அது எப்படி? நம் வாழ்க்கை பல நேரங்களில் சூழ்நிலைகளால் அல்லவா தீர்மானிக்கப் படுகிறது? நம் பெற்றோர்கள், வாழுமிடம், மனைவி மக்கள், நண்பர்கள் இவர்கள் எல்லாருக்கும் நமது வாழ்வினைச் செதுக்குவதில் முக்கியப் பங்கு இருக்கின்றது என்று அல்லவா மனவியல் வல்லுனர்கள்கூட ஒத்துக்கொள்கிறார்களே? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.
உண்மைதான்… நம் வாழ்வில் பிறருடைய தாக்கம் இருக்கும்தான். ஆனால் அந்தத் தாக்கத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பது நமது சிந்தனையோட்டத்தைப் பொறுத்தது. நீங்கள் நேர்மறையானவரா, எதிர்மறையானவரா என்பதைப் பொறுத்தும், நீங்கள் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும்தான் வாழ்க்கையின் ஓட்டம் அமைகிறது. இதை விளக்கும் ஒரு சிறிய கதையைப் பார்ப்போமா?
ஒரு ஊரில் ஒரு குடிகாரத் தந்தை. அவருக்கு இரண்டு மகன்கள். தந்தை எப்பொழுதும் குடித்துவிட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும், மனைவி மக்களை அடித்து உதைப்பதுமாக இருந்து, ஒருநாள் செத்துப்போனார். சில வருடங்கள் கழிந்தன. மூத்தமகன் தந்தையைப் போலவே குடிப்பது, சூதாடுவது, குடும்பத்தில் தகராறு செய்வது என்று ஆகிவிட்டான். இளைய மகனோ, நன்கு படித்துப் பட்டம் பெற்று, ஒரு வேலையில் அமர்ந்தான். நல்ல குணமுடைய பெண்ணை மணந்தான். தனது உழைப்பாலும் நற்குணங்களாலும் அந்த நகரத்தின் பெரும்புள்ளிகளில் ஒருவராக உயர்ந்துவிட்டான்.
அக்குடும்பத்தைப் பற்றி அறிந்திருந்த ஒரு நண்பர் ஒருநாள், மூத்த மகனைத் தெருவில் சந்தித்தார். “ஏனப்பா இப்படிக் குடித்துச் சீரழிந்துபோகிறாய்?” என்று கேட்டார். “ஐயா, உங்களுக்கு எங்கள் தந்தையைப்பற்றித் தெரியுமல்லவா? சிறுவயது முதல் அந்தச் சூழலில் வளர்ந்ததால் நானும் இப்படிக் குடிக்கு அடிமையாகிவிட்டேன்.” என்று பதில் சொன்னான் அவன். சில நாட்களுக்குபின் அவர் இளைய மகனைச் சந்தித்தார். “உங்கள் குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியும். அத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த நீ, இன்று சமூகத்தில் ஒரு உயரிய இடத்தைப் பிடித்திருப்பது மிகவும் பெரிய காரியம். நான் உன்னை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.” என்று பாராட்டினார்.
அதற்கு இளைய மகன் என்ன சொன்னான் தெரியுமா? “”ஐயா, உங்களுக்கு எங்கள் தந்தையைப்பற்றித் தெரியுமல்லவா? சிறுவயது முதல் அந்தச் சூழலில் வளர்ந்ததால், என் தந்தை செய்த தவறை நானும் செய்யக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன். நன்கு படித்தேன், நல்ல வேலையில் அமர்ந்தேன், மது மட்டுமல்ல, எந்தப் போதைப்பொருளையும் கண்ணாலும் பார்ப்பதில்லை. அதுவே எனது வெற்றிக்குக் காரணம்”. என்று பதில் கூறினான் அவன்.
இப்பொழுது சொல்லுங்கள். ஒருவன் வாழ்க்கை அவன் சூழலில் இருக்கிறதா, அதை அவன் பார்க்கும் கோணத்தில் இருக்கிறதா?
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டீவன் கோவியின் ’90 :10′ விதியும் இதைத்தான் சொல்கிறது. நாம் நமது வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி நம் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது என்று நினைத்துக் கொள்கிறோம். திரு ஸ்டீவன் கோவியோ நமது வாழ்வைப் பாதிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் 10 சதவீதம்தான், அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துத் தான் மீதம் 90 சதவீதம் நிர்ணயிக்கப் படுகிறது என்று சொல்கிறார். “
ஒரு வழிபாட்டுப் பாடலை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம்: ‘இறைவா, என்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் அமைதியான பக்குவத்தை எனக்குக் கொடு, மாற்ற முடிந்ததை மாற்றும் துணிவைக்கொடு, இரண்டையும் பிரித்தறியும் அறிவைக்கொடு’ என்று சொல்கிறது அப்பிரார்த்தனைப் பாடல்.
ஆம், நம்மால் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் விவேகம் இருந்தால் வாழ்வு இனிமையாக இருக்கும். இல்லையெனில் கசப்பாக மாறிவிடும். அவ்வளவுதான். இதை விளக்க ஸ்டீவன் கோவி தரும் உதாரணத்தைக் கொஞ்சம் பார்ப்போமா?
ஒருநாள் உங்கள் அலுவலகத்தில் ஒரு முக்கியமான கூட்டத்திற்குச் செல்லவேண்டியுள்ளது. அதற்காக நன்றாக உடுத்திக்கொண்டு காலையில் நீங்கள் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மகள் காபிக்கோப்பையைத் தட்டிவிட்டுவிடுகிறாள். அது உங்கள் சட்டையில்மீது கொட்டிவிடுகிறது. கொட்டியது கொட்டியதுதான். அந்த நிகழ்ச்சியை உங்களால் மாற்ற முடியாது. ஆனால், அந்நிகழ்ச்சியை நீங்கள் இரண்டு விதமாக எதிர்கொள்ளலாம்.
காட்சி ஒன்று: உங்கள் மீது காபியைக் கொட்டியதற்காக உங்கள் மகளைத் திட்டுகிறீர்கள். அவள் அழத்தொடங்குகிறாள். காபிக்கோப்பையை மேசையின் விளிம்பில் வைத்ததால்தான் கொட்டிவிட்டது என்று உங்கள் மனைவியின் மீது குற்றம் சாட்டுவீர்கள். உடன் அங்கு ஒரு சொற்போர் தொடங்கிவிடுகிறது. இதனால் தாமதமாகிவிடவே கோபத்துடன் உங்கள் அறைக்குஸ் சென்று அவசரமாக வேறு உடைமாற்றிக்கொண்டு வருகிறீர்கள். உங்கள் மகள் அழுதுகொண்டே சாப்பிட்டதால் கிளம்பத் தாமதமாகிவிடுகிறது. எனவே,அவளுடைய பள்ளிப்பேருந்தைத் தவறவிட்டுவிட்டாள். இப்பொழுது மகளைப் பள்ளியில் விடும் வேலையும் உங்கள் மீது விழுந்துவிட்டது.
மகளைக் கடிந்துகொண்டே உங்கள் வண்டியில் ஏற்றிச் செல்கிறீர்கள். தாமதமாகிவிட்டதே என்ற பதட்டத்தில் வேக விதியை மீறுகிறீர்கள். காவலர், உங்கள் வண்டியை நிறுத்தி ரூ.500அபராதம் விதிக்கிறார். அதைக்க்ட்டிவிட்டு, மகளை அழைத்துச் சென்று அவள் பள்ளி வாசலில் இறக்கிவிடுகிறீர்கள். நீங்கள் திட்டியதால் வருத்தமடைந்திருக்கும் அவளோ ‘போய்வருகிறேன்” என்றுகூடச் சொல்லாமல் உள்ளே சென்றுவிடுகிறாள்.
அலுவலகத்திற்குத் தாமதமாக வருகிறீர்கள். வந்தபின்தான் முக்கியமான கோப்புகள் அடங்கிய உங்களது கைப்பெட்டியை அவசரத்தில் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததை உணர்கிறீர்கள். மீண்டும் மீண்டும் தொல்லைகள்,. சே, இந்த நாள் துவங்கிய விதமே சரியில்லை என்று அலுத்துக்கொண்டு வீட்டிற்கு மாலை திரும்பிப்போனால், மனைவியும் மகளும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்கள் நாள் மோசமான நாளாகிவிடுகிறது.
காரணம் என்ன? அதைப்பார்க்குமுன், இன்னொரு காட்சியைக் கற்பனை செய்துபார்ப்போம். உங்கள் சட்டையில் காபி கொட்டிவிடுகிறது. உங்கள் மகள் நீங்கள் திட்டப்போகிறீர்களோ என்ற பயத்தில் கண் கலங்குகிறாள். நீங்கள் அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டி “போனால் போகட்டும். இனிமேல் கவனமாக இருக்கவேண்டும், சரியா?” என்று சொல்லிவிட்டு உங்கள் அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு கைப்பெட்டியுடன் வருகிறீர்கள். உங்கள் மகள் வழக்கம்போல் உணவருந்திவிட்டு பள்ளிப்பேருந்தில் ஏறுகிறாள். ஏறும்பொழுதே உங்களுக்குக் கையாட்டி ஒரு பறக்கும் முத்தத்தையும் அனுப்புகிறாள். நீங்கள் சந்தோஷமாகக் கிளம்புகிறீர்கள். சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்து, இன்முகத்துடன் பணியாற்றுகிறீர்கள். மாலை வீடு திரும்புகையில், மகளும் மனைவியும் அன்புடன் எதிர்கொள்ளுகிறார்கள். நீங்கள் மகளைத்திட்டாமல், அன்பாகப் பேசியதால், அவர்கள் இருவருக்குமே உங்கள் மீது மதிப்பும் பாசமும் அதிகரித்திருக்கிறது.
காபி கொட்டுவது என்பது ஒரு உதாரணம். வாழ்வில் பல சமயங்களில் நாம் எதிர்பாராத, திருத்தமுடியாத நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அவற்றைக் கண்டு ஆத்திரமடைவதால், பதட்டமடைவதால் விளைவுகள் மேலும் கடினமாகின்றன. பொறுமையுடன் எதிர்கொண்டால், வெற்றி கிடைக்கிறது. அதனால்தான் நம் பெரியவர்கள் ‘பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கியவர் காடாள்வார்’ என்று சொல்கிறார்கள்.
நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின்பொழுதும் இந்த 90:10 விதியை நினைவுக்குக் கொண்டுவந்து செயல்பட்டால்…. வாழ்வே வசந்தமாகிவிடாதா?
No comments:
Post a Comment