எது தலைமைப் பண்பு?
என் வகுப்புத் தோழனான பிரகாஷுக்கு இணையான பேச்சாளர்கள் ஏழு, எட்டுப் பேர் எங்கள் கல்லூரியில் இருந்தார்கள். ஆனால் அவன்தான் மாணவர் சங்கத் தலைவன். எங்கு, யாருக்கு, என்ன சிக்கல் என்றாலும் அவனைத்தான் அழைப்பார்கள். உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று எல்லோரோடும் பேச்சு வார்த்தை நடத்துவான். அனைவரும் சமாதானம் அடையும்படி எப்படியாவது ஒரு சுமூகத் தீர்வைக் கண்டுபிடித்திடுவான். “வாய் உள்ள பிள்ளை அதனால் பிழைக்குது!” என்று அவனைப்பற்றிப் பலர் பேசுவதுண்டு.
“எங்களுக்கும் தலைவர் பதவி கிடைத்தால் நாங்கள் கூடத்தான் நாட்டாமை மாதிரித் தீர்ப்பு கொடுத்து அசத்துவோம்!’’ என அவன் மேல் பொறாமை கொண்டு பேசுபவர்களும் உண்டு. இது போன்ற பேச்சுகளுக்குச் சவால்விடும் ஒரு நாள் வந்தது.
எங்களாலும் முடியும்!
பொதுவாகவே எங்கள் கல்லூரியில் கலைத்துறை மாணவர்களுக்கும் அறிவியல் துறை மாணவர்களுக்கும் இடையில் பனிப் போர் நிலவும்.
அன்று கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் வழக்கமான வாய்ச்சவடால் அடி தடி சண்டையாக மூண்டது. பிரச்சினையைத் தீர்க்கப் பிரகாஷை தேடி ஓடி வந்தான் ஒரு மாணவன். ஆனால் அன்று பிரகாஷ் கல்லூரிக்கு வரவில்லை. உடனடியாக என் வகுப்பில் இருந்த ராஜாவும், கார்த்திக்கும் “நாங்க ஒரு கை பார்த்துட்டு வருகிறோம்!” எனப் புறப்பட்டார்கள்.
அவர்கள் இருவரும் வகுப்பை விட்டுச் சென்ற அடுத்த நிமிடம் பேராசிரியர் வகுப்புக்குள் நுழைந்துவிட்டார். என்ன நடக்கிறது என்ற ஆவலோடும், பதற்றத்தோடும் நாங்கள் எல்லோரும் வகுப்பிலேயே அமைதியாக அமர்ந்திருந்தோம்.
அரை மணி நேரம்வரை என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. “சார், உங்களை தலைமை ஆசிரியர் உடனடியாக அவர் அலுவலகத்துக்குக் கூப்பிட்டார்!” எனக் கல்லூரி அலுவலக உதவியாளர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம் கூறினார். பின்புதான் நடந்த கூத்து தெரிய வந்தது. சண்டையை நிறுத்த வீறு நடை போட்ட ராஜாவும், கார்த்திக்கும் மத்தியஸ்தம் பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் தீர்ப்பை ஒப்புக்கொள்ள மறுத்த மாணவர்களையெல்லாம் அடித்துப் பெரிய கலவரம் பண்ணிவிட்டார்கள். அன்று நடந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.
சிறந்த பேச்சாளர்
என்னுடன் வகுப்பில் படித்த பிரகாஷ், ராஜா, கார்த்திக் மூவருமே பல பேச்சுப் போட்டிகளில் பலமுறை ‘சிறந்த பேச்சாளர்’ பட்டம் வென்றவர்கள்தான். மூவருமே பேசத் தொடங்கினால் வார்த்தைகள் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போலப் பாயும். நினைத்த விஷயத்தைத் தயக்கம் இல்லாமல் வெளிப்படையாகப் பேசுவார்கள்.
எல்லோரிடமும் கலகலவெனப் பேசுவார்கள். அனைவரும் ரசிக்கும்படி பேசுவார்கள். அவர்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற குணாதிசயங்கள் கொண்டவரை எக்ஸ்ட்ரோவர்ட் (extrovert) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
ஆனால் ராஜாவிடமும் கார்த்திக்கிடமும் இல்லாத ஏதோ ஒரு நுட்பம் பிரகாஷிடம் இருந்திருக்கிறது. அதுதான் அவனை மாணவர் சங்கத் தலைவனாக உயர்ந்தெழச் செய்திருக்கிறது. ஆகவே அவன் எக்ஸ்ட்ரோவர்டாக இருப்பதையும் தாண்டி வேறு ஏதோ ஒரு தனித்திறனுடன் இருந்திருக்கிறான். கார்டனர் குறிப்பிடுகிற மனிதத் தொடர்பு அறிவுத்திறன் (Interpersonal Intelligence) என்பதோடு இந்தத் திறனை நாம் ஒப்பிடலாம்.
எது தலைமைப் பண்பு?
எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி, சிறந்த பேச்சாற்றலோடு இருப்பவர்களெல்லாம் மனிதத் தொடர்பு அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்ல. மேலோட்டமாகப் பார்க்கும்போது இவர்களுடைய பலம் பேச்சுத் திறன் எனத் தோன்றும். ஆனால் இவர்களுடைய உண்மையான பலம் பேசுவதில் அல்ல கேட்பதில் இருக்கிறது. பிறர் சொல்வதைக் கவனித்து, அவர்களுடைய குரலுக்குச் செவிமடுத்து பின்பு எதிர்வினை ஆற்றுவதே இவர்களுடைய தனிச் சிறப்பு. இவர்களால் மற்றவர்களுடைய உணர்வை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவார்கள். தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுத்துக்கூட உறவில் பிணைப்பை ஏற்படுத்த கடும் பிரயத்தனம் செய்வார்கள். அதிகாரத்தின் மூலம் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலமாட்டார்கள். அனைவருக்கும் ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய சூழலில், பலவிதமான மனிதர்களோடு உற்சாகமாக இணைந்து செயல்படுவார்கள். கூட்டு முயற்சியில் ஈடுபட விரும்புவார்கள். இவர்களுடைய அணுகுமுறை நல்ல தலைமைப்பண்பை வெளிப்படுத்தும்.
“நீ போகலாம் என்பவன் எஜமான். வா! போகலாம் என்பவன் தலைவன். நீ எஜமானா? தலைவனா?” எனும் வைரமுத்து வரிகளை மனிதத் தொடர்பு அறிவுத்திறனுக்கான கவித்துவமான ஒரு வரி விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம். இது அறிமுகம்தான். மனிதத் தொடர்பு அறிவுத்திறன் தொடர்பாகத் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளன!
No comments:
Post a Comment