Monday, April 25, 2016

காட்சிகள் காட்டும் பிம்பங்கள்

ஒரு முறை கிடைக்கும் தகவலை வைத்துக்கொண்டே “இது இப்படித் தான்!” என்று முடிவு கட்டுவது மனதின் முக்கியமான தன்மை. ஒரே முறை ஒரு ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்று முடிவு கட்டும். முதல் முறை பார்க்கும்போது சரியாக முகம் கொடுத்துப் பேசாத உறவினரை மண்டைக் கனம் பிடிச்சவன் என்று எண்ண வைக்கும். முதல் முறையாகத் தோன்றும் அபிப்பிராயத்தை எப்படியாவது தக்க வைக்கத் துடிப்பதும் மனதின் இயல்புதான்.

நாடு, மதம், இனம், மொழி, ஊர், தொழில் இப்படி எல்லாவற்றைப் பற்றியும் கருத்து வைத்திருக்கிறோம். இந்தக் கருத்தைப் பெரும்பாலும் பத்திரமாக வளர்த்துவருகிறோம்.

தோற்றத்தின் உள்ளே..

டி.வியில் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகளை நடத்து பவரைப் பெரிய அறிவாளியாக நினைக்கிறோம். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் பின்னால் ஒருவர் சொல்ல ‘டாக் பேக்கில்’ உள்வாங்கி ஏற்றஇறக்கமாக பேசுகிறார் என்பதையும் தெரிந்துகொண்டால், அவ்வாறு நினைப்போமா? சினிமாவில் கதாநாயக நடிகர்களைப் பெரிய வீரர்கள் என்று நினைப்போம். அவர்கள் தங்கள் படம் வெளிவரவும் அதை ஓடவைக்கவும் எந்த அளவுக்கும் பணிந்துபோகிறார்கள் என்ற செய்திகளும் வரத்தானே செய்கின்றன.

அதற்குப் பிறகும் அவர்களை மாவீரர்கள் என கருதுவீர்களா? டாக்டர் என்றாலே அவர் எல்லா வியாதிகளுக்கும் தீர்வு தெரிந்தவர் என்று நினைக்கிறோம். அவரது மருத்துவத் துறையைத் தவிர மற்ற மருத்துவத் துறைகளில் நிபுணர் அல்ல என்று ஒரு மறுபக்கம் இருக்கிறதே. அதை நம்ப மறுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

ஏட்டுப்படிப்பு அதிகமாக இல்லாதவரை அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதேபோல நிறைய பட்டங்கள் படித்தவர் என்பதாலே அவரை அறிவுஜீவி என்று நம்புகிறோம். ஏராளமான எழுத்தாளர்கள் பெரிய கல்வித் தகுதிகள் இல்லாதவர்கள். முனைவர் பட்டம் பெற்ற பலருக்கு பாடப்புத்தகமும், வாரப்பத்திரிகையும் தவிர மற்ற வாசிப்பு இல்லை இருந்தும் படித்தவர்கள் பற்றிய அபிப்பிராயத்தை அப்படியேதான் வைத்திருப்போம்.

கொட்டுமா, உதிருமா?

அதே போல காசுக்காக எதையும் செய்பவர்கள் வியாபாரிகள் என்று நினைக்கிறோம். விளம்பரம் இல்லாமல் சேவை புரியும் நிறைய வியாபாரிகள் இருக்கிறார்கள். மிக நாணயமாக, மக்களுக்குத் தீங்கு வரக்கூடாது என்று செயல்படுகிற பல வியாபாரிகள் இருக்கிறார்கள். சேவை செய்பவர்களில் பலர் மிகுந்த வியாபார நோக்குடனும் மக்கள் விரோதமாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி நம் கற்பிதங்களுக்கு நேர்மாறாகப் பலர் பல திறமைகளுடனும் ஆளுமைகளுடனும் இருக்கிறார்கள்.

முரடானது காவல்துறை. அதன் அதிகாரியாக இருந்த திலகவதி ஐ.பி.எஸ் மென்மையாக எழுதுகிறார். அதேபோல இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜென் துறவி போலத் தத்துவம் பேசுகிறார். அரசியல்வாதியான வைகோ வரலாற்றுப் பேராசிரியர்களுக்குச் சவால் விடும் வகையில் பேசுகிறார். என் நண்பர் டாக்டர் விஜயராகவன் அற்புதமாகத் தமிழில் செய்யுள் இயற்றுவார். அதை விட அபாரமான நகைச்சுவைத் திறனும் அவருக்கு உண்டு. புற்று நோய்க்குச் சிகிச்சை அளித்தாலும் நம்பிக்கையும் நகைச்சுவையும் குறையாமல் செயல்படுவார்.

