Monday, April 25, 2016

வடிகட்டியா நீங்கள்?

வாசகர்களின் கடிதங்கள் “எங்க வீட்டில நடக்கறதை அப்படியே கேமராவில பார்த்துட்டு நீங்க எழுதுன மாதிரி இருக்கு!” என்கின்றன. வீட்டுக்கு வீடு வாசப்படி!

எல்லாரும் செய்வதைத்தான் எழுதியிருந்தேன். “இதெல்லாம் தெரிந்ததால் நீங்க ரொம்பத் தெளிவாக யோசிப்பீங்க இல்ல டாக்டர்?” என்று அப்பாவியாய் கேட்டார் சிகிச்சைக்கு வந்தவர்.

டாக்டருக்கும் மருத்துவம்

நான் எடுத்த பல தவறான முடிவுகளுக்கும் சிந்தனைத் திரிபுகள்தான் காரணம். ஒரு சுவாரஸ்யமான தொடர் எழுதும் அளவு என்னிடம் அத்தகைய சம்பவங்கள் குவிந்து உள்ளன. அவரிடம் பதமாக விளக்கினேன். “உங்க லாஜிக் படி பார்த்தால் இதய நோய் நிபுணருக்கு மாரடைப்பே வரக் கூடாது.

கார் மெக்கானிக் விபத்தே செய்யக் கூடாது. வக்கீலுக்குச் சட்டச் சிக்கலே இருக்கக் கூடாது. இதெல்லாம் சாத்தியமா? இல்லை தானே.. அது போலத்தான் சைக்காலஜிஸ்ட் எப்பவுமே தெளிவாகவே சிந்திக்கணும்னு எதிர்பார்க்கிறது!.”

ஒரு விஷயத்தின் இயக்கத்தைத் தெரிந்துகொள்வது என்பது அதை முழுவதுமாக மாற்றி அமைக்கும் சக்தியை உடனே தந்துவிடாது. ஆனால், இந்தப் புரிதலோடு படிப்படியாக முயன்றால் ஓரளவு மாற்றங்கள் கொண்டுவரலாம். உண்மை தெரிந்ததால் எல்லாம் சரியாகிவிடும் என்றால் பூமியில் முக்கால் வாசி பிரச்சினைகள் தீர்ந்து போயிருக்கும்!

வளரும் பட்டியல்

சிந்தனைத் திரிபுகள் வேறு என்னென்ன உள்ளன? பெக் ஆரம்பித்து வைத்த பட்டியல் இன்று வளர்ந்து கொண்டே வருகிறது. அவருக்குப் பிறகு வந்த ரால்ஃப் டொபலி, நசீம் நிக்கோலஸ் தலெப் போன்றவர்கள் தங்கள் புத்தகங்கள் மூலம் cognitive psychology யின் சாரத்தை எடுத்து நிஜ வாழ்க்கையில் பல சிந்தனைத் திரிபுகளைப் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.

நான் சொல்வதைவிட நீங்களாகவும் இத்தகைய திரிபுகளை நிறைய கண்டுபிடிப்பீர்கள்.

வடிகட்டல் சிந்தனை

பெக் முதலில் சொன்ன சில கிளாசிக்கல் திரிபுகள் பற்றி முதலில் பார்க்கலாம்.

‘வடிகட்டி யோசித்தல்’ (Filtering) நாம் அனைவரும் தவறாமல் செய்வது. நம் தவறான நம்பிக்கைகளுக்கும், எதிர்மறைச் சிந்தனைக்கும் ஏற்றவாறு புற நிகழ்வுகளில் உள்ள நேர்மறை விஷயங்களை வடித்து வெளியே தள்ளிவிட்டு யோசிப்பது.

“அவனுக்கு அவன் அண்ணன் எவ்வளவோ மேல். குடிச்சாக் கூட இவ்வளவு மோசமா பேசமாட்டான். இவன் பணங்காசு கொடுத்துட்டா போதுமா? புள்ளைங்கள நல்லா பாத்துக்கறான். அதுக்காக இவனோட எல்லா டார்ச்சரையும் ஏத்துக்கணுமா? இவன் எல்லாம் ஒரு மனுசன்?”

தன் மகளை மருமகன் திட்டிவிட்டார். அதை ஒருவர் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள். மருமகனின் குடிகார அண்ணனே பரவாயில்லை என்ற அளவுக்குப் போகிறது. குடும்பத்தைச் சரியாகப் பராமரிக்கிறார், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்பதையெல்லாம் வடித்து விட்டுப் பேசுவது இதுதான். இது தான் வடிகட்டி யோசிப்பது. அந்த அண்ணன் வீட்டுக்குப் பைசா தர மாட்டான். பெண்டாட்டி காசையும் எடுத்துட்டுப் போய்க் குடிப்பவன். ஊமையாக வீட்டில் இருப்பவன் ஆனால், வெளியே ரகளை செய்வான் என்பதெல்லாம் தெரியும். ஆனால், இந்தச் சண்டையில் அவை எல்லாமும் வடிகட்டப்படும். “அண்ணனே தேவலாமே!” என்று பேச வைக்கும்!

