கியதாகச் சொல்லப்படும் கருத்தை இது ஒத்ததாக இருக்கிறது என டாக்டர். ஆச்சார் கூறுகிறார். புராணங்களின் கூறுப்படி, கலியுகம் இதற்கும் முன்னரே தொடங்கி விட்டாலும், பகவான் கிருஷ்ணரின் இருப்பினால் இது கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. குருக்ஷேத்ரப் போர் முடிந்த 35 ஆண்டுகளுக்குப் பின்னர் [கி.மு.3032], பகவான் கிருஷ்ணர் மறைந்ததும் கலியின் வேகம் தீவிரமடைந்தது.
கேட்டை என்னும் 18-வது நக்ஷத்திரத்தை புதன் கிரகம் அடையும் முன்னர் அது கடந்துவந்த பாதை
உதாரணமாக, பெரும் பாட்டனார் பீஷ்மர் மறைந்த காலத்தைக் குறிப்பிட வேண்டுமெனில், தக்ஷிணாயணம் முடிந்து, உத்தராயணம் தொடங்கிய மாக மாதம்,[ஜன-பிப்] சுக்ல அஷ்டமியில் அவர் உயிர் நீத்த காலம் ஜனவரி, 13, 3066 என மென்பொருள் காட்டுகிறது.
பேராசியர்.ராகவன் குறிப்பிடும் கால அளவுகள் பின்வருமாறு:
பகவான் கிருஷ்ணர் சமாதானத் தூது செல்வதற்காக உபப்லவய நகரத்திலிருந்து கிளம்பியது - செப்.26, கி.மு.3067
கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்தை அடைந்தது - செப்.28, கி.மு. 3067
சந்திர கிரஹணம் - செப்.29, கி,மு. 3067
கர்ணனுடன் கிருஷ்ணர் ரதத்தில் சென்றது - அக்.8, கி.மு. 3067
சூரிய கிரஹணம் - அக்.14, கி.மு. 3067
போர் துவங்கியது - நவ.22, கி.மு.3067
பதினான்காம் நாள் தொடங்கி, மறுநாள் விடியற்காலம் வரை நடந்த போர் - டிச.8, கி.மு. 3067
பலராமர் திரும்பி வந்தது -டிச.12, கி.மு. 3067
தக்ஷிணாயண புண்யகாலம் - ஜன.13, கி.மு. 3066[4]
பகவான் கிருஷ்ணர் பூவுலகை நீங்கியது - கி.மு. 3031
வேத வியாஸர் வேதப் பாடங்களை ஒழுங்குபடுத்தியது [உத்தேசமாக] - கி.மு. 3000
ஸரஸ்வதி நதி வறண்டு,[அல்லது]மறைந்து போனது - கி.மு.1900
பீஷ்மர் அம்புப் படுக்கைஅம்பு பட்டு வீழ்ந்ததிலிருந்து 48-ம் நாள் பீஷ்மர் உயிர் துறந்த குறிப்புடன் மேலே கூறியிருப்பது பொருந்தி வருகிறது. ஆனால், பீஷ்மர் 58 இருவுகள் தூக்கமின்றி அம்புப் படுக்கையில் இருந்தார் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. இருப்பினும், அவர் தலைமை தாங்கிப் போர் புரிந்த 10 நாட்களும் அவர் தூக்கமின்றியே கழித்திருப்பார் எனக் கொண்டால், இந்த 58 இரவுக் கணக்கும் சரியாகவே வரும் மஹாபாரத நூலில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளின் வாயிலாக, கலியுகம் ஆரம்பித்த 36 ஆண்டுகளுக்குப் பின், [கி.மு.3138-ல்] யுதிஷ்டிரர் மஹாராஜாவாக முடிசூட்டப் பட்டிருக்கிறார் என முடிவு கொள்ள இயலும். இதிஹாஸத்தில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு களைக் கொண்டே, பட்நாயக் என்னும் அறிஞர் பாரதப் பெரும் போர் தொடங்கப்பட்ட தினம் அக்.16, கி.மு. 3138-ல் எனக் கணக்கிட்டிருக்கிறார். சொல்லப்போனால், பல்வேறு அறிஞர்கள் பலவிதமான கணக்குகளைக் கொண்டு பல்வேறு முடிவுகளுக்கு வரக்கூடும். மஹாபாரதக் கதைக்கே பல்வேறு வடிவங்கள், பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டு, மூல வடிவத்திலிருந்து பல்வேறு மாற்றங்கள் கொண்டதாக இருக்கின்றன. உதாரணமாக, 2.28.48-9 வரிகளில் 'ரோமா' 'அந்தகி' என்னும் சம்ஸ்கிருத சொற்கள் காணப்படுகின்றன. இவை ரோமாபுரியையும், ஆண்டியோக் என்னும் நகரையும் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவற்றைக் கொண்டு சொல்லப்போனால், மஹாபாரதக் காலம் கி.மு. 300 எனத்தான் சொல்ல இயலும். ஏனெனில் ஆண்டியோக் நிர்மாணிக்கப்பட்டதே கி.மு 301-ல்தான். ஆனால், இந்த வடிவம், இதற்கு முன்னரே எழுதப்பட்ட ஆதி நூலின் காலத்தைக் குறைக்க முடியாது. எப்படியென்றால், குருக்ஷேத்திரப் போர் முடிந்ததுமே மூல நூல் எழுதப்பட்டதாக அறிகிறோம்.
