Friday, March 13, 2015

அள்ளித்தரும் ஐந்து யோகங்கள்!

அள்ளித்தரும் ஐந்து யோகங்கள்!

ராசி சக்கரத்தில் சில கிரகங்களின் நிலை அல்லது இணைவு, யோகம் எனப்படும். இந்த இணைவின் மூலமாக ஜாதகத்தின் பலன் கூடவோ, குறையவோ செய்யும். சுபகிரகங்களின் நல்ல அமைப்பு சுபயோகங்களைத் தரும். இந்த சுபயோகங்கள் தனயோகம் (செல்வம் தரும் அமைப்பு), ராஜயோகம் (பெயர், புகழ், மதிப்பு தரும் அமைப்பு) எனப் பல்வேறு விதமாக அமையும். மிகவும் உயர்தரமான கஜகேசரி, பஞ்சமஹா புருஷ யோகம் போன்றவையும் உள்ளன. பழைமையான ஜோதிட நூல்களில் இவ்வாறான யோகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.

பஞ்சமஹா புருஷ யோகங்கள்

ருசக, பத்ரா, ஹம்ஸ, மாளவ்யா மற்றும் சசயோகம் என ஐவகை யோகங்கள் உள்ளன. இவை முறையே செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களால் ஏற்படுகின்றன. மேற்கண்ட கிரகங்கள் கேந்திர வீட்டில் இருப்பதுடன், மேற்படி வீடு அந்தக் கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச வீடாகவும் இருக்க வேண்டும்.

ருசக யோகம்

செவ்வாய் தனது சொந்த ராசிகளாகிய மேஷம், விருச்சிகம் அல்லது உச்ச ராசியாகிய மகரத்தில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாகவும் அமைவது ருசக யோகம் ஆகும். நல்ல உறுதியான உடலையும், வேகமான தன்மையையும் இது தருகிறது.

ருசக யோகத்தில் பிறந்தவர் நீண்ட முகம் உடையவர்; தீரமான செயல்கள் புரிந்து, செல்வம் சம்பாதிப்பவர்; தைரியமானவர்; எதிரிகளை வெல்பவர்; அதிகாரம், வலிமை உள்ளவர். தன் திறமையால் புகழ்பெறுபவர். தன் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடைபவர். அரசனுக்குச் சமமானவர். தியாகம் செய்யத் தயங்காதவர். பக்தி உடையவர். விஞ்ஞானி. 70 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் உடையவர்.

பத்ரா யோகம்

புதன் தனது மிதுனம் அல்லது கன்னி ராசிகளில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாகவும் அமைவது பத்ரா யோகம் ஆகும். பத்ரா யோகத்தில் பிறந்தவர் அதிர்ஷ்டமானனவர், வலிமையான உடலுடையவர், சுத்தமானவர், கற்றவரும் பாராட்டும்படி உள்ளவர். மிகப் பெரும் செல்வந்தர். பிறவியிலேயே அறிவாளி. நல்ல பேச்சாளர். தன் பேச்சில் யாரையும் கவரும் திறம் உடையவர். புலி போன்ற வேகமும், யானை போன்ற நடையும், அகன்று விரிந்த மார்பும், நீண்ட கைகளும், உயரமும் அதற்கு ஏற்ற பருமனும் உடையவர். புகழும், 80 வயதுக்கு மேற்பட்ட ஆயுளும் உடையவர்.

ஹம்ஸ யோகம்

குரு தனது சுய ராசிகளாகிய தனுசு, மீனம் அல்லது உச்ச ராசியாகிய கடகத்தில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாக அமைவது ஹம்ஸ யோகம் ஆகும். பாலையும் நீரையும் பிரித்து எடுக்கும் குணம் கொண்ட ஹம்ஸம் எனும் அன்னம் போன்றவர். அழகு, வசதி வாய்ப்புகள், சுயமரியாதை, தூய்மையான மனம், சரியான தீர்ப்பு இவற்றோடு ஊதாரிக் குணமும் உள்ளவர். ஹம்ஸ யோகத்தில் பிறந்தவர் நல்லவரால் புகழப்பெறுவார். அவர் கைகளிலும், கால்களிலும் சங்கு, தாமரை, மீன், அங்குசம் போன்ற ரேகைகள் இருக்கும். நன்னடத்தையும், அழகான உடலும், உயர்ந்த சிறப்பான உணவைப் புசிப்பவரும் ஆவார். சகலத்தையும் அறிந்த வராகவும் ஆசாரமாகவும் இருக்கும் இவர், 80 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் உடையவர்.

மாளவ்ய யோகம்

சுக்கிரனால் அமையும் யோகம் மாளவ்ய யோகம். சுக்கிரன் தனது சுய ராசிகளாகிய ரிஷபம், துலாம் அல்லது உச்ச ராசியாகிய மீனத்தில் இருக்க, மேற்படி ராசி கேந்திர வீடாக அமைவது மாளவ்ய யோகம் ஆகும். மாளவ்ய யோகத்தில் பிறந்தவர் உறுதியான உடல், செல்வம், உறுதியான மனம், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, அறிவான குழந்தைகள், நல்ல அதிர்ஷ்டம், செல்வச் செழிப்பு, சுவையான நல்லுணவு, சந்தோஷங் களை அனுபவித்தல், நல்ல வாகன வசதி, புகழ், கல்வி உடையவர் ஆவார். தீர்க்கமான புலன்கள் உடையவர். அழகான கண்கள்; தாராள குணம்;  75 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் உடையவர்.

சச யோகம்

சனி தனது சுய ராசிகளான மகரம், கும்பம் அல்லது உச்ச ராசியாகிய துலாமில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாக அமைவது சச (மக்கள்) யோகம் எனப்படும். சச யோகத்தில் பிறந்தவர் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, ஏராளமான செல்வம் ஆகியவற்றை உடையவர். எல்லோராலும் புகழப்படுபவர், நல்ல வேலையாட்கள் அமைவர். வலிமையானவர், ஒரு கிராமம் அல்லது நிலப்பகுதிக்குத் தலைவராக விளங்குவார்.  மகிழ்ச்சி உடையவர்.  தாயிடம் பணிவுள்ளவர். கருமை நிறம்; 70 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் உள்ளவர். பஞ்ச மஹா புருஷ யோகங்கள் லக்னத்திலிருந்து அமைவதைப் பார்த்தோம். இவ்வாறே சந்திரனிலிருந்து அமைந்தாலும், அவையும் 'பஞ்சமஹா புருஷ யோகங்கள்’ எனப்படும்.

No comments:

Post a Comment