திடீரென கைக்குட்டை பேசத் தொடங்கியது! “நான் ஈரோட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, தி.நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள சிறுவியாபாரியை அடைந்தேன். பலரும் என்னைப் பரிசோதித்து பேரம் பேசினார்கள். இறுதியில் சமூக ஆர்வலர் ஒருவர் வாங்கிச் சென்று என்னை உபயோகித்தார். இவ்வாழ்க்கை பிடிக்கவில்லை என்றாலும்,செவ்வனே என் கடமையைச் செய்தேன். அளவுக்கு மீறிய உழைப்பினால் நைந்து போகத் துவங்கினேன். விரைவில் நான் கந்தரகோளமானதால் குப்பைத்தொட்டியில் எறியப்பட்டேன். அப்புறம் மழையில் அடித்துச் செல்லப்பட்டு...”
எல்லாவற்றுக்கும் உயிர்த்தன்மை
இப்படி ஒரு கைக்குட்டை தன் வரலாறு கூறுகிறதென்றால் இப்போதைய பள்ளி மாணவர்கள் திகைத்துவிடுவார்கள் என நினைக்கிறேன். ஆனால், என் பள்ளிதினங்களில் ‘தன் வரலாறு கூறல்’ என்ற தலைப்பில் ஜடப்பொருள் ஒன்று தன் கதையைக் கூறுகிற மாதிரி தமிழ்க் கட்டுரை எழுத வேண்டும். சிலை, மலை, மலர், புகைவண்டி... எல்லாமே சுயசரிதை சொல்லியிருக்கின்றன.
அடுத்தவர்கள் பார்வையில் ஒரு செய்தியை அணுகுவது, எல்லாவற்றுக்கும் உயிர்த்தன்மை உள்ளதாகக் கருதி, அவற்றின் இயக்கத்தை உணர்வது, இவைதான் இப்படியொரு பாடத்திட்டத்துக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்!
அப்படிச் செய்திருக்கலாமே!
எல்லாக் குடும்பங்களிலும் சிதறிக் கிடக்கும் உறவுகளை நினைவில் வைத்து, இந்தப் பெண்ணுக்கு இவன் சரியாக இருப்பான்; இவளுக்கு இவன் பொருத்தமாக இருப்பான் என்றெல்லாம் கணித்து, எங்கோ இருக்கும் ஒரு தாணுவின் மகனையும்,வேணுவின் மகளையும் மணமேடையில் ஏற்றுவதற்கென்றே சிலர் இருப்பார்கள். சாந்தா அவர்களுள் ஒருத்தி. குறைந்தது ஐம்பது கல்யாணங்களாவது அவளது தலையீட்டில் நடந்திருக்கும். எல்லோரும் நன்றாகவே இருக்கிறார்கள். ஆனால் சாந்தாவின் ஒரே மகளின் கல்யாணம் தோல்வியில் முடிந்தது நகைமுரண். மகளைப் பார்த்து ரகசியக் கண்ணீருடன் சாந்தா நினைப்பாள். “பையனைப் பத்தி இன்னும் நல்லா விசாரிச்சிருக்கலாமோ?”
சண்முகசுந்தரம் ஒரு நல்லாசிரியர். அவரது மனைவிக்குத் திடீரென நெஞ்சில் வலி. “காலைல சரியாயிரும்” என்று ஓமம் கலந்த தண்ணீரைக் குடித்துப் படுத்தவள் எழுந்திருக்கவே இல்லை. சண்முகசுந்தரம் பெருமூச்சுடன் இன்றும் புலம்பிக்கொண்டிருக்கிறார். “அன்னிக்கு ராத்திரி அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக எனக்குத் தோணலியே!”
மணமகனை விசாரித் திருக்கலாம்; மனைவியின் நோய் வெளிப்பாடுகளைச் சந்தேகித்திருக்கலாம்... இப்படி நிறைய ‘...லாம்கள்’ எல்லோர் வாழ்விலும் இருக்கின்றன.
இவ்வளவு விவரம் தெரிந்திருந்தும் ஏன் அந்த கோர்ஸில் / வேலையில் சேரவில்லை? ஏன் அப்படி முடிவு எடுத்தோம்?
ஏறாத வாகனங்கள்; வாழாத வாழ்க்கைகள்; சிறு திருப்பலில் நம் பால்வீதியைத் தாண்டி, வேறொரு சூரியக் குடும்பத்துள் நுழைந்து திணறச் செய்கிறது, உங்கள் விண்கலம். உங்களுக்கு மட்டுமே தெரிந்த அப்படிச் செய்திருக்க/ இருந்திருக்க/ நடந்திருக்க----”லாம்கள்..!”