எப்படி இருப்பினும், பல்வேறு அறிஞர்கள் மஹாபரதப் போரின் காலத்தை கி.மு. 3102-லிருந்து, கி.மு. 3139 வரை சொல்லியிருக்கின்றனர் என பி.என்.நரஹரி ஆச்சார் விளக்குகிறார். ஆனால் இவர்கள் சொல்லும் எந்த நாட்களும் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வானவியல் முடிபுகளைக் கொண்டுவரவில்லை.
கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விவரம் என்னவெனில், கோள்களால் கணிக்கப்பட்ட முடிவுகளை ஒத்தாற்போலவே, கி.மு. 3102, பெப். 17-18 தேதிகளில் கலியுகம் பிறந்ததாகப் பல்வேறு வேத விற்பன்னர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. கி.பி. 476 - 550ல் வாழ்ந்த ஆர்யபட்டா என்னும் வான சாஸ்திர அறிஞர்' தனது 23-ம் வயதில் கலியுகம் பிறந்து 3600 ஆண்டுகள் ஆகிவிட்டன' எனக் கூறியிருக்கும் கருத்துக்கும் இது வலு சேர்ப்பதாயிருக்கிறது. கி.பி. ஐந்தாம் கலியுகம் பிறந்து 3600 ஆண்டுகள் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தக் கணித, மற்றும் வானவியல் மேதை மஹாபாரதத்தில் பதிந்திருக்கும் கோள்களைப் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். இவரது கணிப்பின்படி, கி.மு. 3100-ல் குருக்ஷேத்திரப் போர் நிகழ்ந்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார். ஹிந்துக்களும், நமது மரபுகளும் சொல்லுவது போன்றே, சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தப் போர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்னும் கருத்தோடு இது ஒன்றுகிறது.,
இதுவும் கி.மு. 3102 ஆண்டையே குறிக்கிறது. ஆனால், மஹாபாரதத்தில் கலியுகத்தின் பிறப்பு பற்றிய எந்தத் தகவலும் இல்லை. துவாபர யுகத்துக்கும், கலியுகத்துக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் நடந்ததாக மட்டும் குறிப்பு இருக்கிறது. பகவான் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டுச் சென்றதற்கு முன்புதான் இது நடந்திருக்க வேண்டும். ஆனால், கிருஷ்ணரின் மறைவுக்கு முன்னரே கலியுகம் பிறந்து விட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன.
பாகவத புராணத்தில் [1.15.36] 'தன் சுய உருவுடன் பகவான் கிருஷ்ணர் பூவுலகை நீத்தபோது, அதற்கு முன்னர் தன்னை வெளிக்காட்டாமல் இருந்துவந்த கலி, அந்த நாள் முதலே, தன்னை முழுதுமாக வெளிப்படுத்திக்கொண்டு, அறிவற்ற மூடர்களுக்கு கெட்ட காலத்தை உருவாக்கத் தொடங்கினான்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே, கலியுகம் ஏற்கெனவே பிறந்தாகி விட்டது; ஆனால் பகவான் கிருஷ்ணரின் ஆளுமையால் அது தனது இருப்பைக் காட்டிக் கொள்ளாமல் அடங்கி இருந்தது. ஆனால், அவர் பூமியை விட்டு அகன்றவுடன், அது முழு வீச்சுடன் செயல்படத் தொடங்கியது. இந்தச் செய்தி 'கலி-ராஜ-விருத்தாந்தத்திலும்' சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, கி.மு. 3067-ல்தான் பாரதப் போர் நிகழ்ந்திருக்க வேண்டும். கலியுகத்தின் பிறப்பு கி.மு. 3102-ல் நிகழ்ந்ததாக ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது.
