என்னுரை:
வாழ்க்கையில் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் செய்ய வேண்டாம்.
ஏனென்றால்....நாம் அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.....
அதன் பெயர்..... முயற்சி.
அப்படியென்றால் நாம் மேலும் முன்னேற என்ன செய்ய வேண்டும்?
விடாமுயற்சி செய்ய வேண்டும்.
அதுவும் எப்படி செய்ய வேண்டும்?
பலருடைய வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பாகத்தான், நாம் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதையெல்லாம் இந்நூல் உங்களுக்கு சொல்லப் போகிறது.
முன்னுரை:
வாழ்க்கையில் முன்னேற.....
சொல்வது யாருக்கும் எளியது.
செய்து பார்த்தால்தான் தெரியும் அது எவ்வளவு கஷ்டம் என்று.
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
சிலர் படித்துக்கொண்டிருக்கலாம்.
சிலர் ஏதோ ஒரு கம்பெனியிலோ அல்லது அலுவலகத்திலோ வேலை செய்து கொண்டிருக்கலாம்.
சிலர் படித்துக்கொண்டே வேலை செய்பவராக இருக்கலாம்.
சிலர் வேலை செய்துகொண்டே படிப்பவராக இருக்கலாம்.
சிலர் தொழில் செய்பவராக இருக்கலாம்.
சிலர் சும்மா வெட்டியாக பொழுது போக்கிக்கொண்டு எதிர்காலத்தில் பெரிய நிலைக்கு வர என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கலாம்
யாராக இருந்தாலும் சரி, முயற்சி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான்.
சிறிய வயது, வாலிப வயது, நடுத்தர வயது, முதுமையான வயது என்று எதுவுமே இல்லை.....நீங்கள் முன்னேற.....திட்டமிடுதலை தவிர.....
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்முடைய திட்டங்கள் மாறிக்கொண்டேதான் இருக்கும்.....மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏனென்றால்...... மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
குழந்தை வயதில் திட்டமிடுதல் என்பது நம்மால் முடியாத விஷயம். அப்போது அது பெற்றோரின் கடமைகளில் ஒன்றானதாக இருக்கும். அதைத்தான் பிற்காலத்தில் சொல்வார்களே, ‘பிள்ளையை வளர்த்திருக்கிற லட்சணத்தைப்பார்‘ என்று.
அதுவும் குழந்தை வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து சில மாற்றங்கள் இருக்கும். ஆனால் பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்று பெற்றோரைத்தான் குறை சொல்வார்கள். காரணம் குழந்தைகளால் எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராயத் தெரியாது.
பெரியோர்கள்தான் அதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஆனால் குழந்தை அதைக் கேட்க வேண்டுமே?
அந்தக் குழந்தை, ‘என் பிரண்ட் சொன்னான். அதுதான் சரி‘ என்று சொல்லிவிட்டு பெரியவர்கள் சொல்வதை நிராகரித்து விடுகிறது.
குழந்தையாக இருக்கும்போதே சில விஷயங்களை காது கொடுத்துக் கேட்கும்படி வளர்க்க வேண்டும்.
சரி.....சிறு வயதில்தான் எதையும் கேட்கவில்லை...இப்போது வாலிப வயதை தொட்டு விட்ட காலம்..........இனிமேல் என்ன செய்யலாம்?
இந்த பருவம் காதல் பருவம்.........
ஒரு பொய்யான ஆனால் சுகமான அனுபவம் உங்களுக்கு வரும் காலம்.
அந்த வயதை கடந்தவர்களின் அனுபவத்தை கேட்டு அறிய வேண்டிய காலம்.
இப்போது எதைச் சொன்னாலும் உங்கள் காதில் ஏறாது.
அது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி.
இருந்தாலும் இக்கட்டுரையின் ஒரு பகுதியாக இந்த கால கட்டத்திற்கு தகுந்தாற்போல ஒருசில விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டும்.
அது.....காதலியுங்கள் நன்றாக.....
ஆனால் இப்போதைக்கு அதை கொஞ்சம் தள்ளி வையுங்கள்...
சில நிமிஷங்கள்...
சில மணிகள்...
சில வாரங்கள்...
சில மாதங்கள்...
சில வருடங்கள்...
ஆஹா!.. இப்போதும் உங்களிடம் காதல் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் ஜெயிப்பீர்கள்.
காதல் இல்லையென்றால்.....நிறைய ஜெயிப்பீர்கள்.
காதல் வேறு.. வாழ்க்கை வேறு.
கால மாற்றம் அதை உங்களுக்கு உணர்த்தியிருக்கும்.
ஏனென்றால் மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
வாலிப வயதில் படித்துவிட்டு வேலை தேடுவது என்பது ஒரு சோதனையான கால கட்டம்.
ஆனால் அதை ஜெயிப்பது மிகமிக சுலபம்தான்.
சிலருக்கு படித்துக்கொண்டிருக்கும்போதே வேலை கிடைத்துவிடும்.
அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்கக்கூடாது.
உடனே வேலை கிடைக்கவில்லையென்றால் நீங்கள் திறமை இல்லாதவர் என்று நினைக்காதீர்கள்.
உண்மையில் உங்களிடம்தான் திறமை நிறைய இருக்கிறது.
