ஔரங்கசீப், ராஜேந்திர சோழன் அலெக் ஸாண்டர். இந்த மன்னர்களிடம் பொதுவான ஒற்றுமைகள் சில இருக்கின்றன. டெல்லி வாழ் ஔரங்கசீப் கிழக்கே சிட்டகாங்கில் நின்று “நம்ம இடந்தேன்...”என்பார். தஞ்சையிலிருந்து கிளம்பிய ராஜேந்திரனுக்குக் கடாரத்தில் “எங்கள் அரசரே..!” என்று நோட்டீஸ் ஒட்டினார்கள். “கிரேக்க கிங்கே...!” என்ற பேனர்களை அலெக்ஸ் சிந்து நதிக்கரையில் கண்டிருக்கக்கூடும்! அந்த அளவுக்குத் தங்கள் ராஜ்யங்களை இவர்கள் விரிவுபடுத்தினார்கள்.
ஆனால், இவர்களுக்குப் பிறகு அரசு வீழ்ந்ததற்கு அரசின் பரப்பு பெரியதாக இருந்ததும் காரணமாகச் சொல்லப்பட்டது. இவர்களது பிரதிநிதிகள் சொதப்பினார்கள். பெரிய அரசு. பிரச்சினைகளின் எண்ணிக்கையும் அதிகம். இவற்றைச் சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது.
அகலக்கால் வைத்து அவஸ்தைப்பட அரசர்களால் மட்டும்தான் முடியுமா?
“பிஸினஸ்ல கவனம் செலுத்த முடியல...” என்றார் நண்பர். என்ன பிஸினஸ் என்று கேட்க வில்லை. காரணம், அவர் ட்ராவல்ஸ் நடத்துவதாக நினைத்திருந்தேன். அப்புறம் சிட்ஃபண்ட், ரியல் எஸ்டேட் தொழிலுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. கூடுதலாக ஷேர் மார்க்கெட், கட்டிட காண்ட்ராக்டர், ஊரில் விவசாயம்... மொத்தத்தில் “இவரைப் பாத்தாவது கற்றுக்கொள்ளுங்களேன்…” என்று மனைவி சுட்டிக்காட்டி, கணவனுக்கு காம்ப்ளெக்ஸ் ஏற்படுத்த ஒரு உழைப்பாளி இருப்பார், இல்லையா? அந்த அவர்தான்!
நடுவில் ஏதோ ஒரு தொழிலில் பணம் லாக் ஆகி, ஒரே பாடலில் முன்னேறும் காட்சி பாதியில் நிற்க, நண்பருக்கு ரத்த அழுத்தம், கொதிப்பு எல்லாம் நிகழ்ந்தன.
படிப்பினை என்ன? போதும் என்ற மனநிலை இல்லாததாலேயே சரியத் துவங்கும் அரசுகள், மனிதர்களின் வாழ்க்கைகள்... அளவோடு இருந்திருந்தால்,இவர்கள் இன்னும் சிறிது காலம் தாக்குப் பிடித்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா...?
ஆனால், இப்படியெல்லாம் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால், இவர்கள் இதற்கு முன்பே அழிந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.
ஒருவர் ஏற்கெனவே செய்துவரும் வேலைகள் போதாமல் “ஊறுகாய் தயாரிக்கலாம்னு இருக்கேன்” என்றால், ஒருவர் எங்கேயோ இருந்துகொண்டு, தொலைதூர நாட்டைக் கைப்பற்றுகிறார் என்றால், அவரிடம் அதற்கான ஆற்றலும் திறமையும் இருப்பதாகத்தானே அர்த்தம்? கனவைச் சாத்தியமாக்கும் நிபுணத்துவத்தை, வீரர்களைக் கொண்டிருக்கிறார் என்றுதானே பொருள்?
