எனக்குத் தெரிந்த ஒரு நண்பருக்கு உடல் நலம் பற்றிய பயம்தான் பிரதான எண்ணம். உடல் நலம் பற்றி வருவது அனைத்தையும் விடாமல் படிப்பார். பெரும்பாலும் உடல் நலம் என்றால் வியாதிகள் பற்றிய செய்திகள்தானே? “அது சாப்பிட்டால் அது வரும்; இது சாப்பிட்டால் இது வரும்” என்று நிறைய கட்டுப்பாடுகள் வைத்திருப்பார். மூன்று வேளைக்கும் உணவு கட்டிச் செல்வார் அலுவலகத்துக்கு. மூலிகை வைத்தியரே பொறாமைப்படுமளவுக்கு அத்தனை அயிட்டங்கள் இருக்கும். சத்து மாவு, மோர், வேக வைத்த கடலை, கீரை என அனைத்தும் கொண்டுசெல்வார். கொதிக்காத தண்ணீர் குடிக்க மாட்டார்.
பயம் எனும் வியாதி
ஆனால், அவருக்கென்று ஏதாவது உடம்புக்கு வந்துகொண்டே இருக்கும். வருவதற்கெல்லாம் வைத்தியம் வைத்திருப்பார். “உங்களுக்கு எப்படி இதெல்லாம்?” என்று கேட்டால் சொல்வார்: “தவறுதலாக ஒரு நாள் வெளியே சாப்பிட்டாலோ தண்ணீர் குடித்தாலோ இதுதான் நிலை. கட்டுப்பாடாய் இருக்கணும். இப்போ தெரியுதா நான் ஏன் இவ்வளவு பயப்படறேன்னு?” என்பார்.
என்ன நடக்கிறது நிஜத்தில்? உடல் நலம் அவர் கவனம் அல்ல. வியாதிகள் தவிர்ப்பில்தான் கவனம். காரணம், பயம் வியாதிகளை நினைக்க வைக்கும். நம்பிக்கையுடன் நலத்தை நினைக்க வைக்காது. வியாதிகளைத் தடுக்க வேண்டும் என்றால் வியாதிகளையே நினைக்க வேண்டும். எண்ணம், உணர்வு அனைத்திலும் வியாதி, வியாதி தடுப்புதான். ஆரோக்கியம் சுகம் என்பதை விட வியாதி தரும் வலியைத் தடுக்க வேண்டும். இதில்தான் கவனம்.
உள்ளத்தின் ஆற்றல்
கவர்ச்சி விதியின்படி அவர் செய்கைகள் வியாதிகளை இழுத்து வரும். வியாதிகள் தடுக்கப்படுவதற்கான நோய் எதிர்ப்பு சக்திக்கு (immunity) மனம் ஒரு மிகப் பெரிய காரணம் என்று மருத்துவ உலகம் கூறத் தொடங்கிவிட்டது. உளவியல் நோய் எதிர்ப்பு சக்தி (Psycho-Immunity) பற்றியெல்லாம் இன்று நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
இன்னமும் சாதாரணமாக விளக்குவதென்றால் இவர் எவ்வளவு கால தாமதம் ஆனாலும் வெளியில் தண்ணீர் குடிக்க மாட்டார். அதனால் வயிற்றுக் கடுப்பு வரும். அலுவலகத்தில் ஏற்படும் மன உளைச்சலில் வயிற்றுப் புண் உண்டு. அதற்கு நன்கு சாப்பிட வேண்டும். எவ்வளவு ஆசையிருந்தாலும் கடையில் போட்ட வடையைச் சாப்பிட மாட்டார்.
வெளிவேலை என்றால் கொலைப் பட்டினியாய்த்தான் வீட்டுக்கு வருவார். இப்படி ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் ராணுவ ஒழுங்கில் கண்காணித்து உபாதைகளை வரவழைத்துக்கொள்கிறார். எதற்குப் பயந்தாரோ அதுவே நடக்கும். ஆனால் தன் பயத்துக்குக் காரணம் தன் உடல் நிலை என்று அவர் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கும்.
இது எல்லா மனநிலைகளுக்குப் பொருந்தும். உங்கள் வாழ்வில் உங்களுக்கு அதிகம் வரும் எண்ணம் என்ன, உணர்வு என்ன என்று பாருங்கள். அவைதான் அத்தனை நிகழ்வுக்கும் காரணங்கள். ஆனால், தங்கள் வாழ்வின் அனுபவங்களால் தான் அப்படி நினைப்பதாக, உணர்வதாக அவர்கள் சொல்வார்கள். அதுதான் மனம் செய்யும் மாயம்!
சந்தேகப்படுபவருக்கு அவர் சந்தேகிப்பது சரி என்பது போன்ற சாட்சியங்கள் கிடைக்கும். அது அவர் சந்தேகத்தை உறுதி செய்யும். கோபம் கொள்பவரைக் கோபப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கும். தான் கோபம் கொள்வது இவற்றால்தான் என்று நியாயம் சொல்வார் அவர்.
கிழக்கும் மேற்கும்
தமிழ்நாட்டின் இரு பகுதிகளை ஒப்பிட்டால் இந்த உண்மை புரியும். கிழக்குப் பகுதியான காவிரி டெல்டா பகுதியில் கடந்த 25 வருடங்கள் முன்பு வரை செழிப்பு இருந்தது. மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் என்றும் அந்த அளவுக்குச் செழிப்பு இருந்ததில்லை. கிணறு வெட்டுவது என்றால் சொத்தை விற்றுத்தான் செய்யணும். அவ்வளவு கடுமையான பூமி.
ஆனால், விவசாயம் முழுவதுமாகப் பொய்த்த பின்னும் கோழிப்பண்ணை, லாரித் தொழில், பால் வியாபாரம், நெசவுத் தொழில், கல்வி நிறுவனங்கள், ஃபவுண்டரி, நூற்பாலைகள் என கொடி கட்டிப் பறக்கிறார்கள். எவ்வளவு வசதிக் குறைவு என்றாலும் சொந்தமாக ஒரு லேத்தாவது வைத்துப் பிழைக்கப் பார்ப்பார்கள். மேற்கின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்கள் முயற்சி.
ஆனால், கலை, இலக்கியம், பண்பாடு என்ற பெரும் பாரம்பரியம் கொண்டது கிழக்கு. வெளிநாட்டு மோகத்தில் அங்கு சென்று கடை நிலை பணி செய்பவர்களும் கிழக்கின் மக்களே. பணம் கொடுத்தோ, சிபாரிசு பிடித்தோ ஒரு வேலையை வாங்கி வெளியே சென்றுவிட வேண்டும் என்பது இந்தப் பகுதி இளைஞர்களின் எண்ணம். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் குறைவு. கிழக்கில் கொஞ்சம் தளர்ச்சி காணப்படுகிறது.
ஏன் இந்த ஒப்பீடு? இன்று கிழக்கு, மேற்கு இரண்டிலும் விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. இரண்டிலும் வறண்ட ஆறுகள்தான், அழியும் கிராமங்கள்தாம். ஆனால் கிழக்கில் மக்கள் மாறுதலுக்குக் காத்திருக்கின்றனர். மேற்கில் மக்கள் மாறுதலை ஏற்படுத்தியுள்ளனர்.
மண் வளத்தையும் தீர்மானிப்பது மன வளம் என்றால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?
No comments:
Post a Comment