உங்களைத் தேர்வு செய்யாத அந்த கம்பெனிக்குத்தான் உங்களை பயன்படுத்திக்கொள்ளும் அதிர்ஷ்டம் இல்லை.
ஏன் தெரியுமா?
நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்த நிறைய முயற்சி செய்வீர்கள். அந்த முயற்சி விடா முயற்சியாகி நாளை உங்களையே ஒரு கம்பெனி ஆரம்பிக்க வைக்கும் அளவிற்கு முன்னேற்றிச் செல்லும்.
வேலை கிடைத்த அதிர்ஷ்டசாலி....
தலைக்கனத்தோடு சென்றவன் என்ன ஆனான்?
தலைக்கனம் இல்லாமல் சென்றவன் என்ன ஆனான்?
எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் அதில் முதலில் முழு ஈடுபாடு கொள்ள வேண்டும்.
அந்த வேலையை நமக்கு கொடுத்த முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
உண்மையான உழைப்பைக் கொடுக்க வேண்டும்.
நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு திருப்தி வர வேண்டும்.
உங்கள் வேலையில் குறை கண்டுபிடிக்கும் உங்கள் மேலாளருக்கோ அல்லது முதலாளிக்கோ அப்போதுதான் நீங்கள் சரியான பதிலை கூற முடியும்.
செய்கிற வேலையை முழுக்க கற்றுக்கொண்டு அதன் பிறகு அந்த துறையிலேயே மேலும் மேலும் உங்கள் திறமையை நீங்களேதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள்.
நீங்கள்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவரவர்க்கு அவரவர் வேலை.
அதிர்ஷ்டம் ஒரு முறை கதவை தட்டும். அதற்காகத்தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதிர்ஷ்டம் அடிக்கடி கதவைத் தட்டிக்கொண்டேதான் இருக்கிறது.
நீங்கள் ஒரு மரம் வளர்க்கிறீர்கள். அது சின்னச் செடியாக வளர்ந்து, பலப்பல கிளைகளாகப் பிரிந்து இறுதியில் மிகப்பெரிய மரமாக வளர்ந்து நிற்கும்.
அந்த மரத்தின் ஒவ்வொரு கிளையும் அதிஷ்டம் நம் கதவைத் தட்டியபோது கிடைத்ததுதான். நாம்தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
செடியாக இருக்கும்போது பலன் கிடைக்காது. சிறிய மரமாக மாறும்போது, அதனோடு இணைந்த சில கிளைகளில் சில காய்கள் காய்த்து சின்ன பலன் கிடைக்கும். அதுவே இன்னும் பெரிய மரமாக வளர்ந்து நிறைய கிளைகளோடு இருக்கும்போது கிடைக்கும் பலன் மிகவும் அதிகமாக இருக்கும்.
எனவே ஒரு விதை செடியாகி, மரமாகி, பெரிய மரமாகி, மிகப் பெரிய மரமாகும் வரை காத்திருந்தால் கிடைக்கும் பலனும் பிகப் பெரியதாக இருக்கும். அதுவரை பொறுமை அவசியம்.
இந்த அவசர உலகத்தில் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை - அநேகமாக போய் விட்டது - என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் நீங்கள் அப்படி இருக்காதீர்கள். அடுத்தவருக்கும் சொல்லிக் கொடுங்கள்.
அதுதான் உங்களை நீங்களே பட்டை தீட்டிக்கொள்ளும் முயற்சியாக இருக்கும்.
வேலையில் சேர்ந்த பிறகு உடனடியாக வேறு வேலைக்கு மாற முயற்சி செய்யாதீர்கள்.
சில வருடங்களாவது ஒரே இடத்தில் வேலை செய்யுங்கள்.
உங்கள் வேலையைப் பார்த்துவிட்டு அந்த கம்பெனியே உங்கள் சம்பளத்தை ஏற்றிக் கொடுத்தால் நல்லது.
இல்லையன்றால் நீங்களே கேட்டுப் பெறலாம்.
அது தப்பில்லை.
ஒருவேளை ஏற்றிக்கொடுக்கவில்லையென்றால்.....
அப்போது நீங்கள் வேறு கம்பெனிக்கு வேறு வேலைக்கு அதிக சம்பளத்திற்கு மாறிக்கொள்ள முயற்சி செய்யலாம்.
அல்லது மேலும் மேலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
திறமை இருந்தும் சம்பளம் ஏறவில்லையென்றால் மட்டுமே வேறு கம்பெனிக்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஒருவேளை உங்களிடம் திறமை இருந்து, உங்கள் கம்பெனியால் சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை என்றாலும் வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம்.
வேறு வேலைக்கு முயற்சி செய்வதைவிட சுய தொழில் தொடங்க முயற்சி செய்வதை நாம் வரவேற்க வேண்டும்.
சுய தொழில் என்பது கடை என்றோ, தொழிற்சாலை என்றோ நாம் நினைக்க வேண்டாம்.
ஏற்கனவே நீங்கள் எந்த கம்பெனியில் அல்லது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தீர்களோ அதே வேலை சார்ந்த தொழிலாக இருந்தால் நல்லது.
அதற்கு முதலீடு வேண்டுமே?
முதலீடு செய்வதற்கு பணம் வேண்டுமே?
முதலீடு என்பதை வெறும் பணம் என்று மட்டும் நினைக்காதீர்கள்.
உங்கள் உழைப்பும்கூட ஒரு முதலீடுதான்.
எந்த ஒரு தொழிலும் பணமும், உழைப்பும் சேர்ந்ததுதான்.
இருந்தாலும் பணம் படைத்தவன் உழைக்கத் தெரிந்தவனை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறான்.
உழைக்கத் தெரிந்தவன் பணத்தை கடனாக வாங்கி முதலீடாக்கிக் கொள்கிறான்.
இரண்டும் சேர்ந்து இருந்தால்.....
இந்த இடத்தில்தான் திட்டமிடுதல் அவசியமாகிறது.
கடன் வாங்காமல் தொழில் செய்ய முடியுமா?
வெறும் கையில் முழம் போட முடியுமா?
முடியும்.
முடியும் என்று நினைத்தால்.....
முடியும்.
அதுதான் திட்டமிடுதல்.
முதலில் நீங்கள் உங்கள் திட்டங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்.
அதில் முதல் முயற்சியாக சிறு சேமிப்பை தேர்வு செய்யுங்கள்.
சிறு துளி பெரு வெள்ளம்.
இன்றைய சேமிப்பே நாளைய வளமான வாழ்வு.
&&&இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டும்... வேலை, வேலை என்று சொல்லி விட்டு தொழில் சம்பந்தமான விஷயத்திற்கு மாறி கட்டுரை செல்கிறதே? என்று சந்தேகம் வந்திருந்தால்..... நீங்கள் சரியாகவே யோசிக்கிறீர்கள்.
நீங்கள்தான் இந்நூலை படிக்க வேண்டியவர்கள்&&&
வேலை என்றால் என்ன?
தொழில் என்றால் என்ன?
அடுத்தவரிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு செய்தால் அது வேலை. இல்லையென்றால் அது தொழில்.
சம்பளம் பெற்றுக்கொள்வதுடன் நம் வேலை முடிந்து விட்டது.
அதன் பிறகு கிடைக்கும் லாப, நஷ்டங்களில் நமக்கு எந்த பங்கும் இல்லை. பொறுப்பும் இல்லை.
பொறுப்பை தட்டிக் கழிப்பதுதான் வேலை. பொறுப்பை தலை மேல் தூக்கி வைத்துக் கொள்வதுதான் தொழில்.
வேலையிலும் பொறுப்புகள் இல்லாமல் இல்லை.
ஆனால் அந்த பொறுப்புகள் சில வரைமுறைகளுக்குள் அடங்கிவிடும்.
வேலையில் இருக்கும்பொது நம்மீது திணிக்கப்படும் பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் அதை முழு ஈடுபாடுகொண்டு செய்யும்போதுதான் அதன் பின்னால் கிடைக்கும் லாப, நஷ்ட கணக்கு நமக்கு தெரிய வரும்.
அப்போதுதான் அந்த தொழில் மீது ஒரு பக்தி வரும்.
உண்மையிலேயே நாம் செய்யும் வேலையினால் நம்மால் மட்டுமே நம் கம்பெனி லாபம் பெறுகிறதா என்றால்..... நிச்சயமாக அது இல்லை.
நம்மைப்போல் பலருடைய உழைப்பில்தான் ஒரு கம்பெனி நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
ஊர் கூடி இழுத்தால்தான் தேர் தன் இடம் சேரும்.
தனியொரு மனிதனின் உழைப்பினால் அவனை மட்டுமோ, அவனுடைய குடும்பத்தை மட்டுமோ, அவனுடைய ஊரை மட்டுமோ, அவனுடைய நாட்டை மட்டுமோ வாழ வைக்க முடியுமா?
முடியும்.
உலகின் பல நாடுகளிலும் தலைவர்களக இருந்தவர்கள் இப்போதும் இருப்பவர்களில் சிலர் தன் ஆரம்ப கால வாழ்க்கையில் வெறும் சோதனைகளை மட்டுமே பார்த்தவர்கள்தான்.
அவர்களின் முயற்சியும், விடா முயற்சியும்தான் அவர்களை மேன்மேலும் வளரச் செய்திருக்கும். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றியிருக்கும்.
நாம் குடும்ப பந்த வாழ்க்கை முறைக்குள் மாறுவதற்குள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்..
சேமிப்பு.
மீண்டும் மீண்டும்
சேமிப்பு.
நாம் வாங்கும் சம்பளத்தில் & கூலியில் ஒரு சிறு தொகையையாவது சேமிக்க வேண்டும்.
சிறு துளி பெரு வெள்ளம்.
இன்றைய சேமிப்பை எவ்வாறு முதலீடு செய்கிறோம் என்பதுகூட ஒரு கலைதான்.
சேமிப்பதை மீண்டும் செலவழிக்கக்கூடாது.
அதை காப்பாற்றிக்கொள்ளவும், மேலும் மேலும் பெருக்கிக்கொள்ளவும் செய்ய வேண்டும்.
இளமை காலத்தில்தான் அதற்கு நேரமும் கிடைக்கும்.