பாகவத புராணமாக்ஸ் முல்லர் இன்னும் மற்றும் சிலரால் இக்கருத்தை ஏற்க இயலவில்லை. ஸப்தரிஷி மண்டலம் மூலமாகக் காட்டும் குறிப்புகளை அவர்கள் உண்மையென நம்ப மறுக்கின்றனர். இருப்பினும், பாகவத புராணத்தின் பனிரெண்டாவது பாகத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் இதே போன்ற விவரணைகள் காணக் கிடைப்பதால், மஹாபாரதத்தின் கால அளவினைக் கணிக்க இவை உதவுகின்றன.
'தி எம்பைர் ஆஃப் டைம்: காலென்டர்ஸ், க்ளாக்ஸ் அண்ட் கல்சர்ஸ்' எனும் நூலை எழுதிய ஆண்டனி ஏவெனி என்னும் அறிஞர் கூறியிருக்கும் ஒரு கருத்து கவனிக்கத் தக்கது. 'மில்கி வே' எனச் சொல்லப்படும் 'பால் வழிப்பாதை'யைச் சுற்றியே சூரிய மண்டலத்திலிருக்கும் அனைத்துக் கோள்களும் சுழல்வதாகவும், இவற்றுக்கெல்லாம் 'டாரஸ் கன்ஸ்டெல்லேஷன்' எனும் ஒரு ஒளிமிக்க நட்சத்திரக் கூட்டத்தைச் சுற்றி நிகழ்வதே காரணம் என்றும் அவர் கூறுகிறார். இந்த ஒளிக்கூட்ட தாரகைகளே 'ஏழு சகோதரிகள் [அ] கிருத்திகைகள் என வேதங்களில் சொல்லப்படுகின்றது. 'ஆல்ஸியோன்' எனும் நட்சத்திரமே இவற்றில் மிகவும் ஒளி கூடியது.
இந்த நட்சத்திரத்தை ஒரு சுற்று சுற்றிவர சூரியனுக்கு சுமார் 3000 ஆண்டுகள் பிடிக்கும். இதன் காரணமாகவே பல்வேறு நாட்டுக் கலாச்சாரங்களில் இந்த நட்சத்திரத்திற்கு விசேஷ மரியாதை உண்டு. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், இந்த வகையான சுழற்சி முறையினாலேயே, பாகவத புராணத்தில் சொல்லியபடி, ஸப்தரிஷிகள் தங்கள் இடங்களை 2700 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொள்கிறார்கள். ஆகவே, இந்த நட்சத்திரங்களை வைத்து காலத்தைக் கணிக்கும்போது, வேத நூல்களும், ராமாயணம் போன்ற இதிஹாஸங்களில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களைக் கொண்டு இவற்றின் காலம் நாம் நினைப்பதற்கும் முந்தைய ஒரு காலமாக இருக்க வேண்டுமெனத் தெரிகிறது.
மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் [இதன் காலம் கி.மு.2600] பகவான் கிருஷ்ணர் தன் இளவயதுத் தோற்றத்தில் இருக்கிறார். பகவான் கிருஷ்ணர் இந்தக் காலத்துக்கும் முன்பே இருந்திருக்க வேண்டும் என்றே இது காட்டுகிறது.
அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப் பின் பாரதம் வந்த கிரேக்க யாத்ரீகர்களின் குறிப்புகளிலும் கிருஷ்ணரைப் பற்றிக் காணப்படுகிறது. ஹரிகிருஷ்ணா என்பதன் அடிப்படைட்யைக் கொண்ட ஹரக்லிஸ் என்னும் பெயரால் கிருஷ்ணரை ப்லைனி என்னும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மெதோரா[மதுரா] என்னும் பகுதியில் வாழ்ந்த சூர்ஸேனி என்னும் குடியினரால் ஹரக்லிஸ் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கிறார். [கிருஷ்ணரின் பாட்டனாரும், வஸுதேவரின் தந்தையுமான 'சூர' என்பவரின் குடியே சூரஸேனி].
கி.மு 330-ல் வாழ்ந்த அலெக்ஸாண்டர் மற்றும் ஸண்ட்ரகோட்டாஸ் என்பவருக்கு 138 பரம்பரைகளுக்கு முன்னர் இந்த ஹரக்லிஸ் வாழ்ந்ததாகவும் அவை தெரிவிக்கின்றன. ஒரு பரம்பரைக்கு 20 ஆண்டுகள் எனக் கொண்டால்கூட, இதன்படி கிருஷ்ணரின் காலம் கி.மு. 3090 என வருகிறது. கி.மு. 3102-ல் கலியுகம் பிறந்தது என்னும் கணக்குக்கு இது ஏறத்தாழ ஒத்து வருகிறது. எனவே பகவான் கிருஷ்ணர் என்பவர் கி.மு. 3200-3100களில் வாழ்ந்த ஒரு மாபெரும் புருஷர் என்பதும், அவர் 125 ஆண்டுகள் பூவுலகில் இருந்ததும் தெரிய வருகிறது.
