உங்களுக்கு புகழ் தேவையா?
புகழ்வது என்பது அடுத்தவரைப் பற்றி உயர்வாகப் பேசுவதுதான். ஒருவருடைய உன்னதமான செயலைப் பாராட்டும்போது தான் அவருக்கு புகழ் உண்டாகிறது.
புகழ்வது என்றால் முகஸ்துதி செய்வதல்ல. உண்மையற்ற, இனிமையான பேச்சு தான் முகஸ்துதி. உண்மையானதும், இனிமையானதுமே புகழ்ச்சி. புகழும்போது வரும் ஒருசில வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. புகழ்வது சக்தி வாய்ந்தது என்பதால் நாம் அதில் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.
ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரை புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள். அதனால் தான் உயிரோடு இருக்கும்போது பலருடைய அருமை தெரியாமலேயே போய்விடுகிறது. பாரதியார், எம்.கே.தியாகராஜபாகவதரின் இறுதி ஊர்வலத்தின் போது அவர்களை மதிக்க மறந்தவர்கள் நிறைய பேர்.
`நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்’ என்ற கருத்தை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்டுங்கள். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள்.
நாம் அனைவரும் பாராட்டுக்காக ஏங்குகிறோம். இதில் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்துவிடும் என்று நாம் தவறாக நம்பு கிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்.
ஒரு நல்ல விஷயத்தை செய்தவரை உடனே பாராட்டுங்கள். ஒரு நல்ல வார்த்தை அல்லது செயலைக் கண்டவுடன் காலம் தாழ்த்தாமல் பாராட்டி விடுங்கள். காலம் தாழ்த்திப் பாராட்டுவது என்பது சூடான உணவை ஆறிய பின் பரிமாறியதற்குச் சமம்.
பாராட்டு என்பது பொதுவாக இல்லாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும். நல்ல பேச்சு என்பது பொதுவானது. உனது பேச்சின் சாரம், அதை வடிவமைத்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. சொன்ன உதாரணங்கள் நன்றாக இருந்தன என்பது போன்று ஆழமாக பாராட்டு இருக்க வேண்டும்.
நேற்றைய சாப்பாடு இன்றைய பசியைத் தணிக்காது. பாராட்டியதற்கான பசி எப்போதும் தணியவே தணியாது. அடிக்கடி பாராட்டுங்கள். அப்படியானால் உங்களை பலரும் நேசிப்பார்கள்.
ஒரு கலைஞனுக்கு உண்மையான பாராட்டு என்பது ரசிகனின் கைதட்டல்கள்தான். அவர் தன் ரசிகன் ஒவ்வொரு முறை கைதட்டும் போதும், விசில் அடிக்கும் போதும் தான் சாதித்ததை விட இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் அவர் புதிய புதிய வழிமுறைகளைக் கையாண்டு ரசிகர்களிடம் இருந்து அளவு கடந்த அன்பை பெறுகிறார். பெரும்புகழ் அடைகிறார்.
சாதனை செய்பவரை மற்றவர்கள் முன்னால் வைத்து பாராட்டுங்கள். மற்றவர் முன்னிலை யில் அவரது மதிப்பு உயரட்டும். அது நீண்ட நாட்களுக்கு நினைவிருக்கும். பாராட்டுகள் உறவுகளையும் வளர்க்கும்.
யாரையும் தாழ்த்திப் பேச வேண்டாம். ஆனால், அதே நேரத்தில் அறிந்த நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கூறுங்கள் என்கிறார், பெஞ்சமின் பிராங்கிளின்.
பாராட்டுகள் காற்றைப் போன்றது. நமது வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையில் இந்த காற்றைக் கொண்டுதான் வாகனங்களின் சக்கரங்களில் நிரப்பி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் தகுதியானவர்களை புகழ்ந்தால், நீங்களும் புகழ் பெற வாய்ப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment