Monday, April 25, 2016

வேண்டாம் எதிர்பார்ப்புகளின் பாரம்!

நிறைவேறாதபோது அந்த நிராசை உறவுச் சிக்கல்களாய், குடும்பப் பிரச்சினைகளாய், பின் மெல்ல மெல்ல நோய்களாய் மாறும்.

எதிர்பார்ப்புகள் வருவது இயற்கை. எந்த நிலையிலும் நமக்கு எதிர்பார்ப்புகள் உண்டு. நினைத்தது நடந்தால் சந்தோஷப்படும் நாம், பொய்த்தால் எதிராளியைக் குறை கூறுகிறோம்.

மோசமான உறவு

திருமணங்களில் என்ன முக்கியமான சிக்கல்? எதிர்பார்ப்புகளின் ஒவ்வாமை தான். என்னிடம் சிகிச்சைக்கு வரும் தம்பதியினரிடம் இதை அடிக்கடி சொல்வதுண்டு: மோசமான கணவன், மோசமான மனைவின்னு சொல்றதைவிட மோசமான உறவுனு சொல்றது தான் பல நேரத்துல பொருந்தும். தனித்தனியாகப் பார்த்தால் நல்ல மனிதர்களாக இருக்கிற இரண்டு பேர், திருமணம் எனும் பந்தத்தில் எதிர்பார்ப்புகளின் ஒவ்வாமையில் தோற்றுப் போகிறார்கள்.

இந்த எதிர்பார்ப்புகள் மாறக்கூடியவை. காலத்தால் அழியக்கூடியவை. அனுபவத் தால் சமரசம் செய்யக்கூடியவை என்பதை உணர்ந்து விட்டால் பல உறவுச் சிக்கல்கள் சீராகிவிடும். நம் எதிர்பார்ப்புகள் அம்மா, அப்பா, குடும்பம், சாதி, மதம், ஊர், சினிமா, அக்கம் பக்கத்து நண்பர்களால் வளர்க்கப்பட்டவை. அவை மட்டுமேதான் சரி என்பதைப் போலக் காலப்போக்கில் இறுகிப் போவதுதான் பிரச்சினையின் அடி நாதம். பற்றாக்குறைக்கு ஒப்பீடுகள் வேறு.

“என் அப்பா போல நீ இல்லை.”

“என் அம்மா போல நீ இல்லை.”

வளரும் பருவத்தில் பல பாலியல் குழப்பங்கள் வர இந்த எதிர்பார்ப்புகள்தான் காரணம். முன்னொரு காலத்தில் தகவல் பற்றாக்குறையால் அறியாமையில் குழப்பம் வந்தது. இன்று தகவல் யுகத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களில் எது சரி, எது சரியில்லை என்று தெரியாததால் வருகிறது குழப்பம். ஊடகத் தாக்கம் அதை உச்சத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது.

தன் மீது எதிர்பார்ப்பு

காதல், காமம், குடும்பம், வாழ்வு முறை எனப் பல விஷயங்களில் நிஜத்தோடு தொடர்பில்லாத எதிர்பார்ப்புகளால் பலர் தங்கள் வாழ்க்கையில் தவறான முடிவுக்கு வருகின்றனர்.

“ஒரு ஸ்மார்ட் ஃபோனும் பைக்கும் இல்லேன்னா அப்புறம் காலேஜ் ஸ்டூடண்டுங்கிறதுக்கு என்ன கெத்து?”

“எங்கப்பா வேண்டாம்னா மறு பேச்சு பேச மாட்டோம்; இன்னக்கி இருக்கிற பசங்க வார்த்தைக்கு வார்த்தை விவாதம் பண்றாங்க! வயசுக்குக் கொஞ்சம் கூட மதிப்பு கிடையாது!”

“ எவ்வளவு சம்பாதிச்சா என்னப்பா, பொம்பள வீட்டைக் கவனிக்காட்டி எப்படி?”

எதிர்பார்ப்புகள் பல சமயங்களில் வார்த்தைகளில் சொல்லாமல் செயலில் எதிர்பார்க்கப்படுவதும் உண்டு. “சொன்னாதான் தெரியுமா?” என்பார்கள்.

பிறர் மீது உள்ள எதிர்பார்ப்புகளை விடத் தன் மேலுள்ள எதிர்பார்ப்புகளின் கனம் எப்போதும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். தன்னை நொந்துகொள்ளும் தன்மையும், தன்னைக் குறைவாக மதிப்பிடுதலும் இதன் காரணமாகத்தான்.

பூஜ்ய எதிர்பார்ப்புகள்

உங்களுக்கு உங்கள் மகனுடன் பிரச்சினையா? உங்களுக்கான அஃபர்மேஷன் இதுதான்: “ நான் என் மகன் பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.” (I release all my expectations about my son).

“எதிர்பார்ப்பே இல்லை என்றால் அவன் இஷ்டத்துக்குத் தறிகெட்டுப் போக மாட்டானா?” என்று நினைக்கிறீர்களா? இல்லை! நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியேற்றி னால், அவனை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பில்லாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது அவன் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயலுவான். உங்களுக்கும் அவன் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும்.

உங்களின் எல்லாச் சிக்கலான உறவிலும் இதை முயற்சி செய்து பாருங்கள். “நான் ---------- பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.” (I release all my expectations about -------------).

எதிர்பார்ப்புகளைப் பூஜ்ஜியத் துக்குக் கொண்டுவருதல் நலம். மனைவி காபியை ஸ்ட்ராங்காகத் தான் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளபோது என்ன செய்வோம்? ஸ்ட்ராங்காகக் காபி கிடைத்தால் பேசாமல் குடிப்போம். லைட்டாக வந்தால் குதறுவோம். எதிர்பார்ப்புகளை நீக்கிப் பாருங்கள். ஒவ்வொரு ஸ்ட்ராங்கான காபியையும் நன்றியோடு ருசித்துக் குடிப்பீர்கள். லைட்டான காபி வரும்போது அதை லைட்டாக எடுத்துக்கொள்வீர்கள்.

இயல்பாய் மலரட்டும்!

உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும்போது வாழ்க்கை கனமில்லாமல் அழகாக மாறும். எதிராளியின் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும். அது புரிதலை எளிமைப்படுத்தும்.

யோசித்துப் பாருங்களேன். பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் மேல் பெற்றோர்களுக்கான எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எதிர்பார்ப்புகள்தானே?

குறிக்கோள்கள் இருக்கலாம். கடமைகளைச் செய்யலாம். உங்கள் எண்ணத்தைச் சொல்லலாம். ஆனால், அவை தீவிரமான எதிர்பார்ப்புகளாக மாறி அவர்கள் கழுத்தை நெறிக்க வேண்டாம். இன்று மாணவர்கள் தோல்வியின்போது துவண்டுபோவதன் முக்கியமான காரணம் ஒன்றுதான். தங்களால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என்பதுதான்.

என்ன படிக்கிறான் என்று பெற்றோருக்குத் தெரியாத பல கிராமத்துக் குழந்தைகள் இயல் பாக வளர்வதற்கும், எல்லாம் கொடுத்தும் சிறு தோல்வியில் நகரக் குழந்தைகள் நொறுங்கிப் போவதற்கும் காரணம் இந்த எதிர்பார்ப்புகள்தாம்!

“என் பிள்ளையை நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்” (I accept my child unconditionally) என்று சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைக்கான நேரமும் இடமும் கிடைக்கும். அவர்களுக்குச் சுதந்திரமாய்ச் சிந்தித்து வாழ்க்கையைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்

எதிர்பார்ப்புகளின் பாரம் இல்லாமல் அவர்களை இயல்பாய் மலர விடுங்கள்!

No comments:

Post a Comment