பகவான் கிருஷ்ணர் பூவுலகை விட்டு நீங்கிய காலம்:
மேற்கூறிய செய்திகள் பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகை விட்டு நீங்கிய காலத்தைக் கணிக்க உதவி செய்கிறது. திரு. ஆச்சாரின் கூற்றுப்படி, 'மஹாபாரதத்தில் சொல்லியிருப்பதன்படி, திரௌபதியின் திருமணத்தின் போது கிருஷ்ணர் முதன் முதலாக இக்கதைக்குள் பிரவேசிக்கிறார். பாரதப் போர் முடிந்து 36 ஆண்டுகளுக்குப் பின், அவர் புவியிலிருந்து மறைகிறார். அவரது பிறப்பைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இதிஹாஸத்தில் இல்லை. ஆனால், மறைவு பற்றி இருக்கிறது. பாரதப் போரின்போது கண்ட துர் சகுனங்களைப் போலவே மீண்டும் அவற்றை கிருஷ்ணர் காணுகிறார். [ம.பா.14.3.17] யாதவ குலமே பூண்டோடு அழிந்து போவதாக அவை உணர்த்துகின்றன.
வானவியல் மாதிரிவடிவமைப்புகளின்படி, கி.மு.3031-ல் [கி.மு.3067க்கு 36 ஆண்டுகளுக்குப் பின்] ஒரே கால கட்டத்தில் அடுத்தடுத்து மூன்று கிரஹணங்கள் வந்ததாகக் காட்டுகிறது. அக்.20-ல் சந்திர கிரஹணமும், நவ.5-ல் சூரிய கிரஹணமும், இன்னுமொரு சந்திர கிரஹணம்[பாதி] நவ.19-ல் அடுத்தடுத்து 14 நாட்கள் இடைவெளிகளில் 'அபர்வணி' காலமாக நிகழ்ந்ததாகக் காட்டுகின்றன. போர் முடிந்த 36-ம் ஆண்டில் கிருஷ்ணர் மறைந்தார் என்னும் கருத்துடன் இது ஒன்றுகிறது.ஹரிவம்சமும், பாகவத புராணமும் கிருஷ்ணரின் பிறப்பைப் பற்றி விவரமாகச் சொல்லுகின்றன. பூமியிலிருந்து அவர் மறைந்த காலத்தை [கி.மு.3031 இதிஹாஸத்தின் வாயிலாக அறிகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.'
'பகவான் கிருஷ்ணர் இருந்ததற்கான கூடுதல் ஆதாரங்கள்':
வேதியல் கலாச்சாரமா, கிருஸ்தவக் கலாச்சரமா, எது முதலில் தோன்றியது என்பதுபற்றியக் கருத்துகளும், மாறுபாடுகளும், அதிகம் விவரமறியாதவர்களிடம் காணப்படுகிறது. பக்தி வழியே இறைவனை அடைவது என்னும் வழக்கம் கிருஸ்தவ வழிமுறைகளில் இருந்து வேதிய வைஷ்ணவ சம்பிரதாயத்துக்குப் பரவியது எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். இதன் மூலமாகத்தான், பகவான் கிருஷ்ணர், மஹாவிஷ்ணு மீதான அன்புடன் கூடிய பக்தியும், அதைத் தொடர்ந்து அவரது அவதாரங்களும் வந்தன என்றும் கூறுவர். மக்களை மதம் மாற்றச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சில கிருஸ்தவ மத போதகர்களால் செய்யப்படும் இத்தகைய பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்கு மாறுபட்டது. கிருஸ்தவ மதம் பிறப்பதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே வைஷ்ணவ முறையில் கிருஷ்ணர் மீது பக்தி செலுத்தும் மரபு இருந்ததற்கான தொல்பொருள் தடயங்கள் இருக்கின்றன.
