Monday, April 25, 2016

அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே!

இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது.

பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது.

நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும்.

போலிப் பகலாகும் இரவு

இன்றைய தலைமுறையினர் படும் பல அவதிகளுக்குக் காரணம் தூக்கமின்மைதான். வேகமான வாழ்க்கை இரவை விழுங்கிவிட்டது. பகல் முடிந்தும் இரவை ஒரு போலிப் பகலாக உருவாக்குகிறது.

ஐந்து மணிக்கு வேலையை முடித்து ஆறு மணிக்கு வீடு வந்தால் குடும்பத்துடன் உறவாடி உணவருந்தி இரவு பத்துக்குத் தூங்கச்சென்றால் மறு நாள் பளிச்சென்று விடியும்.

இன்று வேலையும் சாலையின் நெரிசலும் எட்டு மணிக்கு முன்பாக வீடு திரும்ப விடுவதில்லை. ஒரு காபி குடித்துவிட்டு டி.வி. சீரியல்களில் உட்கார்ந்தால் பத்து மணிக்குத்தான் தாமதமான, ஆனால் கனமான சாப்பாடு. பிறகு வாட்ஸ் அப் செய்திகளும் கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆடல், பாடல், கேம் ஷோக்களைப் பார்த்து அயர்ந்துபோகிறோம். அதற்குப் பிறகு படுப்பதற்கு செல்கையில் நடுஇரவு ஆகிவிடுகிறது.

படுக்கையில்தான் எல்லா வலிகளும் பெரிதாகத் தெரிகின்றன. சாலை வெளிச்சங்களும் இரைச்சல்களும், அண்டை வீடுகளின் டி.வி சத்தங்களும் தூங்க விடாது. அப்போதுதான் பாக்கி உள்ள அனைத்து வேலைகளையும் மனம் பட்டியல் போடும். கண்ணை மூடியபின் வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் செய்தியையும் பார்க்கத் தூண்டும். வெட்டிச் செய்தி என்று தெரிந்த பின்னும் பதில் போட வைக்கும். பின்பு ஃபேஸ்புக் போகத் தூண்டும். ஃப்ரிட்ஜில் தண்ணீர் குடித்துவிட்டு வருகையில் ‘தூக்கம்தான் வரவில்லையே? ஏதாவது வேலை பார்த்தால் என்ன?” என்று லேப்டாபை எடுக்க வைக்கும். பின் அயர்ச்சியில் படுக்கையில் விழும்போது ‘சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்.

சிந்தனைகளைக் கழட்டுங்கள்

வாழும் முறையில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள முடியாது. இதற்கு என்ன செய்யலாம்?

என் பரிந்துரைகள் இதோ:

ஏ.ஆர். ரஹ்மான் மாதிரியான பிஸியான பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இல்லாதவரை பகல் பொழுது வேலைக்கும் இரவுப் பொழுது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போது உங்கள் வேலை பற்றிய சிந்தனைகளையும் கழட்டி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை கொடுத்துக் கொள்ளுங்கள்.

தாமதமானால் டீ, காபிக்குப் பதிலாக நேராக உணவுக்குச் செல்லுங்கள். நல்ல குளியலுக்கு பிறகு உண்ணும் மென்மையான இரவுச் சாப்பாடு உங்களுக்கு இளைப்பாறுதல் தரும். டி.வியைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன நலம் காக்கப்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். அவசியச் செய்திகள், அழைப்புகள் முடிந்தபின் கைபேசியை தள்ளி வையுங்கள்.

தூக்கத்துக்குத் தயார் செய்தல் முக்கியம். படுத்த பிறகு குடும்பம், அலுவலகம், அக்கம் பக்கம் என செய்திகள் பகிர்வது உங்களை நல்ல உணர்வுகளுடன் தூங்க வைக்காது. குறிப்பாக, தீராத பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம். இயலாமை, எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் சிந்தனைகளைப் பெருக்கி மனதை அமைதி இழக்கச் செய்யும். மனதைக் காலி செய்து, கழுவித் துடைத்து தூக்கத்துக்குத் தயார் செய்தல் அவசியம். எந்த சிந்தனையும் இல்லாது வரும் அந்த உறக்கம் அவ்வளவு நிர்மலமாக இருக்கும்!

கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை நல்லது. அல்லது நல்ல இசை போதும். நன்றி கூறுதல், தியானம், அஃபர்மேஷன் என எது உங்கள் மனதுக்குப் பிடித்ததோ அதைச் செய்து மற்ற சிந்தனைகளை ஓட்டிவிடுங்கள். நீங்கள் எந்த நேரம் தூங்க ஆரம்பித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு உறக்கத்துக்குள்ளே நழுவியிருப்பீர்கள்.

நல்ல தூக்கம் மறு நாள் எழும்போது ஒரு சாதனை உணர்வைத் தரும். எழுந்தவுடன் பசியும் புத்துணர்ச்சியும் வர வேண்டும். மனித அத்துமீறல்கள் இல்லாத வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளில் அவற்றைப் பார்க்கலாம்.

அலாரத்தைப் பார்த்து அலறி எழுந்து, அவசரத்தில், வேகத்தில், கோபத்தில் ஓடும் அட்ரினல் வாழ்க்கை முறை உங்களை விரைவில் வயோதிகத்தில் தள்ளிவிடும். எதிர்மறை எண்ணங்களை எளிதில் கொண்டு வந்துவிடும். வேகம் விவேகம் அல்ல என்பது சாலைகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்தான்.

வேகத்தை மட்டுப்படுத்த நம் இரவுகளை சமன்படுத்துவோம். ஆறு முதல் எட்டு மணி நேர அமைதியான இரவுத்தூக்கம் அவசியம். வளர்ந்த நாடுகளை பின்பற்றும் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். தூக்க மாத்திரைகள் அதிகம் நுகரப்படும் தேசங்கள் அவை. ரசாயன மருந்துகளின் துணை இல்லாமல் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும் வரலாம். மறந்துவிட வேண்டாம்.

என் சிறு பிராயத்தில் சிலோன் ரேடியோ மிகப் பிரபலம். அதில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியை நாங்கள் தவற விட மாட்டோம் அதில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!” ஒவ்வொரு முறையும் அந்த பாடல் முடிகையில் தூங்கிப்போன நிலையில் இருக்கும் உடலும் மனமும். இப்படி ஒரு தலைமுறையையே அமைதிப்படுத்தி தூங்க வைத்த பாடல்கள் உண்டு.

நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தரும் பெரு வரம் நல்ல தூக்கம். அதற்கான இடையூறுகளைக் களைந்து, நல்ல சூழலை அமைத்து, நல்ல முன்மாதிரிகளாய் நீங்கள் தூங்க ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்ற மாட்டார்களா என்ன?

No comments:

Post a Comment