ஜோதிடமும் நோய்களும்
நோய் வராமல் தடுக்க மருத்துவ ரீதியாக எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டாலும் அவரரின் ஜெனன ஜாதக அமைப்பு என்று ஒன்றிருக்கின்றதல்லவா? அதில் அமையும் கிரகங்களின் நிலைப்படி நோய்கள் அந்ததந்த கிரகங்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் வந்தே தீரும்.
என்ன தான் விஞ்ஞான வளர்ச்சிகள் நோயினை குணப்படுத்தி விடும் என்றாலும் ஜோதிட ரீதியாக நம்மை ஆளும் நவகிரகங்களும் நம்முடைய ஜனன ஜாதக ரீதியாக பலமாக அமைய வேண்டும். என்ன தான் மருத்துவ செலவுகள் செய்தாலும் குணமாகாத நோய்கள் கூட அம்மன் கோயில் வேப்பிலையால் குணமானதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கு காரணம் ஜோதிட ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தின் மூலம் நலம் கிட்டும். உதாரணமாக ராகுவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அம்மன் வழிபாடு மேற்கொண்டு அதன் மூலம் கிட்டும் நற்பலனை வேப்பிலையால் குணமானதாக எடுத்துக் கொள்கிறார்.
உடல் காரகனான சந்திரன், உயிர் காரகனான சூரியன், ஆயுட்காரகனான சனி போன்ற கிரகங்கள் பலம் பெற்றும், லக்னாதிபதியும் பலமாக அமையப்பெற்றும் இருந்தால் நோய் நொடி தாக்காமல் ஆரோக்கியமாக வாழு முடிகிறது. அப்படியே சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக நிவர்த்தியாகி விடுகிறது. நவகிரகங்களின் திரு விளையாட்டினால் தான் இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன. பொதுவாக முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுக்கேற்ப நோய்களும் உண்டாகின்றது. எப்பொழுதுமே நல்ல ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. எப்பொழுதாவது சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகளை சந்திப்பவர்களும் உண்டு. தினம் தினம் நோய் நொடியால் அவதிப்படுபவர்களும் உண்டு.
நோய்களால் பாதிக்கப்படுவர்கள் அந்தந்த நோய்களுக்குரிய தெய்வ பரிகாரங்களை மேற்கொள்வது மூலம் நோய் பாதிப்புகளிலிருந்து ஒரளவுக்கு தப்பித்துக் கொள்ளலாம்.நம் ஜாதகத்தில் சாதகமாகவோ, பாதகமாகவோ அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு கிரகமும் தனக்கென சில தனித் தன்மையுடன் செயல்படுகின்றன. பாதகமாக அமைந்த கிரகங்களின் தசா புக்தி காலங்களில் அதனதன் காரகத்துவத்திற் கேற்ப நோய்கள் உண்டாகிறது.
ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6&ஆம் வீடானது ருண ரோக ஸ்தானமாகும். இது நோய், தேக ஆரோக்கியம் போன்றவற்றை அறிய உதவும் ஸ்தானமாகும். இதில் அமைகின்ற கிரகங்களின் அமைப்பினை கொண்டு நோய்கள் ஏற்படுகின்றன.
சூரியன்
சூரியனால் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிறு கோளாறு மூலம், இருதய நோய் தோல்வியாதி, நெருப்பால் கண்டம், எதிரிகளால் கண்டம், மரம், விஷம் மற்றும் பாம்பால் கண்டம், திருடர்களால் கண்டம், கண் நோய், தெய்வக் குற்றம் மூலம் உடல் நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும்.
சந்திரன்
சந்திரனால் மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மனநிலை பாதிப்பு, உணவு செரிக்காத நிலை, தைரிய குறைவு, சீதபேதி, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மை இழக்கும் நிலை உண்டாகும். ஜலத்தால் கண்டம், தண்ணீரில் உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மை இல்லாத நிலை போன்ற பாதிப்புகளும். சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படும்.