பிரசித்தி பெற்ற புத்த தலமான சாஞ்சி[மத்திய இந்தியா]க்கு அருகில், சுமார் 45நிமிட கடினமான சவாரிக்குப் பிறகு 'விதிஷா' என்னும் பெஸ்நகரில் கம்ப் பாபா தூண் என்னும் ஒரு சின்னத்தைக் காணலாம். ஹெலியோடோரஸ் என்னும் கிரேக்க தூதர் இந்தியாவுக்கு கி.மு.113-ல் வந்தபோது நடப்பட்ட தூண் இது. 'டக்ஸிலா' என்னும் நாட்டின் அரசனான அண்டியால்கிடஸ் என்பவன் இந்தத் தூதரை ராஜா பாகபத்ராவின் அரசவைக்கு அனுப்பி வைத்தான். வடமேற்கு இந்தியாவில் கி.மு.325-ல் அலெக்ஸாண்டரால் கைப்பற்றப்பட்ட 'பாக்ட்ரியன்' பகுதியைச் செர்ந்தது டக்ஸிலா. ஆண்டியால்கிடஸின் காலத்தின்போது, கிரேக்க ஆளுமைக்குள் இப்போது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப் என்றழைக்கப்படும் பகுதிகள் இருந்தன.
இந்தக் கற்றூணில், தான் விஷ்ணு பக்தனாகி, வைஷ்ணவ மதத்துக்கு மாறியதாக ஹெலியோடரரஸ் எழுதி வைத்திருக்கிறார். ராயல் ஏஷியாடிக் ஸொஸைட்டியின் பதிப்பில் வெளியான சஞ்சிகைக் குறிப்பு இந்தத் தூணில் எழுதியிருப்பதைப் பின்வருமாறு கூறுகிறது:
'தனது பதினான்காம் ஆண்டு ஆட்சியை சிறப்புற நடத்திவரும், மக்கள் காவலர் ராஜா காசிபுத்ர பாகபத்ராவைக் காண்பதற்கென பேரரசர் ஆண்டியாகிடஸால் அனுப்பிவைக்கப்பட்ட தூதரான, விஷ்ணு பக்தனும், டியான் என்பவரின் மகனும், டக்ஸிலா என்னும் நகரைச் சேர்ந்தவருமான ஹெலியோடரஸ் என்பவரால், கடவுளுக்கும் கடவுளான [விஷ்ணு]வாசுதேவரைப் போற்றும் கருடத் தூண் என்னும் இந்தத் தூண் நிறுவப் பெற்றது. சுயக் கட்டுப்பாடு, தானம், தன்னிலையறிவு என்னும் மூன்று முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றினால் அவை சுவர்க்கத்துக்கு வழிகாட்டும்.'
ஹெலியோடரஸ் ஒரு விஷ்ணு பக்தர் என்பதையும், அவர் வைஷ்ணவ வழிபாட்டு முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதையும் இது காட்டுகிறது. இத்தகைய பெருமகனாரே மதம் மாறியபோது, இன்னும் எத்தனை கிரேக்கர்களும் கூடவே மாறினார்கள் என்பதையும் ஊகிக்க முடியும். கிரேக்கர்கள் இந்தியா மீதும், அது காட்டிய வழிமுறைகளின் மீதும் கொண்டிருந்த நன்மதிப்பையே இது முழுமையாகச் சுட்டுகிறது. 1877-ல் தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜெனரல் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால் இத்தூண் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மஞ்சள் குங்குமத்தால் முழுதுமாகப் பூசியிருந்ததால், அவரால் இதிலிருந்த எழுத்துகளைப் படிக்க இயலவில்லை. இங்கு வரும் யாத்ரிகர்கர்கள் இந்த மாதிரியான வழக்கத்தைச் செய்ததால் ஏற்பட்ட விளைவு இது.
1901-ல் திரு. லேக் என்பவரே இதில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது என்னும் உண்மையைக் கண்டுபிடித்தார். பிராமி மொழியில் எழுதப்பட்டிருந்த வரிகளை மொழி பெயர்த்தபின், இந்தத் தூணின் மதிப்பு இன்னும் கூடுதலாயிற்று.
ஸம்ஸ்கிருத மொழியில் வல்லுநர்களான ஆங்கிலேயர் சிலர், தங்களைப் பற்றிக் கொண்ட பெருமையின் காரணமாக, வேதங்களில் சொல்லப்பட்டிருப்பவைகளும், பகவான் கிருஷ்ணரைப் பற்றிய வழிவழிக் கதைகளும் பைபிளில் இருந்தும், ஏசுநாதரைப் பற்றிய கதைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவையாக இருக்கும் எனும் ஒரு கருத்தைப் பரப்பத் தொடங்கி இருந்தனர். ஆனால் இந்த ஹெலியோடரஸின் தூண் பற்றிய கண்டுபிடிப்பு, இவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது மட்டுமின்றி, வைஷ்ணவ வழிபாடு கிருஸ்து பிறப்புக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை உறுதியும் செய்தது.