இப்போதைய சேமிப்பே நாளை நாம் தொடங்க இருக்கும் தொழிலுக்கு முதலீடாக இருக்கும்.
உங்கள் உழைப்பின் மூலம் கிடைக்கப்பெறும் அதிகப்படியான ஊக்கத்தொகை மேலும் மேலும் வளர்ந்துகொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கும்போதுதான் நமக்கும் வேகம் வரும்.
பணம் வளர வளர மேலும் சேர்க்கத் தூண்டும்.
மேலும் உழைக்கத் தூண்டும்.
உழைப்பு கூடக்கூட நம் தரம் கூடும்.
நம் தரம் கூடக்கூட நம்மீதும், நம் கம்பெனி மீதும் மதிப்பு கூடும். நமக்கு சம்பளம் கூடும்.
கம்பெனியில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க அது உதவும்.
அதற்குத் தேவையான உத்வேகத்தை கொடுப்பது சேமிப்புதான்.
நாம் திருமண பந்தத்தினுள் அடியெடுத்து வைப்பதற்குள் இதை எட்டிப் பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஏனென்றால், இப்போதைக்கு நாம் தனி மனிதன். மிஞ்சிப் போனால் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் மட்டுமே நம்முடன் இருப்பவர்கள்.
அதுவே திருமணத்திற்குப் பிறகு மனைவி என்கிற பந்தம் சேரும்போது நிச்சயமாக நம் பொறுப்புகளில் இருந்து விலக னேரிடும்.
&அதை பிறகு பார்ப்போம்&
அதற்குமுன் நாம் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறது.
அதில் முக்கியமான ஒன்று நேரம் தவறாமை - மற்றொன்று - தட்டிக்கழிப்பது.
எந்த ஒரு வேலையையும் பொறுப்பேற்றுக்கொள்ளும் போதே அந்த வேலையை எப்போது முடிக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
இத்தனை மணி நேரம், இத்தனை நாள், இத்தனை வாரம், இத்தனை மாதம் என்று தீர்மானமாக இருக்க வேண்டும்.
தீர்மானித்த காலத்திற்கு முன்னேயே அதை முடித்துவிட வேண்டும்.
அப்போதுதான் லாப சதவீதங்கள் அதிகமாக இருக்கும்.
அன்றைய வேலையை அடுத்த நாளுக்கு ஒத்திப்போடுவதும், அதனால் அடுத்தடுத்த நாட்களின் வேலைப்பளுவை அதிகரித்துக்கொண்டே செல்வதும் லாப சதவீதங்களை குறைப்பதொடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் நஷ்டத்திற்கே கொண்டு சேர்த்து விடும்.
ஒத்திப்போடுவதும், தட்டிக்கழிப்பதும் நம் முன்னேற்றத்தின் முதல் எதிரி.
சரி.....எப்பவும் வேலை, வேலை என்றே இருக்கிறோமே, வேலை, சம்பாத்தியம் இது மட்டுமேதான் வாழ்க்கையா?
பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்து விடுமா?
நம் மனதிற்கு பிடித்தமான வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டாமா?
வேண்டும்.
கட்டாயம் வேண்டும்.
எவ்வளவு வேலை செய்கிறோமோ அத்ற்கு தகுந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, அதில் சிறிய அளவை சேமிப்பில் போட்டு விட்டு, மீதியைக் கொண்டு இன்றைய வாழ்க்கையை அனுபவிக்கவும் வேண்டும்.
இங்கே ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டுமே.
வேலை அல்லது தொழில் - இதற்கும் நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஒரு முக்கியமான சம்பந்தம் இருக்கிறது.
அது ---
ஒழுக்கம் - தனி மனித ஒழுக்கம்.
அதுதான் ஒரு மனிதனை மிக உயரத்திற்கு கூட்டிச் செல்கிறது.
அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பாருங்கள் -
தனி மனித ஒழுக்கம் தவறும்போது அவன் நிச்சயமாக ஒருபடி கீழே தள்ளப்படுகிறான்.
ஒழுக்கம் தவறேல் - ஔவைப் பாட்டியின் ஒரு கூற்று.
ஔவையின் ‘ஆத்தி சூடி‘யை சிறு வயதில் கற்றிருப்போம்.
விபரம் தெரியாத வயதில் நிறைய கற்றிருக்கிறோம்.
அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து படிக்கவில்லை.
படித்தோம் - மதிப்பெண் பெற்றோம் - நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தது - மீண்டும் படித்தோம் - நல்ல வேலை கிடைத்தது - இப்போது மீண்டும் படிக்கப் போகிறோம் - அது வாழ்க்கை என்னும் பாடம்.
இனிமேல்தான் நாம் இதுவரை படித்ததின் அர்த்தத்தை புரிந்து வாழ்க்கையை வாழப் போகிறோம்.
நேற்று வரை நாம் வாழ்ந்த வாழ்க்கை நம்முடையதல்ல. அது நம் பெற்றோருடையது.
அவர்களின் உழைப்பில், அவர்களின் வருமானத்தில் ஒரு பகுதிதான் நமக்கு செலவிடப்பட்டது.
இனிமேல்தான் நம் உழைப்பில், நம் வருமானத்தில் நம் வாழ்வை ஆரம்பிக்கப் போகிறோம்.