நாடு நீங்கி கடல், மலை கடந்து வீரம் பொழியக்கூடிய சக்தி வாய்ந்த வீரர்களை ஒரே இடத்தில் கத்தியைத் துடைக்கவும், குதிரைக்குப் புல் போடவும் மட்டும் பயன்படுத்தினால்...? “சும்மா இருப்பதே சுகம்” என்று நண்பரைக் கட்டிப் போட்டால்...?
அந்த சக்தி, அந்தத் திறமை, சும்மா இருக்காது. முடக்கப்படும் சக்தி தன்னை வெளிப்படுத்தியே தீரும் - பல சமயங்களில் எதிர்மறையாக. அதை அந்த நாடோ வீடோ தாங்காது.
சிங்கம் ஒன்றுக்குப் பூனை வேடமிட்டு “உன் பெயர் டாம்” என்றால் அது எவ்வளவு நேரம்தான் ‘மியாவ்’ என்று கத்தும்? ஒரு கட்டத்தில் “ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெய்ட்டுடா… பாக்கறியா?” என்று காலை ஓங்கிவிடாதா?.
ஆறாம் வகுப்பு மாணவனை ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளோடு இருக்க வைத்துப் பாருங்கள். அன்பைப் பொழிதல், அ, ஆ சொல்லிக்கொடுத்தல் எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான். அப்புறம் “இந்தப் பையைத் தூக்கீட்டு வாடா...” என்ற கட்டளையும் “இந்த அண்ணன் அடிச்சுட்டான் மிஸ்..”என்ற அவலக் குரலும்தான் கேட்கும்.
சிங்கம் அப்படித்தான் இருக்க முடியும். பிடித்து வைத்தால் தான் இருக்கும் இடத்தையே காடாக மாற்றிவிடும். சரியாக வேலை கொடுக்கப்படாத வீரர்கள் உள்ளூரில் பிரச்சினை பண்ணத்தான் செய்வார்கள். செல்லை நோண்டத் தெரிந்த கை சும்மா இருக்காது. ஆற்றல் கொண்ட மனம் என்பது சாவி கொடுக்கப்பட்டு இயங்கும் நிலையில் வைக்கப்பட்ட வாகனம் மாதிரி. சரியாக இயக்கினால் அது ஒழுங்காகப் பயணிக்கும். இல்லை என்றால் அதுவாகவே ஓடி, முட்டி மோதி சேதத்தை ஏற்படுத்திவிட்டு வீழும்.
திறமை இல்லாமல் இருப்பது குற்றமல்ல. ஆனால் திறமை இருப்பது தெரிந்தும் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அது மன்னிக்க முடியாத பாவச் செயலாகும். அதை உங்களுக்கு அளித்த இயற்கையை அவமானப்படுத்துவதாகும். “போதும்… எதுக்கு வீணா கஷ்டப்பட்டுக்கிட்டு?” என்ற போலிச் சமாதானங்கள் பின்னாட்களில் திறமையைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற மனப் புழுக்கத்தில் கிடந்து உழலவே பயன்படும் (எனக்கு இருக்கற திறமைக்கு நான்லாம்... ப்ச… தப்பு பண்ணிட்டேன்...).
அந்த ஆற்றலைப் பயன்படுத்தித் தோல்விகளும் பிரச்சினைகளும் வந்தால்கூட அது பெருமையே. இதைத்தான் வள்ளுவரும் “சிசுக்கள் அணிக்கு எதிராக சிக்ஸர் அடிப்பதை விட ஆஸ்திரேலிய அணியிடம் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதே பெருமை” என்கிறார்.
எனவே, மன்னர்களின் ராஜ்ஜியங்கள் வீழ்ந்தததற்கும், நண்பரின் சிக்கல்களுக்கும் காலப்போக்கில் ஏற்படும் பிரச்சினைகளும் சரியாகத் திட்டமிடாதலும்தான் காரணமே தவிர, அவர்கள் முயற்சி செய்ததே தவறு எனக் கூற முடியாது.
அகலக்கால் வைப்பதில் தப்பில்லை. ஆழ்ந்து யோசிக்காமல் வைப்பதுதான் தவறு!
No comments:
Post a Comment