புரிந்துகொள்ளுங்கள் பொருளாதாரச் சுழற்சியை!
பொருளாதாரப் பாடம் என்றாலே பலருக்குக் கண்ணைக் கட்டும். அதிலும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகளைப் பற்றி யாராவது பேசத் தொடங்கினால் சிக்கலே பரவாயில்லை, தீர்ப்பு அதைவிட ஆபத்தாக இருக்கிறதே என்று நினைக்கக்கூடும். இந்த நிலையில், அமெரிக்காவின் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத் தலைவர் ராய் டேலியோ வித்தியாசமாகத் தோன்றுகிறார். அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆலோசனைகளை வழங்குவதுடன் அவரும் முதலீடு செய்திருக்கிறார்.
அவருடைய நிறுவனத்தின் மதிப்பு 13 பில்லியன் டாலர். சுமார் ரூ. 78,000 கோடி. இதைப் போல 10 மடங்கு தொகையை முதலீட்டாளர்களிடம் பெற்று பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அவரிடம் முதலீட்டு ஆலோசனை பெற வருகிறவர்களிடம் இரண்டு சதவீதத்தை நிர்வாகக் கட்டணமாகப் பெறுகிறார். அவர் யோசனைப்படி முதலீடு செய்து லாபம் கிடைத்தால் அதில் 20 சதவீதத்தை அவருக்குத் தந்துவிட வேண்டும். அவருக்கென்று நிரந்தரமாகச் சில வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
பொருளாதாரச் சுழற்சியை, பொருளாதாரமே படிக்காதவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கார்ட்டூன் காட்சிகளாக விடியோ மூலம் 30 நிமிஷங்களில் விளக்குகிறார். ‘யூ டியூப்’தளத்திலும் அவை வெளியாகி உள்ளன. பொருளாதாரத்தை ஓர் இயந்திரத்துடன் ஒப்பிடுகிறார். அவருடைய காணொளிக் காட்சி விளக்கத்தைப் பார்ப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்கின்றனர்.
முதலீட்டாளர்கள், முதலீட்டு நெறியாளர்கள், அரசியல்வாதிகள் அனைவருமே தவறான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதால் இந்த காணொளிக் காட்சியைத் தயாரித்ததாகக் கூறுகிறார்.
“சமீப காலம் வரை எல்லாவற்றையும் ரகசியமாக வைத்திருந்தேன். தவறான பொருளாதார முடிவுகளை யாரும் எடுத்து விடக் கூடாது என்பதற்காக என்னுடைய கருத்தை வெளியிட முடிவுசெய்தேன்.
அடிப்படையான தகவல்களைக் கவனிக்கத் தவறுவதால், பொருளாதார முடிவுகளை எடுக்கக்கூடிய பதவியில் இருப்பவர்களும் அவர்களுக்கு ஆலோசனை கூறுகிறவர்களும் தேவை யற்ற பொருளாதார இழப்புகளுக்கு மற்றவர்களை ஆளாக்குகின்றனர். பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள பாரம்பரிய அணுகுமுறையைக் கையாள்வதால் (பாடப்புத்தகப்படிதான் எல்லாம் இருக்கும் என்று நினைப்பதால்) காரிய சாத்தியமான முடிவுகளை எடுக்க முடியாது. இதன் காரணமாகவே அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் தவறான முடிவுகளையே எடுக்கின்றனர்.
குறிப்பிட்ட பொருளாதார உறவுகளில் காணப்படும் காரணம் பலன் என்பதன் அடிப்படையிலேயே நான் முடிவுகளை எடுக்கிறேன்” என்று சொல்லும் ராய் டேலியோவின் வழி இதுதான்:
“இப்போது உங்களால் முழுப் பணம் கொடுத்து வாங்க முடியாத, அவசியமான பொருளைத் தவணை முறையில் (கடனில்) வாங்குங்கள். இதை நீங்கள் உங்களுடைய எதிர்கால வருவாயிலிருந்தோ சேமிப்பி லிருந்தோ வாங்குகிறீர்கள் என்று உணருங்கள். இப்போதைய தேவையைப் பூர்த்திசெய்துகொண்டாலும் எதிர்கால வருவாயிலிருந்து இந்தக் கடனை அடைக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, எதிர்கால வருவாயில் நீங்கள் குறைவாகத்தான் செலவழிக்க வேண்டும். இந்தச் செயல் உங்களுடைய தேவையையும் பூர்த்திசெய்கிறது, பொரு ளாதாரச் சக்கரத்தையும் சுழலவைக்கிறது.
பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்றாலே, எல்லோரும் புதிய கடன்களை வாங்குவதைத் தள்ளிப்போடுகிறார்கள், தேவைக்குக்கூட வாங்காமல் செலவைக் குறைக்கிறார்கள் அல்லது கையிருப்பில் பணத்தை வைத்துக்கொள்கிறார்கள். ஒரு மனிதருடைய செலவுதான் இன்னொருவருக்கு வருமானம். இதை வருமானம் உள்ளவர்கள் குறைத்தால், ஒட்டுமொத்தமாகப் பலருக்கு வருமானம் குறையும். இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் சுருக்கிவிடும்.”
