விழித்தெழு! வெற்றிபெறு!
‘உன்னையே நீ அறிவாய்’ என்று என்றைக்கோ ஓர் அறிஞன் சொல்லிச் சென்றான். உன் பலத்தை – உன் பலவீனத்தை – நீயே அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த அறிஞன் கருத்து. உன் பலம் எது? உனக்குள்ளே ஒளிந்து கிடக்கும் திறைமை எது? அதை நீ சரியாக அறிந்துகொள். பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்போல் பூங்காற்றில் மறைந்திருக்கும் சங்கீதம்போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்து கிடக்கிறது. அதைமட்டும் நீ சரியாக அடையாளம் காண். அகிலம் உன் கையில்!
வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயம் போல. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். சற்றே தயங்கி நின்றாலும் தோற்று விடுவோம். நிற்காமல் ஓட வேண்டும். மூச்சுப் பிடித்து ஓட வேண்டும். வெற்றி பெறவேண்டும் என்ற வெறியோடு ஓட வேண்டும். மற்றவர்களை நீ முந்தியே ஆக வேண்டும். அவர்களைத் தோற்கடிப்பது உன் நோக்கம் அல்ல. நீ வெற்றிபெற வேண்டும். அவ்வளவே!
ஆமைக்கும் முயலுக்கும் நடந்த ஓட்டப் பந்தயத்தை நாம் அறிவோம். முயல் போட்டிக்கு அழைத்தபோது, ஆமை அஞ்சிவிடவில்லை. துணிச்சலோடு சவாலை ஏற்றுக் கொண்டது. நம்பிக்கையுடன் போட்டியில் கலந்து கொண்டது. திரும்பிப் பார்க்காமல் வேகமாய் ஓடியது. முடிந்த அளவு முயன்று ஓடியது. வெற்றியும் பெற்றது. தன்னம்பிக்கையின் வெற்றியை ஆமை நமக்கு அறிவுறுத்துகிறது. அந்தோ! முயலின் கதையே வேறு. ஆணவத்தோடு ஓடிய முயல் பாதி வழியில் தூங்கிவிட்டது. தோல்வியைத் தொட்டது. கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சிறிதே சோர்ந்துவிட்டாலும் தோற்றுவிடுவோம் என்பதை முயலின் தோல்வி நமக்கு உணர்த்துகிறது. முயலைப் போலத் தூங்கி விடாதே. விழித்தெழு! வெற்றிபெறு!
‘பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான். போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்’ என்று பட்டுக்கோட்டைக் கவிஞன் பாட்டிலே சொல்லி வைத்தான். பள்ளிக் கூடத்திலே ஆசிரியர் பாடம் நடத்துகையில், கடைசிப் பெஞ்சில் படுத்துத் தூங்கியவனைப் பற்றியா கவிஞன் பாடினான்? இல்லை. வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் சோம்பிக் கிடப்பவனைத்தான் கவிஞன் குறிப்பால் உணர்த்தினான். அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளாதே. விழித்தெழு! வெற்றிபெறு!
நானெங்கே வெற்றிபெறப் போகிறேன், எனக்கெங்கே கிடைக்கப் போகிறது என்கிற தோல்வி மனப்பான்மையும் தாழ்வு மனப்பான்மையுமே உன்னுடைய முதல் எதிரிகள். என்னால் இது முடியுமா என்கிற அவநம்பிக்கையோடு ஒரு செயலைத் தொடங்குகிறாயா? பாதி வெற்றி பறிபோய்விட்டது என்று பொருள். இது என்னால் முடியும், முடித்துக் காட்டுகிறேன் என்ற முழு நம்பிக்கையோடு எழுந்து நட! இமயம் உன் கையில்!
