சிந்தனைச் சீர்கேடுகள்தான் நம் வாழ்க்கையைச் சிதைக்கிறது என்று புரிகிறது. சிந்தனைகளைச் சீர்படுத்தினால் அது துக்க நோயைக் குணப்படுத்தும் என்று ஏரோன் பெக் எனும் உளவியல் நிபுணர் அறிவியல்பூர்வமாக 1970 - களில் நிரூபித்தார். சிந்தனையின் திரிபுகள் (Cognitive Distortions) பற்றி மிக விரிவான பங்களிப்பு செய்தவர் இவர்.
சிந்தனையின் திரிபுகள்
துக்க நோய் மட்டுமின்றி தற்கொலை நடத்தைகள், உறவுச்சிக்கல்கள், உண்ணும் குறைபாடுகள், பாலியல் குறைகள், போதை அடிமைத்தனத்தின் நிலைகள் என்று பல விஷயங்களுக்கு ஏரோன் பெக் முறைகளை இன்றும் உளவியலாளர்கள் சிந்தனை நடத்தை சிகிச்சை (Cognitive Behaviour Therapy) மூலமாகக் கையாள்கிறார்கள். எந்தக் குறையும் இல்லை என்று நினைக்கும் நம்மில் பலரின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் பெக்கின் வழிமுறைகள் பெரிதும் உதவும்.
சிந்தனையின் திரிபுகள் நம் எல்லோருக்கும் உண்டு. பிரச்சினைகளின்போது வந்து போகும். சிலருக்கு அது உறைந்து போய் மிகவும் சகஜமாக எதிர்மறையாக யோசிக்க வைக்கும். அவை, தவறான முடிவுகளையும் உறவுச் சிக்கல்களயும் ஏற்படுத்தும்.
கறுப்பு-வெள்ளை சிந்தனை
தர்க்கரீதியில் பிழையானவை எனச் சற்று யோசித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும். இருந்தும் அதற்குள் அது உணர்வுகளில் கலந்து உறவுகளைப் பாதித்திருக்கும்.
நம் வீடுகளில் நடக்கும் சிறு சிறு சண்டைகளில் எழும் உரையாடல்களை வைத்தே அனைத்துவிதமான சிந்தனைத் திரிபுகளையும் கண்டு கொள்ளலாம்.
“ஒண்ணு அவங்க அம்மா சொல்றதைக் கேக்கணும். இல்ல நான் சொல்றதை கேக்கணும். ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணச்சொல்லுங்க..!”
இதை Dichotomous Reasoning என்று சொல்கிறார் பெக். அதாவது கறுப்பு, வெள்ளை வாதம். “ஒண்ணு அது. இல்லாட்டி இது” என்று ஏதாவது ஒரு துருவத்தைத் தேர்வு செய்ய யோசிப்பது. நிஜ வாழ்க்கையில் இப்படிக் கறுப்பு - வெள்ளை சிந்தனை உதவாது. பழுப்பு வண்ணச் சிந்தனைகள் நிறைய தேவைப்படுகின்றன. அம்மாவும் வேண்டும். மனைவியும் வேண்டும். முதலீடும் செய்யணும். சிக்கனமாகவும் இருக்கணும் சுதந்திரமும் கொடுக்கணும் பிள்ளைகளுக்கு. பொறுப்பும் கட்டுப்பாடும் வளர்க்கணும். இப்படியாக, இரண்டும் கலந்த வாழ்வுதான் நம்முடையது. ஏதாவது ஒன்றுதான் என்று தட்டையாக முடிவு எடுக்க வைக்கும் சிந்தனை தான் மிக மிக ஆபத்தானது.
இதுவும் அதுவும்
இந்தச் சிந்தனைக்கு இன்னொரு பெயரும் உண்டு. All or none thinking. “ நான் சொன்னதைக் கேட்டா எல்லாம் கிடைக்கும். இல்லாவிட்டால் எதுவும் கிடைக்காது!”
தலைமுறைகளாகப் பேசிக்கொள்ளாத குடும்பங்கள் நமக்கெல்லாம் தெரியும். அடிப்படையில் இது போன்ற ஒரு சின்னச் சிந்தனைத் திரிபுதான் இருந்திருக்கும். அது ஒரு தீவிரமான முடிவை எடுக்க வைத்திருக்கும். காரணம் கூடத் தெரியாமல் பெரிய பகையைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். “இது அல்லது அது என்பதற்குப் பதில் இதுவும் அதுவும்” என்று யோசிக்க இடம் கொடுத்தால் பிரச்சினை அடுத்த கட்டத் தீர்வை நோக்கி நகரும்!