இந்த கிரேக்க தூதர் வைஷ்ணவத்தால் ஈர்க்கப்பட்டு கி.மு. 200-லேயே மதம் மாறியிருப்பதைப் பார்க்கும்போது, வைஷ்ணமும், அதன் முக்கியக் கோட்பாடான பக்தி மார்க்கமும் எத்தனை ஆழமாக இவரது காலத்தில் வேரூன்றி இருக்கவேண்டும் என்பதும், அப்படியாயின், இந்த மதம் இதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஏன்.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூட இருந்திருந்தால் மட்டுமே, .... இவ்வளவு வளர்ச்சி பெற்ற காரணத்தினாலேயே ஹெலியோடரஸ் இதன்பால் ஈர்க்கப்பட்டார் என்பதும் தெளிவாகப் புரியவரும். எனவே இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தூண் என்பதில் ஐயமில்லை.
இந்த ஹெலியோடரஸ் தூண் சுட்டிக் காட்டும் இன்னொரு செய்தி, வேத காலத்தில் மதம் மாறுவதென்பது அனுமதிக்கப்பட்டதாக இருந்தது என்பதே. ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே உருவான தடைகளே பிற்காலத்தில் இந்த மதம் மாறுதலை ஏற்க முடியாமல் போனதன் காரணம். வேத மதம் தன்னை ஒரு உலகளாவிய ஒன்றாகக் கருதி, அனைவரையும் வரவேற்றது. திரு.ராய்சவுத்ரி என்பவர் சொல்லுவது போல, ' வைஷ்ணவர்கள் மத மாற்றத்தில் அதிக ஆர்வம் காட்டினார்கள் என்பதையும், கிரேக்க மக்களைக் கவரும் விதத்தில் அந்த மதம் வளர்ந்திருந்தது என்பதையும், தன்னுடைய அணைப்புக்குள் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தது என்பதையும் இந்த 'பெஸ்நகர் சான்று' காட்டுகிறது'
கிரீஸ் நாடு வேதியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மிளிர்ந்தது என்றும், அந்நாட்டு அறிஞர்கள் வேதகால முனிவர்களிடமிருந்து கற்றறிந்ததையே தமது கோட்பாடுகளாகப் பரப்பினார்கள் என்றும் கூட சொல்ல இயலும். கிருஸ்தவ மதம் காட்டும் இறைவனிடத்தில் பக்தி என்னும் வழியும் வேத காலத்திலேயே இருந்து வந்தது என்பதற்கும் இது சாட்சியாக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், கிருஸ்தவ மதத்தில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம், ஏற்கெனவே வேத மதத்தில் இன்னும் அதிகமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. இதன் நுணுக்கங்களை அறிய வேண்டுமெனில், வேதிய, வைஷ்ணவ வழிமுறைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
'மோரா கிணறு', 'கோஸந்தி கல்வெட்டுக் குறிப்புகள்' என்னும் தொல்பொருள் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் வைஷ்ணவ சம்பிரதாயத்தின் பெருமையையும், நுணுக்கங்களையும், இறைவன் என்பதன் முழுப் பரிணாமத்தையும் மிக விளக்கமாக, கிருஸ்து பிறப்பதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே சொல்லியிருப்பதையும் காணலாம். 1882-ல் திரு. கன்னிங்ஹாம் மதுராவுக்கு 7 மைல்களுக்கு மேற்கே இருக்கும் மோரா என்னும் குக்கிராமத்தில் வைஷ்ணவத்தின் சிறப்பை விளக்கும் ஒரு அரிய தடயத்தைக் கண்டுபிடித்தார். ஒரு புராதனக் கிணற்றின் உச்சியில் இருந்த ஒரு கல்லில் குறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களைக் கண்டுபிடித்தார். வலப்புறத்தில் இருந்த எழுத்துக்கள் முற்றிலுமாக அழிந்து போயிருப்பினும், மீதி இருந்தவை படித்தறியக் கூடிய விதத்தில் இருந்தன. அவை முறையாக எழுதப்பட்டு, அதன் பிரதி வடிவம் ஒன்று 'இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின்' ஆண்டறிக்கையில் வெளியிடப் பட்டிருக்கிறது. அதில் சொல்லியிருக்கும் செய்தி மிகவும் தெளிவாக இருக்கிறது. கிருஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிருஷ்ணர் வழிபடப் பட்டார் என்றும், அவர் மட்டுமில்லாமல், அவரைச் சேர்ந்த விரிஷிணி குலத்தைச் சேர்ந்த ஐவரும் வழிபடப் பட்டனர் என்றும் இந்தச் செய்தி தெரிவிக்கிறது. கிருஷ்ணர்,[வாசுதேவா], பலராமர் [சங்கர்ஷணர்], ப்ரத்யும்னர், சம்பா, அனிருத்தர் என்பவரே இந்த ஐவரும் என அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிருஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முறையான கோட்பாடு, வழிபாட்டு முறை, உலகளாவிய தன்மையுடன் ஸனாதன தர்மமும், வைஷ்ணவமும் செழித்து ஓங்கியிருந்தன என்பதற்கு இதுவே சான்று. 'மோரா கிணற்றில் எழுதப்பட்ட வாசகங்கள் இந்த வரலாற்று உண்மைக்குக் கிடைத்த வலுவான தொல்பொருள் ஆராய்ச்சிச் சான்று.