“முடி கொட்டுமா டாக்டர்?” என்பார்கள். “ தேள்தான் கொட்டும். முடி உதிரும்!” என்று இலக்கணமும் நகைச்சுவையும் பேசி வைத்தியம் பார்ப்பார். அதே போல, சிவ ஆலயங்களைச் சுத்தம் செய்யும் உழவாரப் பணியில் ஈடுபடும் ஐ.டி. பணியாளர்களை எனக்குத் தெரியும். தங்கள் சொற்பமான சம்பளத்தின் பெரும்பங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளுக்குச் செலவு செய்யும் தம்பதியை எனக்குத் தெரியும்.

அதே போல, கார்ப்பரேட் நிறுவனங்கள் போலச் செயல்படும் கட்சிகளும் மடங்களும் மதச் சார்பு நிறுவனங்கள் உண்டு. அரசியல் தலைவரை மிஞ்சுகிற கவர்ச்சி மிக்க சாமியார்கள் இருக்கிறார்கள். துறவிகளாக வாழும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

வேண்டாம் பிம்பங்கள்

ஆனாலும் நம் மனம் சில அபிப்பிராயங்களை அப்படியே தக்க வைக்கத் துடிக்கிறது. “இவர்கள் இப்படித்தான்” எனும் அபிப்பிராயமே நமது சிந்தனையைக் கட்டிவைக்கும் ஒரு சங்கிலி. அதை உடைத்துவிட்டுச் சுதந்திரமாகப் பார்க்கும் பொழுது உலகம் இன்னமும் நிஜமாகவும் தெளிவாகவும் புரியும்.

எனக்குத் தமிழில் எழுத வராது. சில “ஆவி எழுத்தாளர்களை” பணித்துத் தான் கட்டுரைகளைச் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளுகிறேன் என்று ஒரு பேராசிரியர் பேசிவந்தார். ஆவிக்குத் தரும் அங்கீகாரத்தை இந்தப் பாவிக்குத் தர அவர் மனம் மறுக்கப் பல காரணங்கள். “ நீங்கள் சொல்வதை நிருபர்கள் எழுதுவார்கள் அல்லவா?” என்று பல முறை என் தொழில் முறை நண்பர்கள் கேட்பார்கள். “எழுத ஏது நேரம்?” என்பார்கள். “பேச்சு முழுதும் ஆங்கிலத்தில், எழுத்து மட்டும் எப்படி தமிழில்?” என்று லாஜிக்கலாக மடக்குவார்கள் சிலர்.

இவர்களின் பிரச்சினை நானல்ல. அவர்கள் என்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் தான்!

நான் கோபப்படுகையில் என் நண்பர்கள், “நீங்களே கோபப்படலாமா?” என்று என் உளவியல் பின்னணியை இணைத்துக் கருத்து சொல்வார்கள். உளவியல் படித்தவர்கள் எல்லாம் மனதை வென்ற மகான்கள் அல்ல என்று சொல்வேன். படைப்புகளை வைத்துப் படைப்பாளி பற்றிய அபிப்பிராயம் வளர்த்தல் ஆபத்தானவை.

இப்படித்தான் நடிகர்களிடம் நாட்டைக் கொடுக்கிறோம். அதிகம் தெரியாத சாமியார் காலில் குடும்பமாகச் சென்று காலில் விழுகிறோம். நன்கு பேசுகிறார் என்றால் உடனே அறிவுஜீவியாக உயர்த்திவிடுகிறோம். கூட்டத்தை வைத்துப் பிரபல்யத்தைக் கணக்கிடுகிறோம்.

இவை மனதின் செயல்பாடுகள் என்பதை மட்டும் புரிந்துகொள்வோம். வண்ணம் பூசாத கண்ணாடி கொண்டு வாழ்க்கையைப் பார்ப்போம். அதுதான் அழகு. அது தான் ஆரோக்கியம்!

No comments:

Post a Comment