யாருடைய பொறுப்பு?
அடுத்தவர்கள் உங்கள் பாதையில் தடை எழுப்பினால்கூடப் பொறுத்துக்கொள்வீர்கள். அதில் உங்களுக்கான சமாதானம் இருக்கிறது. நீங்களே சுலபமாகப் போயிருக்கக்கூடிய வழி. தன் அமைதிக்குத் தானே தடைக்கல்லாவதை மனிதர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். “ஏன் அப்போது எனக்குத் தோன்றவில்லை?”
இந்தக் கேள்வி சாந்தி கிட்டாத ஆத்மாவாய் மனதுள் சுற்றிக்கொண்டே இருக்கும். நிகழாத சம்பவங்கள் உங்கள் கற்பனைக்கேற்றவாறு உங்கள் முன் விரியும்போது ஆடிப்போவீர்கள். எஞ்சிய நம் தினங்கள் நிம்மதியாய் நகர, இதிலிருந்து வெளியே வந்தாக வேண்டும். எப்படி ஆறுதல் அடைவது?
கைக்குட்டைக்குக்கூட உயிர் இருந்தால் அது எப்படி உணர்வுகளை வெளியிடும் என்று பார்த்தோம். அவ்வாறாக, நாம் வாழும் பூமியையே தனிப்பட்ட ஒரு உயிரியாகக் கருதும் கொள்கைகூட இருக்கிறது. காயா கோட்பாட்டின்படி (Gaia principle) பூமியே சூழ்நிலைக்கு ஏற்ப சில இடங்களில் குலுங்கி, உருகி, உதிர்த்துத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். நம் புராணங்களில் பாரம் தாங்காமல் பூமி கடவுளிடம் முறையிடுகிற மாதிரி கதைகள் இருக்கின்றன, இல்லையா? அதன் மேற்கத்திய விளக்கம் இது.
யார் பிடியில் யார்?
இதன் தொடர்ச்சியாக உங்கள் பிரச்சினையை ஒரு ஒட்டுமொத்த உயிரியாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன்படி அதற்கு பிறப்பு, இயக்கம், முடிவு என்ற மூன்றும் உண்டு. அவை தன்னிச்சையானவை. எப்படி இருக்க வேண்டும் என்று அவை தம்மை வடிவமைத்துக் கொள்கின்றனவோ, அப்படியே அவை தங்களை நகர்த்தும்; இயங்கும்; தங்களை முடித்துக்கொள்ளும்.
உங்கள் வளர்ப்புப் பிராணி “சரியாக காலை ஏழு மணிக்கு என்னுடன் நடைப்பயிற்சிக்கு வர இந்த மனிதனை நான் பழக்கியிருக்கிறேன்!” என்று சொன்னால் எப்படி இருக்கும், அது மாதிரி! இப்போது பிரச்சினை உங்கள் கையில் இல்லை. அதன் பிடியில்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்களுக்குப் பேருந்தில் ஏற வேண்டும். கூட்டமே இல்லாத பேருந்து கடந்து சென்றும், ஏன் ஏறத் தோன்றவில்லை என்றால், நீங்கள் ஏறுவது அந்தச் சூழலின் திட்டத்தில் இல்லை. எனவே, அது அப்படித்தான் முடிந்திருக்க முடியுமே தவிர,வேறு எப்படியும் முடிந்திருக்கவே முடியாது. அதனால்தான் அந்த ‘...லாம்’ உங்களுக்குத் தோன்றவே இல்லை!
இது சூழலின் மீது பழி போட்டுத் தப்பித்தல் இல்லை. இயற்கையில் எல்லாவற்றுக்கும் உயிர்த்தன்மை இருக்கிறது; மேலாக இயற்கை முன் மனிதனின் குமிழித்தன்மையை நினைவூட்டுகிற பேராற்றல் தன்மையை உணரும் முயற்சி இது. இதைத்தான் நம் எளிய முன்னோர்கள் “பிரச்சினை போற வரை போகட்டும், எப்படி முடியுதோ, அப்படி முடியட்டும்...” என்றார்கள்!
எனவேதான் சாந்தாவின், சண்முகசுந்தரத்தின் பிரச்சினைகள் ‘தன் வரலாறு’ கூறும்போது அவற்றின் குரல்கள் மனிதர்களின் குரல்களைவிட ஓங்கி ஒலிக்கின்றன; அவை இவர்களின் ‘...லாம்’களைக் கேலி செய்து “ஏன் தோன்றவில்லை?”க்கு மவுனமாகப் பதிலளிக்கின்றன.
No comments:
Post a Comment