Monday, April 25, 2016

உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்

சாதாரணமாக நம்மைப் பற்றி மற்றவர்கள் கேட்டால், ஆர்வமாகச் சொல்லிக்கொண்டிருப்போம். ஆனால் கேட்பதற்குத்தான் ஆள் இல்லை எனக் குறைபட்டுக்கொள்வோம். அதே சமயம், நேர்முகத் தேர்வின்போது எதிர்கொண்டேயாக வேண்டிய கேள்வி இது. ஆனால், பலரும் தடுமாறும் கேள்வியில் இது முதல் இடத்தைப் பெறுகிறது.

எங்கிருந்து ஆரம்பிப்பது?

“உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்” எனக் கேட்டால், எந்த ஊர், எந்தப் பள்ளி, கல்லூரிகளில் படித்தோம் என்பதாக ஆரம்பித்துச் சொல்லிக்கொண்டே போனால் கேள்வி, கேட்பவருக்கு அலுப்பாகத்தான் இருக்கும். இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முக்கியக் காரணம் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் பணிக்குத் தகுதியானவர்தான் என்பதைத் தெரிந்துகொள்வதுதான். உங்களைப் பற்றிய பொதுவான விவரங்கள் உங்களது பயோடேட்டாவிலேயே தெரிந்துவிடும். அதையே மறுபடியும் சொல்லத் தேவையில்லை.

சொல்வதெல்லாம் உண்மை!

முதலாவதாக, இதுவரை உங்களது பணி விவரத்தைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறலாம். இதை முடிந்த வரையில் எளிமையான வாக்கியங்களில் கூறுங்கள். இரண்டாவதாக, நீங்கள் செய்து முடித்த முக்கியப் பணிகள், பாராட்டுகள் பெற்ற சாதனைகள் ஆகியவற்றைத் தெளிவாகக் குழப்பமின்றிக் கூறுங்கள். இவற்றில் எல்லாமே உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது உண்மையா எனச் சோதித்துப் பார்த்தால் பொய்யாக இருக்கக் கூடாது. மூன்றாவதாக, இனி உங்களால் புதிய நிறுவனத்துக்கு எந்த வகையில் மதிப்பு கூட்ட முடியும், லாபம் ஈட்டித்தர முடியும் என்பதைப் பற்றி நிதானமாகத் தடங்கல் இன்றி சொல்லுங்கள்.

கேள்வி நல்லது

இதையெல்லாம் சொல்லி முடித்துவிட்டு, “வேறு ஏதாவது, என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், தாராளமாகக் கேளுங்கள்” என்று சொல்லி முடிக்க வேண்டும். இடையில் அவர்கள் மறித்துக் கேட்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது ‘தடங்கல்' என்று நினைத்துப் பயப்படத் தேவை இல்லை. அப்படிக் கேள்வி கேட்டால் நீங்கள் கூறியதிலிருந்து உங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று அர்த்தம். இது நல்லதுதானே?

No comments:

Post a Comment