சந்தோஷமாக வாழ என்ன வழி
‘அறிவாளிகள் பிரச்னைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள் பிரச்னை களைத் தவிர்க்கிறார்கள்’ – இப்படியொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. நீங்கள் அறிவாளியா? மேதையா? பிரச்னை… பிரச்னை… பிரச்னை… எல்லாருக்கும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை. அதை எப்படித் தீர்ப்பது என்கிற தவிப்பு. அது தீர்வதற்குள் இன்னொரு பிரச்னை… பிறகு அதன் பின் ஓட்டம்… இப்படியே வாழ்நாள் முழுக்க பிரச்னை… பிரச்னை… பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதில், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சந்தோஷமாக வாழ என்ன வழி என யோசித்துப்பாருங்களேன்… தீர்வுகளைத் தேடாமலேயே உங்கள் பிரச்னைகள் காணாமல் போகும்!பிரச்னை என்று வருகிற பலரும், ‘எங்களால இனியும் ஒண்ணா இருக்க முடியாது. பிரியறதுதான் தீர்வு’ என்கிற முடிவுக்குத் தயாராக இருக்கிறார்கள். ‘பஞ்சாயத்து பண்ணுகிறேன்’ என்கிற பெயரில், அவர்களுக்குச் சமரசம் பேச வருகிறவர்களும், இருவரிடமும் அவரவர் தரப்பில் என்ன பிரச்னை எனக் கேட்டு, அதைத் தீர்ப்பதற்குப் பதில், பெரிதாக்கவே செய்கிறார்கள். அதைத் தவிர்த்து, பிரச்னைகளை ஒரு பக்கம் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் உறவை நெருக்கமாக்குவதில் கவனம் செலுத்திப் பாருங்கள்.
கணவன் – மனைவி என்றில்லை… எந்த இரண்டு பேருக்குமான உறவு அல்லது நட்புக்கும் இந்த விதி பொருந்தும். பொதுவாக அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி ஆளுமை கொண்டவர்கள். தனித்தனி மதிப்பீடுகள் கொண்டவர்கள். கலாசார ரீதியில் பார்த்தால், இந்த பேதங்கள் இன்னும் அதிகமாவதை உணரலாம். உதாரணத்துக்கு அமெரிக்காவில் முன்பின் அறிமுகமில்லாத நபர்கள்கூட ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அன்பு செலுத்துவது சகஜம். அதுவே நம்மூரில் அது சகித்துக்கொள்ள முடியாத குற்றம். இப்படி அவரவர் வளர்ந்த, வாழ்ந்த கலாசாரங்களையும் அவர் களுக்குள் பதிந்து போன மதிப்பீடுகளையும் மாற்ற முனைந்தால், கடுகளவு பிரச்னைகூட மலையளவு பெரிதாகவே செய்யும். திருமண உறவுகளில் இந்த அணுகுமுறைதான் பெரும்பாலான தம்பதிகளுக்குள் பிரச்னைகள் வெடிக்கவும், விஸ்வரூபம் எடுத்து, பிரிவை நோக்கி அழைத்துச் செல்லவும் அடிப்படையாக அமைகிறது.நீங்கள் நீங்களா கவும், உங்கள் துணையை அவராகவும் இருக்க அனுமதித்துப் பாருங்கள். இருவருக்குள்ளும் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமிருக்காது! பிரச்னை என்று நாம் சொல்கிற பல விஷயங்களும் உண்மையில் பிரச்னையே இல்லை. வாழ்க்கையில் நடக்கக்கூடிய யதார்த்தமான விஷயங்களாகவே இருக்கும். அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதுதான் முக்கியமே. ஆங்கிலத்தில் ‘செரினிட்டி ப்ரேயர்’ என ஒன்று பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
‘கடவுளே…என் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க எனக்கு தைரியம் கொடு.தீர்க்கவே முடியாத பிரச்னைகளை ஏற்றுக்கொள்ள எனக்குப் பக்குவத்தைக் கொடு…’ – இந்த பிரார்த்தனை வரிகள், நம் வாழ்க்கைக்கும் ரொம்பவே பொருத்தம். பிரச்னை என்று பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விஷயமும் பிரச்னைதான். குழந்தை வளர்ப்பாகட்டும், வேலைக்குச் செல்வதாகட்டும், வீட்டிலிருப்பதாகட்டும்… எல்லாமே பிரச்னைகள்தான். அதுதான் வாழ்க்கை எனப் பார்க்கப் பழகினால், அங்கே காணாமல் போவது பிரச்னைகள் மட்டுமின்றி, அவற்றால் ஏற்படுகிற அதிருப்தியும்தான்!வாழ்க்கையில் எவற்றையெல்லாம் நம்மால் மாற்ற முடியாது எனத் தெரிந்து கொண்டு, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், ஒரு மனிதராக நாம் பக்குவப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் அறிகுறி. இப்படியொரு அணுகுமுறையை வளர்த்துக் கொண்டுவிட்டால், நம்மையும் அறியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு தெளிவையும் வாழ்க்கையை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியங்களையும் பெற்றுக் கொண்டிருப்போம். ஏற்கனவே முந்தைய அத்தியாங்களில் சொன்ன அதே விஷயத்தை மீண்டுமொரு முறை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். என்ன நடந்தாலும், அதில் யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்கிற அலசலோ, ஆராய்ச்சியோ தேவையில்லை. அந்தஇடத்தில் சூழலை சகஜமாக்க நான் என்ன செய்ய வேண்டும் என யோசிக்கத் தொடங்கினாலே, பிரச்னையின் தீவிரம் குறைந்து விடும்.