பெற்றோரையோ மற்றோரையோ சார்ந்து வாழ்ந்த வாழ்க்கையை விட இனிமேல் வாழப்போகும் வாழ்க்கை வேறு.
இப்போது நமக்கு ஒரு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
இது என் சம்பாத்தியம் -
சுய சம்பாத்தியம்-
இதை எப்படியும் செலவு செய்யலாம்.
கேட்க ஆளில்லை.
ஒரு மனிதனுக்கு சுயபுத்தியைக் கொடுப்பதே பணம்தான்.
பணம் என்பது தேவைதான்.
ஆனால் பணமே வாழ்க்கை அல்ல.
நாம் பணத்திற்கு அடிமை ஆகக்கூடாது.
பணம்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
எதை செய்ய வேண்டும்?
அதை எப்போது செய்ய வேண்டும்?
எப்படி செய்ய வேண்டும்?
ஏன்? எதற்கு? எப்படி? என்பதை தீர்மானமாகக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் மேலே சொன்ன ஒழுக்கமான வாழ்க்கையை நாம் கடைப்பிடிக்க முடியும்.
களவும் கற்று மற என்பதாக எந்த தவறையும் உடனடியாக திருத்தி நல்வழிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
கடவுள் நமக்கு எப்போதுமே இரண்டு விரல்களை நீட்டி இரு வழிகளை காண்பித்துக் கொண்டே இருக்கிறார்.
அதாவது நமக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அதில் ஒன்றை மட்டுமே நாம் தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை.
நல்ல வழியா? கெட்ட வழியா?
ஏதோ ஒன்றை தேர்வு செய்கிறோம்.
அவ்வளவுதான் அந்த வாய்ப்பு.
கஷ்டமோ, நஷ்டமோ, லாபமோ & எதுவானாலும் நமக்கு இதுதான் விதி.
மீண்டும் நாம் பின்னோக்கி இறந்த காலத்திற்கு செல்ல முடியாது.
நமக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பைத்தான் அதிர்ஷ்டம் என்று சொல்கிறோம்.
நிகழ்காலத்தில் வாழ்ந்து எதிர் காலத்திற்கு திட்டமிட்டு, அடுத்த காலத்திற்கு அடியெடுத்து வைக்க அடுத்த வாய்ப்புக்காக நாம் காத்திருக்கும் நேரத்தில-------
மீண்டும் நம் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம்.
நம் வாழ்வின் அடுத்த படியை அடைவதற்கு மேலும் சில திட்டங்கள் நாம் தயாரிக்க வேண்டும்.
திருமணமாகி குடும்ப பந்தத்திற்குள் சிக்கும்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் என்னென்ன?
இனிமேல் நாம் பிறந்த குடும்பத்தின் உறுப்பினர்களோடு ஒரு புத்தம் புதிய உறவாக மனைவியோ அல்லது கணவனோ, அதற்குப் பிறகு குழந்தைகள், கணவன், மனைவி வழி உறவுகள் அவ்வளவு பேரும் நம்முடைய தொடர்பு எல்லைக்குள் உள்ளே வந்து விடுவார்கள்.
அவர்கள் அனைவருமே நம் முந்தைய குடும்ப உறவுகளைவிட மிகவும் சென்சிட்டிவானவர்களாக இருப்பார்கள்.
முக்கியமாக புதிய உறவுகள் நம் நேரத்தை சாப்பிடுபவர்கள்.
நிச்சயமாக அவர்கள் நம் முன்னேற்ற பாதையின் சில தடைக்கற்கள்தான். இல்லையென்று சொல்ல முடியாது.
ஆனால்,
அந்த தடைக்கற்களையே நம் முன்னேற்றப் பாதைக்கான படிக்கற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
கூடப் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளைவிட புதிதாக வந்த உறவினர்களிடம் எதிபார்ப்பபுகள் நிறைய இருக்கும்.
எங்கே எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கிறதோ அங்கே ஏமாற்றங்களும் நிறைய இருக்கும்.
ஆகவே எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
உழைப்பிலும் அப்படித்தான்.
எதிர்பார்ப்புகளுடன் கூடிய உழைப்பு வீணாகித்தான் போகிறது.
எப்படி?
எந்த ஒரு நன்மையோ அல்லது லாபமோ இல்லாமல் எதற்கு உழைக்க வேண்டும்?
அப்படி அல்ல.
எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளத்தான் சொல்கிறோம்.
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நம் உழைப்ப ஆரம்பிக்கும்போது நம் குறிக்கோள், செய்ய வேண்டிய காரியத்தின் மீது இருக்காது. வரவேண்டிய லாபத்தின் மீதுதான் இருக்கும்.
மனச் சிதறல்களால் உழைப்பின் பெரும் பகுதி வீணாகும் வய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
வயலுக்கு நீர் பாய்ச்சும்போது மடையை திறந்து விட்டுவிட்டு நாம்பாட்டுக்கு நேரே நம் வயலுக்கு போய் நின்று கொண்டால் நீர் வந்து சேர்ந்து விடுமா?
வரும். ஆனா முழுக்க வராது.
