குழந்தைகளுக்கு இலக்கு
பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கிறது. ஏதேனும் ஓர் இலக்கை தீர்மானித்துக் கொண்டு அதை அடைய வேண்டும் என்றுதான் நாம் செயல்படுகிறோம். குழந்தைகளுக்கான இலக்கை அவர்களே தேர்வு செய்து கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு வளர்க்க வேண்டும். அவர்கள் தேர்வு செய்யும் இலக்கை அடைய அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
பொதுவாக நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் குழந்தைகளுக்கான நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கை அவர்களே சொந்தமாக அடைவதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.
விமானப்பள்ளியில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர், விதிகளையெல்லாம் கற்றுக்கொடுத்து விட்டு இயக்குவதற்கு விமானத்தையும் தைரியமாக கொடுக்க வேண்டும். அவன் மாணவன், அவனிடம் கொடுத்தால் விபத்து ஏற்படும் என்று பயந்தால் அவன் எப்போதுமே விமானம் ஓட்ட முடியாது.
அதுபோலத்தான் உங்களது குழந்தைகளுக்குப் பறக்க கற்றுக் கொடுப்பதோடு உங்களது வேலை முடிந்தது. பறப்பது அவர்கள் பாடு. அவர்களது சொந்த சிறகுகளோடு அவர்களை பறக்கவிடுங்கள்.
குழந்தைகளின் படிப்பில் இலக்குகள் வேண்டும். எனது வீட்டுப்பாடத்தை யாரும் எனக்கு நினைவுபடுத்தாமலே நானே செய்து விட வேண்டும் என்று நினைப்பது கூட ஓர் இலக்குதான்.
பெரிய இலக்கை அடைவதற்கு சின்ன சின்ன இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை ஒவ்வொன்றாக அடைய வேண்டும்.
பொதுவாக இலக்குகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
கல்வி மற்றும் வேலை சார்ந்த இலக்கு, செயல்முறை இலக்கு, குணாதிசய இலக்கு.
கல்வி மற்றும் வேலை சார்ந்த இலக்கு : ஐடி துறையில் நிபுணராக வேண்டும். பத்திரிகையாளராக வேண்டும். விஞ்ஞானியாக வேண்டும். ஆசிரியராக வேண்டும் என ஏதேனும் ஓர் இலக்கை உங்களது மகன் அல்லது மகள் நிர்ணயிப்பது கல்வி மற்றும் வேலை சார்ந்த இலக்கு ஆகும். இலக்கை அவர்கள் தீர்மானித்ததற்குப் பிறகு, அந்த இலக்கை அடைய அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையெனில் எப்படி வளர்ப்பது? போன்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியிருக்கும்.
செயல்முறை இலக்கு : ஒரு வேலையை எப்படி செய்வது என தீர்மானிப்பது செயல்முறை இலக்கு. எனது வீட்டுப் பாடத்தை குறித்த நேரத்தில் முடிப்பேன். கணக்கு பாடத்தை அழகான கையெழுத்தில் எழுதுவேன் போன்ற நிர்ணயிப்புகள் செயல்முறை இலக்கு ஆகும்.
குணதிசய இலக்கு : நன்றாக படிக்கக்கூடிய மாணவராக இருக்கலாம். நிறுவனத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய திறன் படைத்தவராக இருக்கலாம். ஆனால் அவர் நல்ல குணாதிசயம் உடையவராகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவ வேண்டும். எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவ வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக படிப்பதற்கான ஆர்வத்தையும் நாம் வளர்க்க வேண்டும்.
அவனால் புத்தகம் இல்லாமல் இருக்க முடியாது என்று ஒரு சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பற்றி சொல்வதை கேட்டிருப்போம். அந்த அளவிற்கு அவன் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறான்.
கணக்கு எனக்கு கடினம்தான். ஆனால் விடாப்படியாக அதை படிப்பேன். அது எனக்கு எளிமையாகும் வரை விடமாட்டேன் என்று உங்களது குழந்தை சொன்னால் அது அவனது உள்ள உறுதியையும் விடாப்படியான ஆரவத்தையும் காட்டுகிறது.
இந்த உறுதியை அடைவது குணாதிசய இலக்கு.
எனது ஆங்கில ஆசிரியரைப்பற்றி குறை சொல்வதை இனிமேல் நிறுத்திக் கொள்வேன் என்று நிர்ணயம் செய்வதும் ஒரு குணாதிசய இலக்குதான்.
ஆங்கில ஆசிரியரை பற்றி அந்த மாணவன் அல்லது மாணவி ஏன் குறை சொல்ல வேண்டும்? அவர் அவனை திடிக்கொண்டே இருக்கிறார். எதற்காக திட்டுகிறார். நன்றாக படிக்க வில்லை என்பதற்காக திட்டுகிறார். நன்றாக படித்து விட்டால் அவர் திட்டமாட்டார். அவர் திட்டவில்¬யெனில் குறை சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்
உங்கள் குழந்தைகள் இலக்கு நிர்ணயித்து செயல்பட நீங்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
திவ்யாவின் அப்பா ஒரு விஞ்ஞானப் புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டியிருந்தது. அந்த புத்தகத்தில் விண்வெளி பற்றிய பல விபரங்கள் அடங்கி இருந்தது. அதை படித்து தனக்கு சொல்ல வேண்டும் என்று திவ்யா அவரிடம் சொன்னாள். புத்தகத்தை 7 நாளில் படித்து முடித்து விடுவேன். அதற்குப்பிறகு சொல்கிறேன் என்றார் அப்பா. 70 பக்கங்கள் கொண்ட ஆங்கில புத்தகம் அது. ஒரு நாளைக்கு 10 பக்கங்கள் படித்து முடித்தார். 7 நாட்களில் புத்தகத்தை முடித்து விட்டு, திவ்யாவிற்கு அதில் உள்ள விண்வெளி விஷயங்களை அப்பா எடுத்து சொன்னார்.
திவ்யா 7&ம் வகுப்பு படிக்கும் மாணவி. 70 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை அப்பா எப்படி ஒரு நாளைக்கு 10 பக்கங்கள் என திட்டமிட்டு படித்தார் என்பதை பார்த்துக் கொண்டே இருந்தவள். தனது பள்ளி பாடங்களுக்கும் இதே போன்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.
No comments:
Post a Comment