புதுமைக்குத் தேவை சவால்!!!
நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை, எண்ணம் இருக்கலாம்; ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர் ஆகிவிட முடியாது. புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது! ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான். நாம் காலம் காலமாகப் போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்!
டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை. எனவே அவர்களுடைய புதுமை படைக்கும் துறையின் இயக்குனர் மைக்கேல் ஸ்டீவன்ஸ், ஒரு சவாலைத் தேடிப் புறப்பட்டார்.
அதுவரை நிறுவனம் சுற்றிக் கொண்டிருக்கும் பாதையைவிட்டு அப்படியே தூக்கிப்போய் வேறு எங்கோ வீசிவிடப் போகும் சவால் அது! ‘பால் மற்றும் பால் பொருட்களை விண்வெளியில் அனுப்பிய முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். இதுவரை யாரும் இதைச்செய்ததில்லை. விண்வெளி வீரர்கள் பால் எடுத்துக்கொள்வதால் நன்மைகள் ஏராளம்; இருந்தும் ஏவுகணையில் போகும் போது யாரும் பால் சாப்பிட்டதே இல்லை’.
இந்த ஒரு சவால் மட்டுமே – ஆர்லாஃபுட்ஸின் ஆராய்ச்சிப் பிரிவையும், தயாரிப்பு வளர்ச்சித் துறையையும் அவர்களுகடைய பழகிய பாதையை விட்டு தூக்கிவிட்டது. அவர்கள் வேறு ஏதோ திசையில் எங்கோ வெளியே வந்தபோது, மிகமிகப் புதுமையான தயாரிப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டுவந்தார்கள்.
விண்வெளில் மட்டும் இல்லாமல் அவற்றை பூமியிலும் சாப்பிட முடியும்! உதாரணமாக, குளர்சாதன பெட்டியில் வைக்காமலேயே இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும் தயிரைப் பார்த்தீர்களா? பூமியிலேயே கால் பதித்து நின்றியிருந்தால் அவர்கள் இந்த மாதிரியான பொருட்களைத் தயாரிப்பது பற்றி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்.
இவர்கள் மட்டுமல்ல. புதுமையுடன் சவாலையும் சேர்த்துக் கொள்ளும் எந்த ஒரு தனிமனிதனும் அல்லது நிறுவனமும் ரஜினி படத்தின் பாடல் வரிகள் போல“சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்பனபோல உலகஅளவில் தன் வெற்றியை கால் பதிக்கின்றனர்.
போகிற பாதை மிகவும் பயங்கரமானது! அதன் ஒவ்வொரு அடியிலும் புதிய புதிய சிந்தனைகள் தேவைப்படும். புதுமை செய்கிறேன் என்று புறப்படும் நிறுவனத்தின் பாதை, ஒரு கடினமான மலைப் பாதையைப் போல அணியின் உற்சாகமும் ஈடுபாடும் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நம் இதயம் சோர்ந்து போய், “கிழே போய்விடலாம்” என்று சொல்லும்; அதைமீறி மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு சாகசப் பயணம் என்றால் வழியில் நூற்றுக்கணக்கான புயல்கள் வீசும்,சவால்கள் மறிக்கும். கடைசியாக பயணத்தின் நோக்கம் சிகரத்தை அடைவது மட்டுமே அல்ல; இன்னும் பல சிகரங்களை எட்டுவதற்கான வல்லமைளை வளர்த்துக் கொள்வதும்தான்!
சிகரத்தை அடைவோம்! வானத்தைத் தொடுவோம்!!
No comments:
Post a Comment