உங்கள் காலம் திருடப்படுகிறதா?
வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத உன்னதமான விஷயங்களில் ஒன்று காலம். வாழ்க்கை என்ற பெயரில் எவ்வளவு காலம் நமக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய மாட்டோம். செயல்படுகிறோமோ, வீணடிக்கிறோமோ காலம் இரண்டிலும் செலவாகிக் கொண்டே தான் போகின்றது. காலம் செல்லச் செல்ல நாம் மரணத்தினை நெருங்கிக் கொண்டே போகிறோம். அது எத்தனை நெருக்கம் என்பதை அறியாததால் அதற்கு இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது என்ற பிரமையில் இருந்து விடுகிறோம்.
காலத்தின் மதிப்பைக் குறிப்பிடும் போது ஒரு நிமிடத்தின் மதிப்பை அறிய புறப்பட்டுப்போன ரயிலைத் தவற விட்டவரைக் கேட்க வேண்டும,. ஒரு நொடியின் மதிப்பை அறிய விபத்திலிருந்து தப்பியவரைக் கேட்கவேண்டும், ஒரு மில்லிசெகண்டின் மதிப்பை அறிய ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.
பணத்திற்கு தரும் முக்கியத்துவத்தை நாம் அதை விடப் பல மடங்கு மதிப்புள்ள காலத்திற்குத் தருவதில்லை. இழந்த செல்வத்தை ஒருவன் மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால் இழந்த காலம் இழந்தது தான்.
ஜனனம் முதல் மரணம் வரை நமக்கு அளக்கப்பட்ட அளவான காலத்தை பெரும்பாலான சமயங்களில் நாம் செலவு செய்வதில்லை. மாறாக அந்த காலப் பொக்கிஷம் நம்மிடமிருந்து நிறையவே திருடப்படுகிறது என்ற உண்மை நமக்கு புலப்படாமலேயே போய் விடுகிறது. நம்மிடமிருந்து பணமோ, சொத்தோ திருடப்பட்டால் கொதித்தெழுகிற நாம் நம் காலம் திருடப்படுவதில் கொதித்தெழுவதில்லை என்பது மட்டுமல்ல அப்படி திருட்டுப் போக நாம் முட்டாள்தனமாக உதவியும் செய்கிறோம்.
காலப் பொக்கிஷம் நம்மிடம் இருந்து எப்படியெல்லாம் திருட்டுப் போகிறது, அதைத் தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?
1) தொலைக்காட்சி – டெலிவிஷன் என்று சொல்லப்படும் தொலைக் காட்சிப் பெட்டியை முட்டாள் பெட்டி என்று பலரும் கூறுவதுண்டு. மூளையை மழுங்கடிப்பதில் அதற்கு இணை வேறு எதுவும் இல்லை என்பதால் அப்படி அழைக்கப்படுகிறது. அதை காலத் திருட்டுப் பெட்டி என்று அழைப்பது மேலும் பொருத்தமாக இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதன் முன்னால் அமர்ந்து கொண்டு நாம் வீணாக்கும் காலத்திற்கு அளவே இல்லை. அதை முழுமையாக நாம் ரசித்து மகிழ்கிறோமா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. பிடிக்கிறதோ இல்லையோ சேனல்களை மாற்றிக் கொண்டே எதிலாவது ஒரு நல்ல சுவாரசியமான நிகழ்ச்சி எதிலாவது போட மாட்டார்களா என்ற எதிர்பார்த்து காலத்தை வீணாக்குகிற வேலையை நம்மில் பலரும் செய்கிறோம். பிடித்த நிகழ்ச்சி என்றாலும் கூட இடையிடையே நிகழ்ச்சி நேரத்தை விட அதிகமாக விளம்பரங்கள் ஒளிபரப்பாவதை வேறு வழியில்லாமல் (?) பார்க்க நேரிடுகிறது. பல சமயங்களில் ஐந்து நிமிடங்கள் பார்க்கிறேன் என்று அமர்ந்து அதை மணிக்கணிக்கில் பார்த்து விட நேர்ந்து விடுகிறது. சில தொடர் நிகழ்ச்சிகளோ தினம் தினம் கண்டிப்பாக பார்க்கக் கட்டாயப்படுத்தும் பழக்கமாகி விடுகிறது.
தொலைக்காட்சியில் வீணாக்கும் நேரத்தை எத்தனையோ வழிகளில் நம் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்த முடியும். இந்த உண்மையை மனதில் ஆழமாக உணர்கையில் இந்த வகைக் காலத் திருட்டை நாம் தவிர்க்க முடியும். முக்கியமாக குறிப்பிட்ட ஒருசில நல்ல நிகழ்ச்சிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டு அதை மட்டுமே பார்த்து மற்ற நேரங்களில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்து வையுங்கள். பிடித்த நிகழ்ச்சிகள் பார்க்கும் போதும் இடையிடையே விளம்பரங்கள் வரும் போது வேறு சேனலில் என்ன இருக்கிறது என்று வெறுமனே பார்க்கப் போகாமல் அந்த இடைவெளி நேரங்களில் வேறு சிறு சிறு வேலைகளைப் பாருங்கள். இந்த விதத்தில் நீங்கள் காலத் திருட்டை பெருமளவு தடுத்து விடலாம்.