“அவனை என்னால் நம்ப முடியாதுப்பா. கண்டிப்பா மறுபடியும் உன்னைக் கழுத்தறுப்பான்!”
வைத்த நம்பிக்கைக்கு ஒரே ஒரு முறை குந்தகம் விளைவித்ததுக்குக் காலம் பூராவும் ‘கழுத்தறுப்பவன்’ என்று பட்டம் தருவது அதீதப் பொதுமைப்படுத்துதல். Over Generalization. இது நம் மனதின் இயல்பு. கவனமாக இல்லாவிட்டால் இது மிக இயல்பாக நம் எல்லோருக்கும் வந்துவிடும். ஒரு முறை ஒரு ஓட்டலில் காபி சரியில்லை என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்றுதான் முடிவு கட்டுவோம். 30 முறை போய்ப் புள்ளியியல் ரீதியாகத் தர்க்க ஆராய்ச்சி செய்து மனம் முடிவு செய்யாது. உடனடியாக ஒரு பொது முடிவு எடுக்கத் துடிக்கும் மனம். ஒரே ஒரு அனுபவத்தை வைத்துப் பெரிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். மனைவின்னாலே இப்படித்தான். இந்த ஊர்க்காரரிடம் ஜாக்கிரதையாக இரு. அந்தச் சாதிக்காரர் ரொம்ப கெட்டி. இந்தத் தொழில்னா இப்படித்தான் இருக்கும். ஃபாரின் போனா இப்படித் தான் இருப்பாங்க. பணம் வந்தா இப்படித்தான் ஆவாங்க என்று பல பொது முடிவுகள் நம்மிடம் உண்டு.
இந்த எண்ணங்கள் போதிய அனுபவத்தில் வந்தவையா என்று ஆராய வேண்டும். பல அபிப்பிராயங்கள் கால ஓட்டத்தில் மாறும். மாற்று எண்ணங்களும் மாற்று அனுபவங்களும் ஏற்படும்போது பல பொதுமைப்படுத்தல்கள் காணாமல் போகும். ஆனால், மனதின் ஓட்டத்தில் இப்படிப்பட்ட வேகமான முடிவுகளை இந்தத் திரிபுகள் நம்மை எடுக்க வைக்கின்றன.
உணர்வுகளின் தாக்கம்
ஒரு பொதுமைப்படுத்தலில் உணர்வுகளின் பங்கு மிக அதிகம். மனம் காயம் பட்டால் தர்க்கம் செய்யாமல் ஒரு அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளும். அதனால்தான் உணர்வுகளின் ஆதிக்கம் இல்லாமல் இந்தச் சிந்தனைகளை ஆராய்தல் அவசியம். முதல் முறையாக, மும்பை செல்கையில் உங்களின் பெட்டி காணாமல் போனால், மும்பை மீதோ, மும்பை எக்ஸ்பிரஸ் மீதோ தவறான அபிப்பிராயம் கொள்ளத் தேவையில்லை. இது எந்த ரயிலிலும் நிகழலாம்.
நாம் பத்திரமாக பெட்டியைக் கொண்டு சென்றோமா என்பதுதான் கேள்வி. அதை விட்டுவிட்டு மும்பை மீது வெறுப்பு கொள்ளுதல் பயன் தராது. ஆனால், மனதில் உள்ள விரக்தி மும்பைக்காரர்கள் மேல் கோபமாகவும் அவர்களைத் திருடர்களாகப் பார்க்கும் மனோபாவத்தையும் ஏற்படுத்தும்.
இன்னும் இதுபோன்ற நிறைய சிந்தனைத் திரிபுகள் உள்ளன, ஒவ்வொன்றாய் நம் வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கலாம்.
யோசியுங்களேன்! நம்மிடம் உள்ள தவறான சிந்தனைகள் பெரும்பாலும் ஒரு சில அனுபவங்களால் ஏற்பட்டவை தாம். அவற்றைக் காலம் தாழ்த்தி உணர்வுகளின் தாக்கம் இல்லாமல் ஆராய்ந்தால் அவை காலாவதியான கருத்துகள் என நமக்கே தெரியும்!
No comments:
Post a Comment