நல்லவற்றைப் பார்க்கும், ஆனால், ஒப்புக்கொள்ளும் மனம் வராது. அவற்றை வடிகட்டி விட்டுப் பிரச்சினைகளைத் தேடி ஓட வைக்கும் சிந்தனைத் திரிபுதான் வடிகட்டல் முறை.

பூதாகரம்

இன்னொன்று, ஒரு பிரச்சினையை அளவுக்கு மீறி பூதாகரமாகக் காண்பிப்பது. Magnification என்று பெயர்.

“அவன் பட்ட கஷ்டம் இந்த உலகத்துல ஒருத்தரும் பட்டிருக்க முடியாது!”

என்னமோ, எல்லாருடைய கஷ்டங்கள் பற்றிய தகவல் களஞ்சியம் ஒன்று உள்ளதைப் போலவும், அதில், இத்தனை சதவீதம் கஷ்டங்கள் அனுபவித்து முதல் இடத்தைப் பிடித்தவர் அவன் தான் என்பது போலவும் அவ்வளவு ஆணித்தரமாகப் பேசுவார்கள். இதுதான் பூதாகரப்படுத்துவது.

“நான் அவளைக் காதலிச்ச மாதிரி யாருமே லவ் பண்ணியிருக்க முடியாது!” என்பதும் இது போன்றதுதான். அப்படிப் பார்த்தால் எதையும் பேச முடியாதே என்று தோன்றுகிறதா? வாஸ்தவம்தான். ஆனால், பிரச்சினை என்னவென்றால் பூதாகரப்படுத்தும் சிந்தனை எதிராளியின் புரிதலைச் சிக்கல் படுத்தும். இதில் எவ்வளவு உண்மை என்று யோசிக்காமல் அதை, அப்படியே ஏற்று அதன் அடிப்படையில் நடக்கும்போது உறவுச் சிக்கல்கள் ஏற்படும்.

“உங்கிட்ட எந்த மனுசனாவது பேச முடியுமா?” என்று கோபப்படுகிறான் கணவன். சொல்ல நினைத்த பொருள் இதுதான்: “உன்னுடன் பேசி இதை எப்படிப் புரிய வைக்க முடியுமென்று தெரியவில்லை!”

அதற்கு மனைவி சொல்வாள்: “யார் பேசச் சொன்னாங்க? போங்களேன் எங்காவது முடிஞ்சா!” பொருள் இதுதான்: “ நான் உங்களை என்ன சொல்லிக் கட்டுப்படுத்தி விட்டேன்?”

ஆனால், சிந்தனைத் திரிபால் அதீத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுச் சண்டை இப்படிப் போகும்:

“போக்கிடம் இல்லேன்னு சொல்லிக் காமிக்கறயா? இப்படிச் சொல்லிக் காமிக்கறவ கிட்டக் கேவலமா வாழ்றதுக்கு நாண்டுட்டு சாகலாம்!”

“நீங்க ஏன் சாகணும்?, இப்படித் தினம் தினம் மல்லு கட்டறதுக்கு நானே சாகிறேன்!”

சின்னச் சிந்தனை மீறல்கள் பயத்தாலும் கோபத்தாலும் வார்த்தைகளைத் தடிக்க வைத்துப் பெரிய சண்டையில் கொண்டு போய் விடும்.

வார்த்தைகள்தான்

சொல்ல வரும் விஷயத்தைப் பூதாகரப்படுத்தாமல், எதிராளியைக் கலவரப்படுத்தாமல் உணர்ச்சிவசப்படாமல் உங்கள் நிலையைச் சாதாரணமாகச் சொல்ல முடிந்தால் பாதிப் பிரச்சினைகள் சரியாகும்.

நல்ல விஷயத்தைச் சற்று அதிகரித்துச் சொல்வதால் பெரிய பாதகம் இல்லை. ஆனால், மோசமான மன நிலையில், எதிர்மறை சிந்தனையில், பூதாகரப்படுத்துதல் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்!

உங்களிடம் உள்ள சிந்தனைத் திரிபுகளை எப்படிக் கண்டுபிடிப்பது? நீங்கள் பேசும் வார்த்தைகளை வைத்துத்தான்!

No comments:

Post a Comment