- டேலியோவின் கருத்துகளுக்கு இப்போது ஆதரவு பெருகுகிறது. பொருளா தார மாணவர்களும் நிதித் துறையைச் சேர்ந்தவர்களும் கடந்த மாதம் முதல் அவருடைய காணொளிக் காட்சியைக் கண்டு ரசிக்கிறார்கள். இதுவரை மூன்று லட்சம் பேர் பார்த்துவிட்டனர். அரசின் கருவூலத்துறைச் செயலராக முன்னர் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹென்றி எம். பால்சன் ஜூனியர், தான் பார்த்து ரசித்ததல்லாமல் இதைத் தன்னுடைய நண்பர்களுக்கெல்லாம் அனுப்பிவைத்துப் பார்க்கும்படி கோரிக்கைவிடுக்கிறார்.
“இது வழக்கத்துக்கு மாறான சிந்தனையாக இருக்கிறது. ஆனால், ரசிக்கும்படியாக இருக்கிறது” என்று மகிழ்கிறார் பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் பால் ஏ. வாக்கர். “பொருளாதாரம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் காணொளிக் காட்சி நன்கு விளக்குகிறது. கடன் வாங்கியவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டாலும் மேலும் சில காலம் தவணை அளித்து, அவர்களுடைய வருவாய் பெருகிய பிறகு கடனைத் திரும்ப வசூலித்தால் வாராக்கடன்களின் அளவும் குறையும், மக்களில் கணிசமானவர்கள் பணம் இல்லாத காலத்தில் வேதனையில் சிக்க மாட்டார்கள் என்பதால் மத்திய வங்கிகளும் (ரிசர்வ் வங்கிகள்), அரசுகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று ஆலோசனையும் வழங்குகிறார் வாக்கர்.
பொருளாதாரம் என்றாலே புள்ளிவிவரங்களைக் கொட்டுவதுதான் அறிஞர்களின் வழக்கம். டாலியோ அப்படி எதையும் செய்யவில்லை. தேவை - உற்பத்தி (சப்ளை டிமாண்ட்) கோட்பாட்டையும் அவர் அதிகம் வலியுறுத்துவதில்லை. பண விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமே விலைவாசியையும் பணவீக்கத்தை யும் கட்டுப்படுத்திவிட முடியும் என்று பணக்கொள்கை பேராசிரியர்கள் சொல்வதையும் அவர் ஆதரிப்பதில்லை.
மில்டன் ஃப்ரீட்மேன் வகுத்தளித்த எம்.வி. = பி.கியூ. என்ற கோட்பாட்டையும் அவர் ஏற்க மறுக்கிறார். இதில் எம். என்பது பண சப்ளை. வி என்பது ஓராண்டில் எத்தனை முறை ஒவ்வொரு டாலரும் செலவிடப்படுகிறது என்பதைக் காட்டும் அளவு. பி என்பது பொருள், சேவைக்கான பண மதிப்பு. கியூ என்பது பொருள், சேவையின் அளவு மதிப்பாகும். பணம் செலவாகும் வேகம் ஒரே மாதிரியாக இருந்தால், பண விநியோகத்தை அதிகரிக்கும்போது விலைவாசியோ, பொருள் அல்லது சேவையின் அளவோ அதிகரித்துவிடும் என்பது ஃப்ரீட்மேனின் கோட்பாடாகும். இது தவறான முடிவு களுக்கே வழிவகுக்கிறது என்கிறார் டேலி.
“பணம் வைத்துக்கொண்டுதான் செலவு செய்ய முடியும் என்றில்லை, கடன் வாங்கியும் செலவு செய்யலாம். நம்முடைய நோக்கம் வியாபாரம் பெருக வேண்டும், தொழில்துறை உற்பத்தி அதிகரிக்க வேண்டும், பொருளாதார நடவடிக்கைகள் வேகம்பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும். விலைவாசியைக் கட்டுப் படுத்தவும் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவு களையே ஏற்படுத்து கிறது. எனவே, உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு எப்படி அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.
“இரு விதமான பொருளாதாரச் சுழற்சிகள்தான் இருக்கின்றன. ஒன்று, ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டு களுக்குள் சுழன்று முடித்துவிடும் குறுகிய காலச் சுழற்சி. இன்னொன்று, 75 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரையில் எடுத்துக்கொள்ளும் நீண்ட காலச் சுழற்சி. இதற்கிடையே பொருளாதாரம், ஊஞ்சல்போல அப்படியும் இப்படியும் ஆடும். அதையே சுழற்சி என்று தவறாகக் கணிப்போரும் உண்டு.
“எப்படிக் கடன் வாங்குவதை நுகர்வோர் அச்சம் காரணமாக கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாதோ, அப்படியே அரசும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகக் கருதி சகட்டுமேனிக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விடக் கூடாது. சமநிலையை ஏற்படுத்தும் கொள்கைகளை மட்டும் அரசுகள் கவனமாக எடுத்தால் போதும் பொருளாதாரத்தைச் சீர்படுத்திவிடலாம். வளர்ச்சி வேகம் குறைவாக இருந்தாலும், அரசுக்குப் பெருமளவுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுவிடாது.
அரசுகளுடையதாக இருந்தாலும் தனி மனிதர்களுடையதாக இருந்தாலும் கடன் சுமை குறைய சிலவேளைகளில் 10 ஆண்டுகள்கூடப் பிடிக்கும். அதன் பிறகே பொருளாதார நடவடிக்கைகள் இயல்புக்குத் திரும்பும்” என்கிறார். அவருடைய கணக்குப்படி 2008-ல் ஏற்பட்ட கடன் சுமை 2018 வாக்கில்தான் நீங்கும்.
No comments:
Post a Comment