Monday, April 25, 2016

உங்களை உண்ணும் உணவு

நீ எதை உண்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்கிறது கடோபநிஷத்.

மனதைப் பக்குவப்படுத்த உடலைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மதமும் முதலில் உணவுக்கட்டுப்பாட்டை விதிக்கிறது. எல்லா மதங்களும் உண்ணாவிரதத்தைப் பரிந்துரைக்கின்றன. எந்த நாளில், எந்த நேரத்தில் , எப்படிப்பட்ட முறையில் என்பதில்தான் வேறுபாடுகள். பிரார்த்தனை செய்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்பதும் எல்லாச் சமயங்களும் பரிந்துரைப்பதே. பிறரோடு பகிர்ந்து உண்பதும் பொதுவாக மதங்கள் வலியுறுத்தும் கருத்து.

உணவின் தேர்வு

உண்ணுதல் புனிதமான செயல். உடல் வளர்ப்பது உயிர் வளர்ப்பது. அது இறைமையைப் போற்றும் செயல். கடவுள் வாழும் ஆலயமே உடல். உணவு சமைப்பதும், பரிமாறுவதும், உண்பதும், பகிர்வதும் தெய்வீகச் செயல்கள். அதனால்தான் சிந்தையை முழுவதுமாக இந்தச் செயல்களில் செலுத்துவது அவசியம்.

அறம் சார்ந்த வாழ்க்கையை மேம்படுத்துவதே சமய நம்பிக்கை. பிற சமய அன்பர்களின் உணவுப் பழக்கத்தில் அத்து மீறல் செய்வது அராஜகம். யார் உணவையும் பறிப்பதோ தடுப்பதோ மிருகச்செயல். உணவு என்பது தனி நபர் உரிமை. தங்கள் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் வசதிக்கும் ஏற்ப உண்ணுதல் அவரவர் தேர்வு.

இது மட்டும்தான் சிறந்த உணவு என்று எண்ணுதல் பேதமை. காரணம் உணவுகள் தட்ப வெப்ப நிலை, வேலை, உடல் உழைப்பு, கலாச்சாரம் சார்ந்தவை. அதனால்தான் ஒரு உணவைச் சிறந்த உணவு என்று யார் மீதும் திணிப்பது அறியாமை.

ஒரே உணவு சரியா?

எஸ்கிமோக்கள் பூமியின் வடதுருவத்தில் உறைந்த பனி மண்டலத்தில் வாழும் பழங்குடி மக்கள். அங்குள்ள மிருகங்களை அவர்கள் உண்டாலும், அவற்றின் கொழுப்பு மாரடைப்பை வரவழைக்காது. ஆனால் நாம் இங்கு எதைத் தொட்டாலும் கொலஸ்ட்ராலுக்குப் பயப்படுகிறோம். அதற்கான காரணம், நாம் இப்போது உண்ணும் பல உணவுகள் நம் பாரம்பரியத்தில் இல்லாதவை. நம் வாழ்வு முறைக்கு ஒவ்வாதவை. அவற்றை ஜீரணிக்க நாம் சிரமப்படுகிறோம்.

அவரவருக்கான உணவு எது என்பதைத் தீர்மானிப்பது அவரவர் கடமை. ஒரு அலுவலகத்திலோ ஒரு குடும்பத்திலோ அனைவருக்கும் ஒரே உணவு என்பதே அடிப்படையில் ஒரு குறைபாடுதான். எல்லோருக்கும் ஒரே உணவு என்பது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் ஒரு நிர்வாகக் கண்ணோட்டத்தில் எளிதானது. அதனால் நிறைய நேரமும் மனித உழைப்பும் மிச்சமாகிறது. ஆனால், தனி நபர் ஆரோக்கியத்துக்கு இது நன்மை பயக்காது.

உடலின் உணவுமொழி

உணவு விடுதிகளில் புதுப் புது உணவுகள் படையெடுப்பது சந்தையின் அசுர வளர்ச்சியால். மெனு கார்டு முன்பு ஒரு அட்டையாக இருந்தது. இன்று அது டெலிபோன் டைரக்டரி போல வீங்கி வருகிறது. உலக நாடுகளில் உள்ள அனைத்து உணவுகளையும் இங்கேயே உட்கார்ந்துகொண்டு ருசி பார்க்கத் தயாராகிவிட்டோம்.

ஆனால் ஒவ்வொரு உணவின் தன்மை பற்றியும் அது நம் உடலையும் மனதையும் என்ன செய்யும் என்பதைப் பற்றியும் யோசிக்கிறோமா? ஒரு உணவின் தயாரிப்பில் என்னவெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்து கொள்கிறோமா? இதற்குப் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் உடலோடு சற்று உறவாடினால் போதும்.