ராஜஸ்தானத்தில் சித்தூர் மவட்டத்திலிருக்கும் 'கோஸந்தி' என்னும் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டும் மொரா கிணற்று குறிப்புகளைப் பெரும்பாலும் மறு பிரதி செய்ததுபோல் இருக்கிறது. கவிராஜ் ஷ்யாமள தாஸா என்பவர் 'தி பெங்கால் ஏஷியாடிக் ஸொஸைட்டி'யின் வெளியீட்டின் மூலம் இதனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். உதயபூரில் இருக்கும் விக்டோரியா அருங்காட்சியகத்தில் இதனை யாவரும் பார்க்கலாம்.
இந்தப் பதிவுக்குச் சம்பந்தமாக, அதில் எழுதப்பட்டிருக்கும் செய்தியை மட்டும் இங்கே பார்ப்போம்.: 'சங்கர்ஷணர், வாசுதேவர், என்னும் கடவுளர்க்காக நாராயணர் பகுதியில் இருக்கும் வழிபாட்டுக்குரிய [இந்தக்] கல் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்காக [பாகவாப்யாம்] .....'
வட பிராமி என்னும் ஒருவகையான ஸம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கல்வெட்டின் காலம், கிருஸ்து பிறக்க இரு நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது மயூரா அல்லது சுங்க காலம் எனத் தெரிய வருகிறது. இதே போன்ற இன்னொரு கல்வெட்டு இதற்கு அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 'ஹாதி-வடா கல்வெட்டு' என இதற்குப் பெயர். இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த கே.பி.ஜெய்ஸ்வால் என்பவரின் கூற்றுப்படி, இதன் மூலம் க்ஷத்திரியர்கள் மட்டுமின்றி, பிராமணர்களும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்தனர் எனத் தெரிகிறது. வைஷ்ணவம் இந்திய சமுதாயத்தில் வேரூன்றி இருந்தது என்பதையே இது காட்டுகிறது.
மஹாராஷ்ட்ரத்தில் இருக்கும் நானாகட் குகைக் கல்வெட்டுகளிலும் வாசுதேவரும் சங்கர்ஷணரும்[கிருஷ்ணர், பலராமர்] அந்தணர்களால் துதிக்கப்பட்டனர் என்னும் குறிப்பு இருக்கிறது. கி.மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென ஆராய்சி முடிவுகள் உரைக்கின்றன.
'வடக்கில் மட்டுமின்றி, தெற்கிலும், மஹாராஷ்ட்ரம் வரையிலும் பாகவத[வைஷ்ணவ] மதம் பரவியிருந்தது என நானாகட் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அங்கிருந்து தமிழகத்திற்குச் சென்று, அங்கே இதற்குப் புத்துணர்ச்சி ஊட்டப்பட்டு, புதியதொரு வேகத்துடன் ஹிந்து வேதிய உலகின் மூலை முடுக்கெங்கும் இது பரவலாயிற்று' என திரு. ராய்சவுத்ரி எழுதுகிறார்.
நாணய சம்பந்தமான ஆதாரங்களும் கிருஷ்ணரின் புராதனத்தை உறுதி செய்கின்றன. ஆப்கானிஸ்தானத்துக்கும் ரஷ்யாவுக்குமான எல்லைப்பகுதியில் இருக்கும் அல்-கானும் என்னும் இடத்தில் பி.பெர்னார்ட் என்பவர் தலைமையில் நடத்தப்பட்ட பிரெஞ்சு தொல்பொருள் கழக அகழ்வாராய்ச்சியில் அறுகோண வடிவுள்ள பித்தளைக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. கி.மு 180?௧65?-ல் ஆட்சி செய்த இந்திய-கிரேக்க அரசன் அகதொக்லெஸ் என்பவரால் வழங்கப்பட்ட காசுகள் இவை. கிரேக்க, மற்றும் பிராமி மொழிகளில் எழுதப்பட்ட இந்தக் காசுகளில் சக்கரமும், வைஷ்ணவ மதத்தின் இரு முக்கியச் சின்னங்களான சங்கும் தாங்கிய விஷ்ணு அல்லது வசுதேவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
'ஸ்ரீராமர் பிறந்த காலம்' : அடுத்து, ஸ்ரீராமர் பிறந்த காலத்தைப் பற்றி கவனிப்போம்.