வரும் வழியில் வாய்க்காலில் ஓட்டை இருந்தால் அல்லது உடைப்பு எற்பட்டு அடுத்தவர் வயலில் பாய்ந்து விட்டால் &&
நமக்கு வந்து சேர வேண்டிய நீரின் அளவு குறைந்து விடுமல்லவா?
ஒரு கதையை கேளுங்கள்.
ஒரு நாட்டின் அரசன் தன்னுடைய அமச்சரிடம், ‘அமைச்சரே! நாமும் எவ்வள்வோ நலத்திட்டங்கள் தீட்டுகிறோம். அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்குகிறோம். அவையெல்லாம் மக்களுக்கு போய்ச் சேரமாட்டேன்கிறதே? என்ன செய்வது?’ என்று கேட்டார்.
அமைச்சர் சொன்னார், ’அரசே! நிதி போய்ச் சேர்கிறது. ஆனால் எவ்வளவு போய்ச் சேர்கிறது என்பதுதான் தெரிய வேண்டும்?’ என்று.
’அதை எப்படி தெரிந்து கொள்வது?’ என்று அமைச்சரிடம் கேட்டார் அரசர்.
அமைச்சர் வேலையாள் ஒருவனிடம் ஐஸ் கட்டி ஒன்றை கொண்டு வரச் செய்தார்.
அதை அரசரிடம் கொடுத்து, ’அரசே! இதை அவரிடம் கொடுங்கள்.’ என்றார்.
அரசரும் கொடுத்தார்.
ஐஸைப் பெற்றுக்கொண்டவரிடம் அமச்சர் அதை அடுத்து நின்றவரிடம் கொடுக்கச் சொன்னார்.
அப்படியே அடுத்தடுத்தவரிடம் கொடுத்து கடைசியாக அரசவையின் கடைக்கோடி ஆளிடம் போய்ச் சேர்ந்ததும் அரசரை அழைத்துக் கொண்டு கடைசி ஆளிடம் சென்றார் அமைச்சர்.
’பா£ருங்கள் அரசே! ஐஸ் கட்டி கரைந்து உருகி கனிசமான அளவு குறைந்து இருப்பதை பாருங்கள். இப்படித்தான் நம் நிதியும் போய்ச் சேர்கிறது’
திட்டங்கள் தீட்டுவது பெரிதல்ல.
அதை செயல்படுத்தில்தான் நம் திறமை இருக்கிறது.
- சொல்வது யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல் -
தீட்டிய திட்டங்களை செயல்படுத்த வேண்டுமானல் அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் நாம் முன்னேயே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் இன்ன இன்ன வேலையை இன்னாருக்கு என்று பிரித்துக் கொடுத்து அந்த வேலையை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடித்துக் கொடுக்க மிடியும்.
அப்போதுதான் வீண் செலவுகளும் குறையும்.
அதனால் லாபமும் கூடும்.
அதனால் நம் மதிப்பும் கூடும்.
அதோடு நமக்கு உபரி வருமானமும் கூடும்.
வேலையிலிருந்து சொந்த தொழிலுக்கு மாறும்போதும், அல்லது வேறு வேலைக்கு முயற்சி செய்யும்போது ஒன்றை கட்டாயமாக முடிவு செய்யுங்கள்.
ஏனென்றால் வேறு எந்த வேலைக்கு சென்றாலும் அங்கேயும் உங்கள் உழைப்பைத்தான் நீங்கள் செலவு செய்யப் போகிறீர்கள்.
அதை இப்போது வேலை செய்யும் இடத்திலேயே செய்தால் என்ன?
இங்கே சம்பளம் குறைவாக இருக்கிறதா?
அப்படியானால் நிச்சயமாக. நீங்கள், உங்கள் உழைப்பை முழுமையாகச் செய்யவில்லை. இல்லையென்றால் உங்கள் உழைப்பு எங்கோ வீணாகிக்கொண்டிருக்கிறது என்றுதான் பொருள்.
அதுவும் இலலையென்றால் உங்கள் வேலை உங்களுக்கு போர் அடிக்கிறது என்று பொருள்.
அதுதான் முதலிலேயே சொன்னோம். செய்யும் வேலையில் முழு ஈடுபாடு வேண்டும் என்று.
மனதிற்கு பிடித்த வேலை - அல்லது கிடைத்த வேலை - ஏதோ ஒன்று.
அதை முழு உடன்பாடு கொண்டு, ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
வேறு வேறு வேலைக்குப் போனாலும் அங்கேயும் இதே நிலைமைதான் இருக்கும்.
வேலை வேண்டுமானால் மாறலாம். வேலை நுணுக்கங்கள் மாறாது, கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும்.
எனவே உங்களுக்கு அங்கேயும் சில காலம் கழித்து அந்த வேலையும் போர் அடித்து விடும்.
பிறகு மீண்டும் வேறு வேலை தேடும் படலம் தொடரும்.
நேர விரையம்தான் ஏற்படும்.
இதுவே வேலை அல்லாமல் சொந்த தொழில் ஆரம்பித்து நடத்தியிருந்தால்--- ம்ஹும் --- நிறைய நஷ்ட பட வேண்டியிருந்திருக்கும்.
எனவே, இருக்கும் வேலையில் நிறைய கற்றுக்கொண்டுவிட்டு, தேவையான அளவு சேமிப்பையும் சேர்த்துக்கொண்டு, பிறகுதான் சொந்தமாக தொழில் ஆரம்பிப்பது பற்றி யோசிக்க வேண்டும்.
என்னதான் சொல்லுங்கள் --- சொந்த தொழில் செய்து சம்பாதிப்பதில் கிடைக்கும் லாபம், சுகம் வேறு எதிலும் கிடைக்காது.
இங்கே நாமே ராஜா! நாமே மந்திரி!
எனவே பொறுப்புகளும் ரொம்ப அதிகம்.
அதை முதலில் புரிந்து கொண்டால் போதும்.
ஏனென்றால் இங்கே எதையும் தட்டிக் கழிக்க முடியாது.
இங்கே வாடிக்கையாளர்கள், அவர்களின் திருப்தி மிகவும் முக்கியம்.
மகாத்மா காந்தி சொன்னார் - ‘வாடிக்கையாளர் தெய்வம்‘ - என்று.
திருப்தியுடன் வெளியே செல்லும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மேலும் ஒரு வாடிக்கையாளரை உங்களிடம் அனுப்புவார்.
வாழ்க்கையின் எந்த கால கட்டத்தில் சுய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
நிறைய, நல்ல அனுபவத்தைப் பெற்றுக்கொண்டபின், நம்மீது மதிப்பு கொண்டுள்ள நிச்சயமான வாடிக்கையாளர்கள் ஒரு சிலரையாவது வைத்துக்கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும்.
திருமண வாழ்க்கையை தொடர்ந்து சொந்த குடும்ப வாழ்வில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும்போது அவசரப்பட்டு ஏது செய்துவிடக் கூடாது.
ஏனென்றால் அந்த தருணங்களில் உங்களின் தேவைகள் அதிகமாக இருக்கும்.
எனவே எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும்.
எந்த ஒரு தொழிலும் ஆரம்பித்த உடனே லாபத்திற்கு வராது.
அப்படி வந்தால் அது நிச்சயமாக குருட்டு அதிர்ஷ்டமாகத்தான் இருக்கும்.
குருட்டு அதிர்ஷ்டத்தின் பலனை நம்பி தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது.
சொந்த தொழில் என்பது போட்டியிட்டு ஜெயிக்க வேண்டிய போர்க்களம்.
அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு, லாபம்தான் வருகிறதே என்று அலட்சியமாக இருந்து விட்டீர்கள் என்றால் எதிர் காலத்தில் வரப் போகும் போராட்டத்தை எதிர் கொள்ளும் திடத்தை இழந்து விடுவீர்கள்.
தொழிலில் கிடைக்கும் லாபத்தை உடனே செலவு செய்து விடாதீர்கள்.
கொஞ்சமாக சேமிப்பில் போடுங்கள்.
மீதியை அதே தொழிலில் மறுமுதலீடு செய்யுங்கள்.
மிக கொஞ்சமாக செலவும் செய்யுங்கள்.
இப்போது நீங்கள் உழைக்கும் நேரத்தை கூட்ட வேண்டிய கட்டாயம் வந்திருக்கும்.
சுய தொழில் தொடங்கி, புதிய வாடிக்கையாளரை சேர்த்து, மேலும் வாடிக்கையாளரை சேர்த்து, மெலும் மேலும் கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும்.
ஒவ்வொரு வாடிக்கையாளர் உள்ளே வரும்போதும் இன்னொரு வாடிக்கையாளர் வெளியே சென்று கொண்டிருக்கிறார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
எனவே புதுப்புது வடிக்கையாளரை சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதற்கான முயற்சியை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
சுயதொழில் முன்னேற்றம் காண வேண்டுமானால் & தொழில் முறையில் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றாற்போல சில மாற்றங்களையும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
சுற்றி இருப்பவர்களும் ந்ம்மிடம் வேலை செய்பவர்களும் நம்மைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை கவனமுடன் கெட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலில் எதிரிகள் அதிகம்.
அந்த எதிரிகள் வேறு யாருமல்ல - நம் கூடவே இருப்பவர்கள்தான் முதல் எதிரியாக இருப்பார்கள் - காரணம் - அவர்களுக்குத்தான் நம் லாபங்கள் தெரியும்.
எனவே, எதிரியை எப்போதும் கண்பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும்.
தொழில் முறையில் யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது.
புது எதிரிகளை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.
எனவேதான் எதிரிகளை கூடவே வைத்துக்கொள்ளச் சொல்கிறோம்.
அப்போதுதான் நாம் எப்போதும் விழித்துக் கொண்டே இருப்போம்.
- காலாட்டிக்கொண்டே தூங்குங்கள். இல்லையேல் செத்து விட்டான் என்று உங்களைத் தூக்கிப் போட்டு விடுவார்கள் - என்று சொல்வார்கள்.
புரிந்து நடந்து கொள்ளுங்கள். அதற்கும் சில விஷயங்களை சொல்லித்தான் தீரவேண்டும்.
எந்த ஒரு செயலையும் ஆசையோடு செய்வதைவிட விருப்பப்பட்டு செய்யுங்கள். செயல் முடிவில் ஆசை நிராசையாகவோ அல்லது பேராசையாகவோ முடியும். விருப்பமோ ஒரு திருப்தியோடு முடிந்துவிடும்.