ஒவ்வொரு உணவுக்கும் பிறகு ஏற்படும் உணர்வு, எண்ணம், உடல் மாறுதல்கள் என்று கூர்ந்து கவனியுங்கள். உடல் உங்களோடு பேசத் தயாராக இருக்கிறது. நீங்கள் தயாரா?

தேவாமிர்த ருசி

நட்சத்திர விடுதியில் தட்டை ஏந்தி ஒரு 50 அயிட்டங்களை அரையும் குறையுமாக அள்ளித் தின்றுவிட்டு வீடு வந்திருப்பீர்கள். சாப்பிடும் போது நன்றாக இருக்கும். வீடு வந்து படுக்கும்போது கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும். இது உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? அப்படி என்றால் ஏன் என்று யோசியுங்கள்.

வேலை செய்யும்போது அலுவலகத்தின் சமாச்சாரங்களைப் பேசியே என்ன உண்கிறோம் என்று உணராமலே மதிய உணவு எடுத்துக் கொள்வோம். எல்லா உணவுகளும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் பெரிய திருப்தி இருக்காது. ஆனால், ஒரு நாள் சுற்றுலாவின் போது, அருவியில் நீண்ட நேரம் குளித்துவிட்டு உண்ணும் ஒரு சாதாரணக் கடையின் உணவு தேவாமிர்தமாக ருசிக்கும். ருசியைக்கூட விடுங்கள். பசித்துக் காத்திருக்கும்போது வரும் சமையல் நறுமணம் எவ்வளவு தூண்டுதலாக இருக்கும்! இதை எத்தனை நாட்கள் நாம் முகர்ந்திருக்கிறோம்?

நீங்கள் உண்ணும் உணவால் ஏற்படும் உடல் மாற்றங்களையும் மன மாற்றங்களையும் ஒரு வாரத்துக்கு கூர்ந்து நோக்குங்கள். உங்கள் உடல் பற்றிய அறிவும், உணவு பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

உணவே மருந்து

நம் கலாச்சாரம், மரபணுக்கள், கற்றல் மூலமாக நம்மிடம் உள்ள சில ஆதார உணவுகள் உண்டபின் வயிற்றுக்கும் மனதுக்கும் பெரிய திருப்தி தருபவை. அவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தி உண்பதுதான் புத்திசாலித்தனம். உங்களுக்கான உணவை உங்கள் உடலே தேர்வு செய்யும். அதன் மொழி கேட்டு நடப்பதுதான் உத்தமம்.

நம் பாட்டி, தாத்தாக்களின் தெம்பு நம் பெற்றோர்களுக்கு இல்லை. நம் பெற்றோர்களின் தெம்பு நமக்கு இல்லை. நம் தெம்பாவது நம் பிள்ளைகளுக்கு இருக்குமா? மருத்துவம் வளர்ந்த அளவு ஆரோக்கியம் வளர்ந்துள்ளதா? யோசியுங்கள். நாம் கோட்டை விடும் இடம் உணவு என்று புரியவரும். உணவில் எல்லா அத்துமீறல்களையும் செய்கிறோம். சந்தை, அரசியல், சமூகம் அவற்றை செய்ய வைக்கிறது. ஆனால் நோய்வாய்ப்படுகையில் அவதிப்படுபவர் நீங்கள் மட்டும் தானே!

உலகின் எல்லா மனப்பயிற்சி மையங்களும், சமயங்களும், சோதனைகளும் உணவில்தான் தொடங்குகின்றன. உடல் பயிற்சிகூட அடுத்ததுதான்.

பேசாமல், பிற செயல்களில் ஈடுபடாமல் சாப்பிட்டுப் பாருங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். டி.வியும் செல்போனும் சாப்பிடும் இடத்திலேயே இருக்க வேண்டாம். கிடைக்கின்ற உணவில் உங்களுக்கு ஏற்றதாய், அளவாய் உண்ணுங்கள். உண்ணும் அளவுக்கு உடல் உழைப்பு உள்ளதா என்று பாருங்கள். பாரம்பரிய உணவுகள், வீட்டில் சமைத்த உணவுகளுக்கு முன்னுரிமை தாருங்கள். வெளி உணவு என்றால் லேபிள் பாருங்கள். டப்பாவில் அடைத்த உணவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் எந்த உணவின் மீதும் வெறுப்பும் விரோதமும் வேண்டாம்.

இந்த உணவை உண்ணும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் உணவு உடல் திடமும் மன நிறைவும் அளிக்கும் மாமருந்து என்பதை மறந்துவிட வேண்டாம்!

No comments:

Post a Comment