பதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும் 10 பாடங்கள்!
ஒரு நிறுவனத்தில் மிக முக்கியமான பதவி வகிக்கும் ஒருவர் அந்த வேலையைவிட்டுச் சென்றுவிட்டால், அவரது இடத்துக்கு மற்றொரு சரியான நபரை நிறுவனம் தேர்ந்தெடுக்கும். ஒன்று, நிறுவனத்திலிருந்தே ஒருவரை பதவி உயர்வு அளித்து அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யலாம்; அல்லது தகுதிகளை ஆராய்ந்து வெளியிலிருந்து நேரடியாக ஒருவரை அந்தப் பதவியில் நியமிக்கலாம். அப்படியொரு சூழலில் உங்களுக்கு அந்தப் பதவி கிடைக்கிறது எனில், உங்களை அந்தப் பதவியில் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ள சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டாக வேண்டும். அவற்றில் முக்கியமான 10 பாடங்கள் இதோ...
1. நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள்!
உங்களிடம் தரப்பட்டுள்ள டிபார்ட்மென்ட் எப்படி இதுவரை செயல்பட்டு வந்துள்ளது; அதன் செயல்பாடுகள் கடந்த ஆறு மாதங்களில் எப்படி இருந்துள்ளது; அவை சிறப்பான செயல்பாடாக இருந்துள்ளதா அல்லது அதன் இலக்கு அடையப்படாமல் உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
தற்போது அந்தப் பிரிவு உள்ள நிலையில் இருந்து அதனை மீட்க வேண்டுமா, அல்லது தற்போது உள்ள நிலையில் இருந்து மேம்படுத்தபட வேண்டுமா என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்.
2 . திட்டமிடுங்கள்!
உங்களுக்குத் தரப்பட்ட வேலை என்ன, நீங்கள் ஏற்கெனவே செய்த வேலையிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டுள்ளது, முன்பு இருந்ததைவிட இப்போது என்னவிதமான பொறுப்பு கள் அதிகரித்துள்ளன என்பதையெல்லாம் பட்டியலிடுங்கள்.
அடுத்தடுத்துச் செய்யவேண்டியவை என்னென்ன என்று வரிசைப்படுத்துங்கள். அதனைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது உங்கள் இலக்குகளைக் குறுகிய கால இலக்குகளாக நிர்ணயித்து, அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்களை நடை முறைப்படுத்த வேண்டும்.
3 . உங்களை நிரூபிக்கத் தவறாதீர்கள்!
புதிதாக வழங்கப்பட்ட பதவியில் ஏற்கெனவே இருந்தவர் நன்றாகச் செயல்படவில்லை என்றால், நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டு உங்கள் திறமையை நிரூபித்துவிடலாம். ஆனால், அவர் செய்திருந்தால், அதனை அப்படியே நீங்கள் தொடர்வதை சில நேரங்களில் நிர்வாகம் விரும்பாது. அதற்கு நீங்கள் உங்களது திறமையை நிரூபிக்கும்படியான, நிர்வாகத்துக்குப் பலனளிக்கக்கூடிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ளதிலிருந்து புதுமையானதாக இருக்க வேண்டும். இப்படி உங்களை நிரூபிக்கத் தவறுகிறபோது, அவர் செய்ததைதானே இவரும் செய்கிறார் என்ற எண்ணம் நிர்வாகத்துக்குத் தோன்றிவிடும்.
4 . இலக்குகளை நிர்ணயுங்கள்!
உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வேலையில் என்னமாதிரியான சிரமங்கள் உள்ளன என்பதைப் பொறுத்து, அதற்கான இலக்குகளை உருவாக்குங்கள். அதனை அடையும் திட்டத்தை உங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள குழுவுக்கு விளக்குங்கள். அவர்கள் அதில் எந்த அளவுக்கு நம்பிக்கையாக உள்ளார்கள் என்பதைப் பார்த்து அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்களது இலக்கை நோக்கி திருப்ப வேண்டும் என்பதைக்கூட ஒரு இலக்காகக் கொண்டு செயல்படுங்கள்.
5 . குழுக்களைச் சமாளியுங்கள்!
உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வேலையைச் செய்ய உங்களிடம் ஒரு குழு அளிக்கப்பட்டிருக்கும். அந்தக் குழுவில் உள்ளவர்கள் ஏற்கெனவே உள்ள தலைமையின் கீழ் வேலை செய்திருப்பார்கள். அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் நாம் கவனித்து இருப்போம்; கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் பதவி விலகி, புதிய கேப்டன் நியமிக்கப்பட்டதும் அந்த அணியில் செயல்பாடு சற்று குறைந்து காணப்படும். அதற்குக் காரணம், குழுவில் உள்ள சிலரது மனநிலையே. இதேபோல், புதிதாக உங்கள் தலைமையில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை அதற்கேற்றவாறு சமாளியுங்கள்.
6 . அமைப்புகளைக் கவனியுங்கள்!
வேலை அமைப்பு எப்படி உள்ளது என்பதைப் பாருங்கள். அது சரியாக அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட்டுள் ளதா, இல்லையெனில் யாருக்கு என்ன வேலை, அதனைச் செய்ய அவர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள், செயல்பாடுகள் என்னென்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். அவர்களுக்கான வேலைகளை ஒழுங்கு படுத்துங்கள். இதனைச் சரியாகச் செய்தாலே இலக்குகளை எளிதாக அடைவார்கள்.
7. மதிப்பீடு அவசியம்!
இதுவரை நடத்துவந்த வேலை யின் அளவு, அது முடிக்க எடுக்கப்பட்ட காலம், அப்போது குழுவின் செயல்திறன் ஆகிவற்றைக் கணக்கில்கொண்டு அதனைவிடச் சிறப்பாகச் செயல்படுங்கள். அப்போது ஓரிரு மாதங்களில் ஏற்கெனவே உள்ள மதிப்புகளோடு, உங்கள் திறனை மதிப்பீடு செய்துபாருங் கள். அது கட்டாயம் வளர்ச்சியில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், உங்களது வேலை சரியாக உள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.
8 . அப்டேட் ஆகுங்கள்!
முன்பு நீங்கள் இருந்த வேலையோ அல்லது பதவியோ தற்போது உள்ளதிலிருந்து கீழ் நிலையே. அந்த நிலையில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஏனெனில், உங்களுக்கு உயர்பதவியில் இருப்பவர் அதனைச் சரிசெய்துகொள்வார் என்ற ரிஸ்க் இல்லா சூழலில் இருந்திருப்பீர்கள். ஆனால், தற்போது உங்களுக்குக் கீழ் உள்ளவர்களின் தவறைத் திருத்தும் சூழல் உங்களுக்கு இருக்கும் என்பதால், அதற்கேற்ப நீங்கள் அப்டேட் ஆக வேண்டியதும் அவசியம்.
9 . கலாசாரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
மேலாண்மைப் பாடங்களில் ஆர்கனைசேஷனல் கல்ச்சர் என்ற ஒரு பிரிவு உண்டு. அதாவது, ஒவ்வொரு நிர்வாகமும் ஒரு கலாசார அடிப்படையில் செயல்படும். அப்படிப் பார்க்கும்போது, உங்கள் நிர்வாகம் எந்தமாதிரியான கலாசாரத்தைப் பின்பற்றுகிறது என்று பாருங்கள். நீங்கள் ஏற்கெனவே பணிபுரிந்த நிறுவனத்தோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அதே நிறுவனத்தில்தான் இருந்தீர்கள் என்றாலும்கூட உங்களது முந்தைய நிலைக்கும், பதவி உயர்வு அடைந்துள்ள நிலைக்கும்கூட கலாசார மாறுபாடு இருக்கும். அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
10 . அனுபவத்தைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!
உங்களுக்கு முன்பிலிருந்தே அந்த நிறுவனத்தில் வேலையில் இருந்த ஒருவரிடமோ அல்லது அந்த நிறுவனத்தில் உயர்பதவி களில் உள்ளவரிடமோ அந்த நிறுவனத்தின் தன்மை என்ன, உங்களது பிரிவு வேறு எந்தெந்த பிரிவுகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்; இதன் வாடிக்கையாளர்கள் யார்; இந்த நிறுவனம் மக்கள் மத்தியில் என்ன நிலையில் உள்ளது; உங்கள் பிரிவின் வேலை, நிறுவனத்தில் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம். நிறுவனத்தின் தன்மை செயல்பாடுகளுக்கு ஏற்ப உங்கள் வேலையில் உங்கள் ஆளுமையைக் காட்டுங்கள். அவர்களது அனுபவங்கள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை உங்களுக்கு உணர்த்தும்.
No comments:
Post a Comment