நமக்கு அருமையான வாய்ப்புகள் நிறையவே காத்திருக்கின்றன. வாய்ப்புகள் என்பது நம் கையில் கிடைத்த ஒரு அட்சய பாத்திரம். அதுவும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்பதை நாம் உணர வேண்டும்.
அட்சய பாத்திரத்தில் இருக்கும் பொருள் நம் உழைப்பால் நமக்கு கிடைத்த பலன். நாம் எவ்வளவு உழைக்கிறோமோ அவ்வளவு பலன்களும் அந்த அட்சய பாத்திரத்தில் கொட்டப்படுகின்றன். பலன்களாகிய அந்தப் பொருளை நாம் பிறருக்கு வழங்கும்போது நம் கையில் உள்ள அட்சய பாத்திரமானது மீண்டும் மீண்டும் நிரம்பிக் கொண்டேயிருக்கும். பிறருக்கு வழங்காதபோது அந்த பலன்களாகிய பொருள் நிரம்பி வழிந்து வீணாகி கீழே கொட்டிப்போகும்.
அப்படி வீணாகிப் போவதைவிட அதை நாமே மனமுவந்து மற்றவர்களுக்கு கொடுத்தால் அதன் புண்ணிய பலன்களும் நமக்கு கிடைக்கும். அந்த பலன்களை நம்முடன் சேர்ந்து உழைக்கும் சக தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.
முடிவுரை:
என்னுரை, முன்னுரை, இப்போது முடிவுரை என்று படிப்பவர்கள், கட்டுரையைப் படிக்காமல் முடிவுரைக்கு வந்த பொறுமைசாலிகள் அனைவருக்கும் நான் செல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். சிங்கள் மிகமிக அவசரப்படுகிறீர்கள். வாழ்க்கையில் முன்னேற நமக்கு தெவை பொறுமை. மிகவும் முக்கியமான பொறுமை உங்களுக்கு இப்போது தேவைப்படுகிறது. னுனவே, நீங்கள் மீண்டும் என்னுரையைப் படித்துவிட்டு, முன்னுரையைப் படித்துவிட்டு, அப்புறம் கட்டுரையைப் படித்துவிட்டு, இறுதியாக கீழே உள்ளதைப் படியுங்கள்.
இவ்வளவு நேரம் செலவிட்டு இக்கட்டுரையைப் படித்துவிட்டு உங்களுடைய பொறுமையை வெளிப்படுத்திய உங்களுக்கு நான் மீண்டும் ஒன்று சொல்ல வேண்டும். அங்கங்கே என்னுடைய எழுத்தில் நிறைகுறைகளும், போரடிக்கும் சில விஷயங்களும் கலந்திருக்கும். அந்த மாதிரி அதையெல்லாம் படிக்காமல் விட்டுவிட்டு வந்திருந்தீர்களென்றால்...... மீண்டும் சொல்கிறேன்...... அதைப் படித்துவிட்டு அதற்குப் பிறகு கீழே உள்ளதைப் படியுங்கள்.
இவ்வள்வு சொல்கிறீர்களே.....இதையெல்லாம் நீங்களே முயற்சி செய்து பார்த்து, நீங்கள் பெரிய ஆளாகியிருக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறதா?
ஒரு மிகப் பெரிய தாதா தன்னுடைய தன்னுடைய எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்ள ஒரு சோதிடரை அழைத்து வரச் செய்தான். சோதிடரும் தன்னுடன் உதவியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். தாதாவின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, ‘உங்கள் உயிருக்கு இப்போது கண்டம். நீங்கள் இறக்கப்போவது உறுதி.‘ என்று கூறினார். உடனே தாதா, ‘முதலில் உன் உயிருக்கு கண்டம் வந்திருப்பது தெரியாமல் எனக்கு சோதிடம் சொல்ல வந்திருக்கிறாயே‘ என்றபடியே தன்னுடைய துப்பாக்கியை எடுத்து சோதிடரை சுட்டு விட்டான். உடனே சோதிடருடன் வந்திருந்த அவரது உதவியாளர் தன்னுடைய துப்பாக்கியால் தாதாவை சுட்டுக் கொன்றுவிட்டான். கீழே விழுந்து உயிரை விட்டுக்கொண்டிருந்த சோதிடர், தன் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டார், ‘அடே மடையா! உதவியாளனே இல்லாத நான் இன்று உதவியாளன் ஒருவனுடன் ஏன் வந்தேன்? இன்று என் உயிருக்கு கண்டம் இருக்கிறது என்றுதான் பாதுகாப்புக்காக உதவியாளனுடன் வந்தேன். ம்... நடப்பது நடந்தே தீரும்.‘ தாதாவும், சோதிடரும் கண்களை மூடிக்கொண்டனர்.
அதாகப்பட்டது..... ஒரு விஷயத்தை சொன்னால் அதைக் கேட்டு அதிலுள்ள விஷயத்தை பின்பற்றி நடக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் முயற்சி மற்றும் விடாமுயற்சி.
உண்மையான், உழைப்புக்கு உயர்வு தவிர வேறு பலன் இல்லவே இல்லை.
உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment