Tuesday, April 26, 2016

முயற்சி சிறகுகள் முளைக்கட்டும்


காத்திருக்கும்வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்டும்…
புறப்பட்டு விட்டால்
புயலென்று புரியவைப்போம்!

இது கவிஞர் மு. மேத்தாவின் தன்னம்பிக்கைமிக்க கவிதைகளில் ஒன்று. தென்றலாக இருப்பவரை, புயல்போல புறப்படச் செய்யும் அற்புத வரிகள் இவை. காத்திருத்தல் என்பதற்குகூட ஓர் காலவரை இருக்கிறது என்பதை உணர்த்தும் கருத்தாழம்  மிக்கவை இக்கவிதை.

நம் தேவைகளை, நியாயமான ஆசைகளை அடைவதற்கு விடாமுயற்சியும், வாய்ப்புகளைத் தேடுவதில் முனைப்பும் வேண்டும். தண்ணீர்கூட ஓடும்போதுதான் நதியாகிறது. மாறாக தேங்கினால் அதுவே குட்டையாகிவிடும்.

அதுபோல, நமது முயற்சிகளில் வேகம் வேண்டும். தொடர்ந்த தேடுதல், சலிக்காத உழைப்பும் வேண்டும். நம் இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதில் தெளிவிருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிச்சிகரத்தில் நம் காலடித்தடத்தைப் பதிக்க முடியும்.

ஒரு தடவை சாக்ரடீசிடம், இளைஞர் ஒருவர் வந்து “நான் விரும்பிய இலட்சியத்தை எப்படி அடைவது?” என்று கேட்டார். அதற்கு சாக்ரடீசு சிரித்தபடியே, வா என்று ஒரு நதிக்கரைக்கு அந்த இளைஞரை அழைத்துச் சென்றார்.

கழுத்தளவு நீரில் இருவரும் இருந்தபோது, திடீரென இளைஞனின் தலையைப்  பிடித்து தண்ணீருக்குள் மூழ்கச் செய்தார் சாக்ரடீசு. சில வினாடிகளுக்கு பின், அந்த இளைஞர் திமிறியபடி தண்ணீருக்குள்ளிலிருந்து மேலெழுந்தார்.   பெருமூச்சு விட்ட இளைஞரைப் பார்த்த சாக்ரடீசு “நீ தண்ணீருக்குள் இருந்தபோது என்ன தேவையாய் ருந்தது?” இளைஞர் அதற்குச் சொன்னார் “காற்று!” .

சாக்ரடீசு அதற்கு “நீ தண்ணீருக்குள் இருந்தபோது காற்று மட்டுமே உன்னுடைய தேவையாய் இருந்தது. அது மாதிரி, உன் இலட்சியத்தை அடைவதில் மட்டுமே, உனக்கு கவனம் இருக்க வேண்டும்.

ஆம்! இலட்சியச் சிகரத்தைத் தொடுவதற்கு, நம் பாதையில் கவனம் வைத்தல் வேண்டும்.  அதற்கு நமது முயற்சிகளே சிறகுகளாக முளைத்திட வேண்டும்.  அப்போதே, வெற்றிப்பூக்கள் நம் வசமாகும்.

இலட்சியச் சிகரத்தைத்
தொடுவதற்கு -
முயற்சி சிறகுகள்
முளைகட்டும் உனக்கு!

No comments:

Post a Comment