உங்களில் எத்தனை பேருக்கு தங்க மீன் பற்றித் தெரியும்? பல வீடுகளில் அழகுக்காகவும், அந்தஸ்துக்காகவும் தங்க மீன்கள் வளர்ப்பார்கள். மற்ற மீன்களுக்கும், இதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. பொதுவாக மீனுக்கு தேவைக்கதிகமாக இரை கொடுத்தால், அது சாப்பிட்டு, செத்துவிடும். அதுவே தங்க மீன்கள் மட்டும் எத்தனை கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். சாப்பிட்டுச் சாப்பிட்டு வேகமாக வளரும். தம்பதியருக்கிடையிலான பிரச்னைகள் தங்க மீன்களைப் போன்றவை. அதை நீங்கள் கவனிக்க கவனிக்க வளரும். கூடவே புதிய பிரச்னைகளையும் சேர்த்துக் கொண்டு வளரும். பிரச்னைகள் கிளை பரப்பி, பரந்து விரிந்து, இருவரையும் சேர்ந்து வாழவே முடியாத ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடும். சரி… பிரச்னைகள் வரும் போது என்ன செய்ய வேண்டும்? தம்பதிக்குள் பிரச்னை வரும் போது, ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்கி, ஒருவருக்கொருவர் வார்த்தைகளை உமிழ்ந்து, முகத்தைத் திருப்பிக் கொள்கிற அளவுக்குப் போவதுதான் சகஜமாக பலரும் செய்வது. ஒரு மாறுதலுக்கு இப்படிச் செய்து பாருங்களேன்… பிரச்னை வரும்போது, உங்கள் துணையின் மீது அதிக அன்பைக் காட்டிப் பாருங்கள். நெருக்கமாக இருந்து பாருங்கள். ஆதரவாக இருந்து பாருங்கள். அந்த மாற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பிரச்னையைப் பற்றிப் பேசுவதைத் தள்ளி வைத்து விட்டு, உங்கள் துணைக்காக அவருக்கு மிகவும் பிடித்த அல்லது உங்கள் இருவரின் காதலையும் நினைவுப்படுத்தும் ஒரு ஸ்பெஷல் உணவைத் தயார் செய்து பரிமாறுங்கள். வழக்கத்தைவிட வித்தியாசமான முறையில் ‘ஐ லவ் யூ’ சொல்லிப் பாருங்கள். உங்கள் இருவருடைய பிரச்னை பற்றி, வேறு யாரிடமும் பேசாதீர்கள். அதை நீங்கள் மற்றவர்களிடம் பகிரப் பகிர, உங்கள் கோபமும் வெறுப்பும் இன்னும் அதிகமாகும். அதை வெளிப்படுத்தும் நோக்கத்தில், உங்கள் துணை வீட்டுக்கு வரும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். மனது ரொம்பவும் நொந்து போயிருக்கிற தருணங்களில், மெல்ல மெல்ல அதை சந்தோஷத்தை நோக்கி நகர்த்த முயற்சி செய்யுங்கள். அந்த முயற்சிக்கு அசாத்திய மன உறுதி வேண்டும். பழகப் பழக அதுவும் கை வரும். ‘நான் எவ்வளவோ விட்டுக் கொடுத்துட்டேன். ஆனாலும் என் கணவர்/மனைவி என்னைத் துன்புறுத்திவிட்டார். மறுபடி மறுபடி நானே ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?’ என்கிற கோபம் பலருக்கும் இருக்கும். அப்படி விட்டுக் கொடுப்பது சிரமம்தான் என்றாலும், அந்த நினைப்பிலிருந்து வெளியே வருகிற கலை உங்களுக்கு பிரச்னைகளை வெல்ல வேறொரு அணுகுமுறையைக் கொடுக்கும். இன்று ஏதோ ஒரு விஷயத்துக்காக இருவரும் சண்டை போடுகிறீர்கள். 6 மாதமோ, ஒரு வருடமோ கழித்து அந்தச் சண்டையை யோசித்துப் பார்த்தால், அது எத்தனை அர்த்தமற்றது என்பது தெரியும். எனவே, சண்டையின் போதே அந்த யதார்த்தம் உணர்ந்து, உடனடியாக அதைப் பெரிதுபடுத்தாமல் வெளியே வந்து விடுங்கள். கடைசியாக ஒரே ஒரு அட்வைஸ்… நம்மில் பலரும் இன்னும் குழந்தைகளைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறோம். குழந்தை தனக்கு வேண்டியதைக் கேட்டு அடம் பிடிக்கும். அது கிடைத்தால் சந்தோஷப்படும். கிடைக்காவிட்டால் அழுது, புரண்டு அமர்க்களம் பண்ணும். கோபப்படும். பெரியவர்களாகிய நாமும் அப்படித்தானே இருக்கிறோம்? நமக்கு சாதகமான விஷயங்கள் நடந்தால் மகிழ்கிறோம். அப்படி நடக்காத போது கோபப்படுகிறோம். இந்தக் குழந்தை மனநிலையிலிருந்து வெளியே வரும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டாலே பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக
No comments:
Post a Comment