நட்”பூ’விலும் உண்டு “முள்’!
யுத்த களத்தில் குதிரை மீது அமர்ந்து ஒரு வீரன் ஆவேசமாகப் போர் புரிந்து கொண்டிருக்கிறான். போர் பயங்கரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் சமயத்தில்…
வீரன் ஏறியிருந்த குதிரை அவனைக் கீழே தள்ளி ஓடி விடுகிறது என்றால் அந்த வீரனின் கதி என்னவாகும்? வீரனை எதிரி கொன்று விடுவான் அல்லவா? இதே நிலைதான் நண்பனின் துரோகமும்!
“நட்டாற்றில் நழுவிவிடும் நட்பு நமக்கு இருப்பதைவிட, உயர்ந்த மனப்பான்மையுடைய நல்லவர்களின் விரோதம் மேலானது’ என்கிறார் மோலியர்.
இது எப்படியென்றால் எதிர்முனையில் நல்லவர்களைச் சந்திக்கும்பொழுது அவர்களின் நல்ல பண்பையும் சேர்த்துப் பார்க்கிறோம். அதன் விளைவு கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பர்களால் நாம் அடையும் பலன் வீழ்ச்சி அல்லவா?
நண்பன் வாழ்வின் துணைவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது நண்பனே நமக்கு எதிரியாகிவிடும் பொழுது அதனை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?
நல்ல நண்பன் என்று எண்ணிப் பழகுகிறோம். நல்லவன் என்று நம்பி நட்பு கொள்கிறோம். நம்பிக்கையுடன் நல்லவிதமாகப் பற்று வைக்கிறோம்.
எதிர்பாராதவிதமாய் அந்த நண்பன் தகுதியற்றவன் என்று புரிந்தால் அது அவ்வளவாக நம் மனதை பவருத்தாது. சற்று ஏமாற்றம் ஏற்படும்.
“ஏமாற்றுக்காரர்களே சமூக உறுப்பினர்களில் மிகவும் அபாயமானவர்கள். நம் இயற்கையின் படி நாம் காட்டும் பிரியத்திற்கும், ஆதரவுக்கும் துரோகம் செய்துவிட்டால்… மிகவும் புனிதமாக இருக்கும் கடமையைக் கூட மீறி நடக்கும் அயோக்கியர்கள்’ என்கிறார் ஜெர்மன் நாட்டு அறிஞர் கிராப்.
“சந்தர்ப்பத்தில் நமக்குத் துரோகம் செய்துவிட்டு ஒதுங்கும் மனிதனின் நட்பை, உயிருக்கு மன்றாடியவாறு மரணப்படுக்கையில் கிடக்கும் சமயத்திலும் கூட நினைத்து விட்டால் உள்ளம் நடுங்கும். வேதனை தீயாக எரியும்’ என்கிறார் எபிக்டெட்ஸ்.
***
சிலரை நாம் நண்பர்கள் என்று கருதிப் பழகுவோம். அவர்களும் அவ்விதமே பழகுவார்கள். அவர்கள் பேச்சில் இனிமை இருக்கும். ஆர்வத்துடனும் அன்பு ததும்பும் மொழியிலும் பேசுவார்கள்.
நேரில் சந்திக்கும் பொழுது எல்லாம் முகம் மலர்ந்து அகங்குளிரும் வண்ணம் நமக்காகவே வாழ்வதுபோல நட்புடன் இருப்பார்கள்.
ஆனால் நம்மை விட்டு அடுத்தவரிடம் பேசும் பொழுது நம்மை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்வார்கள். இவர்கள் உண்மையான நண்பர்கள் அல்லர்!
இவர்கள் இவ்விதம் கூறுவதற்குக் காரணம் தாங்கள் அறிவாளி என்றும் உலகம் அறிந்த அறிஞர்கள் என்றும் மற்றவர்கள் எண்ண வேண்டும் என்ற அற்ப ஆசைதான்!
அற்பப் புகழ், போலிப் பெருமை போன்ற கீழ்த்தரமான மனோபாவத்தின் தூண்டுதலால்தான் அப்படி கூறுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களை உண்மையான நண்பன் என்று எண்ணி ஏமாந்து போய்விடக்கூடாது.
இன்னும் சிலர் மிகவும் தந்திர குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நம்மிடம் இருக்கும் புகழ், பணம் இவற்றிலேயே கவனத்தைச் செலுத்தியிருப்பது இவர்களுடைய நோக்கம்.
புகழையும் பொருளையும் கொள்ளையடிக்க இவர்கள் குள்ளநரித்தனம் செய்யத் தீர்மானிப்பார்கள். உயிர்த் தோழர்கள் போன்று வேடமிட்டு நம்மை நெருங்கி உற்ற நண்பராக நடித்து நமது மனதைக் கவர்ந்து தம்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். நாம் பரிபூரணமாக அவர்களிடம் நம்பிக்கை வைக்கும் பொழுது நம்மைப் பற்றி வெளியே தாறுமாறாகப் பிரசாரம் செய்து நம்முடைய உழைப்பைத் தங்களின் சாதனையாக வெளியே பரப்பிப் பயனடைந்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.
***
நட்டு என்ற உணர்ச்சி நம்மை வாழவைக்கும் ஒரு சஞ்சீவி மருந்து. அதனை மிகவும் யோசனையுடன் கையாள வேண்டும்.
நண்பன் என்று வேம் போட்டு நடிக்கும் நட்பே நமக்குத் தேவையில்லை. துரோகக் கூட்டுறவு நமக்கு வேண்டாம்.
“மனிதன் வீட்டில் வளர்கிறான். ஆனால் ஊரில்தான் வாழ்கிறான்.’ என்று அட்லர் கூறுகிறார். அதனால் நம்முடைய வாழ்வின் வளர்ப்புக்கு வீட்டுத் துணை மட்டும் போதாது. ஊரின் துணையும் வேண்டும்.
வீட்டில் மனைவியுடன் பேசி மகிழ முடியும். குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட இயலும். பெற்றோருடன் கலந்து சந்தோஷப்பட முடியும்.
உற்றார், உறவினருடன் விருந்துண்டு ஆனந்தப்படலாம். இந்தக் குடும்ப சூழ்நிலை நமக்கு மன அமைதியையும், இன்பத்தையும் தரும் என்பது உண்மைதான்.
“கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு சுகமாக இருக்காது’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.
வெளி உலகம் சென்று நாம் பாடுபட்டுப் பணம் தேடி வெளி உலகம் சென்று நாம் பாடுபட்டுப் பணம் தேடி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகுதான் இல்லத்தில் இன்பம் உண்டாக முடியும்.
நம்முடைய குடும்ப சூழ்நிலை எளிதில் உணர்ந்து அதில் ஈடுபாடு கொள்ள வழி உள்ளது.
ஆனால், வெளி உலகத்தின் நிலைமை வேறு. பல வகையான மக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பலதரப்பட்ட வயதுள்ளவர்களைக் கண்டு பழகவும் அவசியமாகிறது.
சிலருடைய உதவியைக் கொண்டும், பலருடைய அனுதாபத்தின் மூலமும், அநேகருடைய ஆதரவினாலும் நம்முடைய வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்தே தீர வேண்டும்.
***
பிறரை நாம் கவர வேண்டுமானால் சிறப்பான அம்சம் இருந்துதான் தீர வேண்டும்.
கடல்போன்ற மக்கள் மத்தியில் நமக்கு ஆதரவு தருபவர்களை எப்படி கண்டுபிடிப்பது? இங்கேதான் நட்பு என்ற சக்தியின் முதன்மைத் தன்மையை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
அலைகடல் போன்ற ஜனத்திரளின் முன் பிறரின் ஆதரவுக்கு நாம் பாத்திரமாக வேண்டுமானால், நமக்கு என்று சில நண்பர்கள் அவசியம் இருந்தே தீர வேண்டும். லட்சக்கணக்கான மக்களையும் நம்மிடம் நட்பு கொள்ளும்படி செய்வது எளிதான செயல் அல்ல.
ஆனால் நண்பர்கள் என்ற ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அந்த வட்டத்துக்குள் நம்மையும் இணைத்துக் கொள்வது எளிதானது. இதனைச் செயல்படுத்தியும் காட்ட முடியும்.
வீட்டுக்குள் இன்பமும், மகிழ்ச்சியும் நிலைக்க வேண்டுமானால் வெளிஉலகில் நம்முடைய வாழ்வின் தரத்திற்கு ஏற்ப, பொருளைச் சம்பாதிக்க வேண்டும்.
நல்ல நண்பர்கள் அமையும்போதுதான் ஒழுங்கான முறையில் உயர்ந்து, வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும்.
வெளி உலகில் நண்பர்கள் நல்லவர்களாக ஏற்படும்பொழுது, நம்முடைய வாழ்க்கையும் உறுதியாக அமைய வழி வகுக்கும்.
வாழ்வின் சூழ்நிலையில் உறுதியான உண்மையான நண்பன் கிடைத்துவிட்டால் அதுவே இன்பத்தின் எல்லையாக இருக்கும். இதற்கு அடிப்படை நண்பர்களே!
இதனைப் புரிந்து கொண்டால்தான் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ முடியும்.
மாட மாளிகை கட்டி, கார் சவாரி செய்து, உல்லாசமாக வாழ முடியாவிட்டாலும், பசியின்றி சாப்பிட்டுப் பரிசுத்தமாக உடுத்திப் பக்குவமான நிலையில் இன்பமாக வாழமுடியும்.
No comments:
Post a Comment