அவனுக்கென்ன எப்படியாவது பிழைத்துக் கொள்வான் என்று சொல்கிறார்களே, அதுபோல எப்படியாவது பிழைப்பு நடத்துகிற இனத்தைச் சேர்ந்தவனா நீ? பிழைப்பு நடத்துவதும் வாழ்க்கை நடத்துவதும் ஒன்றல்ல. எவரும் எப்படியும் பிழைப்பு நடத்தலாம். ஆனால் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோரே வரலாற்றில் நிற்கிறார்கள் என்பதை நினைவில் நிறுத்திக்கொள். ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்பது உன்னை முடக்கிப் போட்டுவிடுகிற முதுமொழியாய் இருந்துவிடக் கூடாது. பத்தோடு பதினொன்றாய் உன் வாழ்க்கையைப் பாழாக்கி விடாதே. ஆயிரத்தில் ஒருவனாய் அகிலத்தில் வாழ்ந்து காட்டு! ஜன சமுத்திரத்தில் ஒரு துளியாய்க் கரைந்துவிடாதே. அலையைப்போல ஆர்ப்பரித்து எழு! இரவு வானில் எண்ணற்ற விண்மீன்களில் ஒன்றாய்க் கண்சிமிட்டிக் கொண்டிருப்பதில் உனக்குக் கடுகளவும் பெருமை இல்லை. பூரண நிலவாய்ப் பூமியை வலம் வா. பகல் நேரத்துப் பனித்துளியாய் மின்னிக் கரைவதில் என்ன பயன்? சூரியனைப்போல் சுடர்விட்டுக் கிளம்பு. சாதனைத் திசைநோக்கி, அழுத்தமாய் ஓர் அடி எடுத்து வை. ஆயிரம் வாசல்கள் உனக்காகத் திறக்கும்!
உனக்குள் ஒளிரும் ஒரு திறைமையை வளர்த்துக்கொள். கணிதம் தெரிந்துகொள். அறிவியல் அறிந்துகொள். கணிப்பொறி கற்றுக்கொள். ஆனால் ஏதேனும் ஒரு துறையில் அதன் ஆழத்தைக் கண்டுவிடு. ஓவியம் தீட்டு. பாட்டுப் பாடு. சிற்பம் வடி. ஆனால் ஒரு கலையில் அதன் உச்சத்தைக் கண்டுவிடு. எல்லாவற்றையும் பொதுவாக அறிந்துகொள். ஆனால் ஒன்றே ஒன்றில் உன்னை வல்லவன் ஆக்கிக்கொள். ஒருகோடி மனித முகங்களில் உன்னைத் தனித்து அடையாளம் காட்டும் ஓர் ஒளிவட்டத்தை உன்னைச் சுற்றி உருவாக்கிக்கொள். செல்லும் இடமெல்லாம் உன் சுவடு பதிக்கப்படும். வரலாற்றில் உன் பெயர் பொறிக்கப்படும். என்ன தயக்கம்? இன்றே தொடங்கு!
வெற்றிக்கு முதலில் வேண்டுவது இலக்கு – உன்னதமான இலக்கு. அடுத்து வேண்டுவது, அந்த இலக்கை அடைய முடியும் என்கிற நம்பிக்கை – தோல்வியில் துவண்டு போகாத வலிய தன்னம்பிக்கை. பிறகு, அந்த நம்பிக்கையை நனவாக்கும் முயற்சி – சோதனையில் சோர்ந்து போகாத தீவிர முயற்சி. அதைத் தொடர்ந்து, முயற்சியைச் செயல்வடிவம் ஆக்கும் உழைப்பு – ஒருபோதும் ஓய்ந்துவிடாத கடின உழைப்பு. பிறகென்ன? அதோ! எட்டிப் பறித்துக்கொள் – வெற்றிக் கனி உன்கையில்!
வேண்டாத குப்பைகளை ஆண்டுக்கு ஒருமுறை தீயிட்டுக் கொளுத்துகிறோம். அதுபோல உனக்குள்ளே மண்டிக் கிடக்கும் உதவாத குப்பைகளை நீ எரிக்க வேண்டாமா? உன் முன்னேற்றத்துக்குத் தடைபோட்டுக் கொண்டிருக்கும் உன் பலவீனங்களைக் கொளுத்து. தீ வளர்! – சோம்பல், விரக்தி, தாமதம், தள்ளிப்போடல், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை என, உனக்குள்ளே மண்டிக் கிடக்கும் ஓராயிரம் குப்பைகளைக் கொளுத்த – உன் நெஞ்சுக்குள் தீ வளர்!
உன்னுள் நீ வளர்க்கும் நெருப்பு உன்னையே எரிப்பதாய் இருந்துவிடக் கூடாது. தோல்விகளைச் சுட்டெரித்து வெற்றிக்கு வழிகாட்டும் வேள்வித் தீயாக இருக்கட்டும். தங்கத்தை மெருகூட்டும் தணலாக, உனக்குள்ளே அத்தீ பரவட்டும்! தடைகளைத் தகர்த்தெறிந்து புடம்போட்ட புதிய மனிதனாய்ப் பூமியில் கால்பதி. சவால்களைக் கண்டு சஞ்சலம் அடையாமல் எழுச்சியுடன் எழுந்து நட, இன்றே! இப்போதே!
No comments:
Post a Comment