சாபத்தையே வரமாக்கிய நாடுகள் !
இன்று வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி வருகிறது. வாங்குவோரும் , விற்போரும்,ஏற்றுமதியாளரும் , இறக்குமதியாளருமென வர்த்தக உலகம் களைகட்டி நிற்கிறது. உலகமே இன்று மாபெரும் சந்தையாக மாறி நிற்கிறது. அதில் எதை விற்கலாம் எதை விற்க்ககூடாது என்ற பாகுபாடெல்லாம் மாறி எதையும் விற்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதில் சில விமர்சனங்கள் இருந்தாலும் பொருளாதாரத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது.
அன்று வர்த்தக உலகில் வரலாறு படைத்த நாடு ஜப்பான். இன்று வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் நாடு சீனா , இரண்டின் பூளோக வரலாறுகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் அவை சாபத்தையே வரமாக்கிய சரித்திரம் தெரியவரும். மனிதர்களின் பேராசைக்கு ஹிரோசிமா , நாகசாயி என்ற இரு நகரங்களை பலிகொடுத்து சொந்த நாட்டிலேயே அகதியாக நின்ற நாடு ஜப்பான் . அதோடு நாளுக்கு ஒரு பூகம்பம் வேளைக்கொரு சுனாமி என்று இயற்கையின் நிரந்தர சாபத்திற்கு பெயர் போனவர்கள். ஆனாலும் எத்தனை கடுமையான அழிவுகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து விரைவாக மீண்டெழும் மனோபாவம் கொண்டவர்கள்.
பீனிக்ஸ் பறவைகளைப் போல அவர்கள் உலகமே வியக்கும்படி தன்னிறைவு அடைந்ததோடு, ஏற்றுமதி உலகில் கொடிகட்டிப் பறந்தார்கள் . அதற்கு காரணம் ஜப்பானியர்கள் தங்கள் நாட்டின் தன்மையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுச் செயலாற்றியதுதான் . .
சீனாவும் அதேபோல்தான் !
உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு . அத்தனைக்கும் மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கொடுப்பதே பெரும் சவாலாக இருக்கும் என்பதுதான் பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு.
ஆனால் தங்களுக்கு வாய்த்த மனித வளத்தையே மகத்தான சக்தியாக மாற்றிக்காட்டியது சீனா. இன்று கடைகளில் எந்த உற்பத்திப் பொருள்களை பார்த்தாலும் Made In China என்று பொறிக்கப்பட்ட வாசகங்களையே அதிகம் பார்க்கிறோம்.
அது மட்டுமல்ல அந்நாட்டில் ஒரு நதி இருக்கிறது. அதற்கு மஞ்சள் நதி என்று பெயர். அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கால் அந்நதி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கும் . பூகோளத்தையே மாற்றி அமைக்கும் அளவுக்கு அதன் அழிவு பாதை இருக்கும். சீனர்களுக்கு அதை ஒழுங்குபடுத்தி தங்கள் வாழ்விடங்களை தக்கவைத்துகொள்வதே முழுநேர வேலையாக இருக்கும்.
இயற்கையின் அந்த சாபத்தையே வரமாக்கி விட்டார்கள் சீனர்கள். அந்த மஞ்சள் நதியை இயற்கையின் போக்கிற்கு சீர்படுத்தி ஆறுகளாகப் பிரித்து பாசனத்திற்கு பயன்படும்படி மாற்றி அமைத்துவிட்டார்கள் . இன்று உணவுப் பொருள் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்ததோடு ஏற்றுமதி சந்தையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை படைத்து , அன்னியச் செலவாணியை பெருமளவு ஈட்டுகிறது சீனா !
இந்த இரு நாடுகளும் நமக்குச் சொல்வது என்ன?
முயற்சியும் உழைப்பும் சமயோசிதமும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதைத்தான்!
மேலும் சீனா, ஜப்பானுடன் ஒப்பிட்டால் நமது இந்திய திருநாடு இயற்கை வளத்திலும் , அறிவாற்றலிலும் பேர் போன நாடு. மனித வளத்திலும் குறைவில்லாத நாடு . அதோடு இயற்கையின் எழிலார்ந்த வளமும் நமக்கு வரமாக வைத்திருக்கிறது.
என்னரும் திருநா , கனியும் கிழங்கும் தானியங்கும் கணக்கின்றித் தரும் நாடு என்று இந்திய நாட்டை வியந்து போற்றினார் பாரதியார் . மூன்று புறமும் கடல் , ஒரு புறம் மலை என பாதுகாப்பு அரண், உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடல்வளமும் , மலைவளமும் , மழைவளமும் சாதகமான தட்பவெட்ப சீதோஸன நிலையையும் பெற்றுள்ளோம். இத்தனை வளங்களை பெற்ற நாம்தான் எல்லாதளத்திலும் உலகின் தலைவனாக இருக்க வேண்டும்.
எல்லா வரங்களையும் பெற்ற நாம் முயற்சியும் , உழைப்பும், சமயோசிதமும் இருந்தால் உலகின் தலைவனாக ஆகலாம்!
No comments:
Post a Comment