செவ்வாய்
செவ்வாய் பகவானால் கண்களில் பாதிப்பு, குடல்புண், காக்காய் வலிப்பு, உஷ்ண நோய், தோல் நோய்கள் உண்டாகும். விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம் உண்டாகும். எதிரிகளிடமும் உடன்பிறப்புகளிடமும் சண்டை போடும் போது உடலில் காயம் உண்டாக கூடிய நிலை தொழுநோய், தோலின் மேல் பாகத்தில் நோய் போன்றவை உண்டாகும்.
புதன்
புதனால் வாய்ப்புண், கண்களில் பாதிப்பு, தொண்டை மற்றும் மூக்கில் பாதிப்பு, மனநிலை பாதிப்பு,திக்குவாய், இயற்கை சீற்றத்தால் உடல்நிலையில் பாதிப்பு, விஷத்தால் கண்டம், மூளையில் பாதிப்பு, தோல் வியாதி, மஞ்சள்காமாலை, கனவால் மன நிலை பாதிப்பு ஏற்பட்டு நோய்கள் உண்டாகும்.
குரு
குருபகவானால் ஞாபக மறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், மற்றும் பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலையில் பாதிப்புகள் போன்றவை உண்டாகும்.
சுக்கிரன்
சுக்கிர பகவானால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக்கோளாறு, கண்களில் கோளாறு ரத்தசோகை, ரகசிய உறுப்பில் பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும். பெண்களுடன் உடல் உறவு கொள்ள முடியாத நிலை, உடல் உறவு கொள்ள பயப்படும் நிலை, பெண்களால் பயம், போன்ற நோய்களும் ஏற்படும்.
சனி
சனிபகவானால் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் ஊனம் உண்டாகக்கூடிய நிலை, வயிற்றுக் கோளாறு, உடலில் உஷ்ணம் அதிகரித்து அவைகளால் நோய் உண்டாகக்கூடிய அமைப்பு, உடலில் மந்தமான நிலை, சோர்வு எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும்நிலை மனநிலை பாதிப்பு, காக்காய் வலிப்பு, டி.பி. சர்க்கரை நோய் போன்றவை உண்டாகும். விபத்துகளால் உடல் ஊனம், இயற்கை சீற்றத்தால் உடல் நிலையில் பாதிப்பு போன்றவைகள் உண்டாகும்.
ராகு
ராகுபகவானால் தொழுநோய், மூளையில் நோய், இருதய கோளாறு, நெருப்பால் பயம் ,விஷத்தால் கண்டம், எதிரிகளால் பாதிப்பு விபத்தால் கண்டம், மனச்சோர்வு, விபத்தால் கண்டம், தோல் வியாதிகள், மிருகங்களால் கண்டம், அஜீரண கோளாறு, புற்று நோய், தேவையற்ற சேர்க்கையால் தவறான பழக்கங்களுக்கு அடிமையாக கூடிய உண்டாகும்.
கேது
கேது பகவானால் உடலில் வெட்டு காயம், விஷத்தால் கண்டம், அஜீரண கோளாறு, குடல் புண் போன்ற நோய்கள் உண்டாகின்றன. வயிறு கோளாறு, இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, பூசாரி மற்றும் பிராமணர்களால் தொல்லை போன்றவைகளும் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமான 8ம் வீட்டில் பலஹீனமாக கிரகங்கள் அமையப் பெற்றாலும் 8ம் அதிபதியுடன் கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகும். மேற்கூறியவாறு கிரக காரகத்துவ ரீதியாக 8ல் சூரியன் இருந்தால் உஷ்ண நோய்கள், இருதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தேய்பிறை சந்திரனிருந்தால் ஜல சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் தண்ணீரால் கண்டமும் செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றால், வெட்டு காயங்கள் விபத்து போன்ற அனுகூலப் பலன்களும் எட்டுக்கு 8ம் வீடான மூன்றிலோ, எட்டிலோ பாவிகள் அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பும் ஏற்படுகிறது. 8ல் அமையப் பெறுகின்ற கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் நம் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்படி 8ல் கிரகங்கள் பலஹீனமாக இருந்தால் அக்கிரகங்களின் காரகத்துவதத்திற்கேற்ப நோய்கள் ஏற்படுகிறதோ, அதுபோல 6ல் பாவ கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகிறது.
No comments:
Post a Comment