சூரிய வம்சத்தில் ஸ்ரீராமர் பிறந்தார். அவரது பிறந்த காலத்தைத் தெரிந்து கொள்வது, வேதியல் சமூகத்தின் புராதனத்தை மேலும் தெளிவாக்கும். அவர் காலத்தைப் பற்றி அறிஞர்கள் பலர் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணருக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீஇராமர் இருந்ததாகச் சிலர் கருதுகின்றனர். வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருக்கும் செய்திகளின் அடிப்படையில், பஞ்சாங்கம், மற்றும் திதிகளைக் கணக்கிட்டு, ஸ்ரீராமர் பிறந்த நாள் டிச. 4, கி.மு. 7032 என்று ஸௌரப் க்வாத்ரா என்பவர் ஏப்ரல் மாத 'டைம்ஸ் ஆஃப் இண்டியா' பத்திரிகையில் எழுதியிருக்கிறார். கோளியல் அடிப்படையைக் கொண்ட மென்பொருளைக் கொண்டு, மற்ற சிலர் வெவ்வேறு நாட்களைக் கணக்கிட்டிருக்கின்றனர்.
இவையெல்லாம் தற்காலத்திய கணிப்புகள் என்றாலும், காலங்காலமாகச் சொல்லிவரும் கணக்கு, ஸ்ரீராமரின் காலத்தை இதற்கும் முன்னதாகச் சொல்லுகிறது. உதாரணமாக, வாயு புராணத்தில் [70.48]
த்ரேதாயுகே சதுர்விம்சே ராவணஸ்தபஸ: க்ஷயத்
ராமம் தசரதிம் ப்ராப்ய சகண: க்ஷயம்ல்யவான்
என்றிருக்கிறது.
வம்புகள் செய்த ராவணனும், அவந்து சொந்த, பந்தங்களும், ராமனால் 24-வது த்ரேதா யுகத்தில் கொல்லப்பட்டனர் எனச் சொல்கிறது. நாம் இப்போது இருப்பது வைவஸ்வத மன்வந்த்ரத்தின் 28-வது சதுர்த் யுகத்தில். த்ரேதா யுகத்தின் 24-வது யுகச் சக்கரத்தில் ஸ்ரீராமன் தோன்றியதாக திரு. ரூப கோஸ்வாமி 'லகு பாகவதாம்ருதா' என்னும் நூலில் சொன்னதுடன் இது பொருந்தி வருகிறது. ஒவ்வொன்றிலும் 71 சுழற்சிகள் கொண்ட நான்கு யுகங்களைக் கொண்டது மன்வந்த்த்ர யுகம். இதன்படி பார்த்தால், ஸ்ரீராமன் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும்.
இன்னுமொரு சுவாசியமான செய்தி. வால்மீகி ராமாயணத்தின் சுந்தர காண்டப் பகுதியில் [5.4.27] நான்கு தந்தங்களைக் கொண்ட யானைகள் ராவணனின் அரண்மனைக்கு வாசலில் நின்றுகொண்டிருப்பதாக இருக்கிறது. 5.27.12-ல் திரிஜடை என்னும் அரக்கி தனது கனவில் ஸ்ரீராமன் நான்கு தந்தங்கள் கொண்ட யானையின் மீது ஆரோஹணித்து வருவதாகக் காண்கிறாள். இந்த நான்கு தந்தங்கள் கொண்ட யானை என்பதுதன் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். விஞ்ஞானக் கணக்கின்படி, இந்த வகையான யானைகள் [மஸ்டோன்டோன்டாய்டீ] சுமார் 38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும், சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போனதாகவும் அறிகிறோம். இதை வைத்துப் பார்க்குங்கால், ஸ்ரீராமரின் காலம் ஏறக்குறைய 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கக்கூடும். சுவாரசியம்தானே!
மேலும் மேலும் சரியான இடங்களில், சரியான தடயங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது, வேதியல் நெறிமுறை அனைத்துலக ஆன்மீக உண்மைகளைக் காட்டுவதை நாம் பார்க்க இயலும்..
No comments:
Post a Comment