நீங்கள் மனத்திடம், மன ஒருமைப்பாடு உள்ளவரா? சோதிக்கலாம் வாங்க
எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும் மனதிடம் அவசியம். இல்லையென்றால் அக்காரியம் பாதியில் இருக்கும் போது மனம்மாறி வேறு எதையாவது செய்ய நினைக்கும். வேறு மாதிரி செய்திருக்கலாமோ என குழப்பம் அடையும். இது மனத்திடம் இல்லாமையால் ஏற்படுவது.
மன ஒருமைப்பாடு இல்லாவிட்டால் நீங்கள் ஒரு செயலை கவனமாக செய்ய இயலாமல் இருக்கும். அல்லது மனம் வேறு எதையாவது நினைக்கும். ஒரே சிந்தனையை தொடர்ந்து சிந்திக்க இயலாமல் ஒரே நேரத்தில் பல சிந்தனைகளும் வந்து மனக்குழப்பத்தை விளைவிக்கும். அச்சிந்தனைகள் நாம் தற்போது செய்யும் வேலையை சிறப்பாக செய்ய விடாமல் தடுத்து விடும்.
இந்த மன உறுதி, ஒருமைப்பாடு இல்லாமையே பல செயல்களை சிறப்பாக செய்ய இயலாமைக்கும் தீர்க்கமாக ஒரு முடிவை எடுக்க இயலாமல் இருப்பதற்கும் காரணம்.
தங்களின் மனஉறுதி, ஒருமைப்பாடு எவ்வாறு இருக்கிறது என எவ்வாறு அறிவது?
இதோ உங்களுக்காக ஒரு எளிய பயிற்சி
ஒரு சுவர் பக்கத்தில் சுவரை தொடாமல், வசதியான ஒரு இடத்தில் நின்று கொள்ளுங்கள்.
முட்டுகளை வளைக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்.
நின்றவாறே ஒரு காலை தூக்கி அடுத்த கால் தொடையின் மீது வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒற்றைக்காலில் நின்றவாரே கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி வணங்குவது போல சேர்த்து வையுங்கள்.
கடைசியாக கண்கள் இரண்டையும் மூடுங்கள்.
இப்படி எவ்வளவு நேரம் உங்களால் நிற்க முடிகிறது?
10 வினாடிகள்?
1 நிமிடம்?
இந்த கால அளவே உங்கள் மன உறுதியைக் காட்டிவிடும்.
நீங்கள் வெகு விரைவில் தடுமாறி வீழப்போனால் நீங்கள் அதிக மன சஞ்சலம் அடைவோர்களாக இருக்க வேண்டும். எந்த தடுமாற்றமும் இல்லை எனில் நல்ல மன உறுதி உள்ளவர் என அர்த்தம்.
நீங்கள் இதைச்செய்யும் போது முக்கியமாக கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும். கண்களை திறந்து வைத்தால் எத்தனை நேரமும் நம்மால் நிற்க முடியும். கண்களை அடைத்து நின்றாலே நிஜ மன ஒருமைப்பாட்டை நீங்கள் அறிய இயலும்.
இப்போது மன உறுதி, மன ஒருமைப்பாடு அதிகம் இல்லை என அறிந்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை எவ்வாறு வளர்த்துக்கொள்வது எனப்பார்ப்பது மிக முக்கியமில்லையா? அதுவும் மிக எளிய வழியே. அது என்ன வழி என்றால் நீங்கள் சோதனை செய்த இதே வழிமுறையை தினமும் செய்வது தான்.
ஆச்சரியமாக உள்ளதா?
இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பார்ப்பதற்கு இது மிக எளிய பயிற்சி போலத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம்.
இப்படிச்செய்வது யோகாசன முறைகளில் "நின்ற பாத ஆசனம்" எனப்படுகிறது.
இவ்வாசனமே மன உறுதிக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிகச்சிறந்த ஆசனமாக உள்ளது.
இவ்வாசனத்தை தினம் சில நிமிடங்கள் ஒவ்வொரு காலிலும் மாற்றி மாற்றி செய்து வந்தால் நல்ல பலனை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment