மனசு ஒரு மந்திரச்சாவி
வாழ்வில் எல்லா சூழல்களையும் நம்மால் உருவாக்கி விட முடியாது. ஆனால், அவற்றிற்கு தகுந்த மனோபாவத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். தீய மனோபாவங்கள் நல்லவற்றை அழித்து விடுகின்றன. நல்ல மனோபாவம் கீழ்த்தரமான எண்ணங்களாலும், அற்ப புத்தியாலும் பாழாகி விடுகின்றன. இதனால் பலன் எதுவும் இல்லை. நல்ல மனோபாவங்கள் என்பது எதிர்மறையான எண்ணங்களை மனதிலிருந்து நீக்குவது தான்.
உதாரணமாக, பலருக்கு ஓய்வெடுக்க அதிக நேரம் இருக்கிறது. ஆனால் அந்த ஓய்வில் சந்தோஷம் தான் குறைவு. பல வகையான உணவுகள் இருக்கின்றன. ஆனால் அதை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் தான் குறைவானவை. உயர்ந்த மனிதன். ஆனால் தாழ்ந்த குணம். அதிக லாபம். ஆனால், குறைந்த உறவுகள்.
நிலாவிற்கே நாம் சென்று திரும்பி விட்டோம். ஆனால், பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. வெளியில் உள்ள விண்வெளியை வென்று விட்டோம். ஆனால், உள்ளே உள்ள மனதை வெல்ல முடியவில்லை. நமது வாழ்வில் உள்ள முரண்பாடே இதுதான். மற்றவர்கள் உணர்ச்சியின்றி இருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறோம். ஆனால், நாம் அப்படி இருப்பதை மாற்ற ஒரு முயற்சியும் எடுப்பதில்லை.
இன்னும் ஒரு சிலர், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதை மாற்ற சிறிதும் அக்கறை காட்டுவதில்லை. நாம் முயன்றால் எல்லாவற்றைம் சரி செய்துவிடலாம். மழை பெய்தால் சில குட்டைகளில் நீர்த்தாமரைகள் மலர்கின்றன. அவை வேகமாக வளர்ந்து நீர் மட்டத்தையே முடி விடுகின்றன. சில வேலையாட்கள் குட்டையில் இறங்கி இலைகளை வெட்டி தண்ணீரைச் சுத்தம் செய்கின்றனர். சில நாட்களில், இலைகள் வளர்ந்து விடுகின்றன. மறுபடி வேலையாட்கள் வந்து இலைகளை வெட்டுகிறார்கள்.
இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இலைகளை அதாவது பிரச்சினைகளை அவர்கள் பார்க்கும் போது அதற்கான தற்காலிக தீர்வையே காண்கிறார்கள். இதே பிரச்சினை அவர்களுக்கு நீண்ட கால பிரச்சினையாக தெரிந்திருந்தால், அவர்கள் வேரோடு பிடுங்கி இருப்பார்கள். இந்த இரண்டையுமே அவர்கள் செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் வெளியில் தெரியக்கூடிய பிரச்சினைகள் மட்டும் தீர்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இலைகளை மட்டும் வெட்டினார்கள். அந்த வேலையாட்களை போல் தான் நாமும் நமது வெளிப்படையான பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காகிறோம்.
நடத்தைகள் என்பது பலவிதமான மனோபாவங்களின் தொகுப்பு. நடத்தைக்கு பின்னால் இருந்து செயல்படும் காரணங்களை புரிந்து கொள்ள வேண்டும். நமது மனோபாவங்களாலும், நம்பிக்கைகளாலும் தான் நடத்தை உருவாகிறது. மனோபாவங்கள் மிக முக்கியமானவை. ஆனால், அதற்கான காரணங்களைக் கூறுவது அவ்வளவு எளிதானது அல்ல.
ஒரு குறிக்கோளைத் தீர்மானித்து விட்டால், நாம் அதற்காக செயல்படவேண்டும். நல்ல உறவு தான்நோக்கம் என்றால் நல்ல நடத்தை வருவது நிச்சயம். ஆனால், இதற்கு சரியான நம்பிக்கைகளும், மனோபாவங்களும் அவசியம். எப்போதும் நாம், `அடுத்தவர் மிகச்சரியாக இருக்க வேண்டும்’ என்று எதிர்பார்போம். ஆனால், நமது குறைகளை சரிபடுத்திக் கொள்ள மாட்டோம். `நான் மாறவே மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிப்பவர்களுக்கு ஒரே பதில் `நாம் மாறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்பதே.
No comments:
Post a Comment