2) அலை பேசி – செல் போன் என்றழைக்கப்படும் அலைபேசி அடுத்த பெரிய காலக் களவாணி என்று சொல்லலாம். அலை பேசியில் மணிக்கணக்கில் பேசி காலத்தை வீணாக்குவது இக்காலத்தில் இளைய தலைமுறையிடம் நிறையவே நாம் பார்க்க முடிகிறது. அலைபேசியில் பேசக் கட்டணத்தைக் குறைத்தும், அடியோடு விலக்கியும் சலுகை செய்யப்படுவதால் அதை முழுமையாகப் பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி காலத்தை முழுமையாக வீணாக்குகிற முட்டாள்தனத்தை பலரும் செய்கிறோம்.
அலைபேசியில் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்து விட்டு உடனடியாக அணைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் நேரத்தை மட்டுமல்ல அடுத்தவர் நேரத்தையும் நீங்கள் வீணாக்காமல் தவிர்க்கிறீர்கள்.
3) ஒழுங்கின்மை – நமது வாழ்க்கை முறையில் ஒழுங்கின்மை இருக்கும் போது காலம் பெருமளவில் வீணாகிறது. உதாரணமாக ஏதாவது ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் எல்லா இடங்களிலும் தேடி காலத்தை வீணாக்குகிற வேலையைப் பலரும் செய்வதுண்டு. அது போல செய்கிற வேலையில் ஒழுங்குமுறை இல்லாத போது அது தவறாகப் போக வழி இருக்கிறது. அந்த வேலையை இரண்டாவது முறையாகச் செய்தாலும், திருத்தம் செய்ய முனைந்தாலும் அதனால் காலம் தேவை இல்லாமல் வீணாகிறது.
வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கப் பழகுங்கள். உபயோகப்படுத்திய பிறகும் அதனதன் இடத்திலேயே வைக்க நீங்கள் பழகிக் கொண்டால் “தேடுதல்” என்ற பெயரில் நீங்கள் காலத்தை வீணாக்க நேரிடாது. அது போல வேலை செய்யும் போதும் ஒரு ஒழுங்குமுறையோடு நீங்கள் செய்தீர்களானால் குறைவான நேரத்தில் நிறைவான வேலையை உங்களால் முதல் முறையிலேயே செய்ய முடியும். காலத்தையும் சேமிக்க முடியும்.
4) தேவையற்ற செயல்கள், பேச்சுகள் – நமக்கு சம்பந்தமில்லாத வேலைகளை நாமாகவே இழுத்துப் போட்டுக் கொண்டு அவற்றில் ஈடுபடுவதும் காலத்தை நம்மிடம் இருந்து திருடிக் கொள்கிறது. பல நேரங்களில் நாம் அடுத்தவர் வேலையைக் கூட செய்து கொண்டிருக்க நேரிடலாம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அடுத்தவருக்கு உதவ முனைவது வேறு, தேவையே இல்லாமல் அடுத்தவர் வேலையை நாம் செய்வது வேறு. இந்த இரண்டிற்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கிறது. அது போல ஊர்வம்பு பேசுவதிலும் காலம் நிறைய வீணாகிறது.
எனவே தேவையில்லாமல் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத, உங்கள் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் உதவாத செயல்களை செய்யப் போகாதீர்கள். எந்த வேலையில் ஈடுபடும் முன்னும், அடுத்தவர் பற்றி பேசும் முன்னும் அது உங்கள் வேலை தானா, அதற்கு அவசியம் உள்ளதா என்ற ஒரு சிறிய கேள்வியைக் கேட்டுக் கொண்டால் அது அந்த வகைக் காலத் திருட்டைத் தவிர்க்கும்.
5) திட்டமிடத் தவறுதல் – முன் கூட்டியே நம் காலத்தைத் திட்டமிடத் தவறும் போது காலம் நம்மிடமிருந்து அர்த்தமில்லாத வழிகளில் திருட்டுப் போவதை நாம் தடுக்க முடிவதில்லை. ஒரு நாளில் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வைத்திருந்தால் உங்கள் கவனம் எல்லாம் அந்த நாளில் செய்ய வேண்டிய வேலைகளில் தான் இருக்குமே ஒழிய மற்ற அனாவசிய வேலைகளில் கவனம் செலுத்த தங்களுக்கு நேரமிராது.
உங்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் லட்சியங்களை நீண்ட கால லட்சியம், குறுகிய கால லட்சியங்கள் என்று திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நாட்களைத் திட்டமிடும் போது இருவகை லட்சியங்களை அடைவதற்கும் செய்ய வேண்டிய செயல்களுக்கு கண்டிப்பாக இடமிருக்கட்டும். எப்போதும் அப்படிக் ஒழுங்காகத் திட்டமிட்டு லட்சியங்களில் எப்போதும் கவனமாக இருந்தால் காலம் கண்டிப்பாக உங்களிடமிருந்து திருட்டுப் போகாது.
காலம் இந்த வகைகளில் மட்டும் தான் என்றில்லை இன்னும் பல வகைகளிலும் நம்மிடம் இருந்து திருடப்படுகிறது என்றாலும் இவை ஐந்தும் காலத் திருட்டில் பெரும் பங்கு வகிப்பவை. இந்த ஐந்து வகைத் திருட்டுகளை நீங்கள் தடுத்தால் நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய உங்களுக்குத் தேவையான காலம் கண்டிப்பாகக் கிடைக்கும். ’எனக்கு நேரமில்லை’ என்ற சப்பைக்கட்டு கட்டி செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருக்க நேரிடாது. செய்ய வேண்டியவற்றை செய்ய முடிந்த எந்த மனிதனும் தன் முன்னேற்றம் உறுதியானது என்பதில் சந்தேகப்படவும் அவசியமில்லை. எனவே குறுகிய வாழ்வில் மிகுதியாய் சாதிக்க காலத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்துங்கள்!